3ம் உலகம்

பொதுவாய் நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. இசை பற்றி எதுவும் தெரியாது என்பது அதற்கான‌ காரணங்களுள் முதன்மையானது. தவிர எந்த இசையென்றாலும் மனம் தன்னிச்சையாய் இளையராஜாவுடனேயே ஒப்பிட்டுப் பார்த்து இரக்கமின்றி தூக்கிக்கடாசி விளையாடுகிறது. சரி இளையாராஜாவின் பாடல்களுக்காவது எழுதலாம் என்று பார்த்தால் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது போல் அதில் சொல்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. "அற்புதம் அதிசயம் அபாரம் அட்டகாசம் அமர்க்களம்" என்றே ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பது கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சொல்ப‌வனுக்கே சமயங்களில் அலுத்துப் போய் விடுகிறது. இதையெல்லாம் தாண்டி குறிஞ்சி பூத்தாற் போல் ராஜா தவிர்த்த வெளியிடத்திலிருந்து (குறிப்பாகப் புதியவர்கள்) ஏதேனும் நல்லிசை வந்தால் அது குறித்து மட்டும் எழுதுவதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறேன். அப்படி இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களின் இசைக்கு மட்டும் விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஒன்று உன்னைப் போல் ஒருவன்; மற்றது எந்திரன் (சென்ற 2011ம் ஆண்டில் வெளியான‌நஞ்சுபுரம், வாகை சூட வா ஆகிய‌ படங்களின் பாடல்கள் பற்றி எழுத விரும்பி, பின் சந்தர்ப்பம் அமையாததால் முடியாமற் போனது). சமீபத்தில் வெளியாகியிருக்கும் 3 படத்தின் பாடல்கள் என்னை மீண்டும் எழுத வைத்திருக்கின்றன‌.

*******


1. இதழின் ஓரம் (The Innocence Of Love):
சுகமான பாடல். குறிப்பாய் "wow wow wow" என்று தொடங்குவதும், தொடர்ந்து வரும் இடங்களிலும் குரலுருகியிருக்கிறார் அஜீஷ் அஷோக் (சூப்பர் சிங்கர் 2008 வின்னர், கோவா திரைப்படத்தில் ஆன்ட்ரியாவுடன் இணைந்து "இதுவரை இல்லாத உணர்விது" பாடலைப் பாடியவர்). ஆல்பத்தில் இப்பாடல் ஒன்று மட்டும் ஐஸ்வர்யா எழுதியது; மற்றவை 'Poetu' தனுஷ்!

2. கண்ணழகா (The Kiss Of Love):
ஆரம்ப இசையே ஆளை மயக்குகிறது. என் கணக்கில் ஆல்பத்தின் இரண்டாவது மிகச்சிறந்த இசைக்கோர்வை இது தான். ஷ்ருதிஹாசன் பழகிவிட்டாலும் தனுஷ் ஈர்க்கிறார். உறக்கத்திலிருக்கும் குழந்தையை உறுத்தாது முத்தமிடும் தாயின் மென்மையாய் வருடிச் செல்கிறது பாடல். "உனை விட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி" என்ற வரிக‌ள் மேஜிக்கல்.

3. Come On Girls (The Celebration Of Love):
கொண்டாட்ட‌மான பாடல் எனினும் பரிசோதனை முயற்சியும் கூட. ஜி.வி.பிரகாஷ் குமார் - புஷ்கர் & காயத்ரி கூட்டணி இது போன்ற‌ சில‌ experimental cerebration பாடல்களை உருவாக்கியிருக்கிறது. இடையில் இசையில் ஓரிடத்தில் யாரடி நீ மோகினி படத்தில் வரும் "பாலக்காட்டு பக்கத்திலே" பாடலின் நெடி வீசுகிறது. இசையமைப்பாளர் அனிருத் ஒட்டுமொத்த ஆல்பத்திலும் மூன்று பாடல்கள் பாடி இருந்தாலும் இதில் தான் அவரது குரல் predominant-ஆக வெளிப்பட்டு வசீகரிக்கிறது.

4. நீ பார்த்த விழிகள் (The Touch Of Love):
விஜய் பிரகாஷும் ஸ்வேதா மோக‌னும் பாடியிருக்கும் ஒரு டிபிகல் தமிழ் டூயட். நன்றாக இருக்கிறது. அவ்வளவு தான்.

5. A Life Full Of Love - Theme Music:
ஒரு தேர்ந்த கலைஞன் தான் இந்த ஆல்பத்தின் இசைக்குறிப்புகளை எழுதியிருக்கிறான் என்பது அழுத்தமாய் வெளிப்படும் இடம் இது. கிட்டதட்ட‌ செல்வராகவன் படத்திற்கு அமைக்கப்பட்ட‌ யுவன் ஷங்கர் ராஜாவின் ஓர் இசைக்கோர்வையைக் கேட்பது மாதிரி இருக்கிறது; அப்புறம் கொஞ்சம் போல் இளையராஜா. இதற்கு மேல் புகழ என்னிடம் வார்த்தையில்லை.

6. Why This கொலவெறிடி (The Soup Of Love):
தமிழகமே, இந்தியாவே, உலகமே - சாத்தியமெனில் பிரபஞ்சமே கூட‌ - கொண்டாடிக் கொண்டிருக்கும் பாடல், என்னைப் பொறுத்தவரை சாதாரணமான ஒன்றே. மூன்று காரணங்களால் இப்பாடலுக்கிந்த‌ பிரம்மாண்ட reach கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று மிக எளிமையான இதன் folk இசை; அடுத்தது funny-யான‌ அந்த தங்கலீஷ் வரிகள்; கடைசியாய் தனுஷின் பிழையிழையோடிய பாடுமுறை. சொல்லப்போனால் அந்தக் கடைசி விஷயம் தான் அதன் பிரதான charm (வீடியோவில் வரும் ஸ்ருதிஹாசனின் body-language தான் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்பது எனது ஆரம்ப தியரி).

7. The Rhythem Of Love:
நவீன் ஐயர் வாசித்திருக்கிறார் (வெயில் படத்தில் "வெயிலோடு விளையாடி" பாடலுக்கு வாசித்தவர்). காதலின் ரிதம் இத்தனை விறைப்பாய், முறைப்பாய் இருக்குமா எனத் தெரியவில்லை. இசையும் ஆக்கமும் சாதாரணமாய் இருக்கிறது.

8. போ நீ போ (The Pain Of Love):
மோஹித் சௌஹான் (பிரபல இந்திப் பாடகர். ரங் தே பசந்தி முதல் சமீபத்திய ராக்ஸ்டார் வரை கடந்த ஐந்தாண்டுகளாக அங்கே ரஹ்மானின் ஆஸ்தான பாடகர். எந்திரன் இந்தி வெர்ஷனில் "காதல் அணுக்கள்" பாடியவர்) பாடியிருக்கும் பாடல். பாடலின் ஆரம்பத்தில் (இசை, வரி இரண்டிலுமே) தீபாவளி படத்தில் வரும் "போகாதே" பாடலின் சாயல் தென்பட்டாலும் போகப் போக‌ தனித்துவம் பெற்று வேறொரு தளத்துக்கு நகர்கிறது. பல்லவிக்கு சற்று பின் அனிருத்தின் குரலில் "ஆ...!" என்றொரு அலறல் / கதறல் வருகிறது - அதில் எந்த மொழியுமின்றி சொல்லப்பட்டு விடுகிறது காதலின் வலி. என்னைப் பொறுத்தமட்டில் இந்த‌ ஆல்பத்தின் ஆகச்சிறந்த பாடல் இதுவே. இதுவரை இதனை குறைந்தபட்சம் நூறு முறைகளேனும் கேட்டிருப்பேன். ஆனாலும் அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உதித் நாராயன் தான் பாடும் பாடல்களில் தமிழைக் கற்பழிப்பதைக் கேட்டு அவர் குரலறுத்துக் குருதி குடிக்கும் வெறி தோன்றியிருக்கிறது. ஆனால் அதையே மோஹித் செய்யும் போது உள்ளுக்குள் கிறக்கம் கூடி பித்து பிடித்துப் போகிறது. இசையின் மாயம் தான் என்ன!

9. Theme Of 3:
மாண்டலின் சீனு என்பவர் வாசித்திருக்கிறார். கொஞ்சம் அரேபியத்தனத்துடன் துள்ளலாய்த் துவங்கும் இசை, இரண்டாம் பாதியில் மெட்டல் இசை வந்து சேர்ந்து கொள்ள, ஒரே அதகளம் தான். ஆல்பத்தில் குறிப்பிடத்தகுந்த பாடல்களில் ஒன்று.

10. போ நீ போ Remix (The Scream Of Love):
சத்யபிரகாஷ் (சூப்பர் சிங்கர் 2011 ரன்னர்அப்) மற்றும் ஹரீஷ் ஸ்வாமிநாதன் பாடியிருக்கும் ரீமிக்ஸ். புதுப்பேட்டையில் வரும் "ஒரே நாளில் remix" மாதிரி இருக்கிறது. வழக்கம் போலவே ஒரிஜினல் அளவுக்கு உசத்தியில்லை. பரவாயில்லை.

*******

இந்த ஆல்பத்தின் உள்ளடக்கத்தை பாடல், குறும்பா, தீம் இசை என்று பிரிக்கலாம். மூன்றரை நிமிடங்களுக்குக் குறைவான் நீளம் கொண்ட முதல் மூன்றும் குறும்பா; 5, 7, 9 மூன்றும் தீம் இசை; மீதமிருப்பவை பாடல்கள். ஒரு பாடலும், ஒரு குறும்பாவும், ஒரு தீம் இசையும் அற்புதமாக அமைந்து ஆல்பத்தை முக்கியமானதாக ஆக்குகிறது.

தீம் ம்யூசிக் என்பதை மணிரத்னம் (மௌன ராகம்), பாலச்சந்தர் (புன்னகை மன்னன்) போன்றவர்கள் பாடல் கேசட்டின் ஒரு பகுதியாக 80களிலேயே அறிமுகப்படுத்தி இருந்தாலும் அதிக பிரபலமடையவில்லை. அதை மீண்டும் கொண்டு வந்தது 2000ல் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி தான். பின்னர் மிஷ்கின் தன் பாடல் இசைகளில் இதை வலுவாகப் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு இப்போது ஐஸ்வர்யா ஆர். தனுஷைத் தான் சொல்லத் தோன்றுகிறது.

ஒட்டு மொத்த ஆல்பம் முழுக்கவும் செல்வராகவன் syndrome தெரிகிறது - இதைப் பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்!

Verdict: A Big Thumbs-Up 4 அனிருத் ரவிச்சந்தர்

*******

Comments

Dinesh said…
excellent review.... songs are really good and very refreshing in a way it is composed....

couldn't believe Dhanush can pen down songs with this quality... awesome....

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி