ஆண்குறி அதிகாரம்


India's Daughter (Documentary)

முதலில் குடும்பம் குட்டியை விட்டு ஈராண்டு இந்தியாவில் தங்கி 2012 டெல்லி ரேப் பற்றிய டாகுமெண்டரியை இயக்கிய லெஸ்லி உட்வினுக்கு வாழ்த்துக்களும், அதை இந்தியாவில் ஒளிபரப்பவியலாமல் போன சூழலுக்காக‌ வருத்தங்களும்.


ஆங்காங்கே உறுத்தல்களும் மறுப்புகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் இது ஒரு நல்ல பதிவு. அவசியமானதும் கூட. இதில் குற்றவாளி பேசி இருப்பதைப் போலான மதிப்பீடுகளும் நிலைப்பாடுகளும் தான் பெரும்பாலான இந்திய ஆண்கள் கொண்டிருக்கிறார்கள் (கணிசமான‌ பெண்களுமே கூட). கிட்டத்தட்ட இது இந்திய தேசம் தன்னைக் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான். அதனாலேயே இதை நாம் அனைவரும் தவறாது பார்க்க வேண்டியது முக்கியமாகிறது.

இந்த அரசுத்தடை என்பது அறிவோ அறமோ அற்றது. இதில் தான் இந்தியாவின் மானம் போகிறதென்றால் தினம் தினம் தேசம் முழுக்க பரவலாய் அறிந்தும் அறியாமலும் நடக்கும் சுமார் 50 பாலியல் வல்லுறவுகள் கம்பீரமாகவா நிற்கின்றன‌?

இந்த டாகுமெண்டரியின் முக்கிய அங்கமாய் நான் கருதுவது குற்றவாளிகளின் ஒருவனான முகேஷும் குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களும் பொதுவாய் பெண்கள், கலாசாரம் பற்றி எல்லாம் பேசி இருப்ப‌வை தாம். இதைக் காண‌ வாய்ப்பற்ற‌வர்களுக்காகவும், ஆங்கிலம் அறியாதவர்களுக்காகவும் அவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்:
  1. ஆணும் பெண்ணும் சமம் அல்ல.
  2. நமது பெருமைமிகு கலாசாரத்தில் பெண்களுக்கு என எந்த இடமும் இல்லை.
  3. நம் சமூகத்தில் பெண் வெளியே வர அனுமதி இல்லை.
  4. பெண்கள் வீட்டில் இருந்து, வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டியவர்கள்.
  5. நல்ல பெண் மாலை 6:30க்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள்.
  6. ஒருவேளை வந்தால் வீட்டு மனிதர்கள் துணையுடன் தான் வர வேண்டும்.
  7. இருப்பதில் 20% பேர் மட்டுமே (இதை எல்லாம் பின்பற்றும்) நல்ல பெண்கள்.
  8. இந்தியக் கலாசாரத்தில் ஆண் - பெண் நட்பு என்பதற்கு இடமே கிடையாது.
  9. பெண் என்றால் என் கண்களில் முதலில் காமம் தான் வரும்.
  10. ஒரு பாலியல் வல்லுறவுக்கு ஆணை விட பெண்ணே அதிகம் பொறுப்பு.
  11. இரவில் ஓர் ஆணுடன் வெளியே சுற்றிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாடம் புகட்டவே இதைச் செய்தோம்.
  12. பாலியல் வல்லுறவில் பெண் எதிர்க்கலாகா, ஒப்புக் கொள்ள வேண்டும். எதிர்த்ததால் தான் இவள் செத்தாள்.
  13. பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை விதித்தால் நிலைமை மேலும் மோசம் தான் ஆகும். இப்போது எல்லாம் முடிந்ததும் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி போக விட்டு விடுகிறோம். இனி கொன்று விடுவார்கள்.
  14. பெண் பூ போல. பூ குப்பையில் விழுந்தால் மிதித்துச் செல்வர், பூஜையில் இருந்தால் கும்பிடுவர்.
  15. பெண் வைரம் போல. அவளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் தெருவில் விழுந்தால் நாய் தூக்கிச் சென்று கடிப்பதை யாரும் தடுக்க முடியாது.
  16. என் வீட்டுப் பெண் ஒருவேளை திருமணத்துக்கு முன் தவறான விஷயங்களில் ஈடுபட்டாள் என்றால் அவளை எல்லா உறவினர்கள் முன்பும் உயிரோடு கொளுத்துவேன்.
இவை போலான‌ கருத்துக்கள் கொண்டவர்களை நேரடியாய் அறிவேன். சிலர் இதே விஷயங்களை இவ்வளவு நேரடியாய் இல்லாமல் மென்மை குழைத்து சிரித்தபடி பேசுவார்கள். இவர்களுக்கு இதில் பெரும்பாலான விழுமியங்களை மதமும் சாதியும் திணித்திருக்கும். ஆண் குறி இருப்பதாலேயே அதிகாரத்தின் பீடத்தில் அமர்ந்திருப்பதான கனவு காண்பவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் பயம், வாய்ப்பின்மை காரணமாய் பாலியல் வல்லுறவு வரை இறங்க மாட்டார்கள் எனினும் இவர்களும் potential rapist-களே. காமம், வன்முறை இரண்டையும் பொறுத்தவரை மனிதன் ஒரு மிருகமே!

குற்றவாளி அவ்வளவு தைரியமாக எல்லாம் பேசியதன் காரணம்: 1) அவர்கள் தரப்பு வக்கீல் சொல்லிக் கொடுத்ததாய் இருக்கலாம் 2) தற்போதைய அதிகார சக்திகளும் இதே மதிப்பீடு / நிலைப்பாடு கொண்டவை என்பதால் இருக்கலாம். (இடையில் சோனியா காந்தியும், ஷீலா தீக்ஷித்தும் பேசியதைக் காட்டியதால் தான் கடுப்பாகி அரசு தடை செய்ததோ!)

இனி India's Daughter டாகுமெண்டரியில் மேலே குறிப்பிட்டது போல் இருந்த உறுத்தல்கள் / மறுப்புகளைப் பார்க்கலாம்.
  1. சேரியிலிருப்பவர்கள் மட்டும் தான் இது போல் மனநிலை கொண்டிருக்கிறார்கள், குற்றங்கள் புரிகிறார்கள் என்பது போலான தொனி கணிசமான இடங்களில் இருக்கிறது (இன்னொரு புறம் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் பேசுவதைக் காட்டி அப்படி இல்லை என அவர்களே பகடி செய்திருக்கிறார்கள் என்றாலும்). அது முற்றிலும் தவறானது என்பதே என் புரிதல். சகல மட்டங்களிலும் இது போலான க்ரிமினல்கள் விரவிக்கிடக்கிறார்கள்.

  2. சுவாரஸ்யம் க‌ருதி ஒரு திரைக்கதை போல் டாகுமெண்டரியை அமைத்திருக்கிறார்கள். அது நெருடுகிறது. ஓர் அப்பட்டமான‌ அநியாயத்தை நேரடியான செய்தியாய் அல்லாமல் எண்டர்டெய்னர் போல் காட்டி இருப்பது அதன் அழுத்தத்தைக் குறைத்து அந்நியமாக்கி விடுகிறது. ஜோதியின் குணநலன்கள் போன்றவை இந்த டாகுமெண்டரிக்கு அவசியமற்றவை. சில இடங்கள் scripted போல் தென்பட்டன (உதாரண‌மாய் ஜோதியின் பெற்றோர் பேசியவை).

  3. குற்றவாளி பேசியதில் சர்ச்சை ஏற்படுத்தவல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து பூதாகரப்படுத்தி விட்டார்களோ என ஐயம் எழுகிறது. இன்னும் சொல்லப் போனால் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு வாயைப் பிடுங்கியதைப் போல்.

  4. தான் பேருந்தை ஓட்ட மட்டுமே செய்தேன். பாலியல் வல்லுறவில் / கொலையில் பங்கு கொள்ளவில்லை என்கிறான் முகேஷ். அது எங்கும் நிரூபிக்கப்படாத பட்சத்தில் டாகுமெண்டரியில் சேர்த்திருக்க வேண்டியதில்லை. அது அனாவசியமாய் குற்றவாளி மீதான வெகுஜன மென்முனை ஏற்பட வழிவகுக்கும் நம்பகமற்ற‌ தகவல்.

  5. இந்தச் சம்பவத்துக்குப் பின் டெல்லியில் இதற்காக நடந்த மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தை never before in the history of India விஷயமாக மிகைப்படுத்திக் காட்டி இருந்தார்கள். தலைவன் இல்லாத, ஒருமுகப்படுத்தல் இல்லாத கொந்தளிப்பு என்ற அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் அரசு அதை இரக்கமின்றி நசுக்கிய தொனியை டாகுமெண்டரி அளித்தது. ஒரு வெளிநாட்டுக்காரர் இயக்கியதாலோ எனத் தோன்றச் செய்தது.

  6. இந்த நிகழ்வின், அதற்குப் பின்னான மக்கள் போராட்டத்தின் மிக முக்கிய விளைவே நீதிபதி ஜேஎஸ் வர்மாவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கொண்டு வந்த 2013ம் ஆண்டின் க்ரிமினல் சட்ட திருத்தம் தான். மிகப் பழமையான ப்ரிட்டிஷ் கால பாலியல் வல்லுறவுச் சட்டங்களை அது தற்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்தது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதும், யோனிப் புணர்ச்சி அல்லாத பாலியல் அத்துமீறல்களும் ரேப்பின் கீழ் வரும் என்பது அதன் பிரதானக் கூறுகள். அதனால் தான் டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலின் செய்கையை பாலியல் வல்லுறவு என வகைப்படுத்தி சிறையில் தள்ள முடிந்தது. ஆனால் டாகுமெண்டரி அந்த சட்ட மாற்றங்கள் பற்றி ஏதும் பேசாமல் நீதிபதி ஜேஎஸ் வர்மாவின் அறிக்கையோடு நிறுத்திக் கொள்கிறது.
(ஊடகங்கள் இதுவரை privacy கருதி நிர்பயா என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி வந்தாலும் டாகுமெண்டரியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரே அவரது பெயரைப் பகிர்ந்திருப்பாதால் அதனைப் பயன்படுத்தி இருக்கிறேன்.)

டாகுமெண்டரி கோடி காட்டியிருக்கும் இன்னொரு விஷயம் இக்குறிப்பிட்ட வழக்கு மக்களின் போராட்டதின் விளைவான‌ ஊடகங்களின் வெளிச்சத்தில் உடனடி தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் எத்தனையோ பிற வழக்குகளில் இதற்கிணையாய் அல்லது இதைவிட மோசமாய்க் பாலியல் குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சுமார் ஒரு மணி நேர டாகுமெண்டரி. ப்ரைம்டைமில் இரண்டு சீரியல்கள் பார்க்கும் நேரம். பெண்கள் கட்டாயம் பாருங்கள். யூட்யூபில் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை காணக் கிடைக்கிறது. அரசுத் தடை காரணமாக  விரைவில் முழுமையாக அகற்றப்பட்டு விடும் எனத் தெரிகிறது. அரசாங்கம் தடை செய்த விஷயத்தை எந்தவகை ஊடகங்களிலும் பகிர்வது சட்டப்படி குற்றம் என்பதால் இங்கே சுட்டி அளிப்பதை தவிர்த்திருக்கிறேன்.

*

    Comments

    Unknown said…
    மிகப்பொருத்தமான தலைப்பு & பதிவு .இந்த டாகுமெண்டரி பார்த்த உடனே என் மகளை இருக்க கட்டிக்கொண்டேன் . மிகவும் கொடுமையான விஷயம் , ஒவ்வொரு இந்தியப்பெண்ணும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் .
    Anonymous said…
    del del del

    நிலை மாறினால் நியாயம் யாரிடம் மாறுகின்றதோ அவனை சராசரி எனலாம் என்றேன். அதில் ஒரு திருத்தம். மிகவும் சிறப்பாக சிந்திக்கக் கூடிய இரக்கமும் அக்கறையும் உள்ளவர்களிடம் கூட நிலை மாறினால் நியாயம் மாறுகின்றது. அதை வைத்து அவர்களை சராசரிகள் என முடிவு கட்டினால் அது தவறாக போய் விடும். அவர்கள் சராசரிகள் அல்ல. மாறாக பெருமளவு சராசரித்தனத்தில் இருந்து தம்மை துண்டித்து விட்டவர்கள் அவர்கள். ஆக, நிலை மாறினால் நியாயம் எவனிடம் மாறுகின்றதோ அதை வைத்து ’மட்டும்’ வைத்து ஒருவனை சராசரி என முடிவு கட்டவே முடியாது. தேவை இன்னும் கூடுதலான சராசரிகள் மீதான அவதானிப்பு(observation).

    Popular posts from this blog

    இறுதி இரவு [சிறுகதை]

    தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

    கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி