நித்ய தண்டனை
வைரமுத்து இல்லையென்றால் நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே மாட்டேன். என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து. அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவர்மீது எனக்கு உண்டு. இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் அதன் நிமித்தம் அவர் இலக்கிய இடத்தை உயர்த்தியோ, அவரது பாலியல் அத்துமீறல்களை ஆதரித்தோ ஒருபோதும் பேச மாட்டேன். எழுத்தில் வைரமுத்துவின் இடம் என்ன? வைரமுத்து மிகச் சிறந்த திரைப் பாடலாசிரியர். இந்திய அளவில் கூட இதுவரை உருவான சினிமா பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக இருக்கலாம், ஆனால் எனக்கு பன்மொழிப் பாண்டித்யம் இல்லாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அளவில் எடுத்தால் ஆகச் சிறந்த பாடலாசிரியர் அவரே - கண்ணதாசனும், வாலியும் அவருக்குப் பின்தான். வெகுஜனங்களை வாசகர்களாகக் கொண்ட புதுக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் அவரே தமிழில் முதன்மையானவர். தமிழில் பரப்பியப் புதுக்கவிதை எழுதிய அனேகம் பேரை வாசித்திருக்கிறேன் (குறைந்தது ஒரு நூலேனும்) என்ற தகுதியில் இதை உறுதியாகச் சொல்வேன். போலவே 'வில்லோடு வா நிலவே' குறிப்பிடத்தகுந்த வெகுஜன நாவல். இதைத் தாண்டி நவீன இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு எந...