இரண்டாம் காதல் [சிறுகதை]


‘தேவடியா…’

அவளைப் பார்த்ததும் சாவித்ரி மனதில் எழுந்த முதல்ச் சொல் அது தான். முழுக்க ஜீரணிக்காத மாமிசத்துணுக்கு வயிற்றின் அமிலத்தோடு எதுக்களித்து தொண்டைக்குக் காரமாய் ஏறுவது போல் அந்த வார்த்தையை உதடுகளுக்கு இடையே உருட்டினாள்.


“டோக்கன் நம்பர் 36…”

செவிலியின் குரல் சாவித்ரியின் உச்சாடனத்தை அறுத்தது. சாவித்ரி தன் உள்ளங்கை வியர்வையில் பொதித்திருந்த டோக்கனைப் பார்த்தாள். 39. அதற்குள் 36ம் எண்காரி வயிற்றைச் சாய்த்துக் கொண்டு எழுந்து மருத்துவர் அறை நோக்கி மெல்லப் பூனை நடை பயின்றாள். கைகளில் கோப்புடன் அவன் - கணவனாக இருக்க வேண்டும் - அவளை மிகுந்த நாடகீயத்துடன் வழிநடத்தினான். இன்னும் எப்படியும் கால் மணி நேரமாவது ஆகும். பெருமூச்செறிந்து அவளை மீண்டும் கவனிக்கத் துவங்கினாள்.

அவளுடன் வந்திருந்த ஒருவனுடன் மிகையாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு அவளது குழந்தைப் பருவத்தை வசீகரமாய் நினைவூட்டக்கூடியதாய் இருந்தது. சந்தேகமில்லாமல் பேரழகி. என்னை விடவும். இந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பதின்மூன்றாவது தளத்தின் Obstetrics and Gynecology Department-ல் அமர்ந்து, நின்று, நடந்து கொண்டிருக்கும் எவளை விடவும். அப்படி இல்லையெனில் மருதனை என்னிடமிருந்து அவ்வளவு சுலபமாய்ப் பறித்துச் சென்றிருக்க முடியுமா!

சாவித்ரி மேடிட்டிருந்த வயிற்றின் மீது துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள்.

ஐந்தாம் மாதம் நடக்கிறது. ரொட்டீன் செக்கப். டாக்டர் சொன்னால் ஸ்கேனோ, ரத்தப் பரிசோதனையோ எடுக்க வேண்டி இருக்கும். சென்ற முறை வந்தபோது க்ளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் எழுதினாள். கீர்த்திக்குக் கோடை விடுமுறை தொடங்கி விட்டது என்பதால் மருதனை வீட்டிலிருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு – “கீர்த்திக்கு மத்தியானம் நேரத்துக்கு லஞ்ச் கொடுக்கனும். கூட இருந்து பார்க்கனும். இல்லன்னா வெஜிடபிள் சாப்பிடாம ஏமாத்திடுவான். டிவி பார்த்துட்டு, செல்ஃபோனை நோண்டிட்டு கோட்டை விட்டுடாதீங்க.” - அவள் நான்ஸியுடன் கிளம்பி வந்திருந்தாள்.

நான்ஸி ஆறாம் வகுப்பிலிருந்து சினேகிதி. ஒன்றாக வேலை கிடைத்து பெங்களூர் வந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே காலத்தில் கல்யாணமானவர்கள், அதுவும் ஒரே மாதிரி இருவருமே சாதிக்குள்ளேயே காதலித்துக் கல்யாணம், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பிள்ளை பெற்றவர்கள். அதுவும் ஒரே மாதிரியாக சிஸேரியன். ஒரே வித்தியாசம் நான்ஸி மட்டும் புத்திசாலித்தனமாய் அப்போதே கருத்தடை அறுவை செய்து கொண்டாள் - “ஒவ்வொரு தடவையும் பயந்துட்டே பண்ண முடியுமாடி?”.

“ஏன் காண்டம் போட வேண்டியது தானே? என்று கேட்டால் "புருஷனை ஒரு ரப்பர் கிட்ட விட்டுக் கொடுக்க முடியாது” என்பாள். தலையிலடித்துக் கொள்வாள் சாவித்ரி.

நான்ஸியும் இப்போது அவளைக் கவனித்து விட்டாள். சாவித்ரியிடம் திரும்பிக் கண்ணைக் காட்டினாள். அவளது காதருகே சென்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள்.

“அவ வந்திருக்கா பாரு. மருதன் ஃப்ரெண்ட்.”

ஃப்ரெண்ட் என்று சொன்னதில் ஒரு கேலி இருந்ததோ! சரியாய்த் தெரியவில்லை.

“ம்ம்ம்.”

“அவளும் ப்ரெக்ணன்ட்டா?”

திரும்பி மீண்டும் அவளைப் பார்த்தாள் சாவித்ரி. வயிற்றைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. இங்கே பிள்ளைத்தாய்ச்சிக்காரிகள் மட்டுமா வருகிறார்கள்! மாத விலக்கில் பிரச்சனை உடையோர், பிறப்புறுப்பில் தொற்றுக் கொண்டோர், நாளச் சுரப்பிகளில் சிக்கல்கள் இருப்போர், கர்ப்பம் உண்டாவதில் தடையுள்ளோர் என விதவிதமான காரணங்களுக்காக இத்துறைக்கு வைத்தியம் பார்க்க வருகிறார்கள்.

இந்நினைப்பு தான் எத்தனை தூரம் வக்கிரமானது என்றும் அவளுக்குத் தோன்றியது. அது அவள் மீதான வெறுப்பின் கசப்பிலிருந்து உருவாவது. என் இயல்பு இதுவல்ல. ஆனால் எத்தனை மனிதர்கள் நம்மை நம் இயல்போடே வாழ அனுமதிக்கிறார்கள்!

ஆனால் இவள் மீது மட்டும் தான் தவறா என்ன? மருதன் ஒத்துழைக்காமல் இது நடந்திருக்குமா? அம்மா எப்போதுமே சொல்வது போல் ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது தான். ஆனால் நூலொன்றும் அத்தனை அப்பாவி இல்லையே!

முதல் முறையாக மருதனுக்கும் இவளுக்கும் வரம்பு மீறிய ஓர் உறவு உண்டெனத் தெரிய வந்த கணம் அடிவயிற்றில் உண்டான அதிர்ச்சி இன்னமும் நினைவிருக்கிறது. இப்போது கரு சுமந்து கொண்டிருக்கும் இந்நேரத்திலும் மெல்லிசாய் அந்த மின்சாரம் உணர முடிகிறது. நம்பிக்கைத் துரோகத்தின் கருகும் மணத்தை நாசி உறிஞ்சியதை, கழிவிரக்கத்தின் எரியும் ருசியை நாவு சுவைத்ததை எளிதில் மறக்கவியலுமா!

எப்போதும் மருதனின் செலபேசியைத் தொடாதவள் அன்றைக்குத் தன் செல்பேசியில் பிரச்சனை என்பதால் அவசரமாக தன் மின்னஞ்லைப் பார்க்கும் பதற்றத்தில் அதை எடுத்துத் திறந்த போது அவன் கழிவறையில் இருந்தான். தலை நீட்டிய மெசஞ்சரில் ப்ரியா முத்தமிட்டதைப் பார்த்துப் புரிந்து கொள்ள கொஞ்சம் சமயம் பிடித்தது.

கால் கழுவி, கை கழுவி, கால் மிதியில் பாதம் துடைத்து, பூத்துவாலையில் கை துடைத்து, மருதன் திரும்பி வந்து சாவித்ரி கையில் இருந்த செல்பேசி பார்த்துப் பதற்றமாகி, அதை வந்து பிடுங்கும் முன், உடலில் இருக்கும் புண்ணை நோண்டிப் பார்ப்பது போல் முந்தைய இரு நாள் உரையாடல் முழுக்கப் படித்து முடித்திருந்தாள்.

இருவரும் அது பற்றி பேசிக் கொள்ளவில்லை. அது பற்றி மட்டுமல்ல, எது பற்றியும் பிறகு பேசிக் கொள்ளவில்லை. இரண்டரை வயது கீர்த்தியின் அர்த்தமற்ற சொற்கள் தவிர்த்து அந்த வீட்டில் மௌனமே வியாபித்தது. சிரிப்பு முற்றிலும் நின்று போனது.

“டோக்கன் நம்பர் 37…”

யாரோ பதின்மச் சிறுமி தன் அம்மாவின் கரம் பற்றி டாக்டர் அறைக்கு நடந்தாள்.

முழுதாய் மூன்று மாதங்கள் இந்த ஆட்டம் தொடர்ந்தது. பிறகு நான்ஸியிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னாள் சாவித்ரி. அது வரை தன் அம்மாவிடம் கூட இதைச் சொல்லவில்லை. அதையே அவமானமாகக் கருதினாள். அல்லது “வீட்டில் பார்க்கறது வேண்டாம்னு நீயே புருஷன் கட்டினியே, இப்ப நல்லா அனுபவி” என்ற குத்தல் பேச்சுக்கு அஞ்சினாள். அம்மாவோ மகளோ பெண்ணுக்குப் பெண் போட்டி தான், அவர்களுக்குள்ளான பிரியமெல்லாம் பாசாங்கே என அவளுக்குத் தோன்றும்.

சில நாட்கள் குளியலறையில் அழுதாள். சில தினங்கள் மருதனை மானசீகமாகத் திட்டினாள். ஒரு நாள் சமைக்கவில்லை. (மருதன் ஸ்ரீ கிருஷ்ணா கஃபேயில் பார்சல் உணவு வாங்கி வந்து வைத்துப் போனான்.) இன்னொரு நாள் கீர்த்தியை அழைத்துக் கொண்டு ஃபோரம் மால் ஷாப்பிங் போய் விட்டு வேண்டுமென்றே மிகத் தாமதமாக வந்தாள். மருதன் வந்து பார்த்து விட்டுப் பதறட்டும் என்ற எதிர்பார்ப்பில். ஆனால் அன்று அவன் அவளை விடத் தாமதமாக அலுவலகத்திலிருந்து திரும்பி அவளைக் கடுப்பாக்கினான். ஒரு நாள் தற்கொலை எண்ணம் வந்தது. யோசித்து விஷ பாட்டிலே சாத்வீகமான முறை எனத் தீர்மானித்தாள். கீர்த்தியின் சத்தம் அதைக் கலைத்தது.

மருதன் யாரிடமும் பிரச்சனையைச் சொன்னானா எனத் தெரியவில்லை. இன்னமும் அவன் ப்ரியாவுடன் பழகிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. ஒரு நாள் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். இதற்கு முன் அவளறிந்து அவன் குடித்ததே இல்லை. நடு இரவில் கழிவறை சென்று வாந்தியெடுத்து, அத்தனை போதையிலும் அவனே சுத்தம் செய்தான். அந்த மூன்று மாதங்களில் அன்று தான் அவன் மீது பாவமாய் இருந்தது அவளுக்கு. மறுநாள் காலை தான் நான்ஸிக்கு அழைத்தாள்.

“அந்த ப்ரியா யாருன்னு தெரிஞ்சுதா?”

“அவரோட ஆஃபீஸ்ல கூட வேலை செய்யறவ. இவர் அவளுக்கு மெண்டர்.”

“அழகா இருக்காளா?”

“ஓரளவு.”

“அப்ப நிறையவே அழகுன்னு தெரியுது. புருஷனுக்குப் பொண்டாட்டி தவிர எல்லாப் பொம்பளையும் அழகு தான். பொண்டாட்டிக்குப் புருஷன் அழகுனு சொல்ற எல்லாப் பொம்பளையும் சுமார்தான். ஓரளவுன்னு சொல்றேன்னா அழகியாத்தான் இருக்கனும்.”

“போடி, நீயும் உன் மயிரு லாஜிக்கும்.”

“சரி சரி. கோவிச்சுக்காதே. மேலே சொல்லு.”

“மேலே என்ன சொல்றது. வயறு எரியுது.”

“ம். ஃபிசிகல் ரிலேசன்ஷிப் இருக்கா?”

“எனக்குச் சொல்லத் தெரியல. ஆனா இருந்தாலும் இல்லனாலும் என்ன வித்தியாசம்? மனசுல இன்னொருத்தி வந்ததே மோசம் இல்லையா? அதையே தாங்க முடியலயே.”

“அது சரி தான்டி. நாளைக்கு அவ அதை வெச்சு பிரச்சனை பண்ணக்கூடாதுல்ல. அதுக்காகத் தான் கேட்டேன். Intercourse is an important milestone in a relationship. தவிர…”

“தவிர?”

“மருதன் இதுல எவ்வளவு தூரம் இதில் இறங்கி இருக்கார்னும் புரிஞ்சுக்க.”

“ம்.”

“ஸாரிடி. ஆனா எல்லாம் யோசிச்சு தானே ஆகனும்.”

“நடந்திருக்கும்னு தான் தோனுது.”

“ஓ! எப்படிச் சொல்ற?”

“அந்த சாட். அதிலிருந்த உரிமை. பச்சையான நிர்வாணப் பேச்சு. வெட்கங்கெட்டவ. உண்மையைச் சொன்னா நான் கூட இதுவரை அவர் கிட்ட அப்படிப் பேசினதில்ல.”

“அது தான் காரணமோ என்னவோ!”

சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் நான்ஸி என்பதை சாவித்ரியால் உணர முடிந்தது. கண்களின் ஓரமாய் நீர் திரண்டு நின்றது. மெல்ல விசும்பினாள்.

“ஏய், ஸாரி ஸாரி ஸாரி. வழக்கமாப் பேசறாப்லயே பேசிட்டேன். அழாதே. இரு.”

“…”

“ஈவினிங் நான் வீட்டுக்கு வர்றேன். பேசலாம்.”

“வீட்ல வேண்டாம். மருதன் வந்திடுவார். டின்னர்க்கு எங்கயாவது மீட் பண்ணலாம்.”

“ஃபைன். கோஸ்ட் டூ கோஸ்ட்?”

“ம்.”

மாலை அந்த உணவகத்தின் மந்த விளக்கொளியில் கீ சிக்கன் ரோஸ்ட் கடித்தபடி பேசினார்கள். கை கழுவி வந்தமர்ந்து பில்லுக்குக் கடனட்டை நீட்டி, ரசீதில் சாவித்ரி கையெழுத்திட்ட போது பிர்ச் குச்சியில் பல் குத்திக் கொண்டே நான்ஸி சொன்னாள் -

“நான் பேசறேன் மருதன் கிட்ட. அப்புறம் அவசியப்பட்டா அந்த ப்ரியா கிட்டயும்.”

“ம்.”

“ஒண்ணு புரிஞ்சுக்க. சண்டைப் போடறதோ, பேசாம இருக்கறதோ இதுக்குத் தீர்வு இல்ல. சொல்லப் போனா அது ரெண்டுமே நிலைமையை மோசம் ஆக்கும். சண்டைப் போட்டா ஆமா அப்படித்தான், என்ன செய்வேன்னு கேட்டுட்டு செய்வாங்க. பேசாம விட்டா நிம்மதியா இந்த வேலையைத் தொடர்வாங்க. அதனால் பேசினாத்தான் தீர்வு.”

“…”

“என்ன சொல்றே?”

“ஏன் அவ கிட்ட போனான்னு எனக்குக் கேட்கனும். எதில் குறை வெச்சேன்?”

“தப்புடி. சிலதெல்லாம் கடக்கனும். வெச்சுக் குடையக் கூடாது. அது நல்லதில்ல.”

“ம்.”

“உனக்குத் தேவை சொல்யூஷனா ஆன்சரா? பதிலை வெச்சு என்ன பண்ணுவே?”

“ம்.”

“எல்லோரும் தப்புப் பண்ணிட்டுத் தான் இருக்கோம். அளவு தான் வேற வேற. இப்ப உன்னையே எடுப்போம். மருதன் தவிர யாரையும் மனசுல நினைச்சதே இல்லையா நீ? மனசைத் தொட்டுச் சொல்லு. அப்ப டீனேஜ் டைம்ல யாரை நினைச்சு விரல்…”

“ஏய் அதுவும் இதுவும் ஒண்ணா?”

“ஒண்ணு இல்ல. மருதன் எல்லை மீறிட்டார் தான். ஆனா எல்லாமே நாம போடற கோடு தான்னு சொல்றேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோடு. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கோடு. நமக்கு ஒரு கோடு, அடுத்தவருக்கு வேற கோடு.”

“ம்.”

“ஸோ, அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். இதிலிருந்து எப்படி வெளிய வர்றதுன்னு. இன்னும் சொல்லப் போனா நமக்கு வேற ஏதும் சாய்ஸும் இல்ல.”

“…”

“And I believe that divorce is definitely not one of the options that you are considering right now.”

அதிர்ச்சியாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள் சாவித்ரி.

“ஏய்…. நோ. இல்லவே இல்ல.”

அவளது கையைப் பற்றிக் கொண்டு சொன்னாள் –

“கவலைப்படாதே. சரி பண்ணிடலாம்.”

“சரி.”

“வர்ற சாட்டர்டே டின்னர்க்கு உங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்றேன் எங்க வீட்டுக்கு. மருதனுக்கு நானே ஃபோன் அடிச்சிடறேன். வாங்க. நாம பேசிக்கலாம்.”

சனியிரவு நான்ஸி வீட்டில் குழந்தைகள் இருவரும் விளையாட்டெனும் பெயரில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த பின்னணி ஒலியில் நான்ஸி மருதனிடம் மெல்லப் பேசினாள். முதலில் இறுக்கமாக இருந்தவனை எதையெதையோ பேசி சுற்றி வளைத்து, பனிக்கட்டியுடைத்து விஷயத்துக்குக் கூட்டி வர வேண்டியிருந்தது.

மூன்று விஷயங்கள் நான்ஸிக்குப் புரிந்தன. ஒன்று தற்போதைய சூழல் அவனுக்கும் பிடிக்கவில்லை, அதனால் அதிலிருந்து சீக்கிரம் வெளிவர விரும்பினான். இரண்டு அவன் ஒருபோதும் சாவித்ரியைப் பிரியும் எண்ணத்தில் இல்லை. ஆனால் அதற்குக் குழந்தை கீர்த்தி மட்டும் காரணமல்ல. மூன்று ப்ரியாவை நீங்குவதில் அவனுக்குத் தயக்கங்கள் இருந்தன. அது அவள் மீதான மயக்கம் கிடையாது. மாறாக அது ஒரு துரோகமாகி விடக்கூடாதென அஞ்சினான். சரியாய்ச் சொன்னால் அவளே விரும்பி நீங்கினால் அல்லது அதுவாக நடந்தால் ஏற்பதில் அவனுக்குச் சிக்கல் கிடையாது.

நான்ஸி நிதானமாகத் திட்டமிட்டாள். பின் வந்த நாட்களில் ப்ரியாவைச் சந்தித்துப் பேசினாள். மீண்டும் மருதனிடம் பேசினாள். பிறகு இருவரையும் வைத்துப் பேசினாள்.

சில வாரங்கள் இதில் கரைந்தன. கவனமாய் இந்தச் சந்திப்புகள் எவற்றிலுமே அவள் சாவித்ரியைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருமுறை அவள் தானும் வருவதாய்த் தயங்கிச் சொன்ன போது உறுதியாய்ச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டாள் நான்ஸி.

“இல்லைடி. அது சரி வராது. எல்லாத்தையும் கெடுத்துடும். பொறுமையா இரு.”

ப்ரியாவிடம் பேசியதிலிருந்து அவளை அணுகியது மருதன் தான் என்பது புரிந்தது. அவள் அலுவலகத்திலேயே ஒருவனைக் காதலித்துப் பிறகு பிணக்காகி முறிவு நேர்ந்திருந்தது. மருதன் அவளது முன்னாள் மெண்டர் என்பதால் இந்தச் சிக்கலைப் பகிர்ந்திருக்கிறாள். மருதனும் அவளது தனிமையைப் போக்கப் பேசத் தொடங்கி இருக்கிறான். ஆறுதல் சொல்லி இருக்கிறான். வலிகள், வடுக்கள், வருத்தம், இத்யாதி.

பிறகு இயல்பாகவே அவ்வுறவு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறது. ப்ரியாவுக்கு அவன் திருமணமானவன் என்பதும் குழந்தை ஒன்றுண்டு என்பதும் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை அவள் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. அதை இதோடு குழப்பிக் கொள்ளவில்லை. அதே சமயம் ஒருபோதும் மருதன் அவளிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கவில்லை. அவளும் திருமணம் பற்றி ஏதும் அவனிடம் கேட்டதில்லை. அது பற்றிய எதிர்பார்ப்பும் அவளுக்கு இல்லை.

ஆனால் அதே சமயம் அவளுக்கு மருதன் மீது மிகுந்த பிரியம் இருந்தது. நான்ஸி அவளிடம் மிக நட்பாகவே வேண்டுகோள் வைத்தாள். அது ப்ரியாவுக்கு ஒரு மிரட்டலாகத் தொனித்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனங்காட்டினாள்.

“நான் சுத்தி வளைக்காம நேராவே சொல்றேன் ப்ரியா. நீங்க ரொம்ப நாள் இப்படி இருக்க முடியாதில்லையா? மருதனுக்குக் குடும்பம் இருக்கு. முக்கியமாக் குழந்தை. இதில் உங்க ரெண்டு பேரு தப்பும் இல்லை. இயல்பா நிகழ்ந்துட்ட ஒரு விஷயம் தான்ங்கறது எனக்கு நல்லாப் புரியுது. ஆனா நீ எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணியாகனும். அது மருதனா இருக்க முடியாது. ஏன்னா ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ் இருக்கு. சேதாரம் நிறைய இருக்கும். அதில் பெருசா யாருக்கும் லாபமில்ல. மாறா நீ இன்னொருத்தரைத் தேடலாம். கல்யாணம் செஞ்சுக்கலாம். இந்த ரிலேசன்ஷிப்லயே இருந்தா அப்படிச் செய்ய உனக்குத் தோனாது. ஒரு கட்டத்தில் உனக்கு அப்படித் தோனும் போது வயசு அதிகமாகி இருக்கும். ஆள் கிடைக்காமல் போகலாம். யோசி.”

“ஆனா…”

“அவசரமில்ல. யோசி. மருதன் கிட்டயும் பேசு. வேணும்னா என் கிட்டயும்.”

ஒரு வாரம் கழித்து செல்பேசியில் நான்ஸிக்கு அழைப்பு வந்தது. பேசியது ப்ரியா அல்ல; மருதனும் அல்ல. சாவித்ரி. அவள் குரலில் ஓர் உற்சாகம் நிரம்பி வழிந்தது.

“ஏய் நான்ஸி, என்ன மேஜிக் பண்ணினே?”

“என்னாச்சுடி?”

“மருதன் நேத்து நைட் என்கிட்ட பேசினார். He bought a gift. மியா மோதிரம் ஒண்ணு. ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். And then, we had sex.”

“அது பத்தி வேண்டாம். பேசினதை மட்டும் சொல்லு. மோதிரம் ஃபோட்டோ அனுப்பு.”

“அடச்சீ. பொறுக்கி நாயே.”

“சரி, சரி, சிலுத்துக்காதே. சொல்லுடி.”

“ப்ரியா கூட ப்ரேக்கப் பண்ணிட்டதா சொன்னார். அவளும் புரிஞ்சு ஒப்புக்கிட்டதாவும்.”

“குட்.”

“ஆனா அந்த ஆஃபீஸ்லயே இருந்தா தினம் அவளைப் பார்க்க வேண்டி இருக்கும். அது சரிப்படாது அப்படிங்கறதால வேலை மாறிடறதாவும் சொன்னார். நேத்து என் முன்னாலயே லேப்டாப்ல லாகின் பண்ணி நௌக்ரி ப்ரொஃபைல் அப்டேச் செஞ்சார்.”

“வெரி குட்.”

“இது நிஜமா, நிரந்தரமானு எல்லாம் தெரியல. ஆனா இப்ப சந்தோஷமா இருக்கேன்.”

“வெரி வெரி குட்.”

“ஆனா எப்படி திடீர் ஞானோதயம்னு தெரியல. அதான் உன் கிட்ட கேட்கலாம்னு.”

“பேட்.”

“என்ன பேட்? அப்புறம் ஏன் போனார்னும்.”

“அக்லி.”

“என்னடி?”

“நான் தான் சொன்னேனே. கேள்விகள் எல்லாம் கேட்காதே. தாண்டி வா. இனி நடக்க வேண்டியதைப் பாரு. அவ்ளோ தான் சொல்வேன். இல்லனா இன்னும் மோசமாகும்”

“அப்ப இஷ்டத்துக்குப் போவான், இஷ்டத்துக்கு திரும்புவான். ஏன் போனேன்னும் கேட்கக் கூடாது, ஏன் வந்தேன்னும் கேட்கக் கூடாதா? Bull-shit. என்ன கொம்பா?”

“இல்ல. இதைச் செஞ்சது நீயா இருந்தாலும் மருதன் கிட்ட இதே தான் சொல்வேன்.”

“நான் ஏன் இப்படி ஊர் மேயப் போறேன்? நான் ஒண்ணும் ப்ரியா இல்ல.”

“அப்படியெல்லாம் சொல்லிக்க முடியாது. எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கு.”

“அடுத்தவ புருஷனை ஆட்டையப் போடறதுல என்ன புடலங்காய் நியாயம் இருக்கு.”

“இருக்கு. மனுஷன் தப்பு செய்வான் என்பது தான் அந்த நியாயம்.”

“போடி.”

“ட்ரூ, ஸ்வீட் ஹார்ட்.”

“சரி, இனிமேல் நான் அவர்கிட்ட ஏதாவது ஸ்பெஷலா நடந்துக்கனுமா?”

“இல்லவே இல்ல. இயல்பா இரு. அதுவே போதும்.”

“அப்படித்தானே இருந்தேன். ஆனாலும் வெளியே போனாரே.”

“ஆமா. நீ ஸ்பெஷலா இருந்தாலும் போவார். அது தான் ஆம்பிளை குணம். போறதுக்கு வலுவான காரணம் எல்லாம் தேவையில்ல. ஏதாவது காரணம் உருவாக்கிக்குவாங்க. குடிக்கறதுக்குச் சந்தர்ப்பம் தேடற மாதிரி தான் இதுவும்.”

“என்னடி குழப்பற?”

“அப்படினா ஒரு அட்வைஸ் சொல்றேன். அனுபவப் பாடம். ஆம்பிளைக்கு நிஜத்துல அழகெல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எல்லாப் பொம்பளையும் ஒண்ணு தான். அவ வாசம் வேணும். அவ சூடு வேண்டும். அவ பக்கத்துல இருக்கும். அதுவும் தேவைப் படும் போது மட்டும் தான் இருக்கனும். மத்த நேரம் தொந்தரவு செய்யக்கூடாது. குளிர் காயற நெருப்பு மாதிரி இருக்கனும்னு நினைப்பான். ரொம்பத் தள்ளிப் போய் நடுங்க விட்றவும் கூடாது, ரொம்பக் கிட்டே போய் பொசுக்கிடவும் கூடாது. அவ அவனுக்கு எல்லாமா இருக்கனும். அனுசரிச்சுப் போகனும். அவ்ளோ தான். இதைச் சரியாச் செஞ்சாலே பொதுவா ஆம்பிளை விட்டுப் போக மாட்டான். ஆம்பிளை தன் கூட பேசிட்டே இருக்கனும்னு நினைக்கற பொம்பளையும், ஆம்பிளைய கவனிக்காம விடற பொம்பளையும் தான் சிக்கலில் மாட்டிக்கறா. எல்லாத்துக்கும் விதிவிலக்கு இருக்கு. மோசமான ஆம்பிளைகளும் உண்டு தான். ஆனா மருதன் அவ்வளவு மோசமில்ல. சராசரி. அதனால் கையாளறது எளிது. அவ்ளோ தான் விஷயம்.”

“அப்ப பொம்பளைக எல்லாம் என்ன ஆம்பிளைகளுக்கு அடிமையா?”

“உண்மையைச் சொன்னா ஆமா. குடும்ப அமைப்புக்குள் அதுவும், குழந்தை பிறந்த பின் பெண் அடிமை தான். ஒண்ணு இதுக்கு வெளிய சுதந்திரமா இருக்கலாம். அல்லது இதுக்குள் அடிமையா இருக்கலாம். உள்ளேயே கலகம் செய்யறதுல உபயோகம் இல்ல. அதிகபட்சம் நம்மை மதிச்சு நடக்கற மாதிரி நடிக்கற புருஷன் கிடைச்சா சந்தோஷப்படலாம். நாமும் உரிமை இருக்கற மாதிரி நடிச்சுக்கலாம்.”

“என் மாமியாரை விட நீ மோசம்.”

“சரி. உனக்குப் புரிய வைக்க முடியாது.”

“புரியவே வேண்டாம்.”

நான்ஸியின் பெருமூச்சு செல்பேசியின் டால்பி அட்மாஸ் வழியே வெளிப்பட்டது.

“சரி. அது கிடக்கட்டும். பேசி ஆகறதில்ல. ஒண்ணே ஒண்ணு மட்டும் எனக்கு ப்ராமிஸ் பண்ணு. இது நான் இதில் செஞ்ச உதவிக்குப் பரிசான்னு வெச்சுக்க.”

“ம். சொல்லு.”

“என் கிட்ட கேட்ட ரெண்டு கேள்விகளையும் ஒருபோதும் மருதன் கிட்ட கேட்காதே. நேரடியா மட்டுமில்ல மறைமுகமாக் கூட. கேள்விகள் ஒருவித அரிப்பு மட்டும் தான். நிம்மதியைத் தர முடியாத பதில்கள் எல்லாமே அனாவசியச் சுமைகள் மட்டுமே.”

“ஏய்...”

“நான் முடிச்சாச்சு. கேட்டது கிடைக்குமா?”

மௌனமானாள் சாவித்ரி. அவளுக்கு அவகாசமளித்துக் காத்திருந்தாள் நான்ஸி.

“சரி. பண்ணித் தொலையறேன். சனியனே.”

“மச் பெட்டர். தேங்கஸ்.”

“நான் தான் தேங்க்ஸ் சொல்லனும். ஆனா சொல்ல மாட்டேன்.”

“சொன்னாலும் உன் தேங்க்ஸ் வேண்டாம். ஒழுங்கா குடும்பம் நடத்து போதும்.”

“லவ் யூ, பிசாசே!”

இங்கே நான்ஸி புன்னகைத்தாள். அவ்விடம் சாவித்ரி புன்னகைப்பதை உணர்ந்தாள்.

அதன் பிறகு நான்ஸி ப்ரியாவைச் சந்திக்கவே இல்லை. இன்னும் சொன்னால் அந்தப் பெயரைக் கேட்கக் கூட இல்லை. மருதனோ, சாவித்ரியோ அப்படி ஒன்று நடக்காதது போலவே அதைப் பற்றி அவளிடம் பேசவே இல்லை. இடையே மருதன் வேறு ஒரு நிறுவனத்துக்கு வேலை மாறியதாக மட்டும் சாவித்ரி சொன்னாள். மனிதர்களின் கவனமான மறதிகள் எப்போதுமே நான்ஸிக்கு மிக ஆச்சரியமளிக்கும். அவளும் அப்படியே விட்டு விட்டாள் - எப்படியோ பிரச்சனை இல்லாவிடில் சரி தான் என்று.

“டோக்கன் நம்பர் 38…”

சலசலப்பு எழுந்தது. யாரும் உள்ளே போக எழாததால் மீண்டும் அதே எண்ணை அறிவித்தார்கள். எல்லோரும் அங்கே சுற்றி இருந்தோரைப் பார்த்தார்கள். இடையே ஏதாவது எண்ணுக்கு உரியோர் வராதிருந்தால் சின்ன மகிழ்ச்சி, நமக்கான அழைப்பு துரிதமாகும் என்ற நப்பாசையும் ஆர்வமும் எல்லோர் கண்களிலும் மின்னியது. ஒரு இளம் பெண் அருகிருந்த சிறுகடையில் காஃபி குடித்துக் கொண்டிருந்தவள் அதைப் பாதியில் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு (“ஷிட்!”) அவசரமாய் நடந்து வந்தாள். அவளது ஜீன்ஸ் பேண்ட் மிக மிக ஆபத்தான இறக்கத்தில் அவளைக் கவ்வியிருந்தது.

ப்ரியா இருவரையும் பார்த்து விட்டாள். தன்னுடன் வந்திருந்தவனிடம் காதில் ஏதோ சொல்லி விட்டு எழுந்து நடந்து வந்தாள். முன்பை விட இன்னும் இளமையாக, இன்னும் அழகாக இருப்பதாக நான்ஸிக்குத் தோன்றியது. உடனடியாக மெல்லிய பொறாமை எழுந்தது. அந்த அங்கீகாரத்தைப் புன்னகையாக அவளுக்கு அளித்தாள்.

ஓரக்கண்களில் சாவித்ரி இறுகிய முகத்துடன் இருப்பதையும் கவனித்தாள். பட்டும் படாமல் பேசி, சீக்கிரம் அவளை அனுப்பி வைத்து விட வேண்டும் எனப் புரிந்தது.

எழுந்து நின்றாள் நான்ஸி. நேராகவந்த ப்ரியா அவளை மென்மையாக அணைத்தாள். அவளது பெர்ஃப்யூம் வாசனை எந்த ப்ராண்ட் என நினைவில் தேடினாள் நான்ஸி.

“ஹாய் நான்ஸி. பார்த்து ரெண்டு மூணு வருஷம் இருக்குமா? ஹவ் ஆர் யூ?”

“இருக்கும். ஐ யாம் ஃபைன். ஹவ் அபவுட் யூ?”

“ரொம்ப நல்லா இருக்கேன்.”

இப்போது சாவித்ரியிடம் திரும்பினாள் ப்ரியா. அவள் எழவே இல்லை. முகம் திருப்பி அமர்ந்திருந்தாள். நான்ஸிக்குச் சங்கடமாய் இருந்தது. லேசாய்ப் பதற்றமாகவும். ஏதும் அசம்பாவிதம் இங்கே நடந்து விடக்கூடாது எனக் கர்த்தரை அவசரமாய் ஜெபித்தாள்.

ஆனால் ப்ரியா அதைப் பொருட்படுத்தாததுபோல் சாவித்ரியிடம் சிரித்தபடி கேட்டாள்.

“கீர்த்தி அம்மா! எப்படி இருக்கீங்க? எத்தனை மாசம்? மருதன் நல்லா இருக்காரா?”

வேறு வழியின்றி சிரமப்பட்டு சாவித்ரி புன்னகைத்தாள். அவளது தீவிர ஆத்திரத்தை இங்கிதம் தடுத்தது. உண்மையில் மருதனுக்கும் அவளுக்குமான உறவு தெரிய வந்த பின் இப்போது தான் அவளை முதல்முறையாகப் பார்க்கிறாள். முன்பு ஒரு முறை அவர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஃபேமிலி அவுட்டிங்கில் பார்த்திருக்கிறாள்.

“எனக்குத் தெரியும் நீங்க என் மீது கோபமா இருப்பீங்கன்னு. அது நியாயமும் கூட.”

“…”

“ஆனா என் பக்கம் என்ன கதைனு கேட்காமலே எதையும் முடிவு பண்ணாதீங்க.”

அட்ரினலின் குப்பென ரத்தத்தில் பாய நான்ஸி அவசரமாய் அவளை இடைமறித்தாள்.

“ஹே ப்ரியா! இப்ப அதெல்லாம் எதுக்கு. எல்லாம் முடிஞ்சு நல்லாத்தானே இருக்கு.”

“எக்ஸாக்ட்லி. அதனால தானே நான் இப்ப உங்களப் பார்த்ததும் பேசவே வந்தேன்.”

“ம்.”

“நான் எதையும் நியாயப்படுத்தல. ஆனா இந்த ரிலேசன்ஷிப்ல என்னோட கோணம் என்னனு தெரியாமலே ஒருவர் காரணமின்றி என்னை வெறுக்கக் கூடாதில்லையா!”

“சரி தான். ஆனா…”

“இருங்க. நான் பேசடறேன். எனக்குமே இதில் வலி இருக்கு. ஆனால் அது தாண்டி எல்லோருக்கும் நல்லது என்னனு யோசிச்சு தான் நான் விலகச் சம்மதிச்சேன்.”

“…”

“கீர்த்தி அம்மா! ப்ளீஸ் லிசன். ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”

“ம். சொல்லு…”

“எங்கம்மா அடிக்கடி ஒண்ணு சொல்வாங்க. ஆத்தோரம் இருக்கற மாமரத்துல பழம் பழுத்தா கீழே தண்ணில விழும். அப்போ ஆத்துல நீந்திட்டு இருக்கற மீன் அதைச் சாப்பிடத்தான் செய்யும். மீனால் மரமேற முடியாது. மீனோட பிரியமான உணவு மாம்பழமும் இல்ல. ஆனால் அதுக்குனு தானா வந்து விழும் பழத்தைச் சாப்பிடாம இருக்காது மீன். நமக்கு வாழ்க்கைல கிடைக்கற வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கத் தவறக் கூடாதுன்னு உணர்த்தறதுக்காக இதைச் சொல்வாங்க. A brilliant analogy.”

“….”

“நான் மருதனைத் தேடிப் போகல. I have great respect on him as my mentor. அவராத்தான் எனக்கு ப்ரேக்கப் ஆனது தெரிஞ்சு விசாரிச்சார். In fact, I was not very much down. மாறா அவர் தான் உண்மையில் வருத்தத்தில் இருந்தார். ஆறுதல் தேடினார். ஆறுதல் கொடுத்தார்.”

“…”

“அப்பத் தான் கீர்த்தி பிறந்து ஆறு மாசம் ஆகியிருக்கும். அவன் பிறந்ததுல இருந்து நீங்க மருதனை முழுக்க மறந்துட்டு குழந்தையை மட்டும் தான் கவனிக்கறதாச் சொன்னார். அதை உங்களுக்குப் பல விதத்தில் சொல்லிக் காமிச்சிருக்கார். ஆனா நீங்க பொருட்படுத்தல. அல்லது புரிஞ்சுக்கல. இது இயல்பு தான்னும் அவர் கிட்ட நான் சொன்னேன். ஆனா அவர் ஏத்துக்கல. அது ஒரு வித பொசஸிவ்னஸ். தன் சொந்தக் குழந்தையாலேயே உங்க மீது வந்த பொசஸிவ்னஸ். உண்மையில் அது ஒரு குழந்தைத்தனம் தான். அப்படி அவர் உங்களுக்கு இடையே இருந்ததா நம்பின வெற்றிடத்தை நான் நிரப்பினேன். செக்ஸ் எல்லாம் இதில் பிற்பாடு சேர்ந்தது தான்.”

“…”

“ஒருவகையில் நானும் அவர் மீது கோபப்படலாம். என்னைப் பயன்படுத்திக்கிட்டார். என்னை மணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் என்னுடன் நெருக்கமா இருந்திருக்கார். அது தவறில்லையா? ஒரு வகையில் என் வாழ்க்கையை ஒழித்தார் அப்படினு சொல்லலாமல்லவா. எனக்கும் அவரை மணம் செய்வதில் ஆர்வமில்லை. அதனால் பிரச்சனை சுலபமா முடிஞ்சுது. இல்லன்னா it would have been a disaster, right?”

“…”

“என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு தான் நினைக்கிறேன். அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா எப்பவும் சொன்னதில்ல தான். ஆனால் பல முறை என்னைப் பிரியவே மாட்டேன்னு சொல்லி இருக்கார். என்கூட இருந்த வரைக்கும் என் தோற்றத்தை, என் புரிதலைப் புகழ்ந்துட்டே இருந்தார். அதெல்லாம் உண்மைனு தான் நம்பறேன். அதே போல் அப்படிச் சொல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் எப்படி உங்களோடு சந்தோஷமா இல்லன்னும் தவறாமச் சொல்லி இருக்கார். இதில் நம்ம ரெண்டு பேருக்குமே ஒரு முக்கியமான செய்தி இருக்குனுதான் நினைக்கிறேன்.”

“…”

“ஆனா இப்ப உங்க கிட்ட விசுவாசமாத்தான் இருப்பார்னு தெரியும். கண்ணாடி பிம்பம் கைகால் அசையறதுக்கேற்ப மாறுகிற மாதிரி உங்கள் சொல்லை அப்படியே கேட்பார். அதுவும் நல்லாத் தெரியும். ஏன்னா ஆண்கள் எல்லாம் அப்படித் தான். இதை நான் அவர் மீதான கோபத்தில் சொல்லல. ஃபேக்ட். அவர் மீது எப்பவும் மரியாதை உண்டு.”

“…”

“சரி. வாழ்த்துக்கள், கீர்த்தி அம்மா! உடம்பைப் பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன்.”

“ஒரு நிமிஷம், ப்ரியா.”

சாவித்ரி இப்போது எழுந்து நின்றாள். ப்ரியாவின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

“I am doing good. அஞ்சாவது மாசம் நடக்குது. மருதன் நல்லா இருக்கார். Very supportive.”

ப்ரியா ஆச்சரியமாய் அகலமாய்ப் புன்னகைத்தாள். கையை நன்கு பற்றிக்கொண்டாள்.

“நீங்களும் சந்தோஷமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.”

தொலைவில் அமர்ந்து கொண்டு இவர்கள் பேசுவதை ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுடன் வந்திருந்தவனைப் பார்த்தபடியே சொன்னாள் சாவித்ரி.

“அஃப் கோர்ஸ்.”

“யூ ஆல்சோ டேக் கேர்.”

“தேங்க்யூ.”

“கடைசியா ஒண்ணு.”

தன் தலைமுடியைக் கோதிக் கொண்டே என்ன என சாவித்ரியைப் பார்த்தாள் ப்ரியா.

“கீர்த்தி அம்மா, கீர்த்தி அம்மான்னு சொல்றதுலயே வயசாகிடுச்சுனு மறைமுகமாச் சொல்ற மாதிரி இருக்கு. ஒவ்வொரு முறையும் அதை ஞாபகப்படுத்தற மாதிரியே தோனுது. Uncomfortable. இன்னும் எனக்கு அவ்வளவு வயசாகலன்னு நினைக்கிறேன்.”

“Oops! ஸாரி. நான் அப்படி மீன் பண்ணல. நான் மருதன் கிட்ட பேசும் போதெல்லாம் உங்களை அப்படியே குறிப்பிட்டுப் பழகிடுச்சு. அப்படி நேச்சுரலா வந்தது தான் இது.”

“அவருக்குமே அச்சொல்லில் தான் என் மீதான மனவிலக்கம் வந்ததோ என்னவோ!”

“…”

“Whatever, என்னை கீர்த்தி அம்மான்னு கூப்பிடாதீங்க இனி. நான் மிசஸ். மருதன்.”

“டன்…”

சூழலை மீட்க நான்ஸி அந்த ஆபத்தான உரையாடலை இயல்பாக்க விரும்பினாள்.

“கல்யாணமாகிடுச்சா, ப்ரியா?”

“ம்ஹூம். இல்ல.”

உதட்டைப் பிதுக்கினாள் ப்ரியா. சட்டென அடக்க முடியாமல் சாவித்ரி கேட்டாள்.

“அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”

ப்ரியா சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். அதில் ஒரு பதில் இருந்தது. இல்லாமலும் இருந்தது. ஏதோ பதில் இருந்ததாகவே நம்ப விரும்பினாள் சாவித்ரி.

“டோக்கன் நம்பர் 39…”

***

Comments

"புருஷனுக்குப் பொண்டாட்டி தவிர எல்லாப் பொம்பளையும் அழகு தான். பொண்டாட்டிக்குப் புருஷன் அழகுனு சொல்ற எல்லாப் பொம்பளையும் சுமார்தான்."
��
உண்மையில், ஓவர் ரொமாண்டிஸைஸ் செய்யப்படாத எதார்த்தமான கதை. தலைப்பு மிகப் பொருத்தம், என்றாலும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. கதையை வேறு மாதிரி எல்லாம் யூகித்தேன். ஆனால் அது எதற்குமே இடம் தராமல் அது தன் பாதையில் தள்ளாட்டம் இன்றி பயணித்தது. அதிக ஆங்கிலப் பிரயோகம் சற்றே அந்நியப் பட வைத்தது. பெண் மனது புரிந்து கொள்ளவே முடியாதது எனும் சொல்லாடல் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ஆண்கள் விஷயத்திலும் உண்மை என்பதை உங்கள் கதை உணர்த்துகிறது. செக்ஸ்.. கடைசி வரை தெளிவாய் காட்சிப்படுத்திடவோ, எழுதித் தீர்த்து விடவோ முடியாது, முடியவே முடியாது போல. அன்பும் மகிழ்வும் பாராட்டுகளும் தோழர்.
govindarajan said…
//மாமிசத்துணுக்கு வயிற்றின் அமிலத்தோடு எதுக்களித்து தொண்டைக்குக் காரமாய் ஏறுவது போல்//

//எத்தனை மனிதர்கள் நம்மை நம் இயல்போடே வாழ அனுமதிக்கிறார்கள்!//

//சிலதெல்லாம் கடக்கனும். வெச்சுக் குடையக் கூடாது./.


//“உனக்குத் தேவை சொல்யூஷனா ஆன்சரா? பதிலை வெச்சு என்ன பண்ணுவே?”//

இப்படி பல இடங்களில் நம் மனதை தொடுகிறார் ஆசிரியர். யதார்த்தமான அணுகுமுறை, பாசாங்கு இல்லாத உரையாடல்கள்.

சிறந்த கதை. தோழருக்கு பாராட்டுக்கள்....

sowmya said…
அந்த பொண்ணு ப்ரியாவுக்கு அடுத்த கதையில கல்யாணம் கட்டி வச்சுருங்க 😷
Unknown said…
கதையில் இந்த இடம் மிகவும் அருமை!!

அப்படினா ஒரு அட்வைஸ் சொல்றேன். அனுபவப் பாடம். ஆம்பிளைக்கு நிஜத்துல அழகெல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எல்லாப் பொம்பளையும் ஒண்ணு தான். அவ வாசம் வேணும். அவ சூடு வேண்டும். அவ பக்கத்துல இருக்கும். அதுவும் தேவைப் படும் போது மட்டும் தான் இருக்கனும். மத்த நேரம் தொந்தரவு செய்யக்கூடாது. குளிர் காயற நெருப்பு மாதிரி இருக்கனும்னு நினைப்பான். ரொம்பத் தள்ளிப் போய் நடுங்க விட்றவும் கூடாது, ரொம்பக் கிட்டே போய் பொசுக்கிடவும் கூடாது. அவ அவனுக்கு எல்லாமா இருக்கனும். அனுசரிச்சுப் போகனும். அவ்ளோ தான். இதைச் சரியாச் செஞ்சாலே பொதுவா ஆம்பிளை விட்டுப் போக மாட்டான். ஆம்பிளை தன் கூட பேசிட்டே இருக்கனும்னு நினைக்கற பொம்பளையும், ஆம்பிளைய கவனிக்காம விடற பொம்பளையும் தான் சிக்கலில் மாட்டிக்கறா. எல்லாத்துக்கும் விதிவிலக்கு இருக்கு. மோசமான ஆம்பிளைகளும் உண்டு தான். ஆனா மருதன் அவ்வளவு மோசமில்ல. சராசரி. அதனால் கையாளறது எளிது. அவ்ளோ தான் விஷயம்.”
Bharanidharan said…
ஆலங்குடி வங்கனாரின் குறுந்தொகை பாடலின் அழகிய சிறுகதை வடிவம்...இப்படி சங்க இலக்கியம் முழுதும் நவீன வடிவத்தில் எழுதப்பட்டு மீள் வாசிப்பு செய்யப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி