12 இன்ச் துயரம்
12 Inches.
நேற்று மாலை நான் போயிருந்த ஆங்கில நாடகத்தின் தலைப்பு இது. 12 இஞ்ச் நீள XXL ஆண் குறி கொண்ட ஒருவன் அதனால் அனுபவிக்கும் சங்கடங்கள் தான் கதை. ஒரு மணி நேர நாடகம். இடையிடையே லைவ் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடல்களும் இசையும். ஓரிரு பிசிறுகள் / க்ளீஷேக்கள் தவிர்த்து நாடகம் முழுக்க சுவாரஸ்யமாகவே நகர்ந்தது.
முக்கிய ப்ளஸ் நல்ல நகைச்சுவை வசனங்கள் (நாயகன் தன் பிரச்சனையைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில் ஆடியன்ஸில் பெண்கள் பக்கம் திரும்பி "என் கண்கள் இங்கே மேலே தான் இருக்கின்றன, இடுப்புக்கு கீழே இல்லை பெண்களே!" என்று சொல்லும் வசனம் ஓர் உதாரணம்). அப்புறம் நடிப்பும் சொல்லிக் கொள்ளும் படியாகவே இருந்தது.
சைதன்யா என்பவர் ஸ்க்ரிப்ட் எழுதி இருந்தார். அவரே அந்த 12 இஞ்ச் சமாச்சாரம் கொண்டவராகவும் நடித்திருந்தார். துடிப்பான நடிப்பு. ஒரு காட்சியில் நாயகன் கேரட்டைத் துண்டு துண்டாக நறுக்கிக் கொண்டிருப்பார். உச்ச காட்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் நுட்பமான சித்தரிப்பு அது. நண்பராக வந்த சிங்கும் நன்றாக செய்திருந்தார்.
இடையில் வந்த ஒரு பாடலை ஓர் அழகான பெண் மிகச் சிறப்பாகப் பாடினார். ஒரு விதமான மிகை துல்லியக் குரல்.
முக்கியமாய் இது ஒரு சுதேசி படைப்பு. பொதுவாய் நான் கவனித்த வரை பெங்களூரு போன்ற மெட்ரோபொலிடன் நகரங்களில் நிகழ்த்தப்படும் நாடகங்களில் பெரும்பாலானவை இறங்குமதி சரக்குகளே. அதாவது மேற்கத்திய நாடக ஆசிரியர் எழுதிய ஏதாவது பிரபல நாடகத்தை இங்கே இருப்பவர்கள் இயக்கி நடிப்பார்கள். ஆனால் இது அப்படியின்றி சுத்தமான இந்திய எழுத்து. இதைத் தயாரித்த Underdog Entertainment இது போல் நிறைய செய்வதாகத் தெரிகிறது.
Alliance Française de Bangalore அரங்கில் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. இருநூறு பேர் உட்காரக்கூடிய அரங்கு முழுக்க நிறைந்திருந்தது. அத்தனை பேரும் இளைஞர்கள். நிறையக் கைதட்டல்கள். அது தான் நம்பிக்கையூட்டும் விஷயம்.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் தமிழில் இது போன்ற நாடகங்கள் நிகழ்த்தப்பட்டால் இளைஞர்களை ஈர்க்கும் எனத் தோன்றுகிறது (டிக்கெட் விலை ரூ.200 என்பது போல் குறைவாக வைக்க வேண்டும்). நவீன ஜனரஞ்சக நாடகங்கள் தமிழில் நிகழ்த்தப்படுவதில்லை. நாம் க்ரேஸி மோகன், SV சேகர், YG மகேந்திராவுடனே தேங்கி விட்டோம்.
*
Comments
அவர்களுக்குப் பின் நாடகத்தை நகர்த்து நபர் யாருமில்லை என்பதுதானே உண்மை..சினிமா நோக்கி நகர்ந்த கூட்டம் பின் நாடகம் நோக்கிப் போகவேயில்லை....