சூரிய கிரஹணம் - FAQs


1) சூரிய கிரஹணம் என்றால் என்ன?

பூமி நிலா சூரியன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை நிலா மறைத்து விடுகிறது. அதனால் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூமியின் பக்கம் இருள் சூழ்கிறது. இது தான் சூரிய கிரஹணம்.

2) சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

சூரியனைப் பார்க்கக் கூடாது. கறுப்புக் கண்ணாடி அணிந்து கூடப் பார்க்கக்கூடாது; கேமெரா, ஸ்மார்ட்ஃபோன், பைனாகுலர், டெலஸ்கோப் வழியும் பார்க்கக்கக்கூடாது; நிலைக்கண்ணாடியின் பிரதிபலிப்பையும் பார்க்கக்கூடாது.

3) ஏன் அப்படி?

சூரியனின் கதிர்கள் கண்களில் விழுந்தால் ரெட்டினா (விழித்திரை) பாதிக்கப்படும். தற்காலிக அல்லது நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம்.

4) இக்கதிர்கள் கிரஹணத்தின் போது மட்டும் தான் வருகின்றனவா?

இல்லை. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஃபோட்டோஸ்பியரிலிருந்து (ஒளி மண்டலம்) இக்கதிர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

5) பிறகேன் கிரஹணத்தின் போது மட்டும் கண்ணுக்குப் பிரச்சனை?

சாதாரண வேளைகளில் நம் கண்களால் சூரியனை நேரடியாய்ப் பார்க்க முடியாது. அதீத வெளிச்சம். அதனால் நம் ப்யூபில் (பாப்பா) சுருங்கி கண்களை மூடச் செய்து விடும். அதனால் அக்கதிர்கள் கண்களுக்குள் பாய்ந்து ரெட்டினாவைத் தொட வாய்ப்பில்லை. ஆனால் கிரஹண‌த்தின் போது அதீத வெளிச்சம் இல்லை. அதனால் சூரியனை எளிதில் நேராய்ப் பார்க்கலாம். அதனால் அக்கதிர்கள் நிலவுக்குப் பின்னிருந்து கசிந்து நம் கண்ணுக்குள் புக வாய்ப்பதிகம்.

6) இது மாதிரி கண் பாதிப்பு நிஜத்தில் நடந்திருக்கிறதா?

ஆம். சாதாரண நேரத்தில் கூட போதை மருந்தின் ஆதிக்கத்தில் நேரடியாய்ச் சூரியனைப் பார்த்தவர்களுக்கு நடந்திருக்கிறது. கிரஹணத்தின் போது மனிதர்களுக்கும் நாய் முதலிய விலங்குகளுக்கும் நடந்திருக்கிறது. ஐஸக் நியூட்டன் நிலைக்கண்ணாடியில் சூரிய கிரஹணத்தைப் பார்க்க முயன்று சில தினங்களுக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டதாய்ச் சொல்வார்கள்.

7) சூரிய கிரஹணத்தின் போது வெளியே போகலாமா?சாப்பிடலாமா?

நடை, உணவு, கழிவு, கலவி என எல்லாம் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. ஏனெனில் கிரஹணத்தின் போது தனிப்பட்டு எந்தக் கதிரும் வெளிவருவதில்லை. அது எப்போதும் நம் உடலின் மீது படும் அதே கதிர்கள் தாம். ஒருவேளை கிரஹணத்தின் போது கூடாதெனில் மற்ற வேளைகளிலும் கூடாது தான். கண்களில் அக்கதிர்கள் நுழையும் வாய்ப்பு கிரஹணத்தின் போது அதிகரிப்பது மட்டுமே வித்தியாசம். அதில் மட்டுமே பாதுகாப்பு பேண வேண்டும்.

8) சூரிய கிரஹணத்தை எப்படிப் பார்ப்பது?

எக்லிப்ஸ் க்ளாசஸ், பின்ஹோல் கேமெரா, வெண்துணிப் பிரதிபலிப்பு என வழிகள் இருந்தாலும் பாதுகாப்பான வழி உங்கள் நகரின் கோளரங்கத்திற்குச் சென்று வரிசையில் நின்று பார்ப்பது.

9) இப்போது தான் வெறும் கண்ணால் பார்த்தேன், ஒன்றும் ஆகவில்லையே?

ரெட்டினாவில் உணர்நரம்புகள் இல்லை. அதனால் சூரியக் கதிர்கள் ஊடுருவி அது பாதிப்புறும் போது வலி முதலான அறிகுறிகள் இராது. 12 மணி நேரங்களுக்குப் பின் பார்வை மங்க ஆரம்பிக்கும்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி