Children of War - ஓர் உரையாடல்

ஒரு வரலாறு உண்டு. கொடூர வரலாறு. வரலாறு என்பதே கொடூரங்களின் தோரணம் தானே. யோசித்துப் பார்த்தால், உண்மையில் கொடூரங்கள் மட்டுமே வரலாற்றில் அழுத்தம் திருத்தமாய் தவறாமல் பதிவுறுகின்றன! ஹிட்லர், முஸோலினி, ஸ்டாலின், போல்பாட், ராஜபக்‌ஷேவை மறப்போமா? அவ்வளவு ஏன்... சரி, விடுங்கள்!

1971ல் ஒன்பது மாதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்ந்தது பங்களாதேஷ் சுதந்திரப் போர். தங்கள் உரிமைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்பதால் மேற்கு பாகிஸ்தானிலிருந்து தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது பங்களாதேஷ் எனும் கிழக்கு பாகிஸ்தான். அதனால் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் குவிக்கப்பட்டு மக்கள் ஒடுக்கப்பட்டனர். கொலைகளும், கொள்ளைகளும், சித்ரவதைகளும் சகஜமாய் இருந்தன. உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

யுத்தங்களின் போது பெண்கள் வல்கலவி செய்யப்படுவது தொன்று தொட்டு வழக்கில் வருந்து வரும் மானுடக் கலாச்சாரம் தான் என்றாலும் இங்கே கொஞ்சம் வேறு மாதிரியானது. இளம் பெண்களை முகாம்களில் அடைத்து வைத்து தொடர்ச்சியான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, திட்டமிட்டு அவர்களைக் கர்ப்பம் ஆக்கினர். அதாவது "பாகிஸ்தாலினிருந்து தானே சுதந்திரம் கேட்கிறீர்கள், இப்போது இந்த பங்களாதேஷ் பெண்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் பாகிஸ்தானியர்கள் விந்திலிருந்து ஜனித்தவை தானே" என்கிற மனோரீதியான தாக்குதல். சுமார் 4 லட்சம் பெண்கள் இப்படி வண்புணர்ச்சி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் பாதிக்கப்பட்ட நிறைய பங்களாதேஷ் மக்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். புரட்சிப்படை ஒன்று உருவாகி ராணுவத்துக்கு எதிராக கொரில்லா முறைத் தாக்குதல்களில் இறங்கியது. கடைசியில் இந்திரா கால இந்தியா தலையிட்டு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. சுபம்.


Children of War இந்திப் படம் அதைப் பற்றியது தான். கதாநாயகி ரைமா சென் (தாஜ்மஹால் பட நாயகி ரியா சென்னின் மூத்த சகோதரி). மூன்று வெவ்வேறு கதைகளின் வழி அந்த ஒன்பது மாதப் போராட்டம் சொல்லப்படுகிறது. இதில் ஒருத்தி கர்ப்பமாகி தன் கணவனை மீண்டும் சேர்கிறாள். இன்னொருத்தி குடும்பத்தை இழந்து தன் கற்பைக் காத்துக் கொள்கிறாள். சில வலிமையான காட்சிகள் கொண்ட நல்ல படம் தான் என்றாலும் மனதை உலுக்குவது போல் இன்னும் வலுவாக எடுத்திருக்கலாம்.

அதைப் பற்றிய என் கருத்துக்களை ட்விட்டரில் பதிந்திருந்தேன். படத்தின் இயக்குநர் ம்ருத்யுஞ்சய் தேவ்ரத் அதைப் படித்து விட்டு சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு விரிவாக பதிலிறுக்க முயன்றேன். அந்த உரையாடலின் சற்று சீர்படுத்தப்பட்ட மொழியாக்கம் தான் இது. அவருக்கு  இது தான் முதல் படம் என்பது கவனிக்கத்தக்கது.

*

@writercsk

Children of War படத்தில் எதிர்பார்த்த தாக்கம் இல்லை.

@Mdevrat

நிஜமாகவா? நீங்கள் இதை எப்படி செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள். எதிர்காலத்தில் உதவும்.

@writercsk

உங்கள் கேள்வி சீரியஸானது எனில் பதில் சொல்கிறேன்.

நான் தமிழ்நாட்டிலிருந்து வந்தவன். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சினிமா விமர்சனம் செய்கிறேன். இங்கே யதார்த்த சினிமா எடுக்கப்படுவது பாலா, அமீர், சசிக்குமார் போன்ற இயக்குநர்களால். அவை காட்சி ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மிக அழுத்தமானவை. பரதேசி படம் ஓர் உடனடி உதாரணம். அது காலனியாதிக்க கால தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த துன்பங்களை உணரச் செய்யும். அது உங்களை அதிர்ச்சியுறச் செய்யும்.

