கோலம் - சில கேள்விகள்

ஞாநி அவர்களுக்கு,

முதலில் வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் (உங்கள் பாஷையில் சொல்வதென்றால் "இந்த வாரப் பூச்செண்டு") - தற்போது தமிழ் சினிமா ரசனையில் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லதொரு மாற்றத்தை சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கான நல்ல படங்களை மக்களின் பணத்திலேயே எடுத்துக் காட்டலாம் என்று நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கும் உங்கள் துணிச்சலுக்கு. என் முந்தைய இடுகையான "கோலம், c/o ஞாநி" யில் குறிப்பிட்டது போல், இந்த‌ இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ப‌ற்றி எனக்கு சில விமர்சனங்களும் கேள்விகளும் இருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை ரூ.500/- என்பது பெரிய தொகை இல்லை என்ற போதிலும், நிறையப் பேருக்கு அப்ப‌டித்தான் தோன்றுகிறது. நான் பேசிய / கேட்ட வரை, அதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவும் படுகிறது. அதாவது ஒரு படத்தின் டிவிடிக்கு இந்த விலை மிகவும் அதிகம் என்பது தான் - சாதாரண பொது மக்களை விடுங்கள்; நல்ல படம் வர வேண்டும் என்ற என்பவர்களிடம் கூட - பரவலான கருத்தாக இருக்கிற‌து. அப்படி நினைப்பவர்களின் எண்ணிக்கை பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கையை விட கணிசமான அளவு அதிகமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைக் கருத்தில் கொண்டு நோக்குங்கால், ஒரு நபருக்கான தொகையை ரூ.500/- என்பதிலிருந்து ரூ.100/- என்பதாக வைத்திருந்தால் இன்னும் நிறையப்பேர் இந்த முயற்சிக்கு உதவியிருப்பார்கள் எனத் தோன்றுகிறது (சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால், இப்போது கிடைத்திருக்கும் மொத்த வசூல் தொகைக்கு எந்த பங்கமும் வந்திருக்காது; இன்னும் சொல்லப்போனால், அதிகமாகியிருக்கக்கூட‌ வாய்ப்பிருக்கிறது). அதைத் த‌விர நிறையப்பேர் சேர்வது என்பது எல்லா வகையிலும் அமைப்புக்கு பலம் சேர்க்கக் கூடிய விஷயமே. அதை இழந்திருக்கிறீர்கள்.

இப்போது கேள்விகள். நான் பணம் கொடுத்துவிட்டேன், அதனால் என்ன வேண்டுமென்றாலும் கேட்பேன் என்ற அசட்டையில் எழுப்பப்படுவதல்ல இக்கேள்விகள். அடிப்படையில், ரூ.500/- கொடுத்த / கொடுக்க நினைத்த அனைவருமே இந்தக் கேள்விகள் அனைத்தையும் அல்லது இதன் subsetஐ கேட்க நினைத்திருக்கக்கூடும். இதில் சிலவற்றுக்கு பதில் இல்லாத காரணத்தாலேயே பலர் இம்முயற்சியை முற்றாக நிராகரித்திருக்கக்கூடும். அந்தப் பின்னணியில், இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏற்று இவற்றுக்கான பதிலையும் தருவீர்கள் என நம்புகிறேன்.
  1. கோலம் இயக்கத்துக்கென - அதன் நோக்கம் மற்றும் தேவையை எடுத்துச்சொல்ல - ஒரு பிரத்யேக வலைதளம் தொடங்கப்படாதது ஏன்?
  2. இது போன்ற பணம் வசூலிக்கும் விஷயங்களில் நேரடியாய்த் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் / மின்-அஞ்சல் தரப்படாதது ஏன்?
  3. படமாக்கப்படப் போவதாக கோலம் இயக்கத்தால் குறிப்பிடும் நல்ல சிறுகதைகள், நாவல்கள், படைப்புகள் என்பவை எவை?
  4. படத்தை இய‌க்கப்போவது யார்? பிற நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? மேற்பார்வை / நிர்வாகம் செய்யப்போவது யார்?
  5. 'கோலம்' இயக்கத்தின் office-bearers (அதாவது செயலாளர், பொருளாளர், இன்ன பிற மேலாண்மை பொறுப்பாளிகள்) யார்?
  6. மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்கள் எடுக்கப்போவதாய் சொல்கிறீர்கள். ஒரு படத்துக்கான உத்தேச பட்ஜெட் எவ்வளவு?
  7. முழு நீள படம் என்றால் எத்தனை நேரம் ஓடக்கூடியது? ஆங்கிலப்படம் போல் 90 நிமிடங்களா அல்லது தமிழ் போல் 150 முதல் 180 நிமிடங்களா?
  8. ஆயிரம் பேர் கொடுக்கும் பணத்தில் எடுக்கப்படுகிறது என்றால் கிட்டதட்ட ஒவ்வொருவ‌ருமே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான், சரியா?
  9. அப்படியென்றால், படம் எடுத்து முடிந்த பின் அது யாருக்கு சட்டப்படி சொந்தமாகிறது? இது குறித்த தெளிவான தகவல்கள் தேவை.
  10. டிவிடி அனுப்புவதுடன் வேலை முடிகிறதா, அல்லது திரையரங்கு, தொலைக்காட்சி, வலைமனைகளில் வெளியிடும் எண்ணம் உண்டா?
  11. ஆமென்றால், இசைதகடு விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் போன்ற சங்கதிகள் யாரைச் சேர்கிறது?
  12. எடுக்கப்படும் படங்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவீர்களா? எனில் பரிசு தொகையாக கிடைப்பின் என்ன செய்யப்படும்?
  13. வசூலான தொகை, படத்திற்கு செலவு, பிற செலவுகள் போன்றவை குறித்த‌ தகவல்கள் பணம் போட்டவர்களுடன் பகிரப்படுமா?
  14. மேலிருக்கும் சிலவற்றிற்கு, இப்போது பதில் தெரியாத / சொல்ல முடியாத சூழலிருக்கலாம். Tentative ஆக எப்போது பதில் எதிர்பார்க்கலாம்?
  15. ஆனால் மற்ற கேள்விகள் யாவும் மிக மிக அடிப்படையானவை. அவற்றைக் கூட இதுவரை தெளிவுபடுத்தாமல் இருப்பது ஏன்?
இக்கேள்விகளில் சிலவற்றுக்கு எனக்கே பதில் தெரியும் (உதாரணத்துக்கு, படத்திற்கு எந்த வகையிலாவது லாபம் வரும் பட்சத்தில் அதை மீண்டும் 'கோலம்' இயக்கத்திலேயே போட்டு அடுத்த‌ படம் எடுக்கத்தான் பயன்படும் என்பது தெரிந்தது தான்) என்றாலும், அந்த கேள்விகள் பலர் மனதில் இருக்கும் போது, இயக்கத்தின் 'மே/பா'வான நீஙகளே உங்கள் வாயால் அதை விளக்கிச் சொல்லிவிட்டால், எல்லோருக்கும் தெளிவானதொரு புரிதல் ஏற்படும். இது சம்மந்தப்பட்ட ஏதாவது முக்கியக் கேள்விகளை நான் தவற விட்டிருந்தால், அவற்றையும் குறிப்பிட்டு பதிலிறுக்க‌ வேண்டுகிறேன்.

நன்றி,

சி.சரவணகார்த்திகேயன்,
www.writercsk.com

Comments

Balaji K said…
I encourage good movies and the Kolam initiative. But, when the world's best movies (non-Tamil) are available as DVDs varying from Rs.100 to Rs.500 (for combined two or three parts of the movie), we need to think twice about spending Rs.500 for a movie.
MSK said…
Have u seen 'Kolam charity' website..
I think this week only they have started this site.

www.kolamcinema.org
@MSK
thanks for the link.
i haven't seen this.
will update in my site shortly.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்