பெங்களூர் புக் ப்ரம்மா: ஜெயமோகன் உரை
(ஆகஸ்ட் 9, 2024 - பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய நிகழ்வின் முதல் நாளில் ஜெயமோகன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம் (அவர் தளத்தில் தந்துள்ளபடி - https://www.jeyamohan.in/203929/)
*
அனைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.
இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தேசம். பெர்னாட் ஷா சொன்னார், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்று. நாம் ஐந்து மொழிகளால் இணைக்கப்பட்ட ஒரு தேசம். இந்த தென்னக இலக்கியவிழாவை முன்னெடுக்கும் புக்பிரம்மா அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.
என் மொழியின் இலக்கியத்தின் போக்குகளைப்பற்றி சில சொற்கள் சொல்லும்படி சொன்னார்கள். தமிழில் இரண்டு போக்குகளின் கீழிறக்கமும், இரண்டு போக்குகளின் மேலெழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வேன். பின்நவீனத்துவம் கீழிறங்கிவிட்டது. இன்று எந்த குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரும் தன்னை பின்நவீனத்துவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. தலித் இலக்கியம் பின்னகர்ந்து வருகிறது. தலித் இலக்கிய முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளே தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தலாகாது என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இரு போக்குகள் மேலெழுகின்றன. ஒன்று, மையப்போக்கு. அதை நான் நுண்மையின் அழகியல் என்பேன். இன்றைய இளையதலைமுறை நவீன உலகில் வாழ்கிறது. அதற்கு வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடில்லை. அரசியலார்வகங்ளும் பெரிதாக இல்லை. அதிநவீன நுகர்வுக்கலாச்சாரமும், பெருகிவரும் உயர்தொழில்நுட்ப உலகமும்தான் அதன் பிரச்சினை. அது உருவாக்கும் உறவுச்சிக்கல்கள், ஆளுமைச்சிக்கல்களே அவர்களின் பேசுபொருட்கள்.
அவர்கள் அதற்கான அழகியலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது பல அடுக்குகள் கொண்டது அல்ல. சிக்கலானதும் அல்ல. ஆனால் மிகமிக நுட்பமான கூறுமுறையும், பூடகமான சந்தர்ப்பங்களும் கொண்டது. மிக உள்ளடங்கியது. கடிகாரம் பழுதுபார்ப்பவரின் கருவி போல என்று உவமை சொல்லலாம். மிகச்சிறிய, மிகநுணுக்கமான ஒன்று. அந்த அழகியலை முன்வைக்கும் இளையபடைப்பாளிகள் என்று சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சி.சரவணகார்த்திகேயன், அனோஜன் பாலகிருஷ்ணன், சுஷீல்குமார் என பலரை குறிப்பிடமுடியும்.
என் முன்னோடிகளான படைப்பாளிகளாகிய சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் கற்பனாவாதத்திற்கு நவீன இலக்கியத்தில் இடமில்லை என்னும் கொள்கை கொண்டிருந்தனர். கற்பனாவாதத்தின் அடிப்படையான உயர் இலட்சியவாதம் மீது கொண்ட அவநம்பிக்கையால்தான் நவீன இலக்கியம் உருவாகியது என்றனர். ஆனால் அவர்களின் சமகாலத்திலேயே மாபெரும் இலட்சியவாதியும் கற்பனாவாதியுமான வைக்கம் முகமது பஷீர் எழுதிக்கொண்டிருந்தார்.
இன்று சில படைப்பாளிகள் பஷீரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். உயர் இலட்சியவாதமின்றி உயர் இலக்கியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆன்மிகமான அடிப்படைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆகவே அவர்களின் அழகியல் கற்பனாவாதம் சார்ந்ததாக உள்ளது. அதை நவீன கற்பனாவாதம் என்பேன். இன்னும் குறிப்பாக ஆன்மிகக் கற்பனாவாதம் என்பேன். அந்த வகை எழுத்துக்களை அஜிதன் எழுதி வருகிறார். இன்னொருவகை கற்பனாவாதம் அகரமுதல்வன் எழுதுவது. அகரமுதல்வன் இந்தியாவில் குடியேறிய ஈழத்தவர். தன் நாட்டின், தன் பண்பாட்டின் எழுச்சியை அவர் கனவு காண்கிறார். ஆகவே இயல்பாகவே கற்பனாவாதம் அவரில் திரள்கிறது.
இந்த இரு போக்குகளையும் ஒன்றோடொன்று மோதி முன்னகரும் முரணியக்கமாகச் சொல்லலாமா என்று தெரியவில்லை. அதை எதிர்காலம்தான் சொல்லவேண்டும். நன்றி.
***
Comments