நான் சொல்லும் தாக்கம் என்பது இது தான். இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் போது Children of War போன்ற ஒரு வரலாற்றுப் படத்துக்கு என் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். எனக்கு உங்கள் படம் பிடித்திருந்தது. அது தான் சொல்ல வந்த செய்தியைச் சரியாகவே சொல்கிறது. ஆனால் காட்சி ரீதியாக அதன் தாக்கம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.

இந்தப் படமே வன்புணர்ச்சிகள் பற்றியது தான். ஆனால் படத்தில் காட்டப்படும் வல்லுறவுகள் சாதாரணமாக இருக்கின்றன. ஒரு வணிக சினிமாவுக்கு இது போதுமானது. ஆனால் யதார்த்த சினிமாவுக்கு? பருத்தி வீரன் என்ற படத்திலிருந்து ஒரு கொடூரமான வன்புணர்வு எப்படி இருக்கும் என உதாரணம் சொல்ல முடியும். அந்தக் காட்சி உங்களை சுக்கலாய் உடைத்துப் போடும்.

உங்கள் படத்தில் அத்தகைய தாக்கம் மிக்க கணங்கள் இல்லவே இல்லை என்று சொல்ல வரவில்லை. நிச்சயம் இருக்கின்றன. கைக்குழந்தை சத்தம் போடாதிருக்க மூச்சை அழுத்திப் பிடித்து அது இறந்து போகும் காட்சி, ராணுவ கேம்ப்பில் ஒரு பெண்ணை பலர் கூட்டாய் வன்கலவி செய்வதை ராத்திரி முழுக்க நின்றபடி பார்க்கும் பிற பெண்கள் ஒவ்வொருவராய் மயங்கி விழும் காட்சி, டென்ட்டில் நடக்கும் வல்லுறவுகள் வெளியிலிருந்து விளக்கொளியில் நிழலாய்த் தெரியும் காட்சி போன்றவை உதாரணங்கள்.

ஆனால் வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும் ஓர் எதார்த்த சினிமாவுக்கு இது போல் நிறைய வலுவான காட்சிகள் தேவை. அது தான் பார்வையாளனை படம் முழுமைக்கும் ஓர் இருண்மை உணர்விலேயே வைத்திருக்கும்.

@Mdevrat

நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. நீங்கள் இதை எப்படி எடுத்திருப்பீர்கள்?

@writercsk

அது ஒரு திரை விமர்சகனின் வேலை அல்ல. தவிர, நான் உங்கள் படத்திலிருந்தும் பிற படங்களிலிருந்தும் சொன்ன உதாரணங்களிலேயே அதற்கான பதில் மறைமுகமாக இருக்கிறதே! சரி, விளக்கமாகவே சொல்கிறேன். ஏனெனில் சொல்லாமல் விடுவது பதில் சொல்வதிலிருந்து நழுவதாகப் புரிந்து கொள்ளப்படலாகா! ஆனால் நான்  ஓர் எழுத்தாளன் என்பதால் இதற்கு உற்சாகமாக பதிலளிக்க முடியும். ஆனால் எல்லா விமர்சகர்களும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

1) இது வல்கலவி பற்றிய படம் என்பதால் (பிரதானமாகவேனும்) படத்தையே ஒரு உக்கிரமான வன்கலவியிலிருந்து தான் துவக்குவேன். அது பார்வையாளனை பேச்சற்றுப் போகச் செய்யும். உதாரணமாய் உங்கள் படத்தின் ரைமா சென்னை வன்புணர்ச்சி காட்சியிலிருந்தே துவங்கலாம். முதலில் அது போர்வைக்குள் நடப்பதாய் எடுக்க மாட்டேன். அடுத்து அது ஒரு கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவாய் அமையும். அவள் கணவன் இடையில் மயக்கமுற மாட்டான். இறுதி வரை கண்ணீருடன் கதறியபடி அதைப் பார்த்துக் கொண்டிருப்பான். இடையே ரைமா சென்னின் கண்களும் அவனது கண்களும் சந்தித்துக் கொள்ளும்.

2) ராணுவ அதிகாரி பிரவீன் மஹோத்ராவின் மரணம் அத்தனை எளிமையானதாய் இருக்காது. முதலில் அவர் ரைமா சென்னின் கணவனால் கொல்லப்பட மாட்டார். அது பெண்ணின் கற்பு என்பது கணவனுக்கு உரிமையானது என்ற கருத்தை முன்வைப்பதாய் இருக்கிறது. அவர் தன் ராணுவ கேம்ப்பில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, தான் வன்கலவி செய்த பெண்களாலேயே கொடூரமாகக் கொல்லப்படுவார். உதாரணமாய் ஆண்குறி அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறப்பார். அவர் இறந்த பின்னும் அந்தப் பெண்களின் கோபம் அடங்காது அவரது பிணம் கசாப்புக்கடை போல் துண்டு துண்டாய் வெட்டப்பட்டு அதிலிருந்து ரத்தம் தெறிக்கும். படத்தின் இடையே வரும் ஒரு பாடலில் ரத்த ஆறு காட்டப்படுமே, அக்காட்சி மறுபடி ஃப்ளாஷ் செய்யப்படும். ஒரு ரத்தம் தோய்ந்த கவித்துவ நீதி.

3) பல வன்கலவி முகாம்களை படத்தில் காட்டுவேன். அவற்றுக்கிடையேயான சம்பாஷணை, போக்குவரத்து இவற்றைச் சொல்லும் சில காட்சிகள் வைப்பேன். அது போல் பல முகாம்கள் இருந்தன என்பது காட்சிரீதியாக பார்வையாளனுக்கு உணர்த்தப்படும். அதாவது படத்தின் கதை குறிப்பிட்ட ஒரு முகாம் பற்றியது தான் என்றாலும் 4 லட்சம் பெண்கள் வன்கலவி செய்யப்பட்டார்கள் என்பதை காட்சிரீதியாகப் புரிய வைப்பது அவசியம். இது போல் நூற்றுக்கணக்கான முகாம்கள் இருக்கின்றன, அவற்றின் ஒன்றை மட்டும் உதாரணமாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வு பார்வையாளனுக்கு ஏற்பட வேண்டும்.

4) படத்தில் காட்டப்பட்ட வன்கலவிகளின் எண்ணிக்கை படத்தின் தலைப்பான Children of War என்பதற்கு நியாயம் செய்யுமளவு போதுமானதாய் இல்லை. ராணுவ வீரர்களுக்கு எப்போதெல்லாம் தினவு எடுக்கிறதோ அப்போதெல்லாம் போய் விரும்பிய பெண்ணை அடைந்தார்கள் என்பது சில காட்சிகளில் மட்டும் அல்லாமல் நிறைய முறைகள் காட்சிகளாகவும், வசனங்களாகவும் சொல்லப்படும். தவிர, ஒட்டுமொத்த படத்திலும் ரைமா சென் கர்ப்பமுறுவது மட்டும் தான் காட்டப்படுகிறது. முகாமில் இருக்கும் நிறைய பெண்கள் (குறிப்பாய் 15, 16 வயதுப் பெண்கள்) கர்ப்பம் சுமப்பது போல் படத்தின் முடிவில் காட்டப்படும். படத்தின் இறுதியில் எழுத்துக்களாய் இந்த வரலாறு குறித்த புள்ளியல் விவரங்களைப் போடுவதை விட இப்படி காட்சிரீதியான சித்தரிப்பே வலுவானது.

5) முகாமில் வைத்து வன்கலவி செய்யப்படும் ஒரு பெண் கூட தற்கொலை செய்வதில்லை (கத்தியே சுடப்பட்டு சாகும் பெண், தற்கொலைக்கு எத்தனிக்கும் ரைமா சென் போன்றவை நேரடியானவை அல்ல). குறைந்தது ஒரு பெண்ணாவது தற்கொலை செய்வது போல் காட்சி வைப்பேன். அப்போது அவள் கர்ப்பமாய் இருப்பாள். அதே போல் கர்ப்பமுற்ற பெண்களை ராணுவத்தினர் வன்கலவி செய்வது போன்ற காட்சிகள் இல்லை. பங்களாதேஷ் பெண்களைக் கர்ப்பமுற வைப்பது தான் நோக்கம் என்றாலும் அப்படி ஆனதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒன்றும் செய்யாமல் சும்மா விட்டு வைத்திருப்பார்களா என்ன? இதுவும் தாக்கத்தை அதிகரிக்கும்.

அவ்வளவு தான். இதில் சில மிக வக்கிரமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஒரு வக்கிரத்தைப் பற்றிப் படமெடுக்க நீங்கள் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டி இருக்கும்.

இதெல்லாம் இப்போது உடனடியாக என் மனதில் தோன்றிய சில உதாரணங்கள் மட்டுமே. ஆனால் எதுவும் இலவசமாய்க் கிடைக்காது. மேலும் இது போல் காட்சிகள் கேட்க விரும்பினால் உங்கள் அடுத்த திரைக்கதையில் இணைந்து பணிபுரியலாம். நன்றி.

@Mdevrat

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. Cheers!

@writercsk

:-)

*

Comments

தம்பி உன்னைய பாத்தா சிரிப்பு ரைட்டர் மாதிரி இருக்கு...இந்த பயபுள்ள சந்தானத்துக்கு ரைட்டர் தேவையாம் போறியா?
Anonymous said…
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கட் கேப்டனாக ஹஷிம் ஆம்லா நியமிக்க பட்டுள்ளார்.இதே போல இந்தியாவிலும் அசாருதீன் கேப்டனாக இருந்திருக்கிறார்.ஆனால் ஒரு துலுக்க நாட்டில் (பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்) கிரிக்கட் அணியோ அல்லது வேறு அணியின் கேப்டனாகவோ துலுக்கன் அல்லாத வேற்று மதத்தவரை நியமிக்கும் தாராள மனம் துலுக்கனுக்கு இருக்கா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி