எழுத்தாளன் அரசியல் பேசலாமா?
ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு உதாரணமாக உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்கள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு...