கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார்.
ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது.
இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் செழிப்புறுவதோ அசலான வளர்ச்சி அல்ல. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு நவீனமான நிர்வாகம் அதை நோக்கியே திட்டமிடும். மோடியின் குஜராத் வளர்ச்சி ஏன் அனைவருக்குமானதல்ல; கலைஞரின் தமிழகம் எப்படி அனைவருக்குமான வளர்ச்சி என்பதை ஆராய்ந்தால் இது விளங்கும்.
“இந்தியா ஒளிர்கிறது” என்ற வாஜ்பாய் அரசின் கோஷமும், “9 சதவிகித வளர்ச்சி” என்ற மன்மோகன் அரசின் கோஷமும், “புதிய இந்தியா பிறந்தது” என்ற இன்றைய மோடி அரசின் கோஷங்களும் இன்று எளிய மக்களிடையே எடுபடாமல் போவதற்குக் காரணம் அவை எல்லாம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல என்பது தான். கலைஞர் அதை ஆரம்பம் முதலே அறிந்து வைத்திருந்தது நம் அதிர்ஷ்டம்.
கலைஞர் தமிழகத்துக்குச் செய்த நவீன பங்களிப்புகள் டைடல் பார்க் கட்டியதும் மேம்பாலங்கள் கட்டியதும் மட்டுமல்ல. அவை நேரடியாக நம் கண்ணில் தெரியும் நவீனங்கள். உண்மையில் எல்லாத் துறைகளிலும் அவர் நவீனத்தைப் புகுத்தினார். பொருளாதார மற்றும் சமூகத் தளங்களிலும் நவீனமான பார்வையை முன்வைத்தார். ஏதொன்றில் பழைய சிக்கல்களை அகற்றி, எளிமைப்படுத்தலைக் கொண்டு வருவதும் நவீனமயமாக்குதலே. இரு உதாரணங்கள் உழவர் சந்தை மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். ஒன்றில் இடைத்தரகை அகற்றி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிட்டச் செய்தார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி. அடுத்ததில் சாதி வேற்றுமை களைந்த ஒரு மாதிரித் தமிழ்ச் சமூகத்தை உண்டாக்கிக் காட்ட முயன்றார். அது ஒரு சமூக மீட்டுருவாக்கம். இப்படி அவர் எல்லா இடங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார்.
*
விடுதலைக்குப் பின் நாட்டு வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தவும் (வளங்களைக் கணக்கிடுதல், குறைவான வளங்களைப்பெருக்குதல், சமச்சீர் முறையில் அவற்றைப் பயன்படுத்துதல்), உற்பத்தியைப் பெருக்கவும் (விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை), வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் திட்டக்குழு (Planning Commission) உருவாக்கப்பட்டது. நவீனஇந்தியாவை அடைவதற்கான முதற்படி என அதைச் சொல்லலாம். அதன் வழியே தான் ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாகின. பல்வேறு துறைகளிலும் தேசம் தன்னிறைவை அடைந்தது. ஜனங்களின் வாழ்க்கை மேம்பட்டது. அதில் நேரு என்ற பெருந்தலைவரின் தரிசனம் இருந்தது.
அண்ணாவுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த கலைஞர் 1971ல் மாநிலத் திட்டக் குழுவை (State Planning Commission - SPC) உருவாக்கினார். முதலமைச்சரின் தலைமையில் தமிழ் நாட்டின் முன்னேற்றம் தொடர்புடைய பல்வேறு சிபாரிசுகள் வழங்கும் அலோசனைக் குழு இது. தேசிய அளவிலான திட்டக்குழு போல் இதுவும் ஐந்தாண்டுத் திட்டங்களின் வழி மாநிலத்தின் வளர்ச்சியை மேற்கொண்டது. (i) விவசாயம் (ii) தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து (iii) நிலப்பயன்பாடு (iv) கல்வி, வேலைவாய்ப்பு (v) சுகாதாரம் மற்றும் சமூக நலன் (vi) மாவட்ட மற்றும் ஊரக வளர்ச்சி (vii) திட்ட ஒருங்கிணைப்பு என ஏழு பிரிவுகளில் சூழலை ஆராய்ந்து சரிவிகித மாநில வளர்ச்சிக்கான நிதி, நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சிக் குழுமம், சிறப்புப் பகுதிகள் வளர்ச்சித் திட்டம், மாநிலத்தின் புதிய முயற்சிகளுக்கான வைப்பு நிதி எனப் பல பெருந்திட்டங்களை ஆக்கியளித்தது. இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிறுதொழில் வளர்ச்சிக்கென தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (Small Industries Development Corporation Limited - SIDCO) 1970ல் கலைஞரால் உருவாக்கப்பட்டது. தமிழகம் எங்கும் தொழிற்பேட்டைகள் அமைத்தல், பராமரித்தல், அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கல், தயாரிக்கும் பொருட்களைச் சந்தப்படுத்தல் ஆகியன நோக்கம். இந்த அமைப்பு 59 தொழிற்பேட்டைகளைத் தமிழகத்தில் உருவாக்கியது.
போலவே 1971ல் தொழில் வளர்ச்சி கழகமும் (State Industries Promotion Corporation of Tamil Nadu - SIPCOT) பெருந்தொழில்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிற்வளர்ச்சிக்கென கலைஞரால் உருவாக்கப்பட்டது. 20 தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1973லும் 1989லும் இராணிப்பேட்டையில் இரு தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டன. போலவே ஓசூரில் 1974லும் 1989லும். (அதாவது 13 ஆண்டு வனவாசத்துக்கு முன்பும் பின்பும்.)
1996 - 2001 ஆட்சிலும் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிப்காட் சார்பில் புதிய தொழில் வளாகங்கள் திறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவற்றின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.
அரசு நிறுவனங்களை உருவாக்கியும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் மாநிலத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (Electronics Corporation of Tamil Nadu - ELCOT) கலைஞர் அரசின் முயற்சியில் தான் 1977ல் தன் பணியைத் துவக்கியது. (அப்போது அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி. ஆனால் விதை கலைஞர் இட்டது.) தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் விரிவாக்கம் மற்றும் மாநிலத்தின் மின்னணு ஆளுகைப் பரவலாக்கத்துக்கு முதுகெலும்பு இதுவே.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் விரிவான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை 1997ல் கலைஞர் உருவாக்கினார். மத்திய அரசு கூட 2004ல்தான் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். “மத்திய நிதியமைச்சர் சின்ஹா தமது பட்ஜெட் உரையில் குறிப்பிடத் தவறிவிட்டார். இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் உச்சியில் ஏறி நின்று சென்னையில் நிகழ்ந்து வரும் அமைதியான புரட்சி பற்றி உரக்கச் சொல்லிட வேண்டிய அவசியம் இல்லை. ஓசையில்லாமல் ஏராளமான மென்பொருள் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே நகரம் சென்னை தான்.” என்று தில்லியை இடித்து தெற்கைப் புகழ்ந்தது DQ Week என்ற இணைய இதழ் (06.03.2000).
1999ல் அவர் நடத்திய தமிழ் இணைய மாநாடும் ஒரு முக்கியமான சாதனை. 2000ல் முதன் முதலாக சென்னை தரமணியில் தகவல் தொழில்நுட்பப் பூக்கா (Tidel Park) உருவாக்கியதும் கலைஞரே. ஐந்தாண்டு இடைவெளியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது கோவையிலும் அதே போன்ற பிரம்மாண்ட ஐடி பார்க் உருவாக்கப்பட்டது. பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இது மிகவும் உதவியானது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் கொழிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் தமிழகம் எழுந்தது இம்மாதிரியான முன்னெடுப்புகளின் மூலமே.
*
கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தி. விவசாயம் மாநில முதுகெலும்பு என நம்பினார் கலைஞர். அவர் ஆட்சியில் விவசாயம் பெற்ற வளர்ச்சி நிகரற்றது.
1998ல் விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு அமைத்து பிற மாநிலங்களில் விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யச் சொன்னார் கலைஞர். சண்டிகரில் ‘அப்னே மண்டி’ என்ற பெயரில் உழவர்கள் தம் வண்டிகளில் அமர்ந்து விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதைப் பற்றி அறிந்தார். உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1999 - 2000ல் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. இன்று குறைந்தது 179 உழவர் சந்தைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இடைத்தரகர்களின் ஆதிக்கக்கொள்ளை களைந்த இத்திட்டத்தால் விவசாயிகளும் லாபம் பெற்றனர், பொதுமக்களும் லாபம் பெற்றனர்.
1970ல் கலைஞர் ஆட்சியில் நில உச்ச வரம்பு சட்டத்தைத் திருத்தி 15 ஏக்கர் என்று நிர்ணயித்தார் (அது வரை 30 ஏக்கர் என்று இருந்தது). இதன் படி 5 பேர் கொண்ட குடும்பம் அதிகபட்சம் 15 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருக்க முடியும். கூடுதல் உறுப்பினர்களுக்கு தலா 5 ஏக்கர்; மொத்த உச்ச வரம்பு 30 ஏக்கர். அவரது ஆட்சியில் தமிழகம் முழுக்க இச்சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு, சுமார் 1,78,880 ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவை சுமார் 1,37,236 நிலமற்ற விவசாய மக்களுக்குப் பிரித்து ஒப்படைக்கப்பட்டது. இன்றும் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்நிலங்களை 'கலைஞர் பட்டா' என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
40,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.7000 கோடி கூட்டுறவு விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்தார் கலைஞர். (2006ல் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியின் மேடையிலேயே இதை அறிவித்தார்.) ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் “அப்படிச் செய்திருக்காவிட்டால் பல விவசாயிகள் தற்கொலை செய்திருப்பர்” என்றார் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி.
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாய பாசனத்துக்கெனப் பயன்படுத்தப்படும் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 1990ல் உத்தரவிட்டார் கலைஞர். இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர். விவசாயம் குறிப்பிச்ச பருவ காலங்களில் மட்டுமே நடக்கும் என்பதால் ஆண்டின் 12 மாதமும் அவர்களின் பம்ப் செட் பயன்பாட்டில் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டு அவர் எடுத்த தர்க்கப்பூர்வ முடிவு அது. 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இதை மேலும் விரிவுபடுத்தினார்.
1996 ஆட்சியில் இயற்கைச் சீற்றத்தால் இறந்த ஆடுகளுக்கு ரூ. 1000ம், மாடுகளுக்கு ரூ. 5,000ம், கன்றுக்கு ரூ. 3,000ம் நிவாரணத் தொகை வழங்கினார். 1997 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் குறுகிய காலக்கடன்கள் மத்திய காலக் கடன்களாக, மத்திய காலக் கடன்கள் நீண்ட காலக் கடன்களாக கலைஞரால் மாற்றப்பட்டன. 2006ல் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தார். அவர்களுக்குக் குறைந்த வட்டியிலான வங்கிக்கடன்களை சாத்தியப்படுத்தினார். விஞ்ஞானிகள் உதவியுடன் சிக்கனப் பாசனத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.
“விவசாயி கிணறு வெட்ட அரசிடம் கடன் வாங்கி கிணறும் வெட்டி, கிணற்றில் தண்ணீர் வராமல் வாங்கிய கடனையும், வட்டியையும் கட்ட சொந்த நிலத்தையும், கடனில் வெட்டிய கிணற்றையும் விற்று கூலிவிவசாயியாக இழிந்து போவதிலிருந்து என்றைக்கு மாற்றம் ஏற்படுமோ?” என ஆதங்கப்பட்டார் கி.ராஜநாராயணன். கலைஞர் அதற்கு தன் ஆட்சிகளில் பதிலளித்தார். தமிழக விவசாயி தன் மனைவி தாலியை அடகு வைப்பதும் கையறு நிலையில் தாம்புக் கயிற்றில் தொங்குவதும் நின்றது.
விவசாயிகளைக் காப்பது மட்டுமல்ல, விவாசாயம் என்ற துறை விஞ்ஞானப்பூர்வமாக உயர வேண்டும், நவீன முகம் கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். 1989ல் ஆசியாவிலேயே முதன்முதலாக சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார். 1972ல் தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் விவசாயப் பொறியியல் ஆராய்ச்சிக் கல்லூரி திறந்தார்.
*
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கினார். பணியிலிருக்கையில் இறக்கும் அரசு ஊழியருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். அரசு ஊழியர்களைப் பழிவாங்கப் பயன்பட்ட இரகசியக் குறிப்பேட்டை ஒழித்தார். மாநிய சுயாட்சி என்பதை சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்றும், தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் வரை என்பதாக மட்டுமின்றி அரசின் வேர் நுனி, இலை நுனி வரை அதன் சாதகங்களைப் பரவச் செய்யும் எண்ணமே இது. இங்கு தான் அவர் ஒரே கையெழுத்தில் ஒரே நொடியில் லட்சம் அரசு ஊழியர்களை வீட்டு அனுப்பிய மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
மத்தியில் ஆளுங்கட்சி மக்களுக்கு உதவும் முன்னெடுப்பைச் செய்யும் போதெல்லாம் கட்சி வேறுபாடுகள் தாண்டி ஆதரவளித்தார். வங்கிகளை நாட்டுடமையாக்கவும், மன்னர் மானிய ஒழிப்புக்கும் இந்திரா காந்தி அரசுக்கு அவ்வகையில் துணையாக நின்றார் கலைஞர். (சொல்லப் போனால் தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் வங்கிகளை நாட்டுடமை ஆக்கும் யோசனையை முன்வைத்தவரே கலைஞர் தான்.) பேரம் பேசியும் சாதித்தார். 1969ல் நான்காம் ஐந்தாண்டுத் திட்ட இறுதிவடிவம் முடிவாகி விட்டது. தமிழகம் கோரியிருந்த சேலம் இருப்பாலை அதில் இடம் பெறவில்லை. கொஞ்ச நாளில் காங்கிரஸ் பிளவு கண்டு இந்திரா ஆட்சிக்கு ஆபத்து வர அவர் திமுகவின் 24 எம்பிக்கள் ஆதரவை நாடினார். கலைஞர் சேலம் இருப்பாலை கேட்டார். நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே அது சேர்க்கப்பட்டது. போலவே 2006 ஆட்சியில் 11வது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட போது அதில் சேது சமுத்திரம் திட்டத்தைச் சேர்த்து 37 ஆண்டுகளுக்குப் பின் அதற்கு உயிரளித்தார்.
கலைஞரின் கல்வி தொடர்பான சீர்திருத்தங்களும் மிக முக்கியமானவை. கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அதன் விளைவான மாணவர்களின் தர வேறுபாடு மற்றும் போட்டியிட இயலாமை ஆகியவற்றைக் களையும் நோக்கில் 2010ல் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டத்தை இயற்றினார் கலைஞர். முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை மற்றும் கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இதைக் கொண்டு வந்தார். 2006ல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் பயிற்சி மையங்களில் சேர்ந்து எழுதும் வாய்ப்பமைந்த பணம் படைத்த / நகர்ப்புற மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுவதை அறிந்து எல்லாத் தரப்பினரும் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்க உத்தரவிட்டார். உயர்குடியினர் எதிர்ப்பை மீறி அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்தால் பரவாயில்லை என்ற துணிச்சலுடன் இம்முடிவினை அமல்படுத்தினார் கலைஞர்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் (ஆண்டுக்கு ரூ. 8000). பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதியை பன்னிரண்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தார். ஏற்கனவே காமராஜரும், எம்ஜிஆரும் செயல்படுத்தியமுன்னெடுத்திருந்த பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டை சேர்த்தார். முந்தைய மாற்றுக்கட்சி ஆட்சி கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் உண்மையிலேயே நன்மை பயப்பதாக இருந்தால் அதை மேலும் ஊக்குவிக்கவோ விரிவுபடுத்தவோ தான் செய்தார். திட்டத்தின் கழுத்தில் கத்தி சொருகும் அற்பத்தனம் அவரிடமில்லை என்பதுமே ஒருவகையில் முன்னேற்றம் நோக்கிய நவீனச்சிந்தனை.
பள்ளிகளின் எண்ணிகையை அதிகரித்தார். பல புதிய கல்லூரிகள் திறந்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார். இங்கு கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கச் செய்தார். சுகாதாரத்திலும், கல்வியிலும், பிற அடிப்படை வசதிகளிலும் தமிழகம் முன்னணியில் இன்று நிற்க அவரே மிக முக்கியக் காரணம்.
*
திக மற்றும் திமுகவை வளர்க்கத் தமிழகம் முழக்க நடந்தே அலைந்து திரிந்ததாலோ என்னவோ இங்கே போக்குவரத்து வசதிகளின்றி மக்கள் எத்தனை சிரமப்படுகிறார்கள் எனப் புரிந்து வைத்திருந்தார். தமிழத்தின் சாலைகளை மேம்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. தமிழத்தின் எந்நகரத்தின் மேம்பாலங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் கலைஞருக்குப் பங்கிருக்கும். சாலைகள் இட்டது போட்டமின்றி எளியோர் போக்குவரத்துக்கு கிராமங்கள் வரை பேருந்துகள் விட்டார். 1996 ஆட்சின் போது நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து திட்டம் கொண்டு வந்தார்.
மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்தியதில் அவருக்கு இணையாக எந்த மாநில முதல்வரையேனும் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. சாலைகளை மட்டும் எடுத்தால் ஒருவகையில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு 2000-ங்களின் துவங்கத்தில் செய்த தேசிய அளவிலான பங்களிப்புக்கு இணையானது அது.
மின் இணைப்பு, குடிநீர் வழங்கல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இன்றும் பாரதப் பிரதமர் எல்லோருக்கும் மின் இணைப்பு வழங்குவதை ஒரு லட்சியமாகப் பேசிக் கொண்டிருக்கையில் இருபதாண்டுகள் முன்பே அதைச் சாத்தியமாக்கியவர். அவரது ஆட்சிக்காலங்களில் அரசு மருத்துவமனைகள் பெருகின. கிராமந்தோறும் சுகாதார மையங்கள் அமைத்தார். அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டமும், சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்குமும் திட்டம் கொண்டு வந்தார்.
2006ல் கிராம ஊராட்சிகளின் நிதி ஆதாரங்களை ஒருமுகப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டு வந்தார் கலைஞர். 12,500 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பல அடிப்படை வசதிகளைச் செய்து தருவது தான் பிரதான நோக்கம். இந்த வசதிகளில் விளையாட்டு மைதானம் அமைப்பது, சுடுகாடு கட்டித்தருவது, நூலகம் கட்டித் தந்து ஆகியவை அடங்கும். கூட்டுறவு, தற்சார்பு உணர்வை வளர்க்க நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
முதலில் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வெள்ளோட்டம் பார்த்த கலைஞர் பின் பொதுமக்களுக்கும் அதை விரிவுபடுத்தினார். 2009ல் தமிழக ஏழை மக்கள் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். வெளிநாடுகள் கூட இத்திட்டத்தின் சமூக, பொருளாதார அடிப்படைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இன்றும் திட்டம் செயல்படுகிறது. ஏழைகள் பன்முனை மருத்துவப் பரிசோதனை செய்யும் வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும் கலைஞர் முன்னெடுத்த முன்னோடித் திட்டம். 1970லேயே அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. பிறகு 2006ல் ஆட்சிக்கு வந்த போது "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கும் பொருட்டு" மீண்டும் அச்சட்டத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து சுமார் பிராமணர் அல்லாத 200 பேர் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பயிற்சி பெற்றனர். அவர் மறைவதற்கு ஒரு வாரம் முன் அப்படிப் பயிற்சி பெற்ற ஒருவர் மதுரைக் கோவில் ஒன்றில் அர்ச்சகராக அதிகாரப்பூர்வமாகப் பணியமர்த்தப்பட்டார். பிறப்பின் அடிப்படையில் அல்ல, கற்றலில் வருவதே எந்தப் பணியின் திறமையும் என்ற நவீனச் சிந்தனையின் வெளிப்பாடு இது.
கலைஞர் வாக்கரசியலுக்காக இலவசங்களை வாரி வழங்கினார் என்பது அவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. அவரைப் புகழும் பொருளாதார நிபுணர்களே இவ்விஷயத்தில் அவரைக் குறை கூறுகிறார்கள். அவர் தேர்தல் வெற்றிக்காக அதைச் செய்திருக்கலாம். ஆனால் அதில் நாட்டு நலன் ஏதும் பாதிப்படையவில்லை. அது போக, அப்படியான இலவச அறிவிப்புகளுக்குப் பின் தொலைநோக்கு இருந்ததாகவே படுகிறது. உதாரணமாக கலைஞர் டிவி என்று மக்களால் குறிப்பிடப்படப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சி அறிவிப்புகளைச் சொல்லலாம். தொலைக்காட்சி வசதி வந்து விட்ட இடங்களில் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாகவும் அதனால் குற்றச் செயல்கள் குறைவாக இருப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. அது போக, மின் இணைப்பே இல்லாத சில இடங்களில் தொலைக்காட்சி வழங்கப்பட்டதாலேயே மின் இணைப்பும் வழங்கப்பட வேண்டியதாக இருந்தது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன் என்ற வழக்கறிஞர், ஊராட்சித் தலைவர், மலைவாழ் மக்கள் நலனுக்காகப் பணியாற்றுபவர் தொலைக்காட்சி தம் மக்களுக்கு இப்படித் தான் உலகம் இருக்கிறது என்ற புரிதல் வந்தது, உலகத்தை எங்களோடு இணைத்த திட்டம் அது என்கிறார்.
*
கலைஞர் எப்படி மாநிலத்தின் வளர்ச்சியை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆக்கினார்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த நிலையில் இருந்த அனைவருக்கும் கருப்புக் கண்ணாடி தாண்டிய கடைக்கண் பார்வையை அளித்தார். வளர்ச்சி என்பது அவர்களின் புன்னகையே என நினைத்தார்.
மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அன்று அதிகப் புழக்கத்தில் இருந்தன. பராசக்தி படத்தில் அதை ஒழிக்கும் கனவைக் கலைஞர் வெளிப்படுத்தி இருப்பார். சுமார் இருபதாண்டுகளுக்குப் பின் தான் ஆட்சிக்கு வந்ததும் "மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு" என்று சொல்லி கை ரிக்ஷாக்கள் ஒழித்து, அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கினார். தான் எழுதிய வசனத்தை அதிகாரம் கைக்கு வந்ததும் மெய்ப்படுத்தினார். இந்திய தேசத்துக்கே முன்னோடியான நடவடிக்கை அது.
1971ம் ஆண்டின் தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தமிழ்நாட்டில் சேரிகளை அகற்றி, அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கினார். குடிசைகளிலும், நடைபாதைகளிலும், சாலை மருங்கிலும் வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கான்க்ரீட் கூரைக்குள் கொணர்ந்தார்.
வாழ்நாள் முழுவதும் சமத்துவத்துக்காகப் போராடிய தந்தை பெரியார் நினைவாக அவரது பெயரிலேயே 1997ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் அறிமுகம் செய்தார். “பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்” என்றார் பெரியார் (குடியரசு, 11-11-1944). மிகத்துல்லியமாக அந்த வாசகம் உயிர்பெற்றெழுந்தால் அது சமத்துவபுரம். அந்த வளாகத்தில் நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் ஐந்து செண்ட் அளவு. சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பூங்கா, தேவைப்பட்ட இடங்களில் பள்ளிக்கூடம் எனப் பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய அங்கே தந்தை பெரியார் சிலையும் இருக்கும். பொது மயானமும் கூட அமைந்த அவ்விடத்தே எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக்காது (அவரவர் வீட்டுக்குள் சாமி கும்பிடுவது பிரச்சனையில்லை.) வீடுகள் ஒதுக்குவதில் சமூக நீதி பின்பற்றப்பட்டது: தாழ்த்தப்பட்டோருக்கு 40%, பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, பிராமணகள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு 10%. 1996 ஆட்சி காலத்தில் 145 சமத்துவபுரங்களும், 2006 ஆட்சியில் 95 சமத்துவபுரங்களும் தமிழகமெங்கும் திறந்தார். இந்தியாவில் யாருக்கும் தோன்றியிராத இத்திட்டத்தை கலைஞர் இங்கே செய்தது ஒரு மகத்தான சமூகப் பரிசோதனை. அது ஒரு மிக நவீனமான முன்னெடுப்பு. ஒருவகையில் மொத்த தமிழகத்தையே சமூக நீதி திகழும் சமத்துவபுரமாக்க கலைஞர் கண்ட பெருங்கனவின் சிறுதுளி தான் அத்திட்டம்.
தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோரைக் கைதூக்கிவிட கலைஞர் செய்த உதவி அளப்பரியது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி துறை அமைத்தார். சமூக நலத்திற்காகத் தனி அமைச்சகம் ஏற்படுத்தினார். மொத்த இட ஒதுக்கீட்டை 49 சதவிகிதம் என்று உயர்த்தி இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் ஒரு மிக முக்கியமான தைரியமான நகர்வை முன்னெடுத்தவர் கலைஞரே. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பிற்பாடு செய்த உயர்த்தல்கள் அதன் அடியொற்றியே சட்டநாதன் ஆணையம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவிகிதம் ஆக்கினார்; தாழ்த்தப்பட்டோருக்கு 16லிருந்து 18 சதவிகிதம் ஆக்கினார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு கொணர்ந்தார். உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இஸ்லாமியர்களுக்கு 3.5 உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனியாக 20% ஒட ஒதுக்கீடு கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டப் படிப்பு வரை கட்டணம் ரத்து செய்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்க பல நூறு விடுதிகள் அமைத்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி முகாம் தொடங்கினார். யோசித்தால் இந்தியாவின் சமூக நீதிக் காவலர் விபி சிங் என்பது போல் தமிழகத்தின் சமூக நீதிக் காவலர் கலைஞர்!
1989 -1991 ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். மக்கட்தொகையில் பாதிக்கு மேல் இருக்கும் ஆண்களின் எதிர்ப்பைச்சம்பாதிக்க வேண்டி இருக்கும் என்று தெரிந்திருந்தும் இதைச்செய்தார். அதன் பிறகே மத்தியஅரசு பெண்கள் சொத்துரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மாநில அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார். ஏழைப்பெண்டிருக்கு மூவலூர் இராமாமிருதம் திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான மறுமண உதவித் திட்டம், விதவைப் பெண்கள் தொழில் தொடங்க உதவி, பெண்களுக்கு இலவசப் பட்டப்படிப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் வரை மாதந்தோறும் நிதியுதவி முதலான அவரது பிற திட்டங்களும் பெண்களுக்கு உதவிகரமாக அமைந்தன. 1989ல் தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழு தொடங்கி வைக்கப்பட்டது. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது. பெண்களுக்கு என தனியே கருப்பூர், வாளவந்தான் கோட்டை, திருமுல்லைவாயில், திருமுடிவாக்கம், கப்பலுர் ஆகிய 5 இடங்களில் பெண்கள் தொழிற்பூங்காக்களை 2009ல் உருவாக்கி பெண் தொழிற்முனைவோரை ஊக்குவித்தார். இன்று தமிழ்பெண்கள் பல துறைகளில் கம்பீரமாகக் கோலோச்ச கலைஞரே பிரதானக் காரணம் என்றால் அது மிகையல்ல.
Unorganised Workers எனப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக - ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம், பணிக்காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்ளிட்ட பலன்கள் - விவசாயத் தொழிலாளர், மீனவர், கட்டுமானத் தொழிலாளர், சீர்மரபினர், பழங்குடியினர், ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், ஊனமுற்றோர், அரவாணிகள், வண்ணார், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள், தூய்மைப் பணிபுரிவோர், நரிக்குறவர், உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், அருந்ததியர், கட்டட தொழிலாளர்கள், புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர், அச்சக தொழிலாளர், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வணிகர்கள், வீட்டுப் பணியாளர், பொற்கொல்லர், திரைத் தொழிலாளர் உள்ளிட்ட மொத்தம் 35 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை 2006 முதல் 2011 ஆட்சிக் காலத்தில் உருவாக்கிச் செயல்பட வைத்தார் கலைஞர். ஒரு சமூகப் புரட்சி என்றே சொல்லலாம் இதை.
தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மொழிப்போர் தியாகிகளுக்கு ஒய்வூதியம் வழங்கினார்.
பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்கும் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, சுடுகாடு, இடுகாட்டில் பணி செய்தோருக்கு அரசு வேலை, மீனவர்களுக்கு இலவச வீடு, கோயில்களில் அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிக்க கருணை இல்லம், இலவச சமையல் எரிவாயு அடுப்பு, ஏழைகளுக்கு இலவச வீடு என அவர் விளிம்பு நிலை மனிதர்களுக்குச் செய்த உபகாரம் ஏராளம்.
தேர்தல் வாக்குறுதிப்படி 2006ல் கிலோ அரிசி 2 ரூபாய்க்குக் கொடுத்தவர் இரண்டே ஆண்டுகளில் அதைப் பாதியாகக் குறைத்தார். 2008 முதல் கிலோ அரிசி 1 ரூபாய் விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
*
நாம் கலைஞரின் பண்டைய முகம் எனக் கருதும் குறளோவியமும், சங்கத்தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் கூட உண்மையில் நவீனத்துவத்தின் முகம் தான். அவர் அந்தப் பழைய விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும், அவர்கள் ரசிக்கும் நவீன வடிவில் கடத்த முயன்றார். அவற்றைக் கற்றறிந்தவனாக அது தன் கடமை என் நம்பினார். கட்சி வேலைகள் கழுத்தை நெரிக்கும் போதும், ஆட்சிப் பணிகள் அழுத்தம் தரும் போதும் இவற்றைச் செய்ய நேரம் ஒதுக்கினார்.
சென்னை வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை, மெரீனா கண்ணகி சிலை போன்றவை எல்லாம் கூட அவர்களை நவீன வகையில் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளே! தமிழை நவீனப்படுத்த, உலகெங்கும் பரப்ப உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்; தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் செய்தார். அண்ணா நூற்றாண்டு நூலகம் அவரது இவ்வகையான செயல்பாடுகளின் உச்சம்.
ஊனமுற்றோர் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்குத் திருநங்கை என்ற சொற்களை அதிகாரப்பூர்வமாக்கியது கூட நவீன முன்னெடுப்பே. சரியாய் அடையாளப்படுத்துதலில் தொடங்குகிறது மாற்றம் என்று சொல்லாமல் சொல்கிறார். அவ்வகையில் விதவை என்ற சொல்லுக்குக் கூட மாற்றாய் கைம்பெண் என்றார். மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்பதாக மாற்றியதையும் இதