500, 1000, அப்புறம் ஜெயமோகன்


500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் அதன் விளைவுகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நெடுங்கட்டுரையில் (http://www.jeyamohan.in/92500) சொல்லி இருப்பனவற்றில் சில‌ அடிப்படை விஷயங்களிலேயே வேறுபடுவதால் நல்ல உழைப்பும் சிந்தையும் கொண்ட அக்கட்டுரையைக் கடக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

1) ஜெயமோகன் கட்டுரையின் ஆதார நம்பிக்கை கறுப்புப்பணமானது இந்தியாவில் நோட்டுக்களாகவே மிகப்பெருமளவில் தேங்கி இருக்கிறது என்பது. அவர் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளியல் அறிஞர்களுடன் பேசியதன் அடிப்படையில் இதை முன் வைக்கிறார். புள்ளி விபரத்துடன் இது சரி தான் என அவரும் நிரூபிக்கவில்லை; அது தவறென நாங்களும். ஆனால் பொதுவான தர்க்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான கள்ளப் பணம் நோட்டுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் புரிதல். நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் என் இயல்பான‌ மோடி எதிர்ப்பு நிலைப்பாடு தாண்டி தேசாபிமான‌ அடிப்படையில் அதை ஆதரித்து எழுதிய போதும் கூட‌ (https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154024889982108) இதைக் குறிப்பிட்டிருந்தேன். அக்குறையையும் தாண்டி இந்நடவடிக்கையை ஒரு தொடக்கமாக, ஒரு முக்கிய மாற்றமாக, கள்ளப் பணத்தாருக்கு பதற்றமேற்படுத்தும் ஓர் அடியாக நம்பினேன்.


2) வங்கியில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்படவோ, கணக்கில் போடவோ குவிவதை வைத்து ஜெயமோகன் சொல்வது போல் கருப்புப் பணமெல்லாம் நோட்டுக்களாகவே ஒளிந்திருக்கின்றன எனக் கொள்ள முடியாது. அது மிக மிகப் பெரும்பாலும் சாதாரணப் பொதுமக்கள் பணமே. நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்களைக் கொண்டு கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சி நடப்பது உண்மையே. ஆனால் அது எத்தனை விழுக்காடு என்பதை போதிய விசாரணை இன்றி, ஆதாரங்கள் இன்றி அத்தனை மேலோட்டமான முறையில் வருமான வரித் துறை கூடத் தீர்மானிக்க முடியாது.

3) 500, 1000 ருபாய் நோட்டு ஒழிக்கப்படப் போவது பெரும் பணக்காரர்களுக்கும் சில பாஜக கட்சிக்காரர்களுக்கும் முன்பே தெரிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன (http://www.newindianexpress.com/nation/2016/nov/17/adanis-ambanis-already-knew-about-currency-ban-bjp-mla-caught-on-camera-1539642.html). அவர்கள் ஒன்று தாம் வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை 100 ரூபாய் நோட்டுக்களாக வங்கிகளிலும் வேறு மார்க்கங்களிலும் மாற்றி விட்டனர் அல்லது சொத்துக்களாக மாற்றி விட்டனர். இதற்குத் தோதாய் கடந்த சில மாதங்களாக ஏடிஎம்களில் பல‌ 100 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்கிறார்கள். இது உண்மை எனில் இது கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் சிறுபணக்காரர்கள் மற்றும் பிற கட்சிக்காரர்களுக்கு எதிரான தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான வரி நடவடிக்கை மட்டுமே. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் மறுப்பில்லை. ஆனால் இப்படி ஒரு பகுதி குற்றவாளிகளை மட்டும் கட்டம் கட்டுவது எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும்?  இப்போதைக்கு இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு மட்டுமே என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தொடர்ந்து முன்வைக்கின்றனர் என்பதால் உதாசீனம் செய்யத்தக்கதாக இல்லை (http://www.thehindu.com/news/cities/Delhi/bjp-allies-already-knew-about-demonetisation/article9331554.ece). மேலோட்ட மறுப்பு தவிர‌ இக்குற்றச்சாட்டுகளை அரசும் கண்டுகொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக பெரும்பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசு இதைச் செய்திருக்க வாய்ப்புண்டு என்பது என் தரப்பு. அப்படி இருப்பின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் ஓர் அரசியல் நாடகம் மட்டுமே.

4) இந்நடவடிக்கையால் 100 கோடிக்கும் மேலான சாதாரணப் பொதுஜனம் பாதிக்கப்படும் என்பது குறைந்தபட்ச அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. அப்படி இருக்கையில் எல்லாமறிந்த அரசு அதற்கேற்ப தன் இயந்திரத்தைத் தயார் செய்திருந்ததா என்பது கேள்விக்குறியே. தகுதி வாய்ந்த‌ பொருளாதார நிபுணர்களின் வழிநடத்தலில் இதைச் செய்திருக்க முடியும் என்பது என் நம்பிக்கை. மென்பொருள் துறையில் zero downtime deployment என்பார்கள். பயன்பாட்டில் இருக்கும் ஒரு மென்பொருளில் ஒரு விநாடி கூட எந்தச் செயல்பாடும் பாதிக்கப்படாமல் புதிய மென்பொருளை உள்நுழைப்பது. அப்படிக் கூட இருக்க வேண்டியதில்லை. அதாவது நான் ஒரு துளியும் பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் இந்த நடவடிக்கை அமைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால் இப்போதை விட நிச்சயமாய்ச் சிறப்பாய்க் கையாண்டிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. நிர்வாகத் திறனற்ற அரசின் கடுமையான கையாலாகாத்தனமே வெளிப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தேன் (https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154037275792108). சென்ற ஆண்டின் சென்னை வெள்ளத்தின் போதான ஜெயலலிதா அரசின் செயல்பாடுகள் போலவே தான் இருக்கின்றன‌ தற்போதைய சூழலைக் கையாளும் மோடி அரசின் செயல்பாடுகள் எனத் துணிந்து சொல்ல முடியும். முடிவுகளைப் பல முறை மாற்றிக் குழப்பியதில் துக்ளக் தர்பார் என விமர்சகர்கள் கேலி செய்வதை முழுக்கப் புறந்தள்ள முடியவில்லை. இதன் விளைவான பொதுமக்கள் பாதிப்பு மிக அதிகம். அதைச் சுலபமாய்க் கடக்க முடியாது. (செல்லா நோட்டு அறிவிப்பைச் செய்து விட்டு மக்களுக்கு நிறைய அவகாசம் தந்திருக்க வேண்டும் என்றெல்லாம் அர்த்தமின்றிக் கேட்கவில்லை. அது அந்த நடவடிக்கையையே தோற்கடிக்கும் விஷயமாகி விடும் என்பது புரிகிறது.)

5) ஊடகங்கள் சொல்லும் செய்திகளை நம்பி மட்டும் எதிர்க்கவில்லை, நோட்டுக்கள் பற்றாக்குறையால் நான், நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார், உடன் பணிபுரிவோர் எனப் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை நேரடியாகவே அறிவேன். அதனால் சாதாரண மக்கள் இதனால் அவ்வளவு பாதிப்புக்குள்ளாகவில்லை என்ற வாதத்தை ஏற்கவே முடியாது. ஏற்கனவே இதைப் பற்றிப் பேசி இருக்கிறேன் (https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154044012227108). உச்சநீதிமன்றம் "ஏன் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கு இணையாய் 100 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடவில்லை?" எனக் கேட்டதற்கு மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் "அது சாத்தியமில்லை, ஏனெனில் மொத்தமாய்ப் புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களில் (மதிப்பின் அடிப்படையில்) 80%க்கும் மேல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களே." என்கிறார். யாரும் முட்டுக் கொடுக்கவே வேண்டியதில்லை. அரசு தன் வாயாலேயே நாட்டில் பணப் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

6) அதே வழக்கில் பொறுப்பு வாய்ந்த‌ உச்ச நீதிமன்றமே இந்த‌ நிலை நீடித்தால் கலவரம் வெடிக்கக்கூடும் என அரசை எச்சரிக்கிறது (http://www.thehindu.com/news/national/demonetisation-move-if-suffering-goes-on-there-may-be-riots-says-supreme-court/article9361512.ece). அதனால் பொருளாதார அவசரநிலை, நாடு தழுவிய கலவர அபாயம் என்பதெல்லாம் ஏதோ மோடி எதிர்ப்பாளர்களோ, எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ மட்டும் கிளப்பி விடும் வதந்தி அல்ல. நாடு அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதே நிலை. பீஹாரில் வங்கி சூறையாடப்பட்டதைக் கண்டோம். பணமிருந்தும் செல்லா நோட்டாக இருந்ததால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்தை குழந்தையை அறிவோம். ஓர் அரசின் பொருளாதார முடிவினால் 9 நாட்களில் 55 பேர் இறந்து போவது (http://www.huffingtonpost.in/2016/11/17/day-9-demonetisation-death-toll-rises-to-55/) என்பது சாதாரண நிகழ்வில்லை தானே? தான் சம்பாதித்த பணத்தை தன் சொந்தத் தேவைக்கு எடுக்க முடியாமால் குடிமக்கள் கையறு நிலையில் உள்ளனர். எல்லாம் மோசமான நிர்வாகத்தின் காரணமாக. இதற்காக அரசைக் கேள்வி கேட்கக்கூடாதா? கேட்டால் அரசியல் வெறுப்பு என்று முத்திரை குத்துவதா? இது கருத்துச் சுதந்திரக் கொலை இல்லையா?

7) வெளிநாடுகளில் பதுக்கி இருக்கும் கருப்புப் பணத்தைத் திரும்பக் கொணர்வதாய் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி என்னாயிற்று எனக் கேட்பதன் அர்த்தம் இங்கே இருக்கும் கருப்புப் பணம் அப்படியே இருக்கட்டும் என்பதல்ல. இயல்பான தர்க்கத்தின் அடிப்படையில் அது மலை, இது மடு என்ற புரிதலே காரணம். இங்கே கருப்புப் பணம் வைத்திருப்பவன் அதைக் கேள்வி கேட்பதைத் தான் தப்பித்துக் கொள்ளக் கேட்கிறான் எனலாம். சாதாரணர்கள் கேட்பதில் என்ன தவறு? அதிலும் உள்நோக்கம் கற்பித்தால் எப்படி? பணக்காரர்களின் நண்பனான வலதுசாரி மோடி அரசு ஒருபோதும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி இருக்கும் பணத்தை வெளிக் கொண்டு வரும் வேலையைச் செய்யாது. (அல்லது நடவடிக்கைக்கு முன் தன் நண்ப‌ர்களுக்குத் தகவல் தந்து போதிய அவகாசம் அளித்து மற்றவர்களை மட்டும் அமுக்கக்கூடும்.)

8) மோடி அரசு பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்பதற்கு ஒரு சிறு உதாரணம் பொதுத்துறை வங்கிகளில் ரூ. 85,000 கோடி கடன் வைத்திருக்கும் 87 நபர்களின் பெயர்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றம் கேட்ட போதும் ரிசர்வ் வங்கி மழுப்பலாய்ப் பதில் சொல்லி இருப்பது தான் (http://indianexpress.com/article/business/banking-and-finance/87-owe-rs-85000-crore-why-not-make-their-names-public-supreme-court-asks-rbi-3100790/). விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ. 7,000 கோடிக்கும் மேலான கடன் தொகையை வாராக்கடனாக அறிவித்ததும் இந்த ஆட்சியில் தான் (http://indianexpress.com/article/business/banking-and-finance/sbi-write-off-npas-wilful-defaulters-list-vijay-mallya-kingfisher-airlines-4378210/). தள்ளுபடி செய்யப்பட்ட கடன் வேறு, வாராக்கடன் வேறு என வக்கணையாக வாதாடுவார்கள்! எப்படி ஜெயமோகன் கலைஞரிடம் கருப்புப் பணம் இருக்கும் என உறுதியாக நம்புகிறாரோ அதனாலேயே அவர் இந்நடவடிக்கையை எதிர்க்கிறார் என நினைக்கிறாரோ அதே போல் அம்பானி, அதானி உள்ளிட்ட மோடியின் நண்பர்கள் செல்லா நோட்டு அறிவிப்பை முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்றும் இதை எதிர்கொள்ள எல்லா நடவடிக்கைகளும் மேற்கொண்டு விட்டனர் என்றும் அதனாலேயே அவர்கள் இதை எதிர்க்கவில்லை என்றும் நான் கருதுகோள் கொள்ள முகாந்திரம் இருக்கிறது தானே!

9) இதில் இன்னொரு விஷயமும் உண்டு. இந்த முடிவை ஆதரிக்கும் மோடி பக்தர்களின் தர்க்கமோ அறமோ அற்ற எரிச்சலூட்டும் வகையிலான முட்டள்தன அல்லது திமிர்ப் பேச்சுக்கள். அவர்கள் எப்போதும் ஃபாசிஸ்ட்கள் என்பதால் அவர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது என்றாலும் இம்முறை எல்லை மீறித்தான் போனார்கள். நாட்டுக்காக எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படுகையில் நீ ஏடிஎம் வரிசையில் நிற்க முடியாதா?, ஜியோ சிம்முக்காக, கபாலி டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்கையில் வங்கியில் பணம் மாற்ற வரிசையில் நிற்கக்கூடாதா?, தினம் யாராவது எதனாலாவது சாகிறார்கள் - நாட்டுக்காக சில மரணங்களைப் பொறுத்துப் போவதில் பிழையில்லை, ஏடிஎம்களில் குவியும் கூட்டம் பொதுமக்களே அல்ல; திட்டமிட்டு எதிர்கட்சிகள் அனுப்பி வைத்தவை, சமீப நாட்களில் ஏடிஎம்களில் வரிசை குறைந்து விட்டது, அதனால் மக்களின் பணப் பற்றாக்குறை தீர்ந்து விட்டது, வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வரிசையில் நிற்போர் எல்லோரும் கறுப்புப் பணம் வைத்திருப்போர், இந்த நடவடிக்கையை எதிர்க்கும் அனைவரும் கறுப்புப் பணம் வைத்திருப்போர், சாதாரணப் பொதுமக்கள் யாரும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படவில்லை என்பன அவர்கள் உதிர்த்த‌ கருத்து முத்துக்களில் பிரபலமான சில. இதெல்லாம் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?

10) மோடியின் திட்டம் என்பதாலேயே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக ஆக்கியதைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் உண்டு தான். (அவர் கொண்டு வந்த காரணத்தினாலேயே இதை ஆதரிக்கும் முட்டாள்களும் இருக்கிறார்கள் என்பது போலவே) இதனால் பாதிக்கப்பட்டுள்ள‌ கறுப்புப் பணம் வைத்திருப்போரும் இதை எதிர்க்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எதிர்ப்போர் அத்தனை பேரையும் இந்த இரு வகைமைக்குள் அடைப்பது நியாயமே அல்ல. நான் முதலில் இந்த முடிவினை வரவேற்கவே செய்தேன். அதையொட்டி  பொதுமக்கள் குறைந்தபட்ச பாதிப்புடன் இதை எதிர்கொள்ளும் முறைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமாகவே உரையாட விரும்பினேன் (http://www.writercsk.com/2016/11/500-1000.html). ஆனால் அதன் கடுமையான பாதிப்புகள் அந்த நிலைப்பாட்டில் என்னை நெடுங்காலம் தொடர அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி இப்போது எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் நான் மட்டையடியாய் இம்முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பேசவில்லை.முதலில் இதை நேர்மையாகத் தான் செயல்படுத்தி இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன் (அதாவது முன்பே சிலருக்குத் தெரியும் என்ற குற்றச்சாட்டு தொடர்பானது). அடுத்தது இவ்வளவு ஜனத்திரளை மிகப் பேரளவில் சிரமத்துக்குள்ளாக்கும் வகையில் இத்தனை கேவலமான நிர்வாகத்துடன் இதைச் செயல்படுத்தியது பிழையில்லையா எனக் கேட்கிறேன். அவ்வளவு தான்.

*

Comments

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. இந்த முடிவை ஆதரிக்கும் மோடி பக்தர்களின் தர்க்கமோ அறமோ அற்ற எரிச்சலூட்டும் வகையிலான முட்டள்தன அல்லது திமிர்ப் பேச்சுக்கள். அவர்கள் எப்போதும் ஃபாசிஸ்ட்கள் என்பதால் அவர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது என்றாலும் இம்முறை எல்லை மீறித்தான் போனார்கள்.

👍
சி எஸ் கே சார், தான் வாழ்வின் மிகப் பெரிய முடிவை எடுக்கும் மோடி இதனால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகும் அல்லது மிகப் பெரிய செல்வாக்கு அடையலாம் என்ற எண்ணம் அவருக்கு வராதா என்ன, மேலும் இதுநாள் வரையில் இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் வாதியும் இவ்வளவு துனிச்சலாக தனது கட்சி மற்றும் தனிப்பட்ட அந்தஸ்து செல்வாக்கு மற்றும் எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலைப்படாது முடிவு எடுப்பார்களா என்று யோசியுங்கள். ஆகவே நிச்சயம் இந்தியாவிற்கு மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை தரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் தான் இந்த முடிவை மோடி அவர்கள் எடுத்திருப்பார் என நான் நம்புகிறேன்.
viswanath said…
தீர்க்கமான அலசல்.நீங்கள் இதை ஹிந்தியில் மொழி பெயர்த்து மோடிஜிக்கு அனுப்பினால் கூட அரசு இதை கிஞ்சித்தும் மதிக்கப் போவதில்லை. இதுவும் கடந்து போகும் தோழர்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி