வீரனின் பாடல்கள்
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அனேகமாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன்.
ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட வாசல்கள் மறுபுறம் என வசீகரமான பக்க விளைவுகள் கொண்டவை. நேரடியாகச் சர்வதேசப் பதிப்பகங்கள் மூலம் நூல் வெளிவருதல் முதல் உலக இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுதல் வரை இதன் சாத்தியங்கள் அளப்பரியவை. தமிழில் அவ்வேலை செம்மையாக நடந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பெருமாள்முருகன். அதன் பலனாக அவரது பெயர் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்வதேசிய விருதுகளின் இறுதிப் பட்டியல்களிலும் இந்திய அளவிலான பெரும் பரிசுகளிலும் இடம் பெறுகிறது.
அதற்கு அவரது எழுத்துக்களின் தரம், தகுதி மட்டுமின்றி பதிப்பிக்கும் காலச்சுவடின் முன்னெடுப்புகளும் முக்கியக் காரணம். சமீப வெற்றி 25 லகரம் இந்திய ரூபாய்கள் பரிசாகக் கொண்ட ஜேசிபி இலக்கிய விருது - அனேகமாக இந்தியப் புத்தகங்களுக்கு அளிக்கப்படுகிற பரிசுகளில் அதிகத் தொகை கொண்டது இதுதான். அவர் எழுதிய ‘ஆளண்டாப் பட்சி’ நாவல் ‘Fire Bird’ என்ற பெயரில் ஜனனி கண்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரிசை வென்றிருக்கிறது. அவருக்கு வாழ்த்தும் வணக்கமும்.
*
பெருமாள்முருகன் பற்றிய என் தனிப்பட்ட வாசிப்பு அனுபவக் குறிப்பாகவும் அவரது எழுத்தாளுமை குறித்த குறுக்குவெட்டுப் பார்வையாகவும் இக்கட்டுரையை அமைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவரெழுத்தைப் பெருமளவு படித்தவன், கொஞ்சம் பழகியவன் என்கிற அடிப்படையில் அதுவே எனக்கு உவப்பானதும் வசதியானதும் கூட.
‘பீக்கதைகள்’ சிறுகதைத் தொகுதிதான் பெருமாள்முருகனை நான் முதலில் வாசித்தது. அப்படி ஒரு பொருளில் சுவாரஸ்யமாகவும் அனாவசியத் திணிப்பின்றியும் எழுதப்பட்ட சிறப்பான சிறுகதைகள். முகஞ்சுழிக்கும் ஒரு கருப்பொருள் கல்லூரி நாட்களில் என்னை முகம் மலர்த்தியது நினைவிருக்கிறது. அப்போதிருந்து கடந்த 17 ஆண்டுகளாக எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்களில் ஒருவராக நீடிக்கிறார். இடையில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்விலிருந்து மீண்டெழுந்து மறுபடி தனது மார்க்கத்தைக் கண்டடைந்திருக்கிறார்.
அவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் சகல வடிவுகளிலும் வீரிய செல்வாக்கு செலுத்தும் அரிய எழுத்தாளர். அவற்றோடு பதிப்பு, தொகுப்பு, அகராதி என இன்ன பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார். அவரது புனைவெழுத்துகள் அத்தனையும் கொங்கு வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும் அவை உலகளாவிய பொருத்தப்பாடு கொண்டவை என்பதையே அவர் பெறும் சர்வதேச அங்கீகாரங்கள் உணர்த்துகின்றன.
Think Local, Go Global என்பதற்கான சரியான உதாரணம் அவரது படைப்பிலக்கியங்கள்.
இடதுசாரி மனநிலை, கவிதை எழுதுதல், சிற்றிதழ் பங்களிப்பு என தமிழின் எந்தவொரு படைப்பாளியையும் போலவே எழுத்து வாழ்வைத் தொடங்கியவர் பெருமாள்முருகன். ஆனால் அவரை வித்தியாசப்படுத்தி மேலெழ வைத்தது அவர் மனித உறவுகள் மற்றும் மன உணர்வுகள் குறித்து புனைவுகளில் முன்வைக்கும் நுண்மையான அவதானிப்புகள்.
சாத்தியமான இலக்கிய வடிவங்களில் எல்லாம் அவர் பங்களிப்புகள் செய்திருந்தாலும் கூட என் பார்வையில் பெருமாள்முருகன் பிரதானமாக ஒரு நாவலாசிரியர்தான். 1991ல் வெளியான ‘ஏறுவெயில்’ தொடங்கி தொற்று ஊரடங்கு காலத்தில் எழுதிய ‘நெடுநேரம்’ வரை மொத்தம் பன்னிரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இப்போது பார்த்தால் இந்த வரிசைக்கும் அவரது வயதுக்கும் ஒரு விதத் தொடர்பு இருப்பது போல் தென்படுகிறது.
முதல் மூன்று நாவல்கள் (ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி) சிறுவர்கள் அல்லது பதின்மர்கள் பற்றியோ அல்லது அவர்கள் பார்வையிலோ அமைந்தவை. அடுத்த மூன்று நாவல்கள் (கங்கணம், மாதொருபாகன், பூக்குழி) காதல் அல்லது திருமணம் உள்ளிட்ட உறவுச் சிக்கல்கள் தொடர்புடையவை. அதன் பிந்தைய மூன்று நாவல்கள் (ஆளண்டாப் பட்சி, ஆலவாயன், அர்த்தநாரி) பிள்ளைப்பேறு, வாழ்க்கையில் உழைத்து முன்னேறுதல் சம்மந்தப்பட்டவை. சமீப மூன்று நாவல்கள் (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, கழிமுகம், நெடுநேரம்) ஒரு தந்தையின் அல்லது தாயின் ஸ்தானத்திலிருந்து அடுத்த தலைமுறையைக் கவனிப்பவை, கவலைப்படுபவை, முரண்படுபவை, இணங்குபவை.
அதாவது ஒரு சிறுவன் வளர்ந்து, காதலித்து, கல்யாணம் செய்து. பிள்ளைகள் பெற்று, உழைத்து முன்னேறி, தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது என்கிற ஒரு தலைமுறையின் நகர்ச்சியை இப்பன்னிரு நாவல்கள் வழியே உணர முடிகிறது.
இன்னொரு காலகட்ட அடிப்படையிலும் அவரது புனைவுகள் இரு வகையாகப் பிரிந்து கிடக்கின்றன. மாதொருபாகன் நாவலை ஒட்டி வலதுசாரி உதிரி அமைப்புகள் தந்த அழுத்தத்தால் ஜனவரி 2015ல் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று அவரே அறிவிக்கிறார். பிறகு 2016 மத்தியில் படைப்புச் சுதந்திரத்தை ஆதரித்து வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மறுபடி எழுதத் தொடங்குகிறார். இந்த இருண்ட காலத்துக்கு முன் அவர் எழுதிய நாவல்கள் கொங்கு வட்டாரப் பகுதிகளில் நடப்பவை. அதன் பிறகு அவர் எழுதிய புனைவுகள் யாவும் கற்பனையான ஓர் அசுர லோகத்தில் நடப்பவை. அவர்களிடம் மனிதச் சாயலும், கொங்கு பாஷையும் பயின்று வந்தாலும் அவர்களின் நிலவியல் நமக்குப் பரிச்சயமான எதனோடும் தொடர்புடையவை அல்ல.
அவர் மறுபடி எழுத ஆரம்பித்ததை மீட்சி என்பதை விட எழுச்சி என்றே சொல்வேன். Blessing in disguise என்பார்கள் - அந்தத் துர்நிகழ்வுதான் சர்வதேச ஊடகக் கவனத்தை பெருமாள்முருகன் மீது திருப்பியது; அவருக்கு எதிராகக் கொதித்த அப்பிற்போக்கு அமைப்புகளுக்கு நன்றி நவில வேண்டிய அளவு அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதற்குரிய தகுதியைக் கொண்டவை அவரது எழுத்துக்கள் என்பதில் மறுப்பில்லை என்றாலும் இத்தனை துரித ஏற்றம் நிகழ அந்தச் சம்பவம் மிக முக்கியமான காரணி.
“தடைகளால் தழைத்தவர்” என அவரைப் பற்றிக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகிறது.
*
பெருமாள்முருகன் நாவல்களில் ஒட்டுமொத்தமாகக் கதையின் நகர்வு குறைவாகவே இருக்கும். மாறாக ஒரு சிக்கல் சூழலைச் சிறுசம்பவங்கள் வழி, உரையாடல்கள் வழி நிறுவி, அதன் பாதிப்புகள் அல்லது விளைவுகள் பற்றிய பல்வேறு சாத்தியங்களும் ஆராய்வதே அவரது பாணி. உதாரணமாக கங்கணம் நாவலில் திருமணம் ஆகாத ஓர் ஆண் எதிர்கொள்ளும் பலவித அவமதிப்புகள் சொல்லப்படுகின்றன; மாதொருபாகன் நாவலில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் அதைக் கையாளச் செய்யும் முயற்சிகள் பேசப்படுகின்றன. அப்படிச் சின்னஞ்சிறுபொட்டலங்களின் தோரணமாக இருப்பதே அவரது ஆக்கங்களை வாசிப்பின்பம் மிக்க சுவாரஸ்யப் பிரதிகளாக ஆக்குகின்றன.
பெருமாள்முருகன் ஆரம்ப காலம் முதல் தான் நம்பும் அரசியலைத் தன் படைப்புகளின் வழி பிரச்சார நெடியின்றி subtle-ஆகச் சொல்லி வருபவர். அதோடு சங்கடம் பாராமல் புனிதங்களை அடித்து நொறுக்கியவர். அவருக்கு வந்த இடர்பாடு கூட அதன் நேரடி விளைதான் - நம் சமூகத்துக்கு உண்மையை விட உண்மையைச் சொல்வது கசக்கும்.
அறிவித்துக் கொள்ளாவிட்டாலும் சுயசரிதைக்கூறுகள் இவரது புனைவுகளில் ஏராளம் உண்டு. தனது கிராமத்து அனுபவங்களையே கச்சாவாக்கி பெரும்பாலும் எழுதியவர். அதனாலேயே அவை வெறும் வட்டார வழக்கிலான கதைகளாக மட்டும் அமையாமல் அவ்வட்டாரத்தின் இயல்பைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன. நீரும், நிலமும், பயிரும், கிணறும், ஆடும், மாடும் அவற்றில் மலர்ந்து மணக்கின்றன. உதாரணமாக பெண்ணின் அல்குலை வர்ணிக்கும் போதும் “பூக்கட்டிய சோளக்கதிர்” என்கிறார். அவ்வளவு தூரம் விவசாயம் அவர் எழுத்துக்களில் வேர் பாய்ச்சியிருக்கிறது.
கொங்கு வட்டாரத்தை நிறைய எழுதியவர் என்ற வகையில் பெருமாள்முருகன் ஆர். சண்முகசுந்தரத்தின் நேரடி நீட்சி. ஆனால் அப்படி எழுதிய விஷயங்களின் விரிவின் அடிப்படையில் அவர் எப்போதோ ஆர். சண்முகசுந்தரத்தைக் கடந்து விட்டார். அவர் அசுர லோகத்தை வைத்து எழுத ஆரம்பிக்கும் வரை கொங்கு பகுதி மக்களின் உழவு முறைகள், தினசரிச் சிக்கல்கள், தனித்துவப் பழக்கங்கள், பேச்சு வழக்குகள் எனப் பல விஷயங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வந்திருக்கின்றன. மண்ணுக்கும் மனிதர்கள் மனவோட்டத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை அவற்றின் வழியே உணர முடிகிறது.
பெருமாள்முருகன் தன் புனைவுகளில் மிக வலுவான பல பெண் பாத்திரங்களை எழுதி இருக்கிறார். நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகளில் கூட இத்தகு வல்லிய வார்ப்புகள் கணிசமாக இருக்கின்றன. குறிப்பாகக் கணவனை இழந்து குழந்தையை வளர்க்கும் தாய் என்ற பிம்பம் தொடர்ச்சியாக அவரது புனைவுகளில் வருகிறது. அதன் பூரணமாக தன் தாய் பற்றிய அனுபவப் பதிவு நூலாக ‘தோன்றாத் துணை’யை எழுதினார் எனலாம்.
போலவே தலித்கள் பற்றிய நேர்மையான சித்திரங்களையும் அவரது எழுத்துக்களில் காண முடிகிறது. அவர் தலித் அல்லாதவர் என்ற அடிப்படையில் மேலிருந்து கொண்டு தலித்கள் மீது அதீத அன்பு காட்டும் பாவனை அவரது படைப்புகளில் அறவே இல்லை. சொல்லப் போனால் ஆதிக்க சாதி போல் மிக இயல்பாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் ‘மாதொருபாகன்’ Trilogy-யின் நாயகியான பொன்னா எனக்குப் பிடித்தமான பாத்திரம். மாதொருபாகன், அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் என்ற மூன்று நாவல்களிலும் பேசப்படும் அவளது உளவியல் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியது. ஒரு நாவலின் இறுதிப் பகுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நாயகன் இறந்தால் என்ன ஆகியிருக்கும், பிழைத்தால் என்ன ஆகியிருக்கும் எனத் தொடர்ச்சியாக இரண்டு நாவல்கள் பெருமாள்முருகன் எழுதியிருப்பதும் தமிழில் முன்னுதாரணம் இல்லாதது.
பெருமாள்முருகன் கட்டுரைகள் எழுதுகையில் ஓர் ஆய்வாளருக்குரிய ஆழ மொழியும் தரவுகளின் செறிவும் இயல்பாகவே வந்தமர்ந்து விடுகிறது. ஆனால் சற்றும் அலுப்பு தராமல் ஆர்வமாக வாசிக்க வைக்கும் சரளமும் அதோடு சேர்த்து வாய்த்திருக்கிறது.
பெருமாள்முருகனுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. தமிழில் பிழையின்றி எழுதும் மூன்று புனைவெழுத்தாளர்களுள் அவரும் ஒருவர் (யுவன் சந்திரசேகரும் பா.ராகவனும் மற்றவர்கள்). அது அவரது பேராசிரியப் பின்புலத்திலிருந்து வந்ததாக எடுத்தாலும் கல்விப் புலத்திலிருந்து எழுதும் எல்லோருமா அதைச் செய்கிறார்கள்!
*
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். வயதைக் கொண்டு அளந்தாலும் - இன்னும் மணி விழாவுக்கே காலமிருக்கிறது - பெருமாள்முருகனின் வீச்சு வியப்பானது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஜெர்மன், சீனம், இத்தாலி, போலிஷ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளுக்கும் அவர் படைப்புகள் போயிருக்கின்றன.
பேராசிரியர், கணவர், தந்தை என்ற லௌகீக வாழ்வின் பொறுப்புகளையும் ஏற்றவர். பெருமாள்முருகனை நான் தனிப்பட்டு அறிந்த அளவில் எழுத்துக்களில் வெளிப்படும் முற்போக்குக் கருத்துக்களைத் தன் சொந்த வாழ்விலும் அமல்படுத்துகிறார். அப்படி எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி குறைக்கும் வீம்பு சாதரணமானதல்ல. அதுவும் அவரைத் தமிழின் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்பேன்.
விளக்கு, கதா, கனடா இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருந்தாலும் வழக்கம் போல் தமிழின் சாஹித்ய அகாதமியால் பெருமாள்முருகன் இதுகாறும் கண்டு கொள்ளப்படவில்லை. (அவரது ‘மாதொருபாகன்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘One Part Woman’ ஆங்கில மொழியாக்கத்துக்கான சாஹித்ய அகாதமி விருதினைப் பெற்றது.)
முன்பே சொன்னது போல் தேசிய, உலகளாவிய அங்கீகாரங்கள் அவருக்குப் புதிதல்ல. 2023க்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் அவரது ‘பூக்குழி’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘Pyre’ இடம் பெற்றது. அதற்குப் போன முதல் தமிழ் நாவல் அதுவே. அந்நூல் தெற்காசிய இலக்கியங்களுக்கு வழங்கப்படும் DSC பரிசின் நெடும்பட்டியல் 2017ம் ஆண்டு இடம் பெற்றது. 2019ம் ஆண்டு அப்பரிசின் நெடும்பட்டியலில் அவரது ‘ஆலவாயன்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘A Lonely Harvest’ இடம் பெற்றது. இப்போது அவர் பெற்றிருக்கும் JCB பரிசின் கதவுகளையும் அவர் தட்டுவது முதல் முறை அல்ல. 2018ல் அவரது பூனாச்சி நாவலின் மொழிபெயர்ப்பான ‘Poonaachi or the story of a Black Goat’ம் 2019ல் அவரது ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ நாவல்களின் மொழியாக்கங்களான ‘A Lonely Harvest’ & ‘Trial by Silence’ இரண்டும் அப்பரிசின் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன.
ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் அண்ணாந்து பார்த்த சில சர்வதேச அங்கீகாரங்களை இன்று பெருமாள்முருகன் கைப்பற்றி இருக்கிறார், அல்லது அருகே போயிருக்கிறார். இன்னும் அப்படியான பற்பல விருதுகள், பரிசுகள் அவரை வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை. அது இறுதியில் இலக்கிய நொபேல் பரிசு வரையிலும் பாயக்கூடும்.
*
பெருமாள்முருகன் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓர் அரிய நிகழ்வு. தரமும் வெற்றியும் ஒருங்கே சேர்வது அதிகம் இங்கே நிகழ்ந்தது கிடையாது. ஜெயகாந்தன் ஓர் உதாரணம். சமகாலத்தில் ஜெயமோகனையும் பெருமாள்முருகனையும் சொல்லலாம். இந்த வெற்றி தொடர வேண்டும். அது தமிழின் பிற படைப்புகள் வெளியில் செல்லவும் வழிவகுக்கும். எனவே பெருமாள்முருகனை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் தமிழ் வாசகர்களின் கடமை.
அவரால் மலம் மணக்கும் ‘பீக்கதைகள்’ எழுத முடிகிறது, வசை வார்த்தைகளை ஆய்ந்து ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்று சொல்ல முடிகிறது, சமூகத்தில் நிலவிய, நிலவும் பாலியல் மீறல்களைச் சமரசமின்றியும் வக்கிரமின்றியும் வடித்துக் காட்ட முடிகிறது, தான் சார்ந்த சாதியின் ஆணவச் செயல்களைத் தயக்கமின்றி விமர்சனம் செய்ய முடிகிறது. அவர் புனைவுகளில் மனித மனதின் இருள் சூழ்ந்த இடுக்குகளில் கூசாமல், தயங்காமல் ஒளிக் கதிர் பாய்ச்சுகிறார். பேசாப் பொருளை மட்டுமின்றி, பேசக்கூடாப் பொருளையும் பேசுபவர் என்ற வகையில் அவரது எழுத்துக்கள் அவரை ஒரு மாபெரும் துணிச்சல்காரர் என்றே நிறுவுகிறது. அவ்வகையில் ‘கோழையின் பாடல்கள்’ எழுதிய பெருமாள்முருகனின் படைப்புகளை வீரனின் பாடல்கள் என்றே வரையறுப்பேன்.
பெருமாள்முருகன் கருத்துரிமை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வரி: “Let the author be resurrected to what he is best at. Write.” அதையேதான் நானும் அடிக்கோடிடுகிறேன். இன்று அவர் வேகம் குறைத்திருக்கிறார். அளந்தே அடிகள் எடுத்து வைக்கிறார். அசுர லோக அரிதாரம் ஓர் உதாரணம். அவரது சாவுக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பிருந்த தீவிரம் மறுபடி அவர் எழுத்தில் திரும்ப வேண்டும் என்றே அவரிடம் வாசகனாகவும் மாணவனாகவும் கோருவேன். ஒப்பீட்டளவில் அதுவே எனக்கு விருப்பம். இது பழைய சொலவடைதான்; ஆனால் இப்போது சொல்வது பொருத்தமானது - கப்பல் கரையில் நங்கூரமிட்டிருப்பது பாதுகாப்பானதே, ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்பட்டதல்ல.
***
(22 நவம்பர் 2023 அன்றைய மெட்ராஸ் பேப்பர் மின்னிதழில் 'பெருமாள் முருகன்: புனிதங்களை நொறுக்கும் கலைஞன்' என்ற தலைப்பில் வெளியானது.)
Comments