முதல் நரை


மழிக்காத‌ மீசையில் சிரைக்காத‌ தாடியில் வரலாம்
மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம்
மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம்
லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம்

ரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன்
ஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் -
ஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில‌ அறிவிப்புக்களை
மௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி

மனைவியிடம் சிரித்துப் பேச‌ ஞாபகப்படுத்துகிறது
குழந்தைகளுடன் விளையாட‌க் கூவிய‌ழைக்கிறது
பெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது
பால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது

புதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை
முட்டாள்தனங்களை வக்கிரங்களைத் தோண்டுகிறது
பொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது
பயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது

படிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை
புசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை
முடிக்காத பயணங்களை புணர்ந்திராத‌ பெண்களை
செய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது

கூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல்
மரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் த‌ந்து
என்றோ தொலைகாலத்தில் எண்கால்களுடன் நடந்தேறும்
இடுகாட்டுப் பெரும்பிரயாணத்தைத் தொடக்கி வைக்கிறது.

(15.5.13 ஆனந்த விகடன் இதழின் சொல்வனம் பகுதியில் வெளியான எனது கவிதையின் முழு வடிவம் இது)

Comments

Anonymous said…
"நான் சீரியசானவன்"--- சோலார் ஸ்டார் ராஜகுமாரன் பேட்டி

http://www.adrasaka.com/2013/05/blog-post_8930.html
வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி