நட்சத்திரமும் பட்டாம்பூச்சிகளும்
ப்ரியங்கா மோகனை முதன் முதலாக அக்டோபர் 10ம் தேதிதான் பார்த்தேன். டாக்டர் வெளியான இரண்டாம் நாள் மாலை சுமார் 7:15 மணிக்கு பிவிஆர் வேகா சிட்டி அரங்கில். So Baby பாடலில் டாக்டர் வருண் முதன்முதலாக பத்மினியை பார்க்கும் போதுதான் ரைட்டர் சிஎஸ்கேவும் முதன் முதலாக ப்ரியங்காவைப் பார்க்கிறான். முகத்தில் ஒளியும் நிழலும் விளையாட்டு நிகழ்த்தும் காவியச் சாயை நிரம்பிய நடனக் காட்சி! "தீக்குச்சி கிழித்த மின்னல்... / முகிலின் வெடிமருந்து பிளந்த இமைக்கணம்..." என்ற பிரமிள் வரிகளைத்தான் அந்தக் கணத்தை விவரிக்கத் துணைக்கழைக்க வேண்டியிருக்கிறது!
படம் முடிந்தவுடன் போட்ட முதல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: "கோட்டை எல்லாம் அழிங்கடா. முதல்ல இருந்து போடனும். The name is ப்ரியங்கா அருள்மோகன்." அங்கேதான் எல்லாம் தொடங்கியது. வெறும் நாற்பது நாட்களில் இத்தனை பிடித்துப் போவது ஆச்சரியம்தான். இத்தனைக்கும் அனு ஸிதாராவை ஏற்கெனவே உபாசனை செய்து கொண்டிருந்த சூழல். எனக்கு வெவ்வேறு காலகட்டத்தில் உலகின் உச்ச அழகிகளாகத் தோன்றியோர் எனப் பார்த்தால் நால்வரைச் சொல்ல முடிகிறது: ஐஸ்வர்யா ராய் (1994 - 2007), தீபிகா படுகோன் (2008 - 2018), அனு ஸிதாரா (2019 - ). இப்போது ப்ரியங்கா மோகன் (2021 - ).
ப்ரியங்கா மோகனிடம் பல நடிகைகளின் சாயல் இருக்கிறது. எனக்குத் தோன்றியவர்கள்: 1) ரெஜினா கஸாண்ட்ரா 2) அஞ்சலி 3) சுனைனா 4) கீர்த்தி சுரேஷ் 5) மஹிமா நம்பியார் 6) ப்ரியா பவானிசங்கர் 7) இந்துஜா ரவிச்சந்திரன் 8) அனுஷ்கா 9) ஸ்ரீதிவ்யா 10) மஞ்சிமா மோகன் 11) அப்புறம் last but not the least -அனு ஸிதாரா. (சொல்லப் போனால் ப்ரியங்கா மோகன் என்பதே அனு ஸிதாராவின் அம்சம்தான். இந்த விதந்தோதல்கள் யாவும் மறைமுகமாக அவருக்கே போய்ச் சேருகிறது! விஷ்ணுவை மட்டுமே வணங்கும் விசுவாச வைணவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் இஷ்டமானவனாக இருப்பதில்லையா!)
இத்தனை ரசித்ததில் கண்டறிந்தது ப்ரியங்கா மோகனுக்கு மூக்கின் நுனியில் ஒரு ரகசிய மச்சம் இருக்கிறது. முதல் பார்வைக்கும், மறுபார்வைக்கும், வெறும் பார்வைக்கும் சிக்காமல் குறிப்பிட்ட பாகையில் தலை சாய்க்கையில் மட்டுமே இயற்கை அருளால் சாத்தியமாகும் திவ்யதரிசனம்!
அவருடையது ஒரு முதிர்ந்த சிறுமியின் உடல்மொழி. பதின்மத்தில் நமக்கெல்லாம் கற்பனையில் ஒரு காதலி இருந்திருப்பாளே, அப்பெண் நம் மனதிலிருந்து உயிர் பெற்றெழுந்து வந்து நம் முன் நின்றால், அதுதான் ப்ரியங்கா மோகன். சற்று முன் மலர்ந்த பூவில், விடியலின் சிறுபனித் துளிகள் சில படர்ந்தது போல அத்தனை புதியதான, பரிசுத்தமான முகம்! எவ்வளவு பார்த்தாலும் தீராத, திகட்டாத வதனம்!
இதற்கான என் நன்றியுணர்வின் காரணமான சிறுஎதிர்வினைதான் ஃபேஸ்புக்கில் தினம் போடும் #TheMostBeautifulGirl தொடர். இன்று பலரும் அதில் பங்கேற்கிறார்கள். அது அழகைக் கொண்டாடும் ஒரு திருவிழா. ஊர் கூடித் தேரிழுத்தல். தேரில் இருப்பது ப்ரியங்கா மோகன். தேர் தமிழ்ப் புத்தகங்கள்!
அவர் கழுத்தின் பக்கவாட்டுக்கும் காதுக்கும் இடையேயான பிரதேசத்தில் மூன்று பட்டாம்பூச்சிகளை டாட்டூ குத்தியிருக்கிறார். அவர் இதுகாறும் படங்களில் ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் அப்படியான ஒரு சிறகடிப்புத்தனம் இருக்கிறது. தனித்துவமான நட்சத்திரமான அவரை அந்த அழகிய டாட்டூவுடன் காணும் போது வண்ணத்துப் பூச்சிகளின் மூன்று குணங்கள் நினைவு வருகின்றன - அழகு, நளினம், மென்மை. பல பண்டைய கலாசாரங்களிலும் வண்ணத்துப் பூச்சி என்பது ஆன்மாவின் குறியீடு. அவரது கோடிக்கணக்கான விசுவாச ரசிகர்களின் ஆன்மா அவரிடத்தே பறப்பதாகவும் கருதலாம்.
ப்ரியங்கா மோகன் இன்று 27 வயது பூர்த்தி செய்கிறார். அன்னை கன்னடம், தகப்பன் தமிழ். எங்களூர் பெங்களூரில் பொறியியல் படித்திருக்கிறார். அவரது அழகின் தகுதிக்கேற்ற உயரத்தை, புகழை இன்னும் அடையவில்லை என்றே சொல்வேன். சமூக வலைதளங்களில் அவர் மிகக் குறைச்சலாகப் புழங்குவதும், ஃபோட்டோஷூட்கள் அதிகம் நிகழ்த்தாததும்தான் காரணம் எனத் தோன்றுகிறது.
விரைந்து அவற்றை நிவர்த்தி செய்து வெல்ல வாழ்த்துக்கள். அழகும் வளமும் பல்கிப் பெருகட்டும்!
https://www.instagram.com/priyankaamohanofficial
https://twitter.com/priyankaamohan*
நானறிந்த வரை ப்ரியங்காவின் முதல் ஒளி ஊடக அறிமுகம் சென்னையில் இருக்கும் MANAM என்ற ஜவுளிக் கடையின் தொலைக்காட்சி விளம்பரம்தான். செப்டெம்பர் 2018ல் வெளியாகி இருக்கிறது. அதிலேயே பிரமாதமாக இருக்கிறார்! அதில் வரும் வசனம் ஒன்று: "கல்யாணப் பொண்ணு ராணி மாதிரி இருக்க வேணாம்?" (இதில் முன்னாள் பாரதி கண்ணம்மா ரோஷினியும் ஓரமாக வருகிறார்.)
ப்ரியங்கா மோகன் நடித்த முதல் படம் Ondh Kathe Hellaவில் (கன்னடம்) மார்ச் 2019ல் வெளியானது. கிரிஷ் ஜி என்ற புதியவர் இயக்கியது. அமானுஷ்யப் படம். சின்ன பட்ஜெட். எல்லோருமே புதுமுகங்கள். ப்ரியங்காவுக்கு எந்தத் தனித்துவமும் இல்லாத பாத்திரம். அழகு, முகபாவம் என எதற்கும் வாய்ப்பற்ற படம். மொத்தமாகவே இரண்டு காஸ்ட்யூம்கள். சொந்தக் குரலும் இல்லை. ஆவியை அண்ணாவென விளித்துக் கெஞ்சும் இறுதிக் காட்சியின் ஒரு துளி தவிர படத்தில் வேறெங்கும் ப்ரியங்கா மோகனின் ஆளுமை வெளிப்படவில்லை. அவரே மறக்க விரும்பும் படமாக இது இருக்கலாம். நாமும் மறப்போம்.
ப்ரியங்காவின் இரண்டாவது படமாகவும் தெலுங்கில் முதல் படமாகவும் அமைந்தது Nani's Gang Leader. 2019 செப்டெம்பரில் வெளியானது. யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் எடுத்தது. நானி நாயகன். பெரும்பாலும் சுவாரஸ்யமான படமே. பழிவாங்கும் கதை. டாக்டர் போன்ற கதைச் சூழல்தான். எனவே இதிலும் அழகு டாலாகவே ப்ரியங்கா வருகிறார். இதிலும் மக்கு போல் காட்டுகிறார்கள். ஒரு காட்சியில் வீடியோ கட்டுப்பாட்டு அறையில் நானியிடம் டாடி - மம்மி எனச் சொல்லி ஒரு முகபாவம் காட்டுவார் - இணையற்ற கலாப்பூர்வ உச்சம்! அதே போல் நானியிடம் சட்டை பொத்தானை நெகிழ்த்தச் சொல்லும் காட்சியில் அவர் பார்க்கும் வசீகரப் பார்வை, அடடா!
இந்தப் படத்திற்கு இசை அநிருத். Ninnu Chuse Anandamlo என்ற ரொமான்ஸ் montage பாடல் இது.
அடுத்தது Hoyna Hoyna பாடல். அன்பிற்கான montage என்றாலும் இதிலும் ரொமான்ஸ் உண்டு.
கடைசியாக Ra Ra என்கிற எழுச்சிப் பாடல். (இதில் குறைந்த நேரமே ப்ரியங்கா வருவார்.)
ப்ரியங்கா நடிப்பில் வெளியான மூன்றாவது படம் Sreekaram (தெலுங்கு). மார்ச் 2021ல் வெளியானது. கிஷோர் பி என்ற புதியவர் இயக்கி இருக்கிறார். நாயகன் சர்வானந்த் (எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தவர்). பசுமை விகடன் பாணி விவசாயக் கதை. சுமாரான படம். ப்ரியங்கா நடித்ததில் இதில்தான் screen time அதிகம். அதனாலேயே கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது. வழமை போலவே மெழுகு பொம்மை! மிகச் சிறிய பருக்களும் அழகூட்டவே செய்கின்றன. மற்ற படங்கள் போல் இதில் அவர் அழகான முட்டாள் அல்ல. ஆனால் அதை விடக் கொடுமையாக ப்ரியங்கா சர்வானந்தைக் காதலிக்கக் கோரி பின்னால் நச்சரித்துக் கொண்டு சுற்றுவதுதான். படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
இதில் வரும் ரொமான்ஸ் பாடல் Bhalegundi Baalaa. ஒரு முரட்டுக் குழந்தையின் புன்னகை மாதிரி அழகு!
Hey Abbayi என்பது இதில் வரும் stalking பாடல். ப்ரியங்காவை அதீத உற்சாகத்துடன் காட்டிய பாடல்.
இப்படத்தின் எழுச்சிப் பாடல் இது (Title Track). இடையிடையே சில காட்சிகளில் மட்டும் வருவார்.
அடுத்தது சென்ற மாதத்தில் டாக்டர் வெளியானது. சிவகார்த்திகேயன் நாயகன். நெல்சன் திலீப்குமார் இயக்கம். டார்க் ஹ்யூமர் வகை குற்றவியல் கதை. ப்ரியங்கா மோகனை மிக ரசிக்க முடிந்த படம். (ஆனால் அவசியமின்றி அவரது பாத்திரம் முட்டாள் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.) ப்ரியங்கா மோகனின் தனித்துவம் டாக்டர் படத்தை நான்காம் முறை பார்க்கும் போதும் முதல் முறை பார்த்தது போன்ற அதே பரவசத்தையும் புல்லரிப்பையும் ஏற்படுதியதுதான். அவரது இருப்பால் ஒரு Fairy Tale-ஐ லாஜிக் பார்க்காமல் ரசிப்பது போல் டாக்டர் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது.
இப்படத்தின் So Baby பாடல் அழகை அணு அணுவாய் ஆராதிக்கும் கலாரசனை! தமிழ் சினிமாவில் இத்தனை அழகான கதாநாயகி அறிமுகப் பாடல் வேறேதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அழகாய் இருப்பதாகச் சொன்னதும் பொதுவாக இளித்து அந்தப் புகழ்ச்சியை சற்றே மங்கச் செய்வதே பெண்டிர் வழக்கு. ஆனால் இப்பாடலில் சிவகார்த்திகேயன் "But you look beautiful" என்றதும் "Thank you" என்று சொல்லி விட்டு அரைக் கணம் இடைவெளி விட்டு மெல்லத் தலையசைக்கிறார் ப்ரியங்கா மோகன். உடனே அப்புகழ்ச்சி போதாமல் போன குற்ற உணர்வில் நம் மனம் துணுக்குறுகிறது.
அடுத்து பெரிய ஹிட் அடித்த செல்லம்மா பாடல். எனக்குப் பாடல் பெரிய உவப்பில்லை என்றாலும் அழகு டாலுக்காகப் பார்க்கலாம். குழந்தைமையும் குமரித்தன்மையும் பிணையும் சூட்சமப் புள்ளி.
அடுத்து டாக்டர் படப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் இதே செல்லம்மா பாடலின்
வீடியோவை முதல் முறை பார்க்கும் போது ப்ரியங்காவின் முகபாவங்கள். எனக்கு அசல் பாடலின் வீடியோவை விடவும் இதுவே மிகப் பிடித்தது. இதில் புன்னகை செய்வது போல் பாவனை செய்து விட்டு அதை முழுக்க நிறைவேற்றாமல் ஏமாற்றுவார் - லேசாக இதழ்கள் விரிப்பது போல் வந்து போக்குக் காட்டி விட்டு மலராத ஒரு சன்னப் பூவின் கள்ளத்தனக் கவித்துவம் போல! (மொபைல் எனில் portrait-ல் பார்க்கவும்.)
நெஞ்சமே நெஞ்சமே பாடல் படத்தில் குழந்தையைத் தேடும் montage பாடலாக வருகிறது. (ஆனால் வரிகளைக் கொண்டு பார்க்கும் போது அது பிரிவுத் துயர் அல்லது காதல் தோல்விப் பாடல்தான். அனேகமாக சிவகார்த்திகேயனை ப்ரியங்கா மறுத்த பின் வரும் பாடலாக இருந்திருக்கக்கூடும்.) இதன் சிறப்பு அழுகையிலும் அழகாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்தியிருப்பார் ப்ரியங்கா!
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டாம் என ப்ரியங்கா மோகன் மறுத்துப் பேசும் காட்சிகள். அவரது உச்சப் பங்களிப்பு என அதையே சொல்லத் தோன்றுகிறது. அதன் ஒரு பகுதி வீடியோ மட்டும் இதில். (ப்ரியங்கா மோகன் இப்படிச் சொன்னால் இறந்த ஒருவன் உயிரோடு எழுந்து வரக்கூடும்.)
இந்தத் தருணத்தில் பிகே வர்மா, கீர்த்தன் பூஜாரி, மிரொஸ்லா கூபா ப்ரோஸெக், ஜெ யுவராஜ், விஜய் கார்த்திக் கண்ணன், கேஎம் பாஸ்கரன், ஆர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி - ஒளிப்பதிவாளர்கள் கண்கள் வழியேதான் நாம் ப்ரியங்கா மோகனின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
*
அடுத்து ப்ரியங்கா மோகன் நடிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படம் (இயக்கம் சிபி சக்ரவர்த்தி), சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் (இயக்கம் பாண்டிராஜ்) ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அடுத்து விஜய், அஜீத், ஷங்கர், மணி ரத்னம் என மேலேறுவார் என்பதில் ஐயமில்லை.
அது போக டிக்டாக் என்றொரு பழைய படத்தைத் தூசு தட்டுகிறார்கள் போலிருக்கிறது. மதன குமார் என்பவர் இயக்கம். (அதில் ப்ரியங்கா சற்றே தாராளமாக நடித்திருப்பதாகவும் இப்போது டாக்டர் தந்த வெளிச்சத்தால் அதை வெளியிட முயற்சிப்பதாகவும் ப்ரியங்கா தடுக்கப் போராடுவதாகவும் கிசுகிசு. ஆனால் ட்ரெய்லரை வைத்துப் பார்த்தால் ப்ரியங்கா ஏதும் ஆபாசமாக நடித்திருப்பது போல் எனக்குத் தெரியவில்லை; இன்னொரு நடிகைதான் அவ்வாறு வருகிறார். இவர்கள் சும்மா ஊகத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, எனக்கு ஒன்று புரியவில்லை. என்ன மாதிரி நடித்தாலும் நமது மெழுகு டாலை ஒருவர் தவறாகவே பார்க்க முடியாது. அப்படி இருக்க எந்தப் படம் வந்தால் என்ன!)
அவரது அப்பா அருள்மோகனுக்கும் நமக்குப் பெயர் தெரியாத அம்மாவுக்கும் அன்பு. அதிதியாக, ப்ரியாவாக, சைத்ராவாக, பத்மினியாக இன்னும் நூறு பாத்திரங்களாக இவ்வையத்தை உய்விக்க வாழ்த்துக்கள்! பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கட்டும். வானை முட்டி நட்சத்திரம் தொடட்டும்.***
Comments
எந்த நாவலை படமாகினாலும், எழுத்தை வாசிக்கும் போது தோண்றும் கற்பணைகளுக்கு எந்த டைரக்டர்களாலும் ஈடு குடுத்து படமாக்க முடியாது என்பதை, மீண்டும் ஒருமுறை உங்க எழுத்து பதிவு பண்ணிடுச்சு ரைட்டரே. நல்ல இலக்கியத்தின் ஒரு கடமை, அதுவரை காணாத, ரசிக்காத ஒன்றை காண வைப்பதும், புரிய வைப்பதும், ரசிக்க வைப்பதும் என நம்புகிறேன். அந்த வகைமையில் இந்த பதிவு ஒரு செவ்விலக்கியம்.
#TheMostBeautifulTamilGirl க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.