கலைஞர் சிறப்பிதழ்
'தமிழ்' மின்னிதழின் அடுத்த இதழை கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரு பத்திரிக்கையாளன் இன்னொரு பத்திரிக்கையாளனுக்குச் செய்ய முடிந்த எளிய அஞ்சலி அதுவே. அனேகமாய் அண்ணாவின் பிறந்த நாளன்றோ பெரியாரின் பிறந்த நாளன்றோ வரும். கலைஞர் தொடர்புடைய படைப்புகளைத் தனிப்பட்ட முறையில் சில நண்பர்களிடம் கேட்டுப் பெறவிருக்கிறேன். பொதுவான மற்ற படைப்புகளை அனுப்ப விரும்புபவர்கள் இம்மாத இறுதிக்குள் இம்மின்னஞ்சலில் அனுப்பலாம்: c.saravanakarthikeyan@gmail.com
படைப்புகள் அனுப்ப விதிமுறைகள் சில உண்டு. எளிமையான, நேரடியான நிபந்தனைகள்:
1. இலவச இதழ் என்பதால் பிரசுரமாகும் எந்தப் படைப்பிற்கும் சன்மானம் தருவதற்கில்லை.
2. படைப்புகள் வேறெந்த அச்சு மற்றும் மின் இதழ்களில் வெளியாகாதவையாக இருக்க வேண்டும்.
3. படைப்புகளுக்கு பக்க வரையறை ஏதுமில்லை. அவசியமெனில் பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவேன்.
4. படைப்பு கவிதை, கதை, கட்டுரை, பத்தி, நாடகம், திரைக்கதை, மொழிபெயர்ப்பு, ஓவியம், புகைப்படம், கார்ட்டூன் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். இலக்கியம், திரைப்படம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம், அனுபவம் போல் எந்த வகைமைக்குள்ளும் அமையலாம். சமையல், ஜோதிடம், செக்ஸ் குறிப்புகளுக்கு மட்டும் அனுமதி இல்லை.
5. படைப்பை வெட்டவோ, ஒட்டவோ, திருத்தவோ இதழின் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு முழு உரிமை உண்டு. பெரிய அளவிலான மாற்றம் எனில் மட்டும் முன்கூட்டியே படைப்பாளிக்குத் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவேன்.
6. படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதா எனக் கூடுமானவரை நானே தகவல் அனுப்பி விடுவேன். தேவைப்பட்டால் நினைவுறுத்தல் மடல் அனுப்பி விசாரிக்கலாம். ஒருவேளை, படைப்பை அனுப்பிய பின் வெளியாகும் முதல் இதழில் அது வெளியாகவில்லை, என்னிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை எனில் பிரசுரத்துக்குத் தேர்வாகவில்லை என எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
7. இதழ் வெளியான ஒரு மாத காலத்திற்குப் படைப்பை வலைப்பூ, ஃபேஸ்புக், ட்வீட்லாங்கர் என எதிலும் வெளியிடலாகா. இடையே படைப்பைப் பகிர விரும்பினால் இதழின் சுட்டியைப் பகிர்ந்து படைப்பு வெளியாகி இருக்கும் பக்க எண்ணைக் குறிப்பிடலாம். ஒரு மாதத்திற்குப் பின் எதில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம். புத்தகமாக்கல் உள்ளிட்ட எல்லா உரிமையும் படைப்பாளிக்குரியது. ஒரு மாதத் தடை இதழின் முக்கியத்துவம் மங்கக்கூடாது என்பதற்காகவே.
8. இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.
(முந்தைய இதழ்களை இங்கே வாசிக்கலாம்: https://tamizmagazine.blogspot.com/)
*
Comments