வெண்குடை [சிறுகதை]
ஆகஸ்ட் 6, 1985.
பனியின் சாயைகள் இன்னும் முற்றிலும் விலகாத காலை நேரம். கென்பக்கு டோமு என்கிற ஹிரோஷிமா அமைதி நினைவகத்தின் முன்பு நின்றிருந்தார் ஜேக்கப் பேசர்.
உருளை வடிவக் கட்டிடம். அதன் தலையில் கிரீடம் போல் கோபுரத்தின் கான்க்ரீட் உதிர்ந்த இரும்பு எலும்புக்கூடு. அதைச் சுற்றி நின்றிருந்த கட்டிடமும் சுவர்களும் துணையாய் பாதிப்புற்றிருந்தன. வரலாற்றின் ஒரு துளி அங்கு உறைந்திருந்தது.
சிதிலமடைந்திருந்த அக்கட்டிடம் குண்டு வீச்சில் படுகாயமுற்ற ஒரு மனிதனையே உருவகப்படுத்துவதாகத் தோன்றியது ஜேக்கப்பிற்கு. மோசமான ஒரு போரில் சந்தித்த பேரிழப்பைத் திரும்பத் திரும்ப இந்த ஜப்பான் தேச மக்களுக்கு நினைவூட்டியபடியே இருக்கும் இந்த இடம் எப்படி அமைதிச் சின்னம் ஆகும் என்று யோசனை ஓடியது.
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என எல்லோரும் வரிசையாய் வந்து அக்கட்டிடத்தின் முன் அமைப்பட்டிருந்த கவிழ்த்துப் போட்ட பூமராங் வடிவ நினைவிடத்தில் தாம் கையில் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை வைத்து விட்டு தலை வணங்கி சில கணங்கள் அமைதியாய் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிகம் யாரும் பேசவில்லை. நேரம் செல்லச் செல்ல பூக்குவியல் சிறுகுன்றென எழுந்தது.
ஜேக்கப் ஹிரோஷிமாவில் கால் வைப்பது இது தான் முதல் முறை. ஆனால் ஆகாய மார்க்கமாக சில நிமிடம் இவ்வூரைப் பார்த்திருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்.
அறுபதுகளின் மத்தியிலிருந்த ஜேக்கப் பேசர் அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்தவர். இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி - இரண்டு அணு குண்டு வீச்சுகளிலும் விமானத்தில் பொதுவாய் இடம் பெற்ற ஒரே ஆள் ஜேக்கப்தான்!
அந்தத் தனித்துவம் ஜேக்கபிற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை நல்கி இருந்தது. அவர் உதவியுடன் நிகழ்ந்த பேரழிவின் நாற்பதாமாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு அவரையே அழைத்திருந்தது அசாஹி என்ற ஜப்பானிய செய்தி நிறுவனம். சுமார் ஒரு மாத காலப் பயணமாய் ஒரு வாரம் முன் ஜப்பான் வருகை தந்திருந்த அவர் நிறைய பத்திரிக்கை மற்றும் சில தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருந்தார்.
“மிஸ்டர் ஜேக்கப் பேசர்?”
ஒரு மென்மையான, கொஞ்சம் அமர்த்தலான அந்தக் குரல் பின்புறமிருந்து கேட்டது.
ஜேக்கப் திரும்பிப் பார்த்தார். கிட்டத்தட்ட அவர் வயதே கொண்ட ஒரு ஜப்பானியர் சூழலின் இங்கிதத்துக்குள் நின்று செய்த அளவான புன்னகையுடன் நின்றிருந்தார்.
சற்றே குள்ளமான உருவம். எல்லா ஜப்பானியர்களும் அப்படித்தான். அவரது முகம் ஒரு குழந்தையுடையதைப் போலிருந்து. அதுவும் கூட எல்லா ஜப்பானியர்களுக்கும் உரித்தானதே என நினைத்துக் கொண்டார். குழந்தையாகவே வளர்கிறார்கள் போலும்.
“எஸ்.”
“வெல்கம் டூ ஹிரோஷிமா. நான் நிஜூ ஹிபாகுஷா.”
கருப்பு நிற முழுக்கை சட்டை அணிந்திருந்த அவர் ஜப்பானிய வழக்கப்படி சற்றுக் குனிந்து வணக்கம் சொன்னார். ஜேக்கபும் லேசாய் வளைந்து நின்று வணங்கினார்.
“ஹாய்!”
“உங்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். உங்களுடன் சற்று உரையாட விரும்புகிறேன்.”
ஹிபாகுஷாவின் ஆங்கிலம் சுமாராய் இருந்தது ஜேக்கபிற்கு ஆசுவாசம் அளித்தது. கடந்த ஒரு வாரமாய் அவர் சந்தித்த ஜாப்பானியர்களின் ஆங்கிலம் அப்படிப்பட்டது!
“நீங்கள் பத்திரிக்கையா டிவியா? அப்பாயிண்ட்மெண்ட் எடுத்திருக்கிறீர்களா? இல்லை எனில் சிரமம் தான். என் பயண நிரல் முழுக்க முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது.”
“இல்லை. நான் மீடியா ஆசாமி இல்லை. தனி மனிதன். மிகச் சாதாரணக் குடிமகன்.”
“புரியவில்லை.”
“நம் உரையாடல் எந்த ஊடகத்திலும் வெளியாகப் போவதில்லை. நானாக, எனக்காக உங்களுடன் பேச வேண்டும் எனப் பல மைல்கள் பயணம் செய்து வந்திருக்கிறேன்.”
ஜேக்கப் அவரை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
ஒரு நேர்காணலுக்கான எந்த ஆயத்தமும் இன்றி நிராயுதபாணியாய் வந்திருந்தார் ஹிபாகுஷா. ஜேக்கபின் பார்வையைப் புரிந்து கொண்டவர் போலச் சொன்னார் -
“நோட், பேனா, மைக், கேமரா போன்ற எந்த முஸ்தீபுகளும் அவசியம் இல்லை.”
“இருந்தாலும் நேரம் இல்லையே...?” என இழுத்தார் ஜேக்கப்.
“சரி, நான் ஒரு திட்டம் சொல்கிறேன், உங்களுக்குச் சரிபடுமா பாருங்கள்.”
“…”
“அடுத்த சில நாட்களுக்கு உங்கள் பயணத்தில் உங்களைப் பின்தொடர்ந்து நானும் வருகிறேன். உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இன்றி பத்து நிமிடம், பதினைந்து நிமிடம் என எப்போது இடைவெளி கிடைத்தாலும் நாம் பேசலாம். உங்களுடைய நிகழ்ச்சி நிரல், திட்டங்கள் எவையும் எனக்காக மாற வேண்டியதில்லை. சரியா?”
“அது வந்து...”
“என்ன மிஸ்டர் ஜேக்கப், ஜப்பான் உங்களுக்கு அளித்த பெரும்புகழுக்குக் கைமாறாக ஓரெளிய ஜப்பானியனுக்கு இந்தச் சிறுஉதவியைக் கூட செய்ய மாட்டீர்களா என்ன!”
ஜேக்கப் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அதில் கேலி ஏதும் ஒளிந்திருப்பதாகத் தோன்றவில்லை. அப்படிச் சமாதானம் செய்து கொள்கிறேனோ என்று நினைத்தார்.
தோளைக் குலுக்கிக் கொண்டு அரை மனதாய்ச் சொன்னார்.
“சரி.”
*
ஜேக்கபிற்கு நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. அவருக்கு தனித்த அடையாளம் வழங்கிய நினைவுகள். ஒருபோதும் அவர் மறவாத நினைவுகள். அவரே மறந்தாலும் யாராவது அடிக்கடி கேட்டு ஞாபக அடுக்கின் மேற்புறத்திலேயே வைத்திருக்கச் செய்த நினைவுகள். சற்று யோசித்தால் அவர் சொத்து என அவற்றையே சொல்ல முடியும்!
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம். வானிலிருந்து மழையை விட குண்டு அதிகம் பெய்துகொண்டிருந்தது. ஜேக்கப் அப்போது மீசை முகிழ்த்த வாலிபன்.
அமெரிக்க ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஜேக்கப் ஐரோப்பா சென்று பணியாற்ற விரும்பினான். அவன் சேக்காளிகள் அங்குதான் போரில் ஈடுபட்டிருந்தனர். ஜெர்மனியில் வசித்த குடும்பத்தினர் சிலரைப் போருக்குத் தின்னக் கொடுத்திருந்தான். அதற்கு அவர்களைப் பழி தீர்க்க வேண்டும் என்ற இச்சையும் ஒருபக்கம் இருந்தது.
சீக்கிரம் ஜேக்கப் ஒரு ரகசிய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டான். இன்னும் பலரும் அவனுடன் அதில் பங்கேற்றனர். எந்த விபரமும் சொல்லாமலே பாடமும் பயிற்சியும் வழங்கப்பட்டது. என்ன வேலை, எந்த இடம் என்றறியாமலே அமெரிக்காவிலிருந்து பயணம் துவக்கினார்கள். விமானத்தை ஓட்டிய பைலட்டுக்கும் கூட போகுமிடம் தெரிந்திருக்கவில்லை. போகும் முன் ஜேக்கபிடம் ஒரே கேள்வி கேட்கப்பட்டது.
“நீ காம்பட் போர் விமானத்தில் பறக்கத் தயாரா?”
“அதிலென்ன சந்தேகம்? அதற்காகத் தானே நான் இங்கே பயிற்றுவிக்கப்பட்டேன்!”
“நல்லது. இங்கே இந்தப் பணியைச் செய்ய ஆள் இல்லாமல் உன்னை இப்பணியில் அமர்த்தவில்லை. ஆனால் இவர்களின் உயிரை இதற்கு பணயம் வைக்க முடியாது.”
வாஷிங்டன், வெண்டோவர், லாஸ் அலமோஸ் என மாறிய அப்பயணத்தில் ஒன்று மட்டும் ஜேக்கபிற்குப் புரிந்தது. ஒரு புது ஆயுதத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள்.
அந்த வேலையைச் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குழு தான் இது. இடையில் அவர்கள் பயிற்சியில் நீல்ஸ் போர், என்ரிக்கோ ஃபெர்மி போன்ற பெயர்கள் எல்லாம் அடிபட்டன. இவர்கள் எல்லோரும் அன்றைய தேதியில் பெரும் இயற்பியலாளர்கள்.
“அணுவைப் பிளப்பது” பற்றிய பேச்சுக்கள் அந்தக் குழுவில் சகஜமாயின. ரகசியத்தை மறைத்துக் கொண்டிருந்த மேகங்கள் மெல்ல ஒவ்வொன்றாய் விலகத் தொடங்கின.
ஜேக்கப்பிற்கு தான் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேலையில் பங்கேற்கப் போகிறோம் என்பது மட்டும் புரிந்தது. உற்சாகமாய்க் காத்திருந்தான் அவ்விளைஞன்.
சீக்கிரத்தில் அவர்கள் ஜப்பான் வந்திறங்கினர். அங்கும் பயிற்சியாய்ப் பறந்தனர்.
*
அந்தப் பூங்காவில் ஓரமாய்ப் போடப்பட்டிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
ஜேக்கப் கேட்டார் -
“உங்களுக்கு என்னுடன் பேசுவதில் ஏன் ஆர்வம் எனத் தெரிந்து கொள்ளலாமா?”
ஹிபாகுஷா புன்னகைத்தார்.
“சொல்கிறேன். எனக்கு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். சிறுவயதிலிருந்து நாங்கள் மிக நெருக்கமான சினேகிதர்கள். ஒருவன் சுடோமு; மற்றவன் பெயர் யமாகுச்சி. சுடோமு ஹிரோஷிமா குண்டு வீச்சிலும் நாகசாகி குண்டு வீச்சில் யமாகுச்சியும் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அது என்னையும் பாதித்தது. அதில் நேரடியாய்ப் பணியாற்றிய உங்களைச் சந்திந்து சில விஷயங்கள் பேசலாம் என விரும்பினேன். சொல்லப் போனால் அவர்களின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும்.”
“எனில் உங்கள் கோபத்தை என்னிடம் காட்ட வந்திருக்கிறீரா?”
அவர் கேள்வியில் மெல்லிய பதற்றம் அரும்பி இருந்தது.
“நிச்சயம் இல்லை. ஒரு காலத்தில் உங்கள் தேசத்தின் மீது கோபம் இருந்தது. உங்கள் மீதும். ஆனால் இப்போது இல்லை. நாம் எதிரெதிரே நிறுத்தப்பட்டது நாம் விரும்பி நிகழ்ந்த ஒன்றல்ல என்பதை நன்குணர்ந்தே இருக்கிறேன். அதனால் ஒரு பார்ட்டியில் வைன் அருந்தியபடி பேசும் மிக இயல்பான, நட்பார்ந்த உரையாடலாகவே இதை நாம் கட்டமைக்கலாம். சொல்லில் கூட வன்முறை இராது என உறுதியளிக்க முடியும்.”
ஜேக்கப் முகத்தில் மெல்லிய நகையொன்று அரும்பியதன் அறிகுறி தென்பட்டது.
“சரி, கேளுங்கள்.”
“நம் உரையாடல் நேர்காணல் எனும் இறுக்கமான வடிவிற்குள் அதன் சடங்கிற்குள் சிக்கி நீர்க்க வேண்டியதில்லை. நான் எந்தக் குறிப்பிட்ட கேள்வியையும் திட்டமிட்டுக் கொண்டு வரவில்லை. சாதாரணமாகப் பேசுவோம். உரையாடல் எங்கு செல்கிறதோ போகட்டும். ஏதோ ஓரிடத்தில் உரையாடல் தானாய் தன்னை முடித்துக் கொள்ளும் என நினைக்கிறேன். ஒரே விஷயம், வழக்கமான நேர்காணல்கள் போல் அல்லாமல் இடையே நானும் நிறையப் பேசுவேன். நீங்கள் அதைச் சகிக்க வேண்டி இருக்கும்.”
வெள்ளந்தியான அந்த பீடிகை ஜேக்கபிற்குப் பிடித்திருந்தது. சிரித்தபடி சொன்னார்.
“ஐயம் குட். ஆரம்பிக்கலாம்.”
“மிகச் சம்பிரதாயமான ஒரு கேள்வியிலிருந்தே தொடங்கலாம். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், ஜேக்கப் பேசர். அப்புறம் உங்களுடைய பணி விபரங்கள் குறித்து?”
“நான் அடிப்படையில் ஒரு ரேடார் எஞ்சினியர். விமானத்திலிருந்து குண்டுகள் வீச எங்களைப் போன்ற ஆசாமிகளின் உதவி முக்கியம். ப்ராக்ஸிமிட்டி ஃப்யூஸ் என்று குண்டின் கூம்பில் ஒரு சங்கதி இருக்கும். குண்டின் திரி அது. புத்திசாலித்தனமான தானியங்கித் திரி. உயரத்தை அளக்க, அதிலிருந்து ரேடார் அலைகள் பூமியை நோக்கி அனுப்பப்பட்டு அவற்றின் பிரபலிப்பு கிரகிக்கப்படும். எந்த உயரத்தில் வெடித்தால் மிக அதிக அழிவு சாத்தியமோ அந்த உயரத்தில் குண்டை வெடிக்கச் செய்யும் அந்த ஃப்யூஸ். அது ஒழுங்காய்க் கொடுத்த வேலையைச் செய்கிறதா எனக் கவனிப்பதே, அன்றேல் சரி செய்வதே என் வேலை. ஹிரோஷிமாவில் அந்த உயரம் 1850 அடி.
அந்த ஃப்யூஸின் வடிவமைப்பில் கூட நான் இருந்திருக்கிறேன். எனக்கு தரப்பட்ட இன்னொரு முக்கிய வேலை எதிரி ரேடார்கள் ஏதும் நாங்கள் பயன்படுத்தும் அதே அலைவரிசையைப் பயன்படுத்தவில்லை என உறுதி செய்வது. அதோடு குழப்பிக் கொண்டு ஃப்யூஸ் முன்கூட்டியே வெடிகுண்டைக் கொளுத்தி விடக் கூடாதல்லவா!”
“ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு இடங்களின் மீதும் குண்டு வீசிய விமானங்களில் பயணித்த குழுவில் இடம்பெற்ற பொதுவான உறுப்பினர் நீங்கள் ஒருவர் தானே?”
“ஆம். நீங்கள் சொல்வது சரி தான். வானிலையை அளக்க இத்தாக்குதல்களில் தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஹலார்ட் ஆக்நியூ, லூயி அல்வரெஸ், பெர்னி வால்டன் ஆகியோர் அவற்றில் பொதுவாக இடம் பெற்றிருந்தனர். ஆனால் குண்டு வீச்சுக்குப் போன விமானத்தில் பொதுவாக இடம் பெற்றது நான் ஒருவன் மட்டுமே.
கணக்கிட்டால் ஹிரோஷிமா எனது பதின்மூன்றாவது குண்டு வீச்சுத் தாக்குதல் பணி. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு பதின்மூன்று என்பது அதிர்ஷ்டமான எண் தான்.”
“எனில் உலகின் எல்லாருக்குமே அது அதிர்ஷ்ட எண்தான். ஜப்பானியர்களைத் தவிர.”
“இருக்கலாம்.”
“நீங்கள் வீசப் போவது அணுகுண்டு என்பது உங்களுக்கு முன்னமே தெரிந்திருந்ததா?”
“இல்லை. குண்டு வீசுவதற்கு முந்தைய நள்ளிரவு கூட ஒரு சுருக்க விளக்கக்கூட்டம் இருந்தது. அப்போதும் இது ஓர் அணுகுண்டு என எங்களுக்குச் சொல்லப்படவில்லை. அந்தப் பெருவெடிப்பு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று மட்டும் தான் சொன்னார்கள்.
அது ஒரு ரகசியத் திட்டம், ஏதோ ஒரு புது வகை ஆயுதம் என்பது வரை தெரியும்.
ஆனால் அணுச்சிதைவு பற்றி அரசல் புரசலான பேச்சுக்கள் இருந்தன. கதிரியக்கம் பற்றிக் கொஞ்சம் தெரியும். குண்டு வீசி விட்டு வந்த போது தான் முதன் முதலாய் எங்களுக்கு நாங்கள் வீசியது ஓர் அணுகுண்டு என எங்களுக்குச் சொல்லப்பட்டது.
ஆனால் எங்களுக்கு வேறொரு விஷயம் முன்பே சொல்லப்பட்டது. எதிர்பார்க்கும்படி இந்த ஆயுதம் செயல்பட்டால் இந்த உலக யுத்தத்தின் காலநீளமே குறையும் என்று.”
“ஹிரோஷிமாவில் முதன் முறையாக அணுகுண்டு வீசியது பற்றிச் சொல்லுங்கள்.”
“நான் விமானத்தில் சுறுசுறுப்பாக, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தேன். என் ஃப்யூஸ் சம்மந்தப்பட்ட கருவிகளை நான் கவனிக்க வேண்டி இருந்தது. நான்கு திரைகளில் அதிர்வெண்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். குண்டு எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்க்க உண்மையில் எனக்கு நேரமிருக்கவில்லை. குண்டு வீசப்பட்ட 10 விநாடிகளில் ஃப்யூஸ் செயல்பட்டு திரி பற்றியது. சில கணம் நிசப்தம்.
நாங்கள் காத்திருந்தோம். பின் திடீரென ஒரு பெரும் வெள்ளோளி கண்ணாடிகளின் வழி எங்கள் விமானத்தை நிறைத்தது. வேறெந்த குண்டு வீச்சிலும் அப்படி ஓர் ஒளி பாய்ச்சலை நான் கண்டதில்லை. முன்கூட்டியே அணியச் சொல்லி எங்களுக்குத் தரப் பட்டிருந்த காப்புக்கண்ணாடியைக் கூட அப்போது நான் அணிந்திருக்கவில்லை. நல்ல வேளையாக அதனால் ஏதும் பிரச்சனை ஆகவில்லை. தொடர்ந்து கருவிகளில் ஏதும் பிரச்சனை இல்லை என உறுதி செய்ய சிக்னல்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
இரண்டு, மூன்று நிமிடங்களில் மெல்லக் கிளம்பி எழுந்தன உலகமே பலமுறை பல பத்திரிக்கைகளில், பல தொலைக்காட்சிகளில் பார்த்த புகழ் பெற்ற அந்த வெண்குடை மேகங்கள்! அக்காளான் பளபளத்தது, கொதித்தது, நிறங்கள் மாறியது. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. புதிது புதிதாய் ஜ்வாலைகள் உற்பத்தியானபடி இருந்தன. மொத்த பூமியே வெடித்துச் சிதறுவது போலத் தான் தோன்றியது. நகரமே கண்ணுக்குத் தென்படவில்லை. சில கணங்களில் ஹிரோஷிமா பூஜ்யம் ஆனது.
கடலில் இரண்டடி ஆழத்தில் இறங்கி நம் கால்களால் அதிர அதிரக் கலக்கினால் மணலும் நீரும் கலங்கி எப்படி இருக்கும், அப்படித் தான் இருந்தது. விமானத்தில் உடனிருந்த பணிச் சகா பாப் லூயி "My God, look at that son of a bitch go!" என்றான்.”
அதுவரை உன்னிப்பாய் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த ஹிபகுஷா இடைமறித்தார்–
“இங்கே என் நண்பன் சுடோமுவின் கதையை உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.”
*
ஆகஸ்ட் 6, 1945
ஹிரோஷிமாவில் சுடோமுவுக்கு அது தான் கடைசி தினம். ஹிரோஷிமாவுக்கும் அது தான் கடைசி தினம் என்பது அப்போது சுடோமுவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
சுடோமு மிட்சுபிஷி கனரக எந்திரங்கள் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம் பொறியாளன். ஹிரோஷிமாவுக்கு மூன்று மாத காலப் பணி நிமித்தப் பயணம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்ப மும்முரமாய்த் தயாராகிக் கொண்டிருந்தான்.
அவனோடு வேறு சிலரும் இருந்தார்கள். ஒரு புது எண்ணைக்கப்பல் வடிவமைப்பிற்கு ராப்பகலாகப் பணியாற்றிய களைப்பில் எல்லோரும் இருந்தனர். சுடோமுவுக்கு ஊரில் மனைவியையும், நடக்கத் துவங்கி இருக்கும் மகனையும் பார்க்கப் போகும் ஆவல்.
காலை 8:15க்கு சுடோமு கப்பல் கட்டுந்துறையில் சில இறுதி வேலைகளைப் பார்க்க வந்திருந்தான். அப்போது மேலே சட்டென வானத்தைக் கிழிந்தெழுந்த ஒரு போர் விமானத்தின் தொந்தரவான சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் தலையுயர்த்தினான்.
சமீப காலத்தில் ஜப்பானில் போர் விமானங்கள் தலைக்கு மேலே பறப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஓரளவு பழகியும் விட்டது. பல நேரங்களில் சும்மா பறக்கும். வந்து என்ன பார்த்துச் செல்வார்களோ தெரியாது. ஆனால் சில நேரங்களில் குண்டு வீசுவர்.
எல்லாம் ஜப்பான் தொடங்கி வைத்தது தான். நான்காண்டுகள் முன் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஹவாய் முத்துத் துறைமுகத்தை குண்டு வீசி அழித்தார்கள்.
இப்போது அதற்கு வரிசையாக வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். நேச தேசப் படைகள் - குறிப்பாய் அமெரிக்க விமானங்கள் - ஜப்பானின் முக்கிய நகரங்களில் குண்டுகளை கணக்கின்றித் தூவிச் செல்கின்றன. அவை பெரும்பாலும் பி-29 வகை விமானங்கள் என அசட்டுக் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் பாகங்குறித்து பத்திரிக்கைகளில் வெளியானதைப் வாசித்திருந்தான் சுடோமு. ஜப்பானும் அவ்வப்போது விமான எதிர்ப்பு ஷெல்லடித்து சில விமானங்களை வீழ்த்தினாலும் அதெல்லாம் யானையை பூனை கடித்தது போலத்தான். ஜப்பானியர்கள் பயத்தோடே வாழ வேண்டி இருந்தது.
இப்போது மேலே பறந்து கொண்டிருப்பதும் பி-29 போலத் தோன்றியது சுடோமுவிற்கு. சுற்றிச்சூழ அச்சத்தில் எழுந்த அலறல்கள் அந்தப்பிரதேசத்தை ஆபாசமாய்க் கிழித்தன.
விமானப் பறவை ஏதோ ஒரு பொருளைச் செறிக்காமல் துப்பி இருக்கிறது என்பது அதிலிருந்து இறக்கை விரித்த பாராசூட்டிலிருந்து கண்டு கொண்டான் சுடோமு. சர்வ நிச்சயமாய்க் குண்டு தான். எங்கோ தொலைவில் விழப் போகிறது. ஆனால் எத்தனை தூரத்துக்குப் பாதிப்பு இருக்கும் எனத் தெரியாது. அதைப் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாய் ஒளிந்து பதுங்க இடந்தேடுகையில் தான் சுடோமு அதைப் பார்த்தான்.
வானம் வெள்ளொளியாய் வெடித்தது. சுடோமுவிற்கு அது ஒரு அதிபிரம்மாண்ட மெக்னீஷியச் சுடராகத் தென்பட்டது. இது வரை அவன் அப்படி ஒன்றைக் கண்டதே இல்லை. இனிமேலும் காணப்போவதில்லை என நினைத்தான். உடனடியாய் அருகில் இருந்த குழிக்குள் பாய்ந்த அதே கணம் காதைப் பிளக்கும் வெடிப்பொலி பாய்ந்தது.
அதன் அதிர்ச்சியலைகள் சுடோமுவை பூமியிலிருந்து தூக்கி எறிந்தன. அருகிலிருந்த உருளைக்கிழங்கு வயலில் போய் விழுந்தான். குண்டு விழுந்த இடத்திலிருந்து தான் இருப்பது உத்தேசமாய் இரண்டு மைல் தொலைவாவது இருக்கும், அதற்கே இப்படி விளைவா என வியந்து கொண்டிருந்த போதே கண்ணிருண்டு நினைவிழந்தான்.
*
திரும்பவும் கண் விழித்த போது இருள் சூழ்ந்திருந்தது. திரையரங்க இருட்டில் படம் தொடங்கும் முன் மின்னி மறையும் வெற்று ஃப்ரேம்களை நினைவூட்டியது. குண்டு வீச்சின் தூசும் சிதைக்கூளங்களும் அதிகாலைச் சூரியனைத் துடைத்தெறிந்திருந்தன.
உறுத்துப் பார்த்த போது ஹிரோஷிமா நகரின் மீது ஒரு வெண்குடை தென்பட்டது. குண்டு மழைக்கு முளைத்த பிரம்மாண்டக் காளான் வடிவ நெருப்புப் புகை மேகம்.
சுடோமுவிற்கு முகத்தில் காயம். கைகள் எல்லாம் எரிந்து, காதுகள் கிழிந்திருந்தன. சிரமத்துடன் எழுந்து நடந்தான். எங்கெல்லாம் வலிக்கிறது என்பது புரியாதபடி எல்லா இடங்களிலும் வலித்தது. அங்கும் இங்கும் திரிந்தான். மிட்சுபிஷி கப்பல் கட்டுமிடம் முழுக்க அழிந்திருந்தது. சற்று தொலைவில் நண்பர்கள் சிலரைப் படுகாயத்துடன் கண்டுகொண்டான். அன்றைய இரவை அவர்கள் ஓர் பதுங்குகுழியில் கழித்தார்கள்.
அடுத்த நாள் விடிந்தது. பக்கத்து ஊரிலிருந்து அவர்களின் ஊருக்கு ரயில் சேவை இன்னும் தொடர்கிறது எனக் கேள்விப்பட்டு நடந்து அங்கே செல்ல முடிவெடுத்தனர்.
வழியெங்கும் பிசாசு போல் குண்டு வீச்சின் துர்லபங்கள் அவர்களைத் துரத்தின. ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. கட்டிடங்கள் உடைந்து சிதிலமாகி இருந்தன. அவ்வப்போது பிணக்குவியல்கள். எங்கும் கூக்குரல்கள், கண்ணீர்கள்.
இடையே ஓர் ஆற்றை நீந்திக் கடக்க வேண்டி இருந்தது. ஆறு முழுக்க பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. ரத்தச் சகதியில் நீந்திக் கடந்தனர். இறுதியில் அந்த ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். ரயிலிலும் முழுக்க கை போன, கால் போன, முகம் சிதைந்த பயணிகள். அன்றைய இரவு முழுக்க பயணித்து ஊருக்கு வந்து சேர்ந்தான்.
‘அது’ தன்னைப் பின்தொடந்து தன் ஊருக்கும் வருமோ என யோசித்தான் சுடோமு.
ஆயிற்று நாற்பதாண்டுகள். முதலில் சுடோமுவிற்கு காது கேளாமல் போனது. சில பத்தாண்டுகள் உடல் முழுக்க பேண்டேஜ் சுற்றியே அவர் வாழ வேண்டி இருந்தது. பிறகு கண் புரை வந்தது. அப்புறம் கடைசியாய் ரத்தப் புற்று நோய். எல்லாம் அந்த அணுகுண்டின் ஆசீர்வாதம் தான். இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் சுடோமு.
*
அதற்குள் ஜேப்பிற்கு அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமாக, விடை பெற்றுக் கிளம்பினார்.
“அடுத்து எப்போது?”
ஜேக்கபின் கேள்வில் இயல்பான ஓர் ஆர்வம் இருந்தது.
“மூன்று நாட்கள் கழித்து. நாகசாகியில். இதே போல் நானே உங்களைச் சந்திப்பேன்.”
“நல்லது. பார்ப்போம்.”
அன்றைய கனவில் ஜேக்கப் அது வரை பார்த்திராத சுடோமு கண்களுக்கு மட்டும் ஓட்டை விட்டு உடலெங்கும் வெள்ளை பேண்டேஜுடன் ஒரு மம்மி போல் நடந்து வந்து எழுப்ப, திடுக்கிட்டுக் கண் விழித்து, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து சில்லிட்டிருந்த மதுவைச் சாய்த்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் விழுந்தார்.
*
ஆகஸ்ட் 9, 1985.
கோடை காலம் குளிருக்கு எதிராய்க் கடை விரித்திருந்தது. நாகசாகியில் குண்டு விழுந்த புள்ளியை மையமிட்டு அந்த நினைவு ஸ்தூபியை எழுப்பி இருந்தார்கள்.
பெரிய ஆரம்பரம் ஏதும் இல்லை. சுமார் உயரத்தில் ஒரு கரிய தூண். அதைச் சுற்றி அது தான் மைய ஸ்தலம் எனச் சுட்டும் வண்ணம் நீரில் கல் விழுந்தால் எழும் அலைகள் போல் ஏழு வட்டங்கள். அதையொட்டி நாகசாகி அமைதிப் பூங்கா ஒன்று.
ஜேக்கப் கைகட்டி நின்றிருந்தார். ஹிரோஷிமா அளவுக்கு இங்கு கூட்டம் இல்லை. ஆனாலும் மக்கள் வந்து போய்க்கொண்டு தான் இருந்தார்கள். இப்போது முற்பகல் தான். ஒருவேளை நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடுமோ என எண்ணிக் கொண்டார்.
ஆனால் அவர் மனம் பரபரப்பாய் ஹிபாகுஷாவைத் தேடிக் கொண்டிருந்தது. அவர் தன்னை இங்கே வந்து சந்திக்கக்கூடும் என உள்ளுணர்வு சொல்லியது. பெரிய கணக்கீடு எல்லாம் ஏதும் இல்லை. ஹிரோஷிமாவில் அவர் தன்னை அந்த அமைதி நினைவகத்தில் தான் சந்தித்தார் என்ற அடிப்படையிலான எளிய அனுமானம் தான்.
இடையில் இரண்டு சஞ்சிகைகளுக்கு அவர் நேர்காணல் தந்து விட்டார். ஆனால் யாவும் பெரும்பாலும் அவர் கேட்டு அலுத்த கேள்விகள்; சொல்லிப் புளித்த பதில்கள். அடுத்து என்ன கேள்வி வரும் என்பதைக் கூட அவர் ஊகிக்கத் தொடங்கி இருந்தார்.
ஆனால் ஹிபாகுஷாவின் கேள்விகளில் ஓர் அந்தரங்கத்தன்மை இருப்பதாகப் பட்டது ஜேக்கபிற்கு. எல்லாவற்றையும் விட அவர் தன் தரப்பிலிருந்து கதைகள் சொல்கிறார். அது உரையாடலை இருபுறமானதாக ஆக்குவது அவருக்கு உவப்பானதாக இருந்தது.
அவர் காத்திருக்கத் தொடங்கினார். அரை மணி நேரம் போயிருக்கும். தொலைவில் ஹிபாகுஷா நடந்து வருவதைக்கண்டு கொண்டார். இன்றும் அவர் முழுக்கை சட்டை தான், ஆனால் பழுப்பு நிறம். அவர் அருகாமையில் வந்ததும் இம்முறை ஜேக்கபே அவருக்கு ஜப்பானிய முகமன் கூறினார். ஹிபாகுஷா முகத்தில் மகிழ்ச்சி வழிந்தது.
வந்ததுமே அவர் ஏதோ அவசரத்தில் இருந்தவர் போல் கேள்வியைத் தொடங்கினார்.
“சரி, சொல்லுங்கள். நாகசாகியில் அன்று என்ன நடந்தது?”
“நாகசாகியில் தாக்குதல் நடத்துவது எங்கள் திட்டமே கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்களா எனத் தெரியவில்லை. எங்கள் குறி கோகுராவாக இருந்தது. ஜப்பானின் பிட்ஸ்பர்க் என்று அக்காலத்தில் அந்நகரம் வர்ணிக்கப்பட்டது என்பது ஒரு காரணம்.
அதைத் திட்டமிட்டு கிளம்பி விட்டோம். ஆனால் அங்கு போன பிறகு தான் அங்கு வானிலை மிக மோசமாக இருந்ததை அறிந்து கொண்டோம். அந்நகரை முழுக்க மேகங்களும் முந்தைய தின குண்டு வீச்சுப் புகையும் மறைத்திருந்தன. அதற்குள் ஜப்பானியர்கள் எங்கள் மீது தாக்குதல் தொடுக்க விமானங்களை கிளப்பியதை அவர்கள் தகவல்தொடர்பை நான் கவனித்த போது தெரிந்தது. எங்கள் விமானத்தின் எரிபொருளும் குறைந்து கொண்டே வந்தது. அங்கு முயல்வது வீண் என உணர்ந்து அன்று இரண்டாம் தேர்வாக வைத்திருந்த நாகசாகியை நோக்கிக் கிளம்பினோம்.
துரதிர்ஷ்டவசமாய் அங்கும் வானிலை மோசமாகவே இருந்தது. மேகங்கள் காத்து நின்றன. ஆனால் கடைசி நிமிடத்தில் மேகங்கள் விலகி சிறுதுளை ஒன்று கிடைக்க, எங்கள் குழு குண்டு வீசத் தயாரானது. வீசிய பின் தான் நாங்கள் திட்டமிட்டதை விட சில மைல்கள் தள்ளி வீசியது புரிந்தது. ஹிரோஷிமாவிலும் இந்தப் பிசகு இருந்தது. ஆனால் அது சில நூறு அடிகள் மட்டுமே. ஆனால் இரண்டாம் முறையில் அது சில மைல்கள் தள்ளியதால் நாகசாகியில் அழிவு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.”
“அதற்காக வருத்தப்படுகிறீர்களா?”
அக்கேள்வியில் பகடி இருந்ததா எனத் தேடித் தோற்றார் ஜேக்கப். பின் சொன்னார்.
“இல்லை. ஆனால் ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட சக்தி வாய்ந்த குண்டு தான் நாகசாகியில் வீசியது. அக்குண்டுகளின் பெயர் அதைச்சொல்லும். முதலாவது சின்னப் பையன்; இரண்டாவது தடித்த மனிதன். ஆனால் தடித்த மனிதன் விழுந்த இடம் ஒரு பள்ளத்தாக்கு என்பதால் அருகிலிருந்த மலை ஊரின் மீது அதிக பாதிப்பு நிகழ்வதைத் தடுத்து விட்டது. எங்களுக்கு அணுசக்தி அறிவை வழங்கிய அதே கடவுள் தான் அன்று அதிக ஜப்பானியர்கள் உயிரிழக்காமலும் காப்பாற்றியது என நம்புகிறேன்.”
“ஓ! இங்கு யமாகுச்சியின் கதையைச் சொல்வது பொருத்தம் எனக் கருதுகிறேன்.”
*
ஆகஸ்ட் 9, 1945
யமாகுச்சி நாகசாகிவாசி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பணியிலிருப்பது, கல்யாணம் செய்தது, குழந்தை பெற்றது என எல்லாம் அங்கேயே தான். ஒரு நாள் செத்தாலும் அங்கே தான் என்று நினைக்குமளவு நாகசாகியின் மீது ஊர்ப்பட்ட ஊர்ப்பிரியம்!
முப்பதை நெருங்கும் யமாகுச்சி சில தினங்கள் முன் தான் ஒரு விபத்திலிருந்து உயிர் பிழைத்திருந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது யமாகுச்சி முகத்திலிருந்த மோசமான காயத்தினால் அவனை அவன் குடும்பத்தினருக்குக் கூட சரியாய் அடையாளம் தெரியவில்லை. சிகிச்சை அளித்த மருத்துவன் அவன் பள்ளித் தோழன். அவனுக்கும் யமாகுச்சியைத் தெரியவில்லை. சிகிச்சை முடிந்து அன்று மாலையே வீடு திரும்பினான். அவன் அம்மா அவன் பேயைப் போல் இருப்பதாய்ச் சொன்னாள். இவற்றால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான்.
அத்தனை உடல் உபாதைகளின் மத்தியிலும் அடுத்த நாள் எழுந்ததும் அலுவலகம் செல்லத் தீர்மானித்தான் யமாகுச்சி. அது தன் மனதுக்கு விடுதலை அளிக்கக்கூடும் என்று அவன் கருதியிருக்கக்கூடும். இதற்கிடையே ரேடியோ செய்தியின் மூலம் அணுகுண்டு என்ற புதிய வகை பேரழிவு ஆயுதம் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்டது என்ற செய்தியை யமாகுச்சி அறிந்திருந்தான். ஜப்பான் சரணடையாவிட்டால் பூமி இதுவரை பார்த்திராத அளவு காற்றிலிருந்து அழிவு மழை பொழியும் என எச்சரித்தார் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமன். ஜப்பான் முழுக்கவே ஒருவகை பதற்ற நிலைமை பொதுமக்களிடம் காணப்பட்டது. நாகசாகியிலும் அதே பதற்றம் தொற்றி இருந்தது.
சுமார் 11 மணி இருக்கும். தன் மேலதிகாரியிடம் ஹிரோஷிமா அணு குண்டு வீச்சு பற்றி பற்றி பேசிக் கொண்டிருந்தான் யமாகுச்சி. அவருக்கு அணுகுண்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒற்றை குண்டு எப்படி ஒரு முழு நகரத்தை அழிக்கும் என அவருக்குப் புரியவில்லை. அதன் அளவும் சிறியது என்பது மேலும் கோபமூட்டியது. நாடுகள் சேர்ந்து கொண்டு ஏதோ அரசியல் மாய்மாலம் செய்வதாக நினைத்தார்.
அப்போது வெளியே பயங்கர வெடிச் சப்தம். வெண்ணிறப் பளிச்சொளி அறையை நிரப்பியது. அடுத்த கணமே யமாகுச்சி தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டான். மேலாதிகாரி புரியாமல் நின்று கொண்டிருந்தார். அதிர்வில் அலுவலக அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. ஜன்னல் உடைசலின் வழியே பாய்ந்த பார்வைக்கு ஒரு பிரம்மாண்ட வெண்குடை உற்பத்தி ஆகி இருந்தது தென்பட்டது.
யமாகுச்சியின் மேலதிகாரி குண்டு வீச்சின் அதிர்வில் சரிந்திருந்தார். அவர் தன் கடைசி நிமிடங்களில் ஒரு குண்டு நகரத்தையே அழிக்கும் என நம்பி இருப்பார்!
*
யமாகுச்சி புத்தி ஸ்திரம் பெற்று எழுந்து நின்ற போது மருத்துவமனையில் போட்டு அனுப்பிய கட்டுக்கள் எல்லாம் உதிர்ந்திருந்தன. அவ்வளவாய்க் காயம் ஏதுமில்லை.
குண்டு விழுந்த இடத்துக்கு இரண்டு மைல் தூரத்தினுள் தான் அவ்விடம் இருந்தது என்றாலும் அதிர்ஷ்டவசமாய் அவர்கள் அலுவலகத்தின் கட்டமைப்பு அவனுயிரைக் காப்பாற்றி இருந்தது. எழுந்து அவசரமாய்த் தன் வீட்டை நோக்கி ஓடினான். அவன் மனைவியும் மகனும் உயிர் பிழைத்திருந்தனர். அவர்களைத் தழுவிக் கொண்டான்.
அதுவும் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நேரத்தில் பொதுவாய் வீட்டின் தரைத்தளத்தில் இருக்குமவர்கள் அன்று யமாகுச்சிக்குத் தேவையான ஒரு மருந்தைத் தேடி எடுக்கும் முகமாக வீட்டிற்குக் கீழே இருக்கும் சுரங்க அறைக்குள் போயிருந்தனர். அப்போது குண்டு வீசப்பட்ட, சுரங்கப் பாதுகாப்பில் பிழைத்தனர்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் முழுக்கத் தலை முடிகளை இழந்தான் யமாகுச்சி. அடிக்கடி வாந்தி எடுத்தான். காய்ச்சல் கண்டது. சாப்பிடுவது சிரமம் என்பதில் தொடங்கி அப்புறம் திரவ உணவுகள் கூட கஷ்டமானது. மரணம் மிக அருகே.
எல்லாம் கதிர்வீச்சின் திருவிளையாடல்! ஜப்பான் மன்னர் ஹிரோஹிடோ தன் நாடு போரில் சரணடைவதாக அறிவித்த போது யமாகுச்சி சுயநினைவிலேயே இல்லை.
பின் யமாகுச்சிக்கு சிறுநீரகத்திலும் கணையத்திலும் புற்று நோய் கண்டது. அவனுக்கு மேலும் இரு குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு அவன் தந்த சொத்து புற்று நோய்!
*
“நீங்கள் செய்த ஒற்றைச் செயல் இவ்வளவு பேரழிவுகளை நிகழ்த்தியதும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் கோரத் தாண்டவம் பல புற்று நோய்களின் வழியில் தொடர்ந்து கொண்டிருப்பதும் உங்களுக்கு எந்தக் குற்றவுணர்வையும் தரவில்லையா?”
“உலகப் போர் மட்டுமல்ல; எல்லாப் போர்களும் தவிர்த்திருக்கப்பட வேண்டியவையே.
எல்லாப் போர்களும் துன்பியல் நிகழ்வுகள். போலவே அவற்றின் துயர்நீட்சியான மரணங்களும், இழப்புகளும், தாக்கங்களும். காரணங்கள் தாண்டி எந்தப் போரும் அறத்திற்கு எதிரானதே. அப்போதும் சரி, இப்போதும் சரி பொதுவாய் நான் போருக்கு எதிரானவனே. ஆனால் மனிதன் எனும் மிருகம் கோடுகள் போட்டு தான் வாழவென சில பல வழிமுறைகளைத் தீர்மானித்து வைத்திருக்கிறான். அதற்குள் அறமற்ற இச்செயல்களும் நிகழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முடியாது.
அணுகுண்டு வீசி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அதே நிலை தானே? பாதிக்கப்பட்ட ஜப்பானே கூட ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டதா என்ன!
“ஓர் அமெரிக்கக்காரனாக ஜப்பானியர்களிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்களா?”
“எனக்கு அதில் எந்த வருத்தமோ குற்றவுணர்வோ இல்லை. நவம்பர் 1945ல் ஜப்பான் மீதான மாபெரும் படையெடுப்பு ஒன்று நேசப்படையினரால் திட்டமிடப்பட்டிருந்தது. அது நடந்திருந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் ஜப்பானியர்கள் உயிரிழந்திருப்பர். இப்போது மிக மிக அதிக எண்ணிக்கையில் கணக்கிட்டால் கூட இரு அணுகுண்டு வீச்சுகளிலும் இறந்தோர் எண்ணிக்கை வெறும் 3 லட்சம் பேர் தான். பத்தில் ஒரு பங்கு. இது ஒரு நல்ல மாற்றுத் தீர்வு அல்லவா! இதனால் போர் சுருக்கப்பட்டது. மேலும் நிகழவிருந்த இழப்புகள் தடுக்கப்பட்டன. இது குரூரமான பார்வையில் எழுதப்படும் கணக்கு தான். ஓப்புக் கொள்கிறேன். ஆனால் நிதர்சனம் அதுவே.
அதனால் நாங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. ஒருவகையில் உயிர் பிழைத்த ஜப்பானியர்கள் தாம் அமெரிக்கர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”
அது ஹிபாகுஷாவை சீண்டியது போல் தோன்றியது. ஆனால் சுதாரித்துக் கொண்டார்.
“போர் என்பது ஒரு அரசுக்கும் இன்னொரு அரசுக்கும் நடப்பது. அதில் பணி நிமித்தம் பட்டாளத்துக்காரர்கள் இறப்பது நியாயம். மாறாக அப்பாவிப் பொது ஜனம் ஏன் இறக்க வேண்டும்? பொதுமக்களைத் தாக்கக்கூடாது என்பது போர் விதிமுறை அல்லவா?”
“ஆம். இது நம்மிடையேயான தனிப்பட்ட உரையாடல் என்பதால் வெளிப்படையாகப் பேச நினைக்கிறேன். போர்ச் சட்டங்களை நாங்கள் மீறியது உண்மையே. ஆனால் வேறு வழி இருக்கவில்லை. அணுகுண்டின் தன்மை அப்படி. தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் கொல்ல முடியாது. அது பேரழிவு ஆயுதம். ஆனால் ஜப்பானுக்கு அந்த அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது. நாங்கள் போர் விதிகளைப் பின்பற்றி ராணுவத் தளவாடங்களை மட்டும் அழிக்கத் தேடிக் கொண்டிருந்தால் ஜப்பான் எங்களைச் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டிருக்கும். புலி வாலைப் பிடித்த கதை தான்!
நான் புலியை அடிக்காவிடில் புலி என்னை அடித்து விடும். நாங்கள் ஜப்பான் மீது அணுகுண்டு வீசவில்லை எனில் ஜப்பான் இன்னும் கொஞ்சம் பலம் பெற்றிருந்தால் எங்களை இன்னும் மோசமாய்த்தாக்கி இருக்க மாட்டீர்களா? எனில் வாஷிங்டனிலோ நியூயார்க்கிலோ மேஜையின் எதிர்ப்புறம் உட்கார்ந்து இதே கேள்விகளை உங்களிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கக்கூடும். யாராவது ஒருவர் அடிக்க, மற்றவர் அடிவாங்க வேண்டும். அப்போது தான் போர் முடியும். அன்றேல் இழப்புக்கள் சாஸ்வதமாகும்.”
“உலக அரசியலில் என் நண்பர்கள் சுடோமுவும் யமாகுச்சியும் செய்த பிழை என்ன?”
“அரசு என்பதும் மக்கள் என்பது வேறு வேறு என நான் நினைக்கவில்லை. மக்களே அரசின் முடிவுகளை மறைமுகமாகத் தீர்மானிக்கின்றனர். எப்படி அதன் நல்ல முடிவுகளின் பலன்களை அவர்கள் அனுபவிக்கிறார்களோ, அதே போல் கெட்ட முடிவுகளின் தீமைகளையும் அவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். முத்துத் துறைமுகத்தில் ஜப்பான் குண்டு வீசிய போது இந்தக் கேள்வி ஏன் உங்களுக்கு வரவில்லை? அதே போல் போர் முற்றி ஜப்பான் தோற்கும் நிலைக்கு வந்த போதே அதைச் சரணடைய நீங்கள் இங்கு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். மக்கள் புரட்சிக்கு எத்தனையோ உதாரணங்களை உங்கள் ஆசிய கண்டம் கண்டிருக்கிறது தானே! அது நிகழ்ந்திருந்தால் மிகச் சொற்பமான உள்நாட்டுப் போர் இழப்போடு ஜப்பான் சரணடைந்து போர் முடிந்திருக்கும். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?”
“ஆனால் அப்போது ஜப்பானில் சர்வாதிகார ஆட்சி அல்லவா நடந்து கொண்டிருந்தது?”
“மன்னராட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பதை ஒரு சாக்காய் நீங்கள் சொல்ல முடியாது. அறத்தின் பக்கம் நில்லாத ஓர் ஆட்சியை மக்கள் சக்தி திரண்டு தூக்கி எறிய எத்தனை நேரம் ஆகும்? ஆனால் நீங்கள் செய்யவில்லை. ஏனெனில் உங்கள் அரசு எங்கோ ஒரு தூர தேசத்தில் செய்த அட்டூழியங்களில் உங்களுக்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை. அதனால் அது உங்களுக்கு ஒரு சூடான செய்தி மட்டுமே. ஆனால் உங்களுக்கே ஓர் அநியாயம் நேரடியாய் நிகழும் போது தான் போரின் இழப்புகள் பற்றிய சிந்தனையே உங்களுக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது. இது மகத்தான சல்லித்தனம் அல்லவா! அதற்கான தண்டனை தான் இது என்பதென் தாழ்மையான கருத்து. குரூரத்துடன் சொல்லவில்லை. யோசிக்க வேண்டுகிறேன்.”
அந்தக் கடைசி வாக்கியங்கள் ஹிபாகுஷாவை சற்றே உணர்ச்சிவசப்படச் செய்தன.
“எதிர்காலத்தில் என்றேனும் ஒரு நாள் உங்கள் ஜனாதிபதி யாரேனும் இங்கு வந்து இதற்கு மன்னிப்புக் கேட்கக்கூடும். எவரும் மறுக்க முடியாத நிகழ்வு அது. ஆனால் அது ஒருபோதும் எதையும் நேராக்கி விடாது. இங்கு இன்னும் நாங்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறோம். பல நூறாண்டுகளுக்குத் தொடரும். அதற்கு என்ன பதில்?”
“ஜப்பான் விரும்பிக் கேட்ட யுத்தம் அது. ஜப்பானியர்கள் விரும்பிக் கேட்ட குண்டு வீச்சு அது. அதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. நாங்கள் கையில் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எங்கள் எதிரிகளான நீங்களே தீர்மானித்தீர்கள். என்றைக்கும் யுத்த வழமை அதுவே. சாதாரண ஜப்பானியக் குடிமக்கள் தொழிற் சாலைகளில், அலுவலகங்களில், வயல்வெளிகளில் உழைப்பதன் மூலம் கிட்டும் வரியைக் கொண்டே ஜப்பான் அரசு எங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. ஆரம்பித்து வைத்தது ஜப்பான் தான். போரை முடித்து வைத்தது மட்டுமே நாங்கள் செய்தது.
ஒருவேளை எதிர்காலத்தில் எம் சார்பில் எவரேனும் மன்னிப்புக் கேட்டாலும் அது உலக அமைதியையும் சமாதானத்தையும் நோக்கிய காலத்தால் கனித்த நல்லுணர்வு தானே ஒழியே, அது அமெரிக்கா குற்றவாளி என்று ஒப்புக் கொள்வதாகி விடாது.”
“சரி, எப்போதேனும் இதைத் தவிர்த்திருக்கலாம் என்றேனும் தோன்றியதுண்டா?”
“இல்லை. ஒருபோதும் இது நிகழ்ந்திருக்கக்கூடாது என நான் நினைத்ததே இல்லை.
மறுபடி சொல்கிறேன். போரை முடித்து, மேலும் சேதாரம் ஆகாமல் தடுப்பது தான் அணுகுண்டு வீச்சின் நோக்கம். கிருமிகள் கொண்ட தடுப்பூசியைப் போட்டு கொள்ளை நோய் வராமல் தடுக்கிறார்களே அது போல். ஊசி வலிக்கத் தான் செய்யும், வீக்கம், தழும்பு ஏற்படும். நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அதை விட முக்கியம்.
ஆனால் உங்கள் தேசத்தை விட இதை வாங்கிக் கொள்ள அதிகம் தகுதி படைத்தது ஜெர்மனி தான் என நினைக்கிறேன். அது நிகழாமல் போனது எனக்கு வருத்தமே. என் மேலிடத்தில் இருப்பவர்களுக்கு எதிரி யார் என்ற கருத்து வேறாக இருந்ததெனலாம்.”
“ஹிரோஷிமா - நாகசாகி மிஷனில் இடம்பெற்றிருந்த ஒரே யூதரும் நீங்கள் தானே!”
சட்டென நிமிர்ந்து ஒரு கணம் ஆழ ஊடுருவி ஹிபாகுஷாவைப் பார்த்தார் ஜேக்கப்.
“ஆமாம். ஆனால் எனது ஜெர்மானிய வெறுப்புக்கு நான் யூதன் என்பதே காரணம் என நான் நினைக்கவில்லை. என் மீதான இந்த இனவாத முத்திரையைக் கண்டிக்கிறேன்.”
“கோபப்படாதீர்கள். எனக்குத் தெரிந்தவற்றை வைத்துத் தான் இக்கேள்வி கேட்டேன்.”
“இரண்டாம் உலகப்போரில் உங்களோடு மிக இணக்கமாய் இருந்த ஜெர்மானியர்களும் அணுகுண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் அதை முதலில் தயாரித்திருந்தால் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும். அவர்கள் எம்மைப் போல் அளவாய் இருமுறை மட்டும் பிரயோகித்து நின்றிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
ஹிட்லரின் வெறி பற்றித் தெரியுமல்லவா? இன்று உலகமே இருந்திருக்குமா என்பது சந்தேகம். நல்லவேளையாக நார்வேயில் ரகசியமாய் அவர்கள் அமைத்திருந்த கனநீர் உற்பத்தியகத்தை நேசப்படைகள் கைப்பற்றின. அவர்களை வெறுக்க நான் யூதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; மனிதனாக இருந்தாலே போதுமானது.”
ஹிபாகுஷா அவரை சாந்தப்படுத்த விரும்பியிருக்கக்கூடும்.
“அணுகுண்டு வீச்சில் நீங்களும் வெடித்துச் சிதறி விடக்கூடும் எனப் பயம் வந்ததா?”
ஜேக்கப் வாய் விட்டுச் சிரித்தார்.
“உண்மையில் மிக வினோதமான கேள்வி இது. உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஒரு சிறுவன் இதைக் கேட்க நினைத்திருக்க வேண்டும். ராணுவ வீரன் வாழ்க்கையே மரணத்துக்குத் தயார் ஆவது தானே! ஆனால் பாதுகாப்பான உயரத்தில் இருந்து வீசுவது பற்றிய தெளிவான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே இருந்தன. அதனால் குண்டு எங்கள் மீதே வெடிக்கும் என்ற பயம் இல்லை. ஆனால் வேறொரு பயம் இருந்தது. அந்த வெண்குடை! அது எங்களுக்கும் ஆபத்து தான். அதில் கதிர்வீச்சின் அதீதம் கொட்டிக் கிடந்திருக்கும். எங்களையும் அது பாதிக்க நிறைய வாய்ப்புண்டு. அது பயமளித்தது. அதே போல் எங்கள் குழுவில் ஒருவர் ரத்தப் புற்று நோயில் இருபது வருடங்கள் முன் இறந்து போனார். இதெல்லாம் போர் வாழ்வியலில் சகஜம் தான்.
குண்டு நம்மைத் தேடி வந்தால் மட்டுமே செத்துப் போவோம் என்ற சிவிலியன் சொகுசில் சொகுசில் வாழ நாங்கள் ஒன்றும் சாதாரண குடிமக்கள் அல்லவே!”
இம்முறை ஹிபாகுஷா அவரை உறுத்தார். அடுத்த கணமே இயல்பாகி மீண்டார்.
“இதுவரை உங்களிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி என்ன?”
ஜேக்கப் சற்று யோசித்து விட்டுச் சொன்னார்.
“மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைச் செய்வீர்களா?”
“மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைச் செய்வீர்களா?”
ஜேக்கப் புன்னகைத்தார். மென்மையான குரலில் ஆனால் உறுதியாகச் சொன்னார் -
“மீண்டும் அதே போன்ற ஒரு சூழலும் தேவையும் அமைந்தால் நிச்சயம் செய்வேன்.”
“மிஸ்டர் ஜேக்கப், என் பேட்டி முடிந்தது. உங்கள் நேரத்திற்கும் அன்பிற்கும் நன்றி.”
“ஓ! அவ்வளவு தானா?”
நேர்காணல் சட்டென முடிந்தது போல் அவருக்குத் தோன்றியிருந்தது. அது மேலும் தொடர வேண்டும் என விரும்பி இருந்தார். ஹிபாகுஷா அதை உணர்ந்து சொன்னார்.
“நாம் இருவருமே வெவ்வேறு சட்டகங்களுக்குள் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் ஓர் ஆக்கப்பூர்வப் பொதுப்புள்ளியை எட்ட முடியும் எனத் தோன்றவில்லை.”
"சரி தான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ உரையாடல்களில் தொடர்ந்து என் குற்றவுணர்வைத் தூண்ட முயன்றிருக்கிறார்கள். எவ்வளவோ விவாதங்கள். ஆனால் எவையுமே முடிவுக்கு வந்ததில்லை. அவரவர்க்கு அவரவர் பிடிவாதம். அவர்களுக்கு நான் ஒரு பரிசோதனை எலி. எப்படி இவன் இப்படி ஒரு பாவத்தைச் செய்து விட்டு இயல்பாகத் திரிகிறான் என்ற மன அரிப்பு. ஆனால் அதற்கு நான் உதவ முடியாதே!”
ஹிபாகுஷா சிரித்தபடி சொன்னார் -
“நான் கிளம்புகிறேன். வாய்ப்பிருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம். உங்களது ஜப்பான் பயணம் இனிமையாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் இங்கு அவகாசம் கிடைக்கையில் வாருங்கள். குற்றவுணர்வைத் தூண்டாமல் இருக்க முயல்கிறோம்.”
மிகுந்த ஆன்மசுத்தியுடன் மனப்பூர்வமாய் ஹிபாகுஷா அதைச் சொல்வதாகப்பட்டது.
“உங்களிடம் ஒரு கேள்வி.”
“சொல்லுங்கள் ஜேக்கப்.”
“உங்கள் பெயர் ஹிபாகுஷா என்று சொன்னீர்கள். இன்று காலை நான் தங்கியிருக்கும் ஹோட்டல் ரிசப்ஷனில் எதேச்சையாக இப்பெயரைக் குறிப்பிடப் போக, ஹிபாகுஷா என்பது பெயர் அல்ல; அது ஓர் அடையாளம் என்று அறிந்தேன். அதாவது அணு குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஜப்பான் அரசாங்கம் அப்படித் தான் குறிப்பிடுகிறது என. ஆக, ஹிபாகுஷா என்பது உங்கள் புனைப் பெயர் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். உங்கள் உண்மையான பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?”
“சுடோமு யமாகுச்சி”
என்றபடி புன்னகையுடன் கை நீட்டினார். எப்போதும் முழுக்கை சட்டைக்குள் ஒளிந்திருந்த இருந்த அவரது மணிக்கட்டு பல தழும்புகளுடன் வெளிப்பட்டது.
மோசமான தீக்காயத்தின் வலுவான வடு. பற்றிக் கை குலுக்குகையில் ஜேக்கபின் கரம் லேசாய் நடுங்கியது. மீட்சியைக் கண்டு மிரளும் அழிவின் நடுக்கம் அது.
***
Comments
SKC... u took me to those days
I had been to Hawaai recently and seen Pearl Harbor memorial etc...