விஷ்ணுபுரம் விழா - 2018: சில குறிப்புகள்


1) விஷ்ணுபுரம் விழா - 2018 கடந்த வார இறுதி இரு தினங்கள் கோவை ஆர்எஸ் புரத்தின் ராஜஸ்தானி சங் அரங்கில் (நாயுடு ஹால் அருகே) நடந்தது. எனக்கு விருந்தினராக அழைப்பு இருந்தது. எழுத்தாளர் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்ற முறையே கலந்து கொண்டிருக்க வேண்டியது. 'ஆப்பிளுக்கு முன்' முறித்துப் போட்டு விட்டது. அதனால் இம்முறை எதுவென்றாலும் ஒத்திப் போட்டு விட்டு இதற்குப் போய் விடலாம் என்று தீர்மானித்திருந்தேன்.

2) ஆண்டாண்டுகளாய் எதிர்பார்த்திருந்த ஆசானுடனான முதல் சந்திப்பு இப்படியா இருக்க வேண்டும்! வெண்பொங்கல் நக்கிய எச்சில் கையுடன் பந்தியிலிருந்து பாதி எழுந்து நின்று அவருக்கு அரை வணக்கம் சொன்னபடி!

3) விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த சிலர் (ஃபேஸ்புக்கில்) புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் நான் இளமையாகத் தெரிவதாகச் சொன்னார்கள். புகைக்கும் நெருப்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா!

4) விழாவின் முதல் அமர்வில் நானும் கலைச்செல்வி என்பவரும் வாசகர் கேள்விகளை எதிர்கொண்டோம். செல்வேந்திரன் ஒருங்கிணைத்து நடத்தினார். விஷ்ணுபுரம் எழுத்தாளர் அமர்வுகள் பற்றி ஜெயமோகன் எழுதியிருந்தது: "எழுத்தாளர் சந்திப்பு என்பது அந்த எழுத்தாளரின் எழுத்தாளுமையை வாசகர்முன் வைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அந்த எழுத்தாளர் மீதான மதிப்பில் இருந்தே அது தொடங்குகிறது. எழுத்தாளரின் படைப்புகளை, ஆளுமையை பல கோணங்களிலான கேள்விகள் வழியாக வெளிப்படுத்துவதே அதன் செயல்முறை." பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது.


5) இணையத்தில் ரைட்டர் என்றாலே சிஎஸ்கே தான் என விஷ்ணுபுரத்தார் என் பற்றிய அறிமுகக் குறிப்பில் சொன்னார்கள். அநியாயம்! அடுத்து தமிழில் எவனும் ரைட்டர் என்று க்ளெய்ம் செய்யத் துணிவானா?

6) என் எழுத்துக்களின் பாலியல் உள்ளடக்கம் வயதுக்கோளாறு என்று சிவாசக்தி (ர.சு.நல்லபெருமாள் மகள்) குறிப்பிட்டார். நான் ஒப்புக் கொண்டு அந்தக் கோளாறு எத்தனை வயது வரை தொடரும் என்று தான் தெரியவில்லை என்றேன்.

7) "I engineer my writing" என்று நான் சொன்னதற்கு விஷால் ராஜா "வாசகர்களை உத்தேசித்து எழுதினால் தானே அப்படிச் செய்ய வேண்டி இருக்கும்?" எனக் கேட்டார். நான் ஒப்புக் கொண்டு "ஆனால் அது ஒரே ஒரு வாசகனுக்காக. அது நான் தான்." என்றேன். (ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த அமர்வில் கணிசமான நேரம் அந்த 'Engineering' என்ற சொல்லைச் சுற்றியே அமைந்தது. என் எழுத்து தானாகவே நிகழ்ந்ததாய் நினைவே இல்லை என்பது தான் என் பதிலின் சாரம்.)

8) என் அமர்வில் ஓரிடத்தில் நான் ஒரு தீவிர உடன்பிறப்பு எனக் கேள்விப்படுவதாக ஜெயமோகன் குறிப்பிட்டார். மறுத்து விட்டேன். திராவிடச் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றாலும் 'மங்காத்தா' ஆட்ட விதிகள் அப்படியானவை.

9) என் அமர்வை இயல்பாக, எளிமையாகவே எதிர்கொண்டேன். எல்லோரும் பயமுறுத்தி அனுப்பியது போல் மிரட்டல் கேள்விகள் ஏதுமில்லை. (இறுதி வரியில் திருப்பம் வைப்பது பற்றிய ஜெயமோகனின் கேள்வி ஒன்றுக்கு மட்டும் சரணடைந்தேன்.) வழமை போல் எது உண்மையோ அதைப் பதிலாக அளித்தேன், எந்த அலங்காரமும் இன்றி. I really enjoyed the session. (பார்வையாளர்களுக்கு எப்படி இருந்தது என்பதை அவர்களே சொல்ல வேண்டும்.)

10) ஒரு புத்தகமும் (எனக்கு வாய்த்தது தேவதேவனின் 'நுனிக்கொம்பர் நாரைகள்' கவிதைத் தொகுதி), வல்லிய பூங்கொத்தும், நல்ல சால்வையொன்றும் எழுத்தாள விருந்தினர்களுக்குப் பரிசாய் அளித்தார்கள்.

11) பெரும்பாலும் முதல் தினத்தின் எல்லா எழுத்தாளர் அமர்வுகளுமே சுவாரஸ்யமாக அமைந்தன. அது நான் எதிர்பாராதது. இந்த எழுத்தாளர் அமர்வுகளின் format முக்கியக் காரணம் எனத் தோன்றுகிறது. இது உரை அல்ல; உரையாடல். அதனால் வெவ்வேறு கோணங்களில், திசைகளில் பேச்சு திரும்பிக் கொண்டே இருக்கும் என்பதால் ஒரே இடத்தில் இருத்தி பார்வையாளர் கழுத்தில் கத்தி வைக்க எழுத்தாளருக்கு வாய்ப்பு குறைவு.

12) நிறைவான அனுபவம், நான் எதிர்பார்த்ததை விடவும். என் அமர்வு மட்டுமின்றி பெரும்பாலும் எல்லா எழுத்தாளர் அமர்வுகளையும் ரசித்தேன். முதல் நாளின் நட்சத்திரப் பேச்சாளர் சந்தேகமின்றி கவிஞர் சாம்ராஜ் தான். He is so spontaneous. குரலும் உச்சரிப்பும் கம்பீரம். பொறாமைப்படுமளவு ஜெயமோகனை Quote செய்கிறார்.

13) தமிழ்ச்சூழலில் ஒரே இடத்தில் சுமார் 200-300 பேர் இவ்வளவு தேர்ந்த வாசகர்கள் கூடுவது பேராச்சரியம். நான் கண்ட வேறெந்த வாசகக் கூட்டத்தை விடவும் இவர்கள் நல்ல வாசிப்பும் அதை விவாதிக்கும் திறனும் உடையவர்கள். அவர்களின் கேள்விகளில் அது புலப்படுகிறது. ஜெயமோகன் அசாத்தியமான ஒரு விஷயத்தைச் சாதித்திருக்கிறார்.

14) ஒரே இடத்தில் இத்தனை முதல் தர தமிழ் எழுத்தாளர்களைக் காண்பதும் அதிசயம் தான். (இத்தனைக்கும் குடி கிடையாது!) ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், தேவகாந்தன், சுனில் கிருஷ்ணன், கவிதா சொர்ணவல்லி, லீனா மணிமேகலை, சரவணன் சந்திரன், நரன், எம். கோபாலகிருஷ்ணன், கோகுல்பிரசாத், தமிழினி வசந்த குமார், கேஜே அஷோக் குமார், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், கார்த்திகைப் பாண்டியன், வெண்பா கீதாயன், கடலூர் சீனு, கேஎன் செந்தில் ஆகியோரைச் சந்தித்து உரையாட முடிந்தது. நாஞ்சில் நாடன், ராஜ் கௌதமன், கோவை ஞானி, தேவதேவன், தேவி பாரதி, சு.வேணுகோபால்,கவிஞர் புவியரசு, லக்ஷ்மி மணிவண்ணன், சுதந்திரவல்லி, அனிதா அக்னிஹோத்ரி, மதுபால், சாம்ராஜ், கலைச்செல்வி, ஜான் சுந்தர், விஜயா வேலாயுதம் ஆகியோரைப் பார்க்க மட்டும் முடிந்தது. பெரும்பாலும் ஜெயமோகனுக்காக வந்தவர்கள். ஜெயமோகனை நிச்சயமாய் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்ல முடியும்.

15) பொதுவாக ஜெயமோகன் ஒரு ராணுவ ஒழுங்குடன் விவாதத்தைக் கட்டுப்படுத்தி, தணிக்கை செய்து, வழிநடத்திச் செல்வார் என்பதாக முந்தைய விழாக்களின் வாய் மொழிக் கதைகள் வழிக் கேட்டிருந்தேன். முன்பு எப்படியோ இந்த முறை அப்படி ஏதும் நான் பார்க்கவே இல்லை. வாசகர்கள் அவர்களாகவே கேள்வி கேட்டார்கள். அதில் ஜெயமோகன் குறுக்கிடவில்லை. சில சமயம் கேள்விகள் தெளிவற்று இருக்கும் போது அதை விளக்கினார், ஒன்று விரித்துச் சொல்வார் அல்லது சுருக்கி உரைப்பார் (அந்த இடங்களில் எல்லாம் அசத்தினார்!) ஓரிரு இடங்களில் கேள்வியை அனாவசியமாய் பீடிகை எல்லாம் போட்டு நீட்டி முழக்கிய போது வெட்டினார். அது வேறு வழியில்லை. அதைக் கட்டுப்படுத்தல் அல்லது தணிக்கை செய்தல் என்று கொள்ள முடியாது. (முற்காலக் கதைகள் உண்மை எனில் ஒருவேளை வாசகர் வட்டம் இம்முறை தானே சரியாய்ச் செய்யும் முதிர்ச்சி பெற்று விட்டதோ என்னவோ!) சொல்லப் போனால் ஜெயமோகன் அப்படி அமைதியாய் ஒதுங்கி நின்றது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது அவர் ஏற்பாடு செய்யும் விழா என்ற தோரணையை நான் காணவே இல்லை. ஞாயிறு மாலை நடந்த விருது மேடையில் கூட அப்படித்தான்!

16) ஆனால் பெரும்பாலும் வாசகர் கேள்விகளில் ஒரு ஜெயமோகனின் விமர்சன பேட்டர்ன் இருந்தது. அவர் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய‌ குறிப்புகளை மையமாய் வைத்து பல வாசகர்கள், அதே திசையில் மேற்கொண்டு தம் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். அவ்வகையில் பக்ஷிராஜன் ஆன்மாவுடன் ஐக்கியமாகி விட்ட புள்ளினங்களின் ஆன்மாக்கள் ஒரே ராட்சச ராஜாளியாய்க் கிளம்பி வருவதைப் போல் தான் விஷ்ணுபுரம் விழாவின் எழுத்தாளர் அமர்வுகளில் வரும் பெரும்பாலான வாசகர் கேள்விகளைப் பார்க்கிறேன். பக்ஷிராஜன் ஜெயமோகன்.

17) விஷ்ணுபுரம் விழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்வாக ஓர் இலக்கிய விநாடி வினா வைத்தார்கள். ஒரு கேள்விக்கு விடை சொன்னாலும் ஒரு புத்தகம் பரிசு. அரங்கில் ஐம்பது பேருக்கு மேல் இருந்தார்கள். போட்டியின் முடிவில் எல்லோரும் ஆளுக்கொரு நூல் வாங்கி விட்டார்கள். என்னையும் வெண்பாவையும் தவிர.

18) விஷ்ணுபுரத்தார் எனக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதி அறையில் கூடுதலாய்த் தங்கிக் கொள்ள எழுத்தாளர் தேவிபாரதியின் உறவினர் எனச் சொல்லி ஒருவரை அனுப்பினார்கள் முதல் நாள் இரவு. அறுபது வயதுக்காரர். நரைத்த குறுந்தாடி, தடித்த கண்ணாடி. இலங்கைத் தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அதனால் எனக்குப் புரிதலில் சிரமங்கள் இருந்தன. என்னை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் பெரிய மனதுடன் மன்னித்தேன். பிறகு உறங்கத் தயாராகிப் படுத்து விட்டோம். எதற்கும் இருக்கட்டுமே எனப் பெயர் விசாரித்தேன். "தேவகாந்தன்" என்றார். நான் ஜெர்க் ஆகி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு "கனவுச்சிறை எழுதிய தேவகாந்தனா?" என்றேன். ஆமோதிப்பாய்த் தலையாட்டி, "கலிங்கு என்று அதன் தொடர்ச்சி இந்த ஆண்டு வந்திருக்கிறது." என்றார்.

19) இரண்டு நாட்களும் யாராவது சரவணன் சந்திரனுக்கான பாராட்டுக்களை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கான வசைகளை அவர் பெற்றாரா எனத் தெரியவில்லை.

20) லீனா மணிமேகலையின் கவிதையில் சத்தம் அதிகம் இருக்கிறது, அடுக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ஜெயமோகன் கேள்வி எழுப்பியது அவரது கவிதையின் கலைத்தன்மை பற்றியது மட்டுமே; அதன் உள்ளடக்கம் பெண்ணியக்குரலாக இருப்பது பற்றியே இல்லை. ஆனால் "பெண்கள் எழுதினாலே உங்களுக்குச் சத்தமாகத் தெரிகிறது" என்பதாக எடுத்துக் கொண்டு லீனா பதிலளித்து, நீண்ட விவாதமானது. (இத்தனைக்கும் அது வாசகர் கருத்து தான், தன்னுடையதல்ல என்று தெளிவுபடுத்தினார் ஜெயமோகன்.) லீனா கட்டுரை எழுதியிருந்தால் இக்கேள்வியே வந்திருக்காது. அது கவிதை என்பதால் தான் அதன் கலாப்பூர்வத்தை எடைபோட முயல்கிறார் ஜெயமோகன் (அல்லது வாசகர்கள்). நூறு வருட தமிழ் நவீனக் கவிதை விமர்சன மரபு அடிப்படையிலானது அவ்வினா. ஒருகட்டத்தில் சத்தம் பற்றி, "சாதாரணமா ஒரு விஷயத்தைச் சொன்னா கேட்கலைனா நாலு அறை விட்டுத்தான் ஆகனும்" என்றார் லீனா. ஜெயமோகன் சொல்ல வந்ததே இதைத் தான். "நாலு அறை விடுவது கவிதையா?" என்கிறார்.

21) ஜெயமோகனின் உயிரியல் வாரிசுகளைக் காண முடிந்தது. அஜிதன் அழகன். 'ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு' நூலில் பார்த்த‌ குழந்தை ("நாளைக்கு நான் பெரிய பொண்ணா ஆயி, மெபெட்டிலே ரொம்ம்ம்ப வேகமாப் போறப்ப நீ எனக்கு ஏன் சிவப்பு சுடிதார் வாங்கித் தரல்லே?") வளர்ந்து நிற்கிறாள். நம்பவே முடியவில்லை. வாழ்க!

22) "You are never completely understood as an artist." என்று தன் உரையாடலில் வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி சொன்னது ஒரு திறப்பு. அவர் பேச்சு நன்றாக இருந்தது. தமிழில் ஒரு சொல்லும் தெரியாது என்றாலும் அவர் இரண்டு நாளும் மிகப் பொறுமையாக, இணக்கமாக இருந்தார். இன்னொரு பக்கம் மதுபால் தன் முழுப் பேச்சையும் மலையாளத்திலேயே நிகழ்த்தினார். நான் பாதியில் எழுந்து சென்ற ஒரே அமர்வு அது மட்டுமே. குத்துமதிப்பாய் மலையாளம் புரிந்தது என்றாலும் என்னவோ உள்ளூர‌ அதில் மெல்லிசாய் offend ஆனேன் போலிருக்கிறது.

23) சில சமயம் எழுத்தாளனைப் பேச வைப்பது வன்முறை. ராஜ் கௌதமன் அரங்கு ஓர் அசம்பாவிதம் என்றே சொல்ல வேண்டும். அவரது பிரதியிலிருக்கும் தர்க்கமும் கோர்வையும் பேச்சில் இல்லை. "ஏன் சொல்றேன்னா, இன்னிக்குத் தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது" என்ற ரீதியில் தான் பேசினார். அது தான் அவரது இயல்பு என்பதைக் கொஞ்சம் நேரத்திலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது. அது அவரது வெள்ளந்தித்தன்மையிலிருந்து வருகிறது என்பது புரியும் போது இதைச் சொல்லச் சங்கடமாகவும் இருக்கிறது. விருது வாங்கிய பின் ஆற்றிய ஏற்புரை சற்றுப் பரவாயில்லை.

24) முதலிரவுக் கட்டிலில் பூக்கள் தொங்க விடுவது போல் மேடையின் பக்கவாடில் பலூன்கள் கட்டுவதைத் தவிர்க்கலாம். குழந்தை வாசகர்களும் நடமாடுவதால் இலக்கிய விழாவா பர்த்டே பார்ட்டியா எனக் குழப்பம் வந்து விடுகிறது.

25) 'ஆப்பிளுக்கு முன்' நாவலை நிறையப் பேர் (அவர்களில் சிலர் நான் விரும்பும் / மதிக்கும் படைப்பாளிகள்) வாசித்திருந்தார்கள் என்பது ஆச்சரியம். எல்லோருக்கும் அது பற்றிய நல்லபிப்பிராயம் இருக்கிறது.

26) ஓர் ஆணென்றும் பாராமல் வளைத்து வளைத்து எடுத்திருக்கும் விஷ்ணுபுரம் புகைப்படக்காரருக்கு நன்றி! (புகைப்படங்களில் எனக்குத் தொப்பை தெரிவதாகத் தோழிமார்கள் சொல்கிறார்கள். அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருக்கும் போது அர்னால்டுக்கே லேசாய் தொப்பை இருப்பது போல் காட்சிப்பிழை தோன்றும் என்பதை மறக்க வேண்டாம்.)

27) விஷ்ணுபுரம் விழாவின் நோக்கங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்: 1) தமிழின் முக்கியப் படைப்பாளிக்கு விருதளித்து அடையாளப்படுத்துவது. 2) அவர் பற்றி ஜெயமோகன் மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரின் கருத்துக்களைக் கட்டுரைத் தொகுதியாக வெளியிடுவது. 3) அவர் பற்றி ஒரு குறும்படம் வெளியிடுவது. 4) தமிழில் சாதித்த மூத்த எழுத்தாளர்கள் மற்றும் நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்களுக்கு வாசகர்களுடன் உரையாடல் அமர்வு ஏற்பாடு செய்வது. 5) பிற இந்திய மொழிகளின் முக்கியமான‌ எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அவர்களை விழாவுக்கு அழைத்து அவர்களுக்கும் வாசகர்களுடனான விவாத அமர்வு நடத்துவது. 6) அப்படி மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை அடுத்த ஆண்டில் தொகுப்பு நூலாக வெளியிடுவது. 7) இந்தச் செயல்பாடுகளின் வழியாக வாசக வட்ட அங்கத்தினரின் வாசிப்பை விரிவாக்கி, விமர்சன நோக்கைக் கூர்படுத்துவது. இம்மாதிரியான பிரம்மாண்ட இலக்கிய‌ இயக்கச் செயல்பாட்டுக்கு இந்திய அளவில் கூட‌ வேறு முன்னோடி இருக்கிறதா என்பது சந்தேகமே!

28) உணவும் உபசரிப்பும் உச்சம். விருந்துபுரம்; விருந்தோம்பல்புரம். பயணச்சீட்டு, தங்கும் விடுதி, போக்குவரத்து என அத்தனை ஏற்பாடுகளும் கச்சிதம். அரங்கசாமி, செல்வேந்திரன், மீனாம்பிகை, ஸ்ரீனிவாசன், சசிகுமார் உள்ளிட்ட விஷ்ணுபுரம் நண்பர்களின் அன்புக்கு நன்றி. அழைத்த / வாய்ப்பளித்த ஜெயமோகனுக்குப் பிரியங்கள்.

29) அடுத்த ஆண்டும் வர விரும்புகிறேன். பார்ப்போம்! (இப்படி எல்லாம் கேலி செய்தால் ரெட் கார்ட் போட்டு விடுவார்கள் என்று வெளியாட்கள் பயமுறுத்துகிறார்கள். அப்படி நடந்தால் போக வேண்டிய கடமை இரு மடங்காகிறது.)

30) இன்றைய செல்ஃபி சூழ், செல்ஃபோன் சூழ் உலகில் இவ்விரு தினங்களில் ஜெயமோகனுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்தப் பின்னிரவில் தான் உறைக்கிறது. :-)

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்