தனிப்பெருந்துணை
மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்குமென நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓர் இளம் இயக்குநரின் முதல் படம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம் தான்! எழுத்தாளர் முகில் தான் தன்னையறியாமல் இப்புத்தகத்துக்கான விதையை இட்டது. நவம்பர் மத்தியில் ஒரு நாள் ‘96’ படம் பற்றிய என் தொடர் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து விட்டு “இது 96 குறித்த உங்களது 95-வது ஸ்டேட்டஸ். இன்னும் ஒன்றுடன் முடித்துக் கொள்ளவும்.” என்று விளையாட்டாய்க் கமெண்ட் செய்திருந்தார். அப்போது வரையில் ‘96’ படம் பற்றி சிறிதும் பெரிதுமாய் சுமார் 25 பதிவுகள் எழுதி இருப்பேன். அவர் சொன்னதும் தான் உண்மையிலேயே ‘96’ பற்றி 96 பதிவுகள் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கினால் என்ன எனத் தோன்றியது. மறுநாள் மனுஷ்ய புத்திரனிடம் உயிர்மையில் இப்புத்தகம் சாத்தியமா என ஃபேஸ்புக் சாட்டில் கேட்டேன். மறுகணம் “கொண்டு வரலாம். தயார் செய்யுங்கள்” என்று பதில் வந்து விழுந்தது. ஆனால் பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே நூலளவுக்...