எழுத்தாளன் அரசியல் பேசலாமா?
ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன.
இவற்றுக்கு உதாரணமாக உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்கள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு கருத்துக்களைக் கொண்டிருந்தார். காலங்காலமாகவே இந்த வித்தியாசங்கள் எழுத்தாளர்களிடையே இருந்திருக்கின்றன.
தமிழ் தாண்டிப் பார்த்தாலும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. மலையாள எழுத்தாளர்கள் பலரும் இடதுசாரிச் சார்பு கொண்டவர்கள். கன்னட எழுத்தாளர்களான யூஆர் அனந்த மூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோர் இந்தியாவில் இன்று நிலவும் மதச் சகிப்பின்மையைக் கண்டித்தவர்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரும் முற்போக்கு அரசியலை எழுதியதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.
இன்னொரு நுணுக்கம் (Nuance) இதில் உண்டு. எழுத்தாளன் என்று யாரைக் குறிக்கிறோம் என்பதைப் பொறுத்து. அரசியல் எழுத்தாளர்கள் (Political Writers) என்றே இருக்கிறார்கள் - ஆனந்த் டெல்டும்டே, ஆஷிஸ் நந்தி போன்றவர்களைச் சொல்கிறேன். அவர்கள் பிரதான இலக்கே சமகால அரசியலை விமர்சித்து எழுதுவதுதான். அவர்கள் இவ்விவாதத்துக்குள் வர மாட்டார்கள். அரசியல் வரலாறு எழுதும் அபுனைவு எழுத்தாளர்ளுக்கும் சமகால அரசியலை எழுதும் கடமை உண்டு. உதாரணமாக ராமச்சந்திர குஹாவோ மருதனோ ஆர். முத்துக்குமாரோ அரசியல் எழுதாமல் இருந்து விட முடியுமா! பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர்கள் (உதா: தருண் தேஜ்பால்), நேரடிக் களப் பணிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் (உதா: அருந்ததி ராய்) ஆகியோருக்கும் குழப்பமே கிடையாது அரசியல் எழுதுவது இயல்புதான். நாம் இந்தக் கட்டுரையில் யோசிப்பது அரசியலை நேரடியாக எழுதும் கட்டாயமற்ற புனைவு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றியே.
*
“கலை மக்களுக்காகவே" என்ற கருத்து பரவலாக நம் சமூகத்தில் உண்டு. குறிப்பாக இடதுசாரி, திராவிட, தலித்திய மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் இந்தக் கருத்துடன் இயங்குவதைக் காணலாம். அவர்களின் செயல்முறை (Modus Operandi) இரண்டு: ஒன்று அவர்களின் இலக்கியப் படைப்புகளில் உரத்த குரலில், நேரடியாக மக்களை நோக்கி கருத்துக்களும் நிலைப்பாடுகளும் பேசப்படும். அடுத்து அவர்கள் அரசியல் கட்டுரை எழுதுகையில் கருப்பு வெள்ளையாக ஒரு தரப்பை நிராகரித்தும் அதன் எதிர்தரப்பை ஆதரித்தும் எழுதுவார்கள். இந்த இரண்டுமே எளிய மக்களைச் சென்றடைய இலகுவான, குழப்பமற்ற வழிகள் என்றாலும் அதனால் இரண்டு பக்க விளைவுகள் நிகழ்கின்றன: ஒன்று படைப்பில் கலை பின்னுக்குத் தள்ளப்படுகிறது - நேரடியாகப் பிரச்சாரம் செய்ய இலக்கியப் படைப்பு ஒன்றும் பிட் நோட்டீஸ் அல்ல. அடுத்து எழுத்தாளனுக்கு ஒரு நிறம் பூசப்பட்டு விடுகிறது - அவனுக்கு ஒரு வட்டம் வரையப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகிறது. அது அவனைச் சுருக்கும் செயல்தான். ஆனால் அதை அந்த எழுத்தாளனே விரும்பி ஏற்றுக் கொண்டு விட்ட பின் மற்றவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான்.
எனில் கலை மக்களுக்காக இல்லையா? கலை கலைக்காகவேதானா? இல்லை, அப்படி வைத்தால் குடுமி, எடுத்தால் மொட்டை என வறட்டுத்தனமாக மற்றோர் எல்லைக்கும் சென்று ஒட்டிக் கொள்ள அவசியமில்லை. “கலை மானுடத்துக்காக.” அதாவது காலம் கடந்து ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. அதாவது எழுதப்படும் காலத்தில் தொடங்கி இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரும் மனிதனுக்குமானதாகவே நல்ல கலை வடிக்கப்படும். நேரடியான, உடனடியான மாற்றங்கள் அதன் உத்தேசம் அல்ல. காலப்போக்கில் மனிதர்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுவதுதான் அதன் உத்தேசம். மாற்றுவது என்று சொல்வதைக் காட்டிலும் பாதிப்பது என்று சொல்வது துல்லியமாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்க்கையில் சமகால அரசியல் பிரச்சனைகள் கலையின் முன் சிறிய சிக்கல்கள், சில்லறைப் பிரச்சனைகள். எனவே அதற்கான தயார்நிலைத் தீர்வுகள் (Ready-made Solutions) இலக்கியப் பிரதிகளில் கிடைக்காது. அப்படியான தீர்வுகளை முன்வைக்கும் இலக்கியங்களின் ஆயுள் குறைவு. ஏனெனில் அப்பிரச்சனை தீர்ந்த பிறகு அப்படைப்பு மானுடத்துக்குத் தொடர்பற்றதாகி (irrelevant) விடுகிறது. இலக்கிய மதிப்பீட்டில் அறிவுரை சொல்லும் படைப்புகள் சிந்திக்கச் செய்யும் படைப்புகளைக் காட்டிலும் கீழாகப் பாவிக்கப்படுவது இக்காரணத்தால்தான்.
அரசியல் பற்றி முதலில் விஸ்தாரமாகச் சிந்தித்தவர் ப்ளாட்டோ. அதை நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார் (Republic). ஆனால் ப்ளாட்டோ எழுத்தாளர் அல்ல; தத்துவ ஞானி.
எழுத்தாளன் தத்துவ ஞானி அல்ல; எழுத்தாளன் இறைதூதரும் அல்ல. அவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்டவன். முன்னவர் குறைவானவர்களையே போய்ச் சேர்வார். அவர்கள் அறிவுஜீவிகள். பின்னவர் கோடிக்கணக்கான எளியவர்களைச் சென்றடைவார். எழுத்தாளன் இரண்டுக்கும் மத்தியிலான ஒரு கூட்டத்திடம் உரையாடி மாற்றங்களை உண்டாக்க வேண்டியிருக்கிறது. அவன் அரசியல் எழுதலாமா என்ற கேள்வியை இந்தக் கோணத்திலிருந்தே அணுகலாம். எழுத்தாளன் ஜாக்கிரதையாக அரசியல் எழுதலாம்!
*
எழுத்தாளன் அரசியலை எழுதுவதில் அப்படி என்ன ஜாக்கிரதை உணர்வு அவசியம்? வானின் கீழிருக்கும் ஏராள விஷயங்களைப் பற்றிப் பேசுவதைப் போல் அரசியலையும் பேசுகிறான். மற்ற விஷயங்களுக்கு இல்லாத எச்சரிக்கை இதில் மட்டும் ஏன்? காரணம் இருக்கிறது. வரலாறு, விஞ்ஞானம், சமூகம், தத்துவம் என எது குறித்தும் அவன் எழுதும் போது அவனுக்கு ஒரு சார்பு உருவாவது இல்லை. (அப்படியே உருவானாலும் அது ஓர் ஆபத்தற்ற சார்பாகவே பார்க்கப்படுகிறது.) ஆனால் எழுத்தாளன் அரசியலை எழுத ஆரம்பித்ததுமே அவனுக்கு ஒரு வலுவான சார்பு உண்டாகி விடுகிறது. தான் வாழும் காலத்தில் உள்ள யாரையோ எதிர்த்தோ அல்லது யாரையோ ஆதரித்தோதான் அவன் அரசியல் எழுத முடியும். எனவே அவன் தெளிவாக ஒரு தரப்பின் பகுதியாகி விடுகிறான்.
எழுத்தாளன் நடுநிலையானவன். அவனுக்குச் சார்புகள், சாய்வுகள் கூடாது. அதனால் அவன் அரசியல் எழுதுவதில் உள்ள பிரதான பிரச்சனை அவன் ஒரு தரப்பை எடுக்க வேண்டி இருப்பதுதான். நடுநிலை என்பது நடுவே இருப்பதல்ல, நியாயத்தின் பக்கம் இருப்பதே என்றாலும் பொதுவாகக் கள எதார்த்தம் பூரண நியாயம் கொண்ட அரசியல் தரப்புகள் இருப்பதில்லை என்பதே. எனவே எழுத்தாளனுக்கு இருக்கும் நடைமுறைச் சாத்தியம் மோசமான தரப்பை எதிர்த்து, இருப்பதில் மேலான தரப்பை ஆதரிப்பதே.
இங்கே ஒரு கேள்வி எழும். மோசமான தரப்பை எதிர்ப்பதோடு அவன் நிற்கக்கூடாதா, ஏதேனும் ஒரு தரப்பை அதன் போதாமைகள் தாண்டி ஆதரித்தே ஆக வேண்டுமா என.
ஆம், மக்களாட்சியில் வேறு வழியில்லை. அதுவும் இந்தியா போன்ற சிந்தனைத் திறனும் அறச் சார்பும் மலிந்த மக்களால் கட்டப்பட்ட ஜனநாயக நாட்டில் எது கூடாது என்பதோடு எது வேண்டும் என்றும் அவன் கை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இல்லை எனில் அவன் தோற்க வேண்டும் என எண்ணும் தரப்புக்கு எதிரான வாக்குகள் சிதறி அது அத்தரப்பு வெல்லவே வழிகோலும். எனவே இங்கே எழுத்தாளன் வேறு வழியின்றி ஒரு தரப்பை ஆதரிக்க வேண்டியதாகிறது - அதுவும் எந்த விமர்சனம் இல்லாமல். ஏன் எனில் விமர்சித்தால் நீ ஆதரிக்கும் தரப்பையே விமர்சித்துக் குழப்புகிறாயே என்ற கேள்வி எழும். இங்கே அரசியலில் கருப்பு - வெள்ளை மட்டுமே சாத்தியப்படுகிறது.
ஆக, எழுத்தாளன் அரசியல் எழுதுவதன் முதல் பக்க விளைவு அவன் மீது விழும் சார்பு முத்திரை. அது எத்தனை நல்ல தரப்பு என்றாலும் கூட அதற்கு எதிரான, குறைந்தபட்சம் மாற்றான தரப்புகள் இருக்கவே செய்யும். ஆக, இயல்பாகவே அவனை மறுப்போரும், எதிர்ப்போரும், விலகுவோரும், வெறுப்போரும் உருவாகிறார்கள். அதை விட ஆபத்து அவனது எழுத்தைத் தாண்டி இந்தச் சார்பின் அடிப்படையில் அவனை விரும்புவோரும், ஆதரிப்போரும், போற்றுவோரும், நெருங்குவோரும் உருவாகிறார்கள். ஒரு வகையில் அது தேவையற்ற சுமை. சரி, மற்றவர்களைப் பற்றி எழுத்தாளனுக்குக் கவலை இல்லை என்றே கொண்டாலும் அவனுக்குள்ளுமே கூட அது சிக்கல்களை உருவாக்குகிறது.
*
எழுத்தாளன் ஒரு கட்சி சார்பெடுப்பதில், அதன் விசுவாசியாக ஆவதில் நிச்சயம் சில சுதந்திரங்களை இழக்கிறான். சரி, எழுத்தாளனுக்கு ஏன் அந்தச் சுதந்திரம் வேண்டும்?
ஏனெனில் அவன் மானுடத்தின் பிரதிநிதி. எதற்குள்ளும் அவன் தன்னை அடைத்துக் கொள்ளக்கூடாது. எதுவொன்றில் அவன் ஒட்டிக் கொண்டாலும் அவனது சிந்தனை குறுக்குகிறது. உதாரணமாக அவன் ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்கும் சார்பை மேற்கொண்டால் கட்சி என்ன பிழை செய்தாலும் அவனால் விமர்சிக்க முடியாது. அல்லது தன் நடுநிலையைக் காட்டிக் கொள்ள மயிலிறகால் வருடும் தொனியில் அக்குறைகளைச் சுட்டிக் கடக்க வேண்டி இருக்கும். கட்சியின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்குமளவு மோசமாக இல்லை என்றாலும் கள்ள மௌனத்தின் வழி அவற்றைக் கண்டும் காணாமல் கடக்க வேண்டியிருக்கும். மாற்றுக் கட்சிகள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்ட முடியாது. சுருக்கமாக அவன் தன் அசல் கருத்துக்களைக் கட்சியின் கொள்கை அல்லது செயல்கள் என்ற வடிகட்டி கொண்டு வடித்து மிஞ்சியதை மட்டுமே வெளிப்படுத்த முடியும். இது கையைக் கட்டிப் போட்டுக் கொள்வதுதான்.
இன்னொன்று எழுத்தாளன் அரசியல் எழுதுவது ஏராளப் பகை சம்பாதிக்க ஏதுவாகும். முதலில் அவன் எதிர்க்கும் தரப்பு அவனை எதிரியாக வரிக்கும். சரி, அது பரவாயில்லை. எதிர்பார்த்ததுதான். அடுத்து நடப்பதுதான் விநோத முரண். தோழமை சுட்டல் என்ற விஷயமே நம் சூழலில் சாத்தியமில்லை; சுட்டிய கணமே எதிரி! எழுத்தாளன் ஆதரிக்கும் தரப்பின் சிறிய குறைகளைச் சொன்னாலும் அவன் துரோகி என முத்திரை குத்தப்பட்டு அவர்களால் கடுமையாக வசைபாடப்படுவான். ஏனெனில் அரசியலில் எத்தரப்பாகினும் அவர்களுக்குத் தேவை முழு விசுவாசி. மாறாக, சிறு விமர்சனம் வைத்த கணமே அதற்கு முன் ஆண்டுக்கணக்காக தந்த ஆதரவெல்லாம் ரத்து செய்யப்பட்டு வாளின் கூர்நுனி எதிரே அவன் நிறுத்தப்படுவான். எனவே அரசியலில் இரு தரப்புக்கும் எதிரியாவது மட்டுமே மனசாட்சி கொண்ட எழுத்தாளன் இறுதியில் கண்டடைவதாக இருக்கும்.
இன்னொரு பிரச்சனை இருக்கிறது. எந்த அரசும் முழுமையாகச் சரியானதாக இருக்க முடியாது. அதன் குறைகளை விமர்சிப்பதே எழுத்தாளன் செய்ய வேண்டியது. அதுவே அந்த அரசுக்கும் நல்ல வழிகாட்டலாக அமையும். ஆனால் எழுத்தாளன் ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதன் குறைகளைச் சுட்டும் போது அவனுக்கு ஒரு சங்கடம் எழும். இத்தனை நாளும் அவன் ஆதரித்த தரப்பை அவனே குறை சொல்ல வேண்டி இருக்கும். மாறி மாறிப் பேசுவதான தோற்றம் எழும். ஆனால் அதை அவன் செய்யாவிடில் இரட்டை நிலைப்பாடு கொண்டவன் என்றாகிடும். எனவே விமர்சிப்பது கடமையாகி விடுகிறது.
எழுத்தாளன் அரசியல் விவகாரங்களில் உடனடி எதிர்வினை ஆற்றுவதைத் தவிர்ப்பதும் நல்ல உத்திதான். ஏனெனில் அவசரக் கருத்துகளில் தெளிவு, நிதானம் இராது என்பது ஒரு பக்கம். ஆரம்பத்தில் விஷயத்தின் முழு உண்மையும் தெரிந்திருக்காது என்பது இன்னொரு பக்கம். ஆக, எழுத்தாளன் அரசியல் நிகழ்வுகளில் கருத்துரைக்க வேண்டும் என்றாலும் முதல் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை விட, சற்று பொறுத்து வந்தாலும் சரியான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி என்றில்லை, அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசுகளுக்குமே கூட இந்தச் சார்பு விவகாரம் பொருந்தும். எனவே எழுத்தாளன் முடிந்த அளவுக்கு எந்தக் கட்சி, அமைப்பு, நிறுவனம், அரசுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், நிதி உள்ளிட்ட லௌகீக லாபங்களை வாங்காமலும் இருக்க வேண்டும். அதிகபட்சம் விருது போன்ற அங்கீகாரங்களை ஏற்கலாம். (ஜெயமோகனோ ஒரு படி மேலே போய் பாஜக ஆட்சியில் இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார்.)
*
இங்கே என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து (சுமார் பதினைந்து ஆண்டுகளாக) பாஜகவை எதிர்த்து வந்திருக்கிறேன். அதன் நிமித்தம் பிரச்சனை அடிப்படையில் (Issue Based Support) அதற்கு எதிராக நிற்கும் காங்கிரஸையோ திமுகவையோ ஆதரித்து எழுதி வந்திருக்கிறேன். அவசியப்படுகையில் ஆதரித்த இந்தக் கட்சிகளையே மறுத்தும் எழுதி வந்திருக்கிறேன். அதனால் இழந்தவைதாம் அதிகம். என் பால் அக்கறை கொண்ட மூத்த எழுத்தாளர்கள் நான் அரசியல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் அவர்கள் சொல்வது சரியல்ல, எழுத்தாளன் தீவிரமாக அரசியல் எழுத வேண்டும், நாட்டைச் சீராக்குவதில் அவனுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்று எண்ணி வந்திருக்கிறேன். நம் எழுத்தாளர்கள் அரசியல் எழுதாததை ஒருவிதத் தப்பித்தலாகவே பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் சமீப ஆண்டுகளில் அதிலிருந்து மாறி அரசியல் எழுதாமல் தவிர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமில்லை என்று உணர்கிறேன்.
சமீப ஆண்டுகளில் பா. ராகவன் இதில் ஓரளவு தெளிவாக இருக்கிறார் எனப் படுகிறது.
எழுத்தாளன் தான் பேச விரும்பும் அரசியலைப் படைப்பில் அமைதியாக, பூடகமாகச் சொன்னாலே போதுமானது. இன்னும் சொன்னால் அதுதான் சரியானதும், வலுவானதும் கூட. அதுவே நீண்ட கால நோக்கில் இன்னும் தீவிரமான விளைவுகளை உண்டாக்கும். அவன் தன் அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக எழுதியாக வேண்டும் என எவரும் கட்டாயப்படுத்த முடியாது. எதைச் செய்யலாம் என்ற சுதந்திரம் அவனுக்கு அவசியம்.
அதே சமயம் எழுத்தாளன் அரசியல் சார்பெடுப்பதில் லாபங்களும் உண்டு. மரியாதை, அதிகாரம், செல்வாக்கு, பணம், பதவி, பரிசு, விருது, உதவி எனப் பல வழிகளில் அவன் பெற்றுக் கொள்ளச் சாத்தியம் இருக்கிறது. எழுத்தாளனை மதிக்காத நாட்டில் அவன் அதைப் பெற இரண்டு வழிகள்தாம். ஒன்று சினிமா, மற்றது அரசியல். அங்கீகாரங்கள் இல்லாமல் நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒரு விரக்தியுற்ற எழுத்தாளன் தான் இழந்ததை எல்லாம் மீட்க அரசியலைத் தன் மார்க்கமாகக் கொண்டால் அதை நாம் கேள்வி கேட்கவும் முடியாது. எனவே எழுத்தாளன் அரசியல் பேசுவதால் லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு. எது வேண்டும் என அவன்தான் தீர்மானிக்க வேண்டும்.
சுதந்திரன் (Independant) என்ற அடையாளத்தில் எழுத்தாளன் கட்சியை ஆதரிப்பதை விட நேரடியாகக் கட்சி உறுப்பினரான பின் அக்கட்சிக்குச் சார்பு நிலை எடுப்பது உத்தமம். ஏனெனில் அதற்குப் பின் அவனது அரசியல் கருத்துக்கள் அக்கட்சி உறுப்பினன் என்ற அடிப்படையில்தான் பார்க்கப்படும், அவன் ஓர் எழுத்தாளன் என்பதோடு அவற்றைக் குழப்பிக் கொள்ள அவசியமிராது. அதுவே நேர்மையான முன்வைத்தலாக இருக்கும்.
*
ஆக, இறுதிப் புரிதலாக இந்த இடத்துக்கு வந்தடைய வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் அரசியல் எழுதலாம். ஆனால் தன் படைப்புகளின் கலைப்பெறுமதியில் சமரசம் செய்து கொள்ளலாகாது. போலவே எந்தத் தரப்புக்கும் தன்னை விசுவாசியாக அவன் கருதக் கூடாது - முக்கியமாக அரசுக்கு, ஆளும் தரப்புக்கு ஒருபோதும் அவன் ஆதரவாளனாக இருக்கவே கூடாது. அதுவே அவனைச் சுதந்திரமாகவும் சரியாகவும் இயங்க வைக்கும். உடனடி, உணர்ச்சிகர எதிர்வினைகளையும் அரசியல் விவகாரங்களில் தவிர்க்கலாம்.
சமகால அரசியல் என்பது எழுத்தாளனுக்கு கட்டாயமற்ற கூடுதல் பொறுப்பு மட்டுமே. தன் பகுத்தறிவு, மனசாட்சி தவிர எதற்கும் அடிபணியாமல், நிதானமாக அவன் அதை எழுதி விட்டு நகரலாம். இல்லை எனில் அவன் நேரடியாகக் கட்சி உறுப்பினராவதே சரி.
***
(உயிர்மை - அக்டோபர் 2023 இதழில் வெளியானது)
Comments