படித்தது / பிடித்தது - 86

எப்டியிருக்கீங்க

மணவாழ்க்கை எப்டியிருக்கு
விஷேஷம் ஏதாவது
தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும்
வீட்ல எப்டியிருக்காங்க
ஆடிமாசம் கொலபட்னியா
புரிதல் எப்டியிருக்கு
புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும்
குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா
சிகரெட்டாவாது பிடிக்கலாமா
என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா
வீட்ல எங்க ஊருக்கா
பொண்டாட்டி கால் பண்றாங்களா
வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு
புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல
பொண்டாட்டி சமையலா
தலைதீபாவளி வாழ்த்துகள்
போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை
புன்னகையோடு கடந்துவிடுகிறேன்
நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்
விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி
ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள்
முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின்
பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை
ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை
கறை படிந்த உள்ளாடை வேட்டி
சுகித்த மெத்தை சீதனங்கள்
மோதிரம் அணிந்திருந்த மெட்டி
நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி
வரவேற்பறையில் நின்றபடி
நண்பர்கள் உறவினர்களோடு நின்றபடி கைகோர்த்து திரும்பிப்பார்த்தபடி
என் காதலிகளுடன் நின்றபடி
அவள் காதலர்களுடன் நின்றபடி
முதுகுகளில் சாய்ந்தபடி
உணவுமேசையில் ஊட்டியபடி
மெட்டியணிவித்தபடி மாலைமாற்றியபடி
மாங்கல்ய முடிச்சிட்டபடி தலைசுற்றி திலகமிட்டபடி
யாரையோ பார்த்து சிரித்தபடி தோளில் சாய்ந்தபடி
நெற்றிசரியுமவள் முன்கேசம் ஒதுக்கியபடி
கழுத்தில் கைகோர்த்தபடி
பரிசுப்பொருட்களை பெற்றபடி
யாகநெருப்புக்கு நெய்வார்த்தபடி
குட்டிப்பிள்ளையாரை தொட்டிலாட்டியபடி
பாதபூசை செய்தபடி பொறிமோதிரம் அணிவித்தபடி
நீர்க்குடத்தில் மோதிரம் துழாவியபடியிருக்கும்
இறந்த கணங்களின் பிணக்குவியலான ஆல்பம்
சங்கத்தில் பாடாத கவிதை ஆயிரம் மலர்களே மலருங்கள்
ராஜாமகள் ரோஜாமலர் கோடைகாலகாற்றே குளிர் தென்றல் பாடும்பாட்டே
ராஜராஜசோழன் நான் என் இனிய பொன்நிலாவே
பூவண்ணம் போலநெஞ்சம் ஓ வசந்தராஜா தேன்சுமந்த ரோஜா
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
பொத்திவச்ச மல்லிகமொட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
ஆனந்த ராகம் கேட்கும்காலம் கீழ்வானிலே
அழகிய கண்ணே உறவுகள் நீயே
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்
கொடியிலே மல்லிகப்பூ ஆத்தாடி பாவாட காத்தாட
மதுர மரிக்கொழுந்து வாசம் மேகங்கருக்கையிலே தேகங்குளிருதடி
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
புத்தம்புது காலை பொன்னிறவேளை
பூங்காவியம் பேசும் ஓவியம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
தம்தனதம்தன தாளம் வரும் புதுராகம் வரும்
தேவதை போலொரு பெண்ணிங்கு வந்த்து நம்பி
மெட்டியொலி காத்தோடு என் நெஞ்சை தாலாட்ட
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன்
உறவெனும் புதியவானில் பறந்ததே இதய மோகம்
வெள்ளிக்கொலுசுமணி வேலான கண்ணுமணி
சிறுபொன்மணியசையும் அதில் தெறிக்கும் புதுஇசையும்
ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா தேவதையே திருமகளே
பூங்கதவே தாழ்திறவாய் பூவாய் பெண்பாவாய்
ஒருகிளி உருகுது உரிமையில் ப்ழகுது ஓ மைனா மைனா
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவர நெனக்கலயே
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும்நேரம்
மணநிகழ்வின் காட்சிகளுக்கு பொருத்தமாய் கோர்க்கப்பட்ட
மூன்றுமணிநேர மூன்று குறுந்தகடுகளை
கணினியில் அலைபேசியில் சேமித்திருந்த நிழற்படங்கள்
அலைபேசியெண்ணை எண்களை
அவ்வப்போது தட்டுப்படும் அழைப்பிதழ்கள் வாழ்த்தட்டைகள்
பெயர் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள்
போல்டரில் சேமித்திருந்த வாழ்த்து மின்னஞ்சல்கள்
தூர நண்பர்களுக்கு பகிர்ந்த பிகாசா புகைப்படங்கள்
சுவரில் அலமாரியில் மேசையில் டிவிமேல்
சமையலைறையில் உணவு மேசையில் இருந்த அன்பளிப்புகள்
அன்பளிப்பு விவரங்களடங்கிய நோட்டு
அழைப்பிதழ் கொடுக்க தயாரித்த பட்டியல்
மாமா எழுதி வைத்திருந்த பார்க்கச்சென்ற
முதல் நாள் டிராவல் செலவுமுதல்
சத்திரச்செலவு வரையிலான கணக்குடைரி
சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது
இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்
முதலில் சந்தித்த கோயில் நிச்சயம் மணம் நிகழ்ந்த மண்டபம்
அழைத்துச்சென்ற மருத்துவனை சினிமா தியேட்டர்
பூ வாங்கும் கடை ஒரேமுறை நேப்கின் வாங்கிய கடை
இருக்கும் வீதி சாலை வழி கவனமாக தவிர்க்கிறேன்
பின்னால் இருத்தி அழைத்துச்சென்ற இருசக்கரவாகனத்தை
கல்லாலடித்து உடைத்துவிட்டேன்
நின்ற அமர்ந்த இடம் கோலம் நடந்த தடம் சுமந்த
அனைத்தையும் நீங்கி வந்துவிட்டேன்
சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும்
என்ன செய்வது
பரிமாறப்பட்ட வார்த்தைகள் பார்வைகள் புன்னகைகள் வசைகள் சம்பவங்கள்
பூச்சிகளாய் பறக்கும் மனதை
கூந்தல் கோதியிபடியிருந்த விரல்களை
தழுவிய கரங்களை அணைத்து புரண்டுருண்ட அங்கங்களை
சுவைத்த நாக்கை ஊர்ந்த உதடுகளை
புணர்ந்த குறியை

- யாத்ரா

நன்றி: yathrigan-yathra.blogspot.com

பின்குறிப்பு:
நீண்ட நாட்களாகவே 'யாத்ரா'வைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் (என் தளத்தில் வெளியிட்டு வரும் படித்தது / பிடித்தது தொடரில் அவரது கவிதையையும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கும் ஒரு காரணம்). ஆனால் இது வரையிலும் அவர‌து கவிதையின் உயரத்துக்கும் என் ரசனையின் உயர‌த்துக்குமான இடைவெளி காரணமாக (பெரும்பாலும் முன்னது உயர்ந்தாய் இருந்திருக்கக்கூடும் என்றே படுகிறது) எப்போதும் அவை எனக்கு முழுமையான உவப்பை அளித்ததில்லை. இம்முறை இரண்டுமே ஏதோவொரு சூட்சமப்புள்ளியில் சந்தித்திருப்பதாகவே உணர்கிறேன். (இடையில் வரும் திரைப்படப்பாடல்களின் பட்டியல் மட்டும் தேவைக் கதிகமாய் நீண்டு விட்டதாய்த் தோன்றினாலும்) மிக எளிமையானதாய், மனதுக்கு நெருக்கமானதாய், காட்சி அனுபவமாய்,  அதனாலேயே அருமையானதாய் அமைந்து விட்டதொரு கவிதை. நன்று - நன்றாயிருப்பதை 'நன்று' என்ற வார்த்தையைக் கொண்டல்லாமல் வேறெப்படிச் சொல்வது! சந்தோஷங்களும் வாழ்த்துக்களும்.

Comments

உங்கள் தளத்தில் என் எழுத்தைப்பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பின் சொற்கள் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, மிக்க நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி