வர்ச்சுவல் மினி கம்யூன்

கொரோனா, யுத்தம் போன்ற உலகளாவிய அல்லது தேச அளவிலான அவசர நிலைகள் தனி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் வேலையிழப்பு, அதீத‌ மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட‌ நிலையாமைகளைக் கையாள ஒரு வர்ச்சுவல் மினி கம்யூன் (Virtual Mini Commune) வாழ்க்கை முறை பற்றி கடந்த சில தினங்களாக யோசித்து வருகிறேன். இதை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்ப அமைப்பாகப் (extended family setup) பார்க்கலாம்.

அவசர காலங்களில் எல்லாவற்றுக்கும் அரசைச் சார்ந்திருக்க முடியாது. அதுவும் அது ஒரு கையாலாகாத (inefficient) அரசு எனில் சொல்லவே வேண்டியதில்லை. அதனால் அச்சமயங்களில் தனி மனிதர்கள் பொருளாதார ரீதியில் தம்மைத் தற்காத்துக் கொள்ளச் செய்யும் ஓர் ஏற்பாடு தான் இது.

நான்கைந்து நண்பர்களின் குடும்பங்கள் சேர்ந்து இதைச் செய்யலாம். உதாரணமாய்ப் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள் சிறந்த தேர்வு. உடன் பணிபுரிவோர் (colleagues), அருகே வசிப்போர் (neighbors), உறவினர்கள் (kith and kin) பொருத்தமான‌ தேர்வல்ல. இரண்டு காரணங்கள்: 1) ஒரே பின்புலம் மற்றும் பொருளாதார நிலை என்பதால் ஒரே அளவிலான ரிஸ்க் இருக்க வாய்ப்புண்டு. 2) புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் இம்மாதிரி சுற்றத்தில் குறைவு.

இந்த நான்கைந்து குடும்பங்களும் வெவ்வேறு பணிகளில் இருந்தால் நல்லது. ஏனெனில் கொரோனா உள்ளிட்ட சூழல்களில் ஒரு தொழில் நசியலாம், இன்னொரு தொழில் கொழிக்கலாம், மற்றொன்று அப்படியே நீடிக்கலாம். ஆக, ஒரே தொழில் உள்ளவர்கள் சேர்ந்து இந்தக் கம்யூனை உருவாக்கினால், அவசர காலங்களில் ஒருவேளை அத்தொழில் நசிந்தால் மொத்த அமைப்பும் மூழ்கும். இந்த கம்யூன் அமைப்பை உருவாக்கியதே பயனில்லாமல் போகும்.

இவர்களின் பொருளாதாரச் சூழல் ஓரளவு வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால் அதிக வித்தியாசம் இருக்கக்கூடாது. காரணம் அதுவும் அவசரக் காலங்களில் குழப்பங்களை, சில சமயம் வெறுப்பைக் கூட ஏற்படுத்தும். உதாரணமாய் மாதம் 10,000 ரூபாய் வருமானம் இருப்பவரும், 1 லட்சம் ரூபாய் வருமானம் இருப்பவரும் ஒரே கம்யூனில் இருந்தால் சரிப்படாது. அது அந்த ரூ. 1 லட்சம் வருமானம் கொண்டவருக்கு எந்தப் பலனையும் தராது. அல்லது ரூ.10,000 வருமானம் கொண்டவர் அதிகம் சுரண்டப்படும் நிலை உண்டாகும். ஆனால் இதன் பொருள் இது ஓர் எலைட் அமைப்பு என்பதல்ல. 10,000 ரூபாயை ஒட்டிய‌ வருமானம் கொண்டவர்கள் தனி கம்யூன் அமைப்பில் இருக்கலாம். அது அவர்களுக்கு நன்கு பயனளிக்கும். போலவே லட்சம் ரூபாய் தனிக் குழு.

ஏன் நான்கைந்து? ஏன் ஏழெட்டுப் பேர் கூடாது? மிதமான எண்ணிக்கை ஒற்றுமையாகச் செயல்பட வைக்கும். எண்ணிக்கை கூடக்கூட குழப்பமும், க‌ருத்து வேற்றுமைகளும் நுழையும். அதனால் நான்கைந்தே சரியான எண்ணிக்கை என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால் இது வெறும் கம்யூன் அல்ல; மினி கம்யூன். அதே சமயம் நான்கிற்குக் கீழே போனாலும் சரிப்படாது. நிலைத்தன்மை (stability) கிடைக்காது - ஒரு மேசை என்றால் கூட குறைந்தது நான்கு கால்கள் வேண்டும் என்ற அடிப்படையில்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும். இவர்கள் அருகருகே வசிக்க வேண்டும் என்றில்லை, இன்னும் சொன்னால் ஒரே நகரத்தில் / மாநிலத்தில் / நாட்டில் இருக்க வேண்டும் என்று கூட இல்லை. இவர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்பது கூட அவசியமில்லை. சாதாரணக் காலங்களில் அவர்கள் தமது வழக்கமான வாழ்க்கையில் நகர்ந்து கொண்டே இருக்கலாம். இப்படியொரு கம்யூனில் அங்கம் என்பதைக் கூட நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. அதனால் தான் இது வர்ச்சுவல் கம்யூன்.

என்ன மாதிரியான ஒப்பந்தம்? நான் மேலான புரிதலுக்காக‌ இங்கே ஓர் உதாரணத்தை விவரிக்கிறேன். இதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றில்லை. அந்தந்த கம்யூன் அமைப்பின் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். நான் சொல்லும் உதாரணமே கூட காலப்போக்கில் குறைகளை நிவர்த்தி செய்து மாறுதலுற்றுக் கொண்டே (evolve) வேண்டியது தான்.

இந்தக் கம்யூன் தொடங்கப்பட்ட நாள் முதல் அமைப்பின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தம் வருமானத்திலிருந்து மாதா மாதம் 10% கம்யூனுக்கென‌ ஒரு பொது வங்கிக் கணக்கு துவங்கி அதில் சேமிக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த நிதி நிர்வாகத்தைக் கவனிக்கலாம். மூன்று மாதத்திற்கொரு முறை (every quarter) எளிமையான ஒரு கணக்கை (like a balance-sheet) மொத்தக் கம்யூனுக்கும் சமர்ப்பிக்கலாம்.

உதாரணமாய் உறுப்‍பினரின் மாத வருமானம் 20,000 ரூபாய் என்றால் 2,000 ரூபாய் பங்களிக்க‌ வேண்டும். இது சாதாரணக் காலங்களில். கொரோனா அல்லது யுத்தம் மாதிரியான அவசரக் காலங்களில் இத்தொகை 50% ஆக உயர்த்தப்பட வேண்டும். மேற்கண்ட உதாரணத்தில் தன் செலவுகளைச் சுருக்கிக் கொண்டு அவர் 10,000 ரூபாய் கட்டத்தொடங்க வேண்டும்.

இத்தொகையை எப்போதும் தொடக்கூடாது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு எல்லாம் பணத்தில் கை வைக்கவே கூடாது. காரணம், இவை யாவும் திட்டமிட்ட செலவு. வீட்டில் இருப்போரின் மருத்துவ அவசரச் செலவுகள் மட்டும் விதிவிலக்கு. அதுவும் அதிகபட்சமாய் அவர் இதுவரை பங்களித்திருக்கும் தொகையை மட்டுமே எடுக்க வேண்டும். பின் அவர் அந்த மினி கம்யூன் அமைப்பிலிருந்து வெளியேறி விடலாம் அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் வாங்கிக் கொண்டு எடுத்த தொகையை வட்டியுடன் திரும்பக் கட்டி விடும் ஒப்பந்தத்துடன் அமைப்பில் தொடரலாம்.

இனி வரப் போவது தான் முக்கிய விஷயம். அவசரக் காலங்களில் எவருக்காவது சம்பளம் வராமல் போனால் அல்லது வேலை இழந்தால் அந்த மாதங்களில் அவர் தொகையைச் செலுத்தத் தேவையில்லை. மாறாக இதுகாறும் கம்யூன் சேமித்திருந்த தொகையிலிருந்து மாதா மாதம் அந்த வேலையிழந்த நபருக்கு அவரது 50% மாத வருமானம் கிடைக்கத் துவங்கும். அவருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் வரை இது தொடரும். இதற்கு அவர் பங்களித்த தொகையளவு தான் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவருக்கு அந்த வருமானமற்ற சூழல் இருக்கும் வரை பெறலாம். அதாவது அவர் அந்தக் காலகட்டத்தில் முதலில் தன் முந்தைய சேமிப்பிலும், அது தீர்ந்த பின் கம்யூனின் பொருளாதார ஆதரவிலும் இருப்பதாக அர்த்தம்.

அவருக்கு மீண்டும் வேலை கிடைக்க அல்லது வருமானம் கிடைக்க அவர் மட்டுமின்றி அந்தக் கம்யூனின் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இப்போது அவரது குடும்பச் செலவுகளுக்குப் போய்க் கொண்டிருப்பது அவர் பங்களித்த தொகை மட்டுமல்ல. கம்யூனின் காசு. அதனால் அதை எவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறுத்துவது அந்தக் கம்யூனின் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் நல்லது.

ஒருவேளை அவசரக் காலம் நெடுங்காலம் நீடிக்கிறதெனில் சூழலுக்கேற்ப பணம் செலுத்தல், பணம் கொடுத்தல் இரண்டையும் 50% என்பதற்குப் பதிலாக 45%, 40% என எல்லோரும் ஆலோசித்துக் குறைத்துக் கொண்டே வரலாம். ஆனால் வேலையிலிருப்போர் பணம் செலுத்தும் சதவிகிதமும், வேலையில் இல்லாதோர் பணம் பெறும் விகிதமும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

அவசரக் காலம் முடிந்ததும் அவரவர் தம் வழமைக்குத் திரும்பி விடலாம். மீண்டும் 10% பங்களிப்பு. மீண்டும் இன்னோர் அவசரத்துக்குக் காத்திருத்தல்.

இதன் மூலம் வேலையிழப்பு உள்ளிட்ட சமயங்களில் சூழலைத் தனியே எதிர்கொள்ளாமல் ஒரு குழுவாக எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த முறையில் அவசரக் காலங்களில் நீங்கள் தனி ஆள் அல்ல. நான்கைந்து பேராக உங்கள் பலம் பெருகி விடுகிறது. அது வருமானமாக இருந்தாலும் சரி, வேலை தேடலாக‌ இருந்தாலும் சரி. அது பெரும் தெம்பை அளிக்கும்.

இது எல்லாமே அந்தத் தனி மனிதர்களின் நேர்மை தொடர்புடையது என்பதைக் கவனிக்கலாம். அவர் தன் சம்பளம் என்ன எனச் சொல்வதில் முழு நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். வேலை இழந்தால் மீண்டும் வேலையைப் பெறுவதில் முழு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் (அது தான் சேமிப்பிலிருந்து வருகிறதே என எண்ணிச் சோம்பியிருத்தல் கூடாது).
இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் தான் இது நன்கு புரிந்து கொண்ட நண்பர்கள் சேர்ந்து செய்யும் விஷயம் என்றேன். அதனால் தான் இதில் ஒரே மாதிரி பொருளாதாரம் கொண்டோர் இருப்பதே நல்லது என்றேன்.

இன்னொரு விஷயம், கம்யூனில் ஒருவருக்கு வருமானம் நிற்கும் போது, மற்றவர்கள் ஏதோ தமது தயவில் தான் அவர் இருப்பதாகப் பேசுதலோ எண்ணத்தை ஏற்படுத்தலோ கூடாது. ஏனெனில் எவருக்கும் அதே நிலை நாளை வரலாம். அதை உணர்ந்து இதைத் தமது கடமையாக, இன்னும் சொல்லப் போனால் உரிமையாகக் கருதியே செய்ய வேண்டும்.

சாதாரணக் காலங்களில் தொடர்பில் இருக்க வேண்டியது கட்டாயமில்லை என்றாலும் அப்போதும் அந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டால் அந்த உறவு இறுகும். ஒற்றுமையும் ஆதரவும் புரிதலும் அதிகரிக்கும். அவசரக் காலங்களில் ஒரு குடும்பம் மட்டும் உதவி பெறுகையில் அதை மற்ற உறுப்பினர்களோ, அவர்களின் குடும்பங்களோ தவறாகப் பாராத நிலை உருவாகும். இதைத் தான் நீட்டிக்கப்பட்ட குடும்ப அமைப்பு என்றேன். அதாவ‌து வெறும் புற அடிப்படையில் மட்டுமின்றி மனமொத்தும் இந்த கம்யூன் அமைப்பு அந்த நான்கைந்து குடும்பங்களையும் இணைக்கும். அது நல்லது.

இது ஒரு மாதிரி இன்ஷ்யூரன்ஸ் மாடல் தான். இதில் நிறையத் தர்க்கக் கேள்விகள் தோன்றலாம். இது ஒரு தொடக்கச் சிந்தனை மட்டுமே. தாராளமாய் அவரவர் விருப்பத்திற்கேற்ப இதைச் செழுமைப்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி