சாருவுக்கு நன்றி

"சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா" பற்றி Rediffல் மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா கொடுத்த‌ நேர்காணலின் நான்கு பகுதிகளையும் மொழிபெயர்த்து தனித்தனி பதிவுகளாகப் போட்டிருந்தேன். அவற்றின் சுட்டிகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் கொடுத்தாலும் கொடுத்தார், எனது தளத்தை தரிசிப்பவர்களின் கணக்கு எக்கச்சக்கமாய் எகிறி விட்டது.

இந்த ஒரு வார கால‌த்தின் நேரடி மற்றும் மறைமுக அனுபவங்களின் வாயிலாக, அவரது வலைதளம் மற்றும் வாசகர் குழாம் பற்றி நான் கண்டடைந்த‌ அவதானிப்புகள் சில‌ இங்கே (இவை முழுக்க முழுக்க எனது கவனிப்பின் கூர்மையை ஆதாரமாகக் கொண்டவை - இவற்றோடு சாருவோ மற்றவர்களோ முழுமையாகவோ பகுதியாகவோ முரண்படலாம்):
  • பாராட்டவோ திட்டவோ எதோ ஒரு காரணத்துக்காக சாருவின் தளத்திற்கு நிறையப்பேர் விஜயம் செய்கிறார்கள்.
  • மாறுபட்ட கருத்திருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா தமிழ் பதிவர்களுமே அவர் தளத்தை வாசிக்கிறார்கள்.
  • குறிப்பாய் அவரை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் தினமும் தவறாது அவரது வலைதளத்தில் ஆஜராகி விடுகிறார்கள்.
  • அடிப்படையில் அவருடைய எழுத்திலிருக்கும் ஒருவித‌ வன்முறை எல்லோருக்கும் வசீகரமாயிருக்கிறது.
  • தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருப்பது அவர் புனைவுகள் பேசும் "காமத்தின் அரசியல்".
  • அவருடைய கதைகளின் சம்பவங்களில் புனைவு எது நிஜம் எது என்பதைத் தீவிரமாக‌ ஆராய்ச்சி செய்கிறார்கள்.
  • அது பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு கடைசியாய் அவரை அச்சிட முடியாத வார்த்தையில் அர்ச்சிக்கிறார்கள்.
  • நிதி முதலிய அவர் சொந்தப்பிரச்சனைகளைப் பற்றி அவதூறு சொல்லும் syndrome பரவலாய்க் காணப்படுகிறது.
  • அவர் மீதான தனிமனிதத்தாக்குதல் மிக‌ நுட்பமாய்ச் செய்யப்படுகிறது; மிக‌ விருப்பமாய்ப் படிக்கப்படுகிறது.
  • அதற்கு ஆள் சேர்க்க நாசூக்காய் முயற்சி செய்கிறார்கள்; சேரவில்லை எனில் நீங்களும் target ஆவீர்கள்.
அவர் சுட்டியை வெளியிட்ட முதல் நாள், அவரது தளத்தைப் பார்ப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் என் தளத்திற்கு வந்தார்கள் என வைத்துக்கொண்டால் கூட தினமும் சராசரியாய் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் (அதாவது Absolute Unique Visitors) அவரது வலைதளத்தை பார்வையிடுகிறார்கள். தீவிர‌ தமிழ் இலக்கியச்சூழலில் இது எனக்கு மிகப்பெரிய விஷயமாகப்படுகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு சராசரியாய் இருபத்தைந்து பேர் தான் என் தளத்தைப் பார்வையிடுவார்கள் (படிப்பார்கள் என சொல்வதற்கில்லை!); தற்போது அந்த எண்ணிக்கை சுலபமாய் நூறைத் தொட்டிருக்கிறது (அவர் refer செய்த புதிதில் வந்த தினசரி 500 பேர் என்பதன் ripple effect சலசலப்புக்கள் அடங்கிய‌ பின்னர் எடுக்கப்பட்ட நிதானமான எண் இது)‌.

கிட்டத்தட்ட நான்கு மடங்கு எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. நான் வலையில் எழுதத் துவங்கிய ஒரு வருடத்தில் பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையும் அவர் refer செய்த ஒரு வாரத்தில் பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்று தான். அதனால் சில எதிர்மறைகளும் உண்டு என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

மொத்தத்தில் அவருக்காய் இந்த மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டது மாறுபட்ட ஓர் அனுபவமாய் இருந்தது. அதன் வாயிலாக நான் நிறைய நல்ல வாசகர்களை அடைந்திருப்பதாகத் தோன்றுகிறது (பார்க்கலாம்; போகப்போகத் தான் உண்மை நிலவரம் தெரியும்). இது எனக்கு உற்சாகத்தையும், உவகையையும் அளிக்கிறது. Anyway, that was a good season.

என் பயணத்தின் குறிப்பிடத்தகுந்த திருப்புமுனையாக இதைக் கருதுகிறேன்.

பின்குறிப்புக‌ள்:
  1. நிறையத் திட்டுகிறார்கள் (கவனிக்கவும் - விமர்சனம் அல்ல; திட்டு). "ஒத்தைக்கு ஒத்தை வர்றியா?" என்று முஷ்டி மடக்குகிறார்கள். நான் எழுத்தாளன் மட்டுமே; மல்யுத்த வீரன் அல்ல என்பதை புரிந்து கொள்ள‌ மறுக்கிறார்கள். சாரு போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளருக்கு இயல்பாய் அமையும் mass reachன் பக்கவிளைவு இது.
  2. தமிழனின் தேசிய குணமான பொறாமை தான் எல்லாவற்றிற்கும் ஆதார ஸ்ருதி ("நாமே எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கிறோம்; இதையெல்லாம் எழுத இவன் யார்? எழுதிய இவனை சும்மா விட்டு விடுவோமா என்ன?"). ஆனால் இதுவும் நல்லது தான் - வில்லன் இருந்தால் தானே கூத்து களை கட்டும்.
  3. நானும் சாருவோடு பல கருத்துக்களில் முரண்படுபவன். அதன் காரணமாக‌ பொதுவிலும் தனிமையிலும் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வருபவன் - அவையாவும் அவரது படைப்பு மற்றும் ஆளுமை சார்ந்தவை. மற்றபடி சங்கம் வைத்து personal attackல் ஈடுபடுவதிலெல்லாம் ஆர்வமில்லை. எனக்கு வேலை வெட்டி இருக்கிறது.
  4. அப்படி நான் முரண்பட்ட போதிலும், அடிப்படையில் ஒரு படைப்பாளியாக என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர் அவர் என்பதை எப்போதும் மறுக்கவியலாது. இந்தக் காரணத்தால் தான் தொடர்ந்து நான் அவரை வாசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இது சுவாரசியமான விதிகள் கொண்ட‌ ஒரு விளையாட்டு - A War Game.
  5. நிறையப்பேர் (என் மனைவி உட்பட) சாரு பற்றிய என் பதிவுகளைப் படித்து நான் அவருக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திணறுகிறார்கள். கடினமான கேள்வி தான்; மறைந்த‌ எழுத்தாளர் சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" என்ற புத்த‌கத்தின் கடைசி வரியில் இதற்கான பதில் ஒளிந்திருக்கிறது.
  6. இப்போது இந்தப்பதிவு எழுதுவதற்கு என்ன அவசியம் வந்தது என்று உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம். அவர்கள் தயவு கூர்ந்து, சிரமம் பார்க்காமல் அய்யன் திருவள்ளுவர் அருளிய‌ திருக்குறளின் பதினொன்றாவது அதிகாரத்தின் பத்து குறள்களையும் வாசிக்கவும்; அல்லது குறைந்தபட்சம் இப்பதிவின் தலைப்பை.
[Source: Google Analytics]

Comments

Ashok D said…
சாரு-க்கு நன்றி சொன்ன உங்களூக்கு நன்றி
Unknown said…
சாருவின் பிரமாண்டம் உங்களையும் உள்ளே அழைக்கிறது.

சாரு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் அதன் விளைவுகளைதான் நீங்களும் வாசகர்களும் உணர்வது, ஒரு ஜெயகாந்தன் யுகம் போல சாருவின் யுகம் இப்போது உருவாகிகொண்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்
உண்மை! சாருவால் தான் உங்களைப் படிக்க முடிந்தது.
சாரு தவிர்க்கப்பட வேண்டியவரல்ல! கடக்கப்பட வேண்டியவர்.
அவர் பக்கம் நான் தினமும் செல்வேன். ஆனால் எல்லாம் படிப்பதில்லை.ஏனேனில் சில எனக்குத் தேவையில்லை.
சில விடயங்களில் சிலதைச் சொல்ல இவராவது இருக்கிறாரே என்று மகிழ்சியாக இருக்கும்.
இந்தியா, தமிழ் பற்றிய இவர் கணிப்புக்கள் நிச்சயம் இவர் எண்ணத்தில் மாறும்; எப்படி இறை;சாயி பாபா பற்றிய கருத்துக்களில் மாற்றினாரோ..
அப்படி சற்றுக் காலம் கடக்கலாம்...அப்போ தமிழிசை; ஜேசுதாஸ்;இளையராஜா பற்றி மாற்றுவார்.
அது வரை பொறுப்போம்.அப்படி மாற்றாவிடினும் அதனால் நிச்சயம் இவர்களுக்கு இழப்பில்லை.

//ஜெயகாந்தன் யுகம் போல சாருவின் யுகம் இப்போது உருவாகிகொண்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்//

அவர் பாணியும்....இவர் பாணியும் ஒன்றல்ல!!அவருக்கு நிறையப் பெண் வாசகர்கள்!
இதை இவரே ஒத்துக் கொள்ளமாட்டார்.அவர் யுகம் அச்சுப் பத்திரிகைகள்;சஞ்சிகைகளால் உருவானது.
இவரே கூறுகிறார். தன்னை ஏறெடுத்துப் பார்ப்பார் இல்லை. அத்துடன் சாருவின் தளம் கூட இலவசம். அதை கட்டணமாக்கினால் இதே எண்ணிக்கை வாசகர்கள் வருவார்களா??
ஆனால் சாரு தமிழ் இலக்கிய உலகுக்கு தேவையானவர்.
Minnerinchaveli said…
sru nevithetha is the only one writer, wrire in tamil like pedro juan gutierrez(spanish)read his , dirty havana triology, and tropical animal then you know, saru is a world class writer, but in tamilnadu he dont get that kind of fame, sad to say.
vallarasu, sweden
சரவணன் தங்களின் நன்றியுணர்ச்சியை நான் பாரட்ட விரும்பு அதே வேளையில் தங்களின் தளத்தில் இருக்கும் கருத்துச் செறிவு வாய்ந்த கட்டுரைகளுக்கு இணையாகுமா சாருவின் தளம் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.

வல்லரசு வேறு சாருவை வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர் என்று சொல்கிறார்.

இது எப்படி இருக்கிறது என்று தெரியுமா ? குருடர்கள் யானையைத் தடவி கருத்துச் சொல்லுவது போல இருக்கிறது. கடுமையான விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேறு வழி இல்லை.

தற்போதைய பிளாக்கர்ஸ் எழுதும் அனுபவக் கதைகளை விட சாருவின் புனைவுக் கதைகள் எந்த வகையில் சிறந்தது என்று சொல்ல முடியுமா?

இலக்கியமென்பது அந்த அனுபவக்கதைகள் மட்டும் தான் என்றால் ஒத்துகொள்கிறேன்.

சாருவின் சில விமர்சனக் கட்டுரைகள் அவரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது என்பது தான் சரியானதாகுமே தவிர அவை அனைத்தும் உண்மையான ஒன்றாக இருக்கும் என்று எப்படிக் கருத முடியும். அவரது அனுபவ எழுத்துக்களிடையே கவனித்துப் பார்த்தோமானால் அவரின் கருத்துக்களை அவரே மறுதலித்த இடங்கள் அனேகம் உண்டு. ஆக அவரின் கட்டுரைகள் சந்தர்ப்பவாதமுடையவை என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாருவை தமிழ் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர் என்று எந்தக் காரணத்தை வைத்து ஏற்றுக் கொள்ள இயலுமென்று அவரின் வாசகர்கள் எழுதினால் பரவாயில்லை.
@ பாலகிருஷ்ணா

உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலை தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்:
http://www.writercsk.com/2009/04/blog-post_02.html
Unknown said…
ஜெயகாந்தன் நிறைய பெண் வாசகர்களை கொண்டிருந்தது உண்மைதான், ஆனால் அன்று இல்லாத சாடிலைட் தொலைக்காட்சிகள் எல்லாம் பெண்களை எளிதாக புத்தகங்கள் பக்கம் திருப்பின, அதில் ஜெகே யின் அற்புதமான எழுத்துகள் வெற்றி பெற்றன, இன்று அப்படி ஒரு பரப்பான எழுத்தாளர் என்று ஒருவரை கூட மக்கள் அலைபாய்ந்து படிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும், புத்தகம் படிக்கும் பழக்கத்தை சீரியல்கள் சுத்தமாக அழிக்கத்தொடங்கிவிட்டன, அப்படி பட்ட நிலையில் சாருவின் எழுத்து மிகுந்த விவாதத்தை உண்டாக்குவது யாராலும் மறுக்கமுடியாத உண்மை, தமிலிஷ் அல்லது ஏதாவது ஒரு திரட்டியில் சாரு என்ற தலைப்பில் ஒரு பதிவு கொடுத்து பாருங்கள் அப்போது புரியும், இலக்கியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு உடை அணிந்து வருகிறது, ஜேகே யின் பாணி இன்று வெல்லுமா, ஆகையால் அது இலக்கியம் இல்லாது போகுமா?
அது போல் இது சாருவின் யுகமாக இருக்கலாம். ஒரு மாற்றத்தின் அடையாளம் அது, அது நல்லதா கெட்டதா என்பது காலம் தீர்மானிக்கும், அந்த கலை உங்களை கட்டிப்போடுகிறாதா? அது தான் அதன் வெற்றி.
தமிழரசன் said…
டியர் சரவணன,
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஜால்ராக்கள் பற்றி எழுதியதற்கு நன்றி.

பெண் புனைப்பெயரில் இவரது எழுத்தை ஒருவர் விமர்சித்து எழுதப்போய், அவரைப் “படுக்க” அழைத்ததாக சொல்லுவதில் எனக்கு அதிர்ச்சி. ”இதிலென்ன ஆச்சர்யம்? நான் தான் ஸ்த்ரீ லோலன் என்று என் வெப் சைட்டிலேயே போட்டிருக்கிறெனே?” என்கிறார். வாசகியாக அவர் எழுத்தை மட்டும் விமர்சித்தால் செல்போனைக் கொடுத்து “படுக்க” அழைப்பது என்ன விளையாட்டா? ஸ்திரீ லோலன் என்று போட்டுக்கொண்டால், வாசகியைப் படுக்க அழைக்கலாமா, என்ன?? நான் இருக்கும் அமெரிக்காவாக இருந்தால் இந்நேரம் ‘உள்ளே’ போயிருப்பார்

இந்தக்கடிதம் அவரின் பச்சோந்தித்தனத்தைப் பற்றியது மட்டும் அல்ல. ஜால்ராக்களைத் துணிந்து அடையாளம் காட்டியத்ற்காக உங்களுக்கு நன்றி சொல்லவே. அரசியல், சினிமா ஜால்ராக்களை விட, இலக்கிய ஜால்ராக்கள் ஒருபடி கீழே தான் என்பேன். முதல் இரண்டு ரகத்திற்கும் தான் படிப்பில்லை, அறிவில்லை, நல்ல exposure இல்லை, அதற்கான வசதி இல்லை எனலாம். இலக்கியம் செய்கிறேன் பேர்வழி என்று திரிபவர்களின் ஜால்ராக்களுக்கு இவை எல்லாமே இருக்கிறதே? எனக்கென்னவோ, இந்த ஜால்ரா விஷயம் தமிழர்களைப் பீடித்திருக்கும் ஒரு பீடை என்றுதான் தோன்றுகிறது. சினிமா ரசிகர்களை விடுங்கள் -அவர்கள் போஸ்டரில் தான் தங்கள் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். நடிகர்கள் நேரிடையாக அந்தப் பாச மழையில் நனைவதில்லை. அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் கில்லாடிகள். குறிப்பாக நம் மு.க.-- மேடை முழுக்க பேச்சாளர்களை வைத்துக்கொண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் வானளாவப் புகழ்ந்து பேசுவதை அசராமல் உட்கார்ந்து ரசிக்கும் ’மன வலிமை’ மு.க.விற்கு மட்டுமே உண்டு. கூசாதா என்ன? இவர் ஜால்ராக்கள் இன்னும் ஒருபடி மேலே என்பேன்.

இவர் வெப்சைட்டைப் பார்த்தால் உடனே தெரிவது -நீ மாமேதை, தமிழ் இலக்கியத்தைச் சீர்திருத்த வந்த படைப்பாளி, வைரம், எழுத்துச் சூரியன், அது, இது என்று புகழாரம் சூட்டும் கடிதம் மட்டுமே வெளியிடுகிறார். இவரை விமர்சித்து யாருமே எழுதுவது இல்லையா, என்ன?

உங்கள் வலைப்பூவின் பின்னூட்டங்களைப் பார்க்கையில் இவர் மீதான அந்தரங்க, ஆபாசத் தாக்குதல்கள் எதையும் நான் காணவில்லை. உண்மையில், இவர் வெப் சைட்டில்தான் இவர் எழுதாத அந்தரங்கம் இல்லை. இவர் தாயும் தங்கையும் விபச்சாரியாக இருந்தார்கள் என்பதை எழுதியது இவரே. இவர் மனைவி செக்ஸுக்கு லாயக்கில்லை என்பதை வெப்சைட்டில் எழுதியது இவர் தான். டென் டௌனிங்கில் குடித்துவிட்டு, டப்ளினில் முன்பின் தெரியாத இளம்பெண்ணுடன் ஆடியதாக “சொல்லிக்கொள்வது” அந்தரங்கம் இல்லாமல் வேறென்ன? ஸ்திரீ லோலன் என்று தம்படித்துக்கொள்வதே அந்தரங்க விஷயம் தானே? சீனாவிலிருந்து கடிதம் எழுதிய வாசகரிடம் “சீனப் பெண்களுக்கு யோxx சிறியதாமே?” என்கிறார்! அது இலக்கியப் பரிவர்த்தனையா என்ன?

ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிக் கருத்துக் கூறிய சுஜாதா, இவரைப் பற்றியோ, இவர் ரசிகர்கள் புல்லரிக்கும் இவர் படைப்புகள் பற்றியோ, வாய் திறக்கவில்லை என்பதைக் கவனிக்கவும். இவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்தும் இவரிடம் நட்பு பாராட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

கடைசியாக ஒன்று: வலைப்பூவும், வலைத்தளமும் இன்றைய காலத்தின் ’மோடி மஸ்தான்’ வித்தை போன்ற விஷயங்கள். அதன் விசிட்டர்களின் எண்ணிக்கை வலைமனையின் தரத்தைக் குறிப்பது அல்ல -மோடி மஸ்தான் கூட்டம் அவன் வித்தையைக் கலை ஆக்குவதில்லை என்பது போல. எனக்கு நேரமும் இருந்து, கொஞ்சம் ‘தமாஷ்’ தேவைப்பட்டால் இலவசமாக தெருவோரம் வேடிக்கை பார்க்கும் கூட்டத்துடன் சேர்ந்து மோடிமஸ்தான் வித்தையை நானும் எட்டிப்பார்க்கவே செய்வேன்! இந்த நவீன மோடிமஸ்தான் கூட்டத்தில் புல்லரித்து, இவர்தான் மூழ்கிக்கொண்டிருக்கிறார். உங்கள் போன்ற இளம் எழுத்தாளர்கள் இந்த மயக்கங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். நன்றி. வணக்கம்.

தமிழரசன்.
(பாஸ்டனிலிருந்து)
அலெக்ஸ் said…
என்னாங்கடா ஒரேயடியாப் பிணாத்தறீங்க...? ’சாநி’ மாதிரி ஸைக்கோவிற்கு தமிழ்நாட்டில் இத்தனை ஜால்ராக்களா....?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி