பிராமணர் Vs பறையர்


வரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார்.


கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி "அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்?" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: "உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.")

தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமும் நிதானமும் தெளிவும் கொண்டவர்.

நூலில் பிரதானமாய் பிராமணர்கள் Vs பறையர்கள் என்ற விரோதத்தைப் பேசுகிறார். இன்னொரு கோணத்தில் பறையர் Vs பௌத்தர் என்ற நட்புமுரணாகவும் இதைப் பார்க்கலாம்.

இந்திர தேச சரித்திரம் பற்றிய பகுதிகளும் (அயோத்திதாசரின் சறுக்கல்களைப் பேசும் கடைசி 5 அத்தியாயங்கள்), ஆங்காங்கே வரும் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய பகுதிகளும் (காலங்காலமாய்ப் பூர்வபௌத்தத்தைப் பாதுகாத்து வரும் ரகசிய அமைப்பு போல் சொல்கிறார்) சுவாரஸ்யமானவை.

பௌத்தராக மாறுவதை விட (புறச்சடங்குகள்), பௌத்தராக ஆகுவதே (மனமாற்றம்) சரியானது என அயோத்திதாசர் நம்பியிருக்கிறார். பிராமணர்களை இரண்டாகப் பிரிக்கிறார்: யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர். (இது இன்றைய பிராமணர், பார்ப்பனர் போன்றதல்ல.) அதில் புத்தரும் ஒரு யதார்த்த பிராமணரே. ஆனால் அப்படியானவர்கள் அழிந்து போய், சதித்துடன் தம்மை சமூகத்தில் உயர்வாக ஆக்கிக் கொண்ட வேஷ பிராமணர் மட்டுமே மிஞ்சினர். அவர்களுக்கு எதிரான கலகச் செயல்பாடு தான் பூர்வபௌத்தம். அதைச் செய்தோர் பறையர்.

புத்தகத்தில் அயோத்திதாசர் பார்வையாக தருமராஜ் சொல்லும் இன்னொரு விஷயம் முக்கியமானது. சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். அன்றைய (பிராமணியம் செழிக்க ஆரம்பித்த காலம்) தமிழக மக்களை இப்படித்தான் பிரிக்க முடியும்: வேஷ பிராமணர், பூர்வ பௌத்தர் (பறையர்களில் சிலர்) மற்றும் கல்லா மக்கள் (மற்ற பறையர்கள், பிற தலித் சாதிகள், இன்றைய பிற்படுத்தப்பட்டோர்). பூர்வ பௌத்தத்தைக் கொச்சைப்படுத்த பறையர் என்ற சாதியாக அடையாளப்படுத்தினார்கள் வேஷ பிராமணர்கள். அதைப் பெரும்பான்மை ஏற்றது.

பூர்வபௌத்தத்தை அயோத்திதாசர் கண்டடைந்ததைப் போல் அயோத்திதாசத்தை தருமராஜ் கண்டடைய முயன்றிருக்கிறார். இறுதியில் அது திராவிட இயக்கத்தில் வந்து முடிகிறது. நூலின் மையச்சரடு பற்றிய என் சந்தேகம் ஒன்றிற்கு இவ்வாறு பதில் சொன்னார் தருமராஜ்: "திமுக இல்லையென்றால், பெரியார் இன்னொரு அயோத்திதாசர்; அதே போல, பெரியார் இல்லையென்றால், திமுக இன்னொரு பாஜக."

இப்போது நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் கிடைத்திருக்குமே! தமிழகத்தின் தலித், திராவிட மற்றும் வலதுசாரிச் சிந்தனையாளர் (அப்படியொன்று இருக்குமாயின்) என அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டிய நூல் இது. கிழக்கு பதிப்பக வெளியீடு.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்