டிம்பிள் யாதவ் : அரசியலின் அழகியல்

 ஆழம் ‍‍ - ஜூலை 2012 இதழில் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின் இளம் அரசியல் முகமான டிம்பிள் யாதவின் எழுச்சி குறித்து நான் எழுதிய கட்டுரையின் சுருக்க வடிவம் வெளியாகி இருக்கிறது. முழுக் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:

*******

1978ம் ஆண்டு. பூனேவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கலோனல் எஸ் சி ராவத் என்பவரின் மனைவி ஓர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ராவத் அவருக்கு டிம்பிள் எனப் பெயர் சூட்டினார். அப்போது யாரும் ஆரூடம் சொல்லி இருக்க நியாயமில்லை - அந்தக் குழந்தை தன் மத்திய வயதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலத்தின் மஹாராணியாக, பதினைந்து லக்ஷம் பேரின் பாராளுமன்ற பிரதிநிதியாக, இளைய தலைமுறை இந்திய அரசியலின் அழகியல் அடையாளமாகத் திகழ்வார் என.


உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியும், கன்னோஜ் எம்பி ஆகப் போட்டியின்றித் தேந்தெடுக்கப்பட்டவருமான டிம்பிள் யாதவ் தான் அவர்.

தந்தையின் பணி இடமாற்றங்கள் காரணமாக டிம்பிள் யாதவ் தன் பால்யத்தை இந்தியாவின் பல ராணுவ கண்டோன்மெண்ட்களில் கழிக்க நேர்ந்தது – பூனே பாட்டின்டா, லக்னோ, அந்தமான் நிக்கோபார் என பலவிதமான ஊர்கள். புதிய இடங்களுக்கும், சூழல்களுக்கும் சுலபத்தில் சீக்கிரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளத் தெரிந்தவர் டிம்பிள் என்கிறார்கள் அவரது சிறுவயது நண்பர்கள். பிற்பாடு ஒரு பெரிய அரசியல் குடும்பத்தில் அவர் தன்னை சிக்கலின்றி இணைத்துக் கொள்ள அவரது இந்த இயல்பு பெருமளவு உதவியிருக்கக்கூடும்.

1990களின் இறுதியில் டிம்பிள் லக்னோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார். மைசூரில் சிவில் எஞ்சினியரிங் முடித்த அகிலேஷ் சிட்னி பல்கலைக்கழகத்தில் சூழலியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அரசியலின் கரங்கள் அவரைத் தீண்டியிருக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் அகிலேஷ், டிம்பிளை சந்தித்தார். முதல் பார்வையிலேயே அவரது பரிசுத்த அழகின் சுழலில் ஈர்க்கப்பட்டு சுலபமாய்க் காதல் வயப்பட்டார்.

1999 நவம்பர் 24. லக்னோவில் உள்ள சஹாரா சாகர் என்ற ஸ்தலத்தில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வில் அகிலேஷ் டிம்பிளின் கரம் பற்றினார். நாட்டின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா போன்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட செழுமையான விழாவாக அது அமைந்தது. ஒற்றை இரவில் டிம்பிள் ராவத் டிம்பிள் யாதவ் ஆனார். அப்போது அவருக்கு வயது 21.

அகிலேஷ் தன் அழகிய இளம் மனைவியின் மீது மிகப் ப்ரியமாக இருந்தார். அப்போது எல்லாம் பொது இடங்களிலேயே "ஷாதி கே பாத் கிஸ்மத் கி பாதல் கயி" என்பார் (எனக்குத் திருமணமான உடனேயே அதிர்ஷ்டம் பொழிகிறது). பகுத்தறிவைக் கழித்து விட்டுப் பார்த்தால் அவர் சொன்னது மிகையே அல்ல.

மணமான சில மாதங்களில் கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வேட்பாளராய் நிற்க சமாஜ்வாதி கட்சி அகிலேஷைத் தேர்ந்தெடுத்தது. மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் நேரடி மற்றும் ஒரே வாரிசாக இருந்த போதும் அரசியலின் முதல் காற்று அகிலேஷின் மீது வீசியது அப்போது தான். 2000ல் நடந்த தேர்தலில் வென்று கன்னோஜ் தொகுதி எம்பி ஆனார் அகிலேஷ்.

அரசியலில் அடியெடுத்து வைத்தாலும் அதன் தீவிரத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார்கள் புதிதாய்த் திருமணமான யாதவ் தம்பதியினர். கட்சி நடவடிக்கைகள் எதிலும் அகிலேஷ் பங்கேற்கவில்லை. தன் தொகுதிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தியதால் கன்னோஜ், இடாவா பகுதிகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.


தம் இனிய இல்லறத்தின் வழி முதலில் அதித்தி என்ற பெண் குழந்தையும், பின் அர்ஜுன், டினா என்ற ஆண் - பெண் இரட்டைக் குழந்தைகளும் பெற்றார் டிம்பிள்.

டிம்பிளுக்கு குதிரை ஏற்றம் பிடிக்கும். தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர். திறமையாக ஓவியம் வரைவார். நிறைய புத்தகங்கள் வாசிப்பார். இது போன்ற விஷயங்களின் மூலமாக டிம்பிள் மற்றுமொரு பணக்கார வீட்டு மருமகளாக சுருங்கி விடாமல் தன் சுயத்தைக் காத்துக் கொண்டார்; தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார்.

இடையில் 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னோஜ் தொகுதி எம்பி ஆனார் அகிலேஷ். பின்னர் வந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை. அது நாள் வரையிலும் டிம்பிள் யாதவ் நேரடியாக அரசியலில் எந்தவொரு குறிப்பிடத் தகுந்த பங்கையும் ஆற்றியிருக்கவில்லை.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னோஜ், ஃபிரோஸாபாத் என இருதொகுதிகளில் தொகுதிகளிலும் வேட்பாளராய் நின்றார் அகிலேஷ் யாதவ். இரு தொகுதிகளிலுமே பிரம்மாண்ட வெற்றியை எய்தினார். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர் ஏதாவது ஒரு தொகுதியின் எம்பியாக மட்டுமே செயல்பட முடியும். அகிலேஷ் கன்னோஜ் தொகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இதனால் அவர் ஃபிரோஸாபாத் தொகுதி எம்பி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நேர்ந்தது. பொதுத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் மற்றொரு இடைத் தேர்தலை சந்தித்தது ஃபிரோஸாபாத் தொகுதி. சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்பட்டவர் டிம்பிள் யாதவ். அது தான் அவரது முதல் அலுவல்ரீதியான அரசியல் பிரவேசம். தன் கணவரின் தொகுதி என்பதால் மிகச்சுலபமாக வென்று விடலாம் என்றே அவர் கணக்குப் போட்டார். அவரது கணவர் அகிலேஷ், மாமனார் முலாயம் சிங், கட்சிக்காரர்கள் கூட அப்படித் தான் நினைத்திருந்தனர்.

ஆனால் யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது. ஃபிரோஸாபாத் தொகுதி மக்கள் அகிலேஷ் வென்ற பின்னும் ராஜினாமா செய்த கோபத்தில் இருந்தனர். இது முதல் அடி. அடுத்தது பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் முன்னால் சமாஜ்வாதி கட்சிக்காரரும், பிரபல நடிகரும், அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவ ருமான ராஜ் பாபரை வேட்பாளராகக் களம் இறக்கியது. இது இரண்டாவது அடி. கடைசியாய் அப்போது இந்திய அளவில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பிம்பத்துடன் வலம் வந்து கொண்டிருந்த ராகுல் காந்தியே காங்கிரஸ் சார்பாக நேரடியாக பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இது மூன்றாவது அடி.

இதன் காரணமாக ராஜ் பாபர் சுலபமாக தேர்தலில் வென்று ஃபிரோஸாபாத் தொகுதி எம்பி ஆனார் (வென்ற இரு வருடங்களில் அவர் காங்கிரஸிலிருந்தும் வெளியேறினார் என்பது வேறு கதை). தன் முதல் அரசியல் பிரவேசத்திலேயே மிக மோசமானதொரு அவமானதொரு தோல்வியை சந்தித்தார் டிம்பிள் யாதவ்.


வேறு ஒரு பெண்ணாய் இருந்திருந்தால் ஒருவேளை தன் அரசியல் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட்டு தன் தினசரி குடும்ப அலுப்புகளுக்குத் திரும்பி இருக்கக் கூடும். ஆனால் டிம்பிள் அப்படிச் செய்யவில்லை. இளம் வயதில் அவருக்கு வாய்த்த ராணுவச் சூழலிலான  வளர்ப்பு அவருக்கு நொறுங்கி விடாத திடமான நல்மனதை நல்கி இருக்கலாம்.

இத்தனைக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், டிம்பிளின் மாமனாருமான முலாயம் சிங் யாதவே இதற்குப் பிந்தைய ஒரு பொதுக்கூட்டத்தில் இனிமேல் தன் குடும்பத்திலிருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என பகிரங்கமாய் அறிவித்தார். ஆனால் டிம்பிள் பொறுமையுடன் காத்திருந்தார்.

இன்னொரு புறம் அகிலேஷ் யாதவ் விழித்துக் கொண்டார். ஃபிரோஸாபாத் இடைத்தேர்தல் தோல்வியின் காரணமாக ஊடகங்கள் சமாஜ்வாதி கட்சி வீழ்ந்து விட்டது என எழுத ஆரம்பித்தனர். அதுகாறும் ஒதுங்கியிருந்த அகிலேஷ் தன் தயக்கங்களை எல்லாம் களைந்து விட்டு நேரடி அரசியலில் இறங்கினார். மெல்ல மெல்ல கட்சியின் ரவுடியிஸ, பழமைவாத முகத்தை அகிலேஷ் மாற்றினார். தொடர் சைக்கிள் பேரணிகள் மற்றும் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணங்கள் மூலம் மொத்த உத்திரப்பிரதேச மாநில மக்களையும் நேரடியாகச் சந்தித்தார்.

பின் நடந்த 2012 சட்டமன்றத் தேர்தல்களின் போது சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 தொகுதிகளைப் பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ் தன் 39வது வயதில் உத்திரப்பிரதேசத்தின் இளம் முதல்வரானார். கட்சியிலும், மக்களிடையேயும் அப்படியொரு மாற்றம் நிகழும் அளவிற்கு அகிலேஷ் கடும் உழைப்பில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் டிம்பிள் யாதவின் மோசமான தேர்தல் தோல்வி தான். இங்கும் தன் கணவருக்கு மறைமுகமாக அதிர்ஷ்டத்தை தந்த தேவதையாகவே டிம்பிள் இருக்கிறார்.

முதல்வரான பின் 2012 மார்ச் இறுதியில் அகிலேஷ் யாதவ் உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தன் சொத்துக் கணக்கை 4.83 கோடி ரூபாய் என வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து டிம்பிள் யாதவும் தன் சொத்துக்கணக்கை வெளியிட்டார். லக்னோவில் 81.39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள், 59.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கத் தொகை மற்றும் ஃபிக்ஸட் டெப்பாஸிட்டாக 81.67 லட்சம் ரூபாய், 15.56 லட்சம் மதிப்புக்கு இன்ஸ்யூரன்ஸ், தன் கணவரிடமிருந்து கடனாகப் பெற்ற 22 லட்சம் ரூபாய், ஆக மொத்தம். 2.38 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருந்தார் டிம்பிள்.

அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனதால் அவர் கன்னோஜ் எம்பி பதியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஃபிரோஸாபாத் போல் கன்னோஜ் தொகுதியும் மீண்டுமொரு அனாவசிய இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம். ஒரே வித்தியாசம் என்னவென்றால் அன்றைய ஃபிரோஸாபாத் மக்கள் போல் இன்றைய கன்னோஜ் மக்கல் கொந்தளிப்பில் இல்லை. இன்று சமாஜ்வாதி கட்சி தான் உத்திரப் பிரதேச மக்களுக்கு பிடித்தமான கட்சி. அகிலேஷ் யாதவ் அவர்களின் செல்லப்பிள்ளை. டிம்பிள் யாதவ் அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய "பாபி" (அண்ணி).

இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் கன்னோஜ் பாராளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை ஜூன் 24 என்று அறிவித்தது. மே 26ல் லக்னோவில் கூடிய சமாஜ்வாதி கட்சியின் பாரளுமன்ற குழுக் கூட்டத்தில் கன்னோஜ் தொகுதி வேட்பாளராக டிம்பிள் யாதவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


ஜூன் 5 அன்று எளிமையான பச்சைப் புடவையுடன், அள்ளி முடிந்த கூந்தலுடன், கணவர் அகிலேஷ் துணையோடு வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கன்னோஜ் தொகுதி மக்களை ஒரு பிரம்மாண்ட பேரணியில் சந்தித்தார் டிம்பிள் யாதவ். "மாநில முதல்வரின் மனைவியைக் காட்டிலும் சிறந்த ஒருவரை நீங்கள் உங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து விட முடியாது. அதனால் உங்கள் அண்ணிக்கு வாக்களியுங்கள்" என்று பேசினார் டிம்பிள். "பணி நெருக்கடி காரணமாக நான் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியாது, ஆனால் டிம்பிளை வெற்றி பெறச் செய்ய உங்களை வேண்டிக் கொள்கிறேன்" என்றார் அகிலேஷ்.

தேர்தலை சந்தித்திருந்தாலே மிகச்சுலபமாக டிம்பிள் வெற்றி பெற்றிருக்க முடியும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அகிலேஷ் மற்றுமொரு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை போலும். அவரிடம் வேறு மார்க்கங்கள் இருந்தன.

உத்திரப்பிரதேசத்தில் இப்போதைக்கு பிரதான எதிர்கட்சிகள் மூன்று தாம் பகுஜன் சமாஜ் கட்சி,  காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி எனும் பாரதிய ஜனதா கட்சி.

தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிராத பகுஜன் சமாஜ் கட்சி கன்னோஜ் இடைத்தேர்தலில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தது. மம்தா பேனர்ஜி அடிக்கடி மத்திய அரசுக்கு நெடுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு சாமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் தயவு தேவையாய் இருக்கிறது (இப்போதே சமாஜ்வாதி மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது). அதனால் காங்கிரஸும் கன்னோஜ் தொகுதியை சமாஜ்வாதிக்கே விட்டுத் தர தீர்மானித்தது. மீதமிருப்பது பிஜேபி மட்டும் தான்.

பிஜேபி ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடாதது போல் தோன்றினாலும் கடைசி நேரத்தில் கட்சியின் மத்தியத் தலைமை தலையிட்டு, வேட்மனு தாக்கல் முடிய சில மணி நேரங்கள் முன்பாக எங்கிருந்தோ ஜக்தியோ சிங் யாதவ் என்பவரைக் கண்டுபிடித்து வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவரால் குறித்த நேரத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற வழியில் தான் சமாஜ்வாதிக் கட்சியினரால் இருமுறை மறிக்கப்பட்டு மிரட்டப் பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார் ஜக்தியோ சிங். சாமாஜ்வாதி இதை மறுக்கிறது.

ஜூன் 7. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள். நேரம் முடிந்த போது தேர்தல் களத்தில் மீதம் இருந்தது மூன்றே பேர். சாஜ்வாதி கட்சியின் சார்பில் நமது கதாநாயாகி டிம்பிள் யாதவ் மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள்.

ஜூன் 8. காலையில் அந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் தான் இருக்கின்றனர். பின் நண்பகலுக்குள் பின்னணியில் என்ன நடந்ததோ இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுமே தம் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இப்போது களத்தில் மீதமிருப்பது டிம்பிள் யாதவ் மட்டுமே!

1951ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 53(2) "இருக்கும் காலி இடங்களின் எண்ணிக்கை அங்கே போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமம் என்றால் தேர்தல் சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த எல்லா வேட்பாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவித்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும்" என்கிறது. அதாவது ஒரு தொகுதியில் நடக்கும் தேர்தலில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டால் தேர்தல் நடத்தாமல் அவரையே போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். டிம்பிள் இந்தப் புள்ளியில் தான் நின்றிருந்தார்.

ஜூன் 10. அன்று மதியம் 3 மணியோடு வேட்புமனு வாபஸ் பெறுவது முடிவடைகிறது. டிம்பிள் கன்னோஜ் மக்களைத் தொகுதியின் எம்பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன் ஜூன் 8 அன்றே போட்டிக்கு யாரும் இல்லாத நிலையில் டிம்பிளை வெற்றி பெற்றதற்கு வாழ்த்தி உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பிஜேபி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

உத்திரப்பிரதேச மக்களவையில் இவ்வாறு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 1952ல் முதல் பொதுத் தேர்தலின் போது அலஹாபாத் தொகுதியில் புருஷோத்தம் தாஸ் டாண்டன், 1962ல் தேரி தொகுதியில் (தற்போது உத்தர்கண்டில் இருக்கிறது) ராஜா மன்வேந்திர சிங் ஆகியோர் போட்டியின்றி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். 1952லிருந்து இன்று வரை இந்தியா முழுவதிலும் சுமார் 30 பேர் இப்படிப் போட்டியின்றி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.



ஜூன் 13 அன்று டிம்பிள் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கன்னோஜ் பாராளுமன்றத் தேர்தல் அதிகாரியாக செயலாற்றிய கன்னோஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வ குமாரியிடமிருந்து பெற்றுக் கொண்டார். முதல் வேலையாக தன் கணவனோடு கன்னோஜிலிருக்கும் புகழ்பெற்ற டீலா ஆலயம் சென்று நன்றி கூறி வழிபாடு நடத்தினார். கன்னோஜ் பாரளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் டிம்பிள் யாதவ். இதற்கு முன் தற்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் 1984ல் இதே தொகுதியிலிருந்து எம்பி ஆனார்.

"நான் எனது பதவியை  பெண்களின் உரிமைகளுக்குப் போராடுவதற்காகப் பயன்படுத்துவேன்" என்று சொல்லி இருக்கிறார் டிம்பிள். தற்போது 35 வயதாகிறது அவருக்கு. இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. உடன் நிறைய வாய்ப்புக்களும். இந்திய அரசியல் கானகத்தில் சீறிக் கிளம்பியிருக்கும் இந்த இளம் பெண் புலி அழகியலோடு அரசியலியலும் ஜொலிக்கிறதா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

*******

ஆழம் இதழில் வெளியான சுருக்கப்பட்ட‌ வடிவம் : http://www.aazham.in/?p=1448
இதழின் பிடிஎஃப் : http://www.aazham.in/magazine/wp-content/uploads/pdfs/jul-2012.pdf

Comments

Anonymous said…
yov csk....ethaiyaavathu post update pannuyya...ovvoru thadavaiyum vanthuttu summa thirumbi pora maathiri irukku...writer nu pera vachukkittu , ezutharathukku iththanai sombaerithanappatta eppadi ? naeram othukki ezuthithaan aaganum...luckylook ai paaru...uyirmai viruthu kidaichathukku appuram, almost daily oru post podaraaru...its ur dutu to write for us csk....okya...
சிஎஸ்கே ! டிம்பிள் யாதவ் அரசியல் பிரவேசம் கொல்லைப்புற வழியிலானது. இது போன்ற வழி முறைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.இதைப் பற்றி உங்களின் பதிவு, உங்களின் தளத்தின் ஆகச் சிறந்த குப்பை என்று கருத வேண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற வழிகளில் அரசியல் பிரவேசம் செய்வது ஜன நாயக விரோதத்தனமானது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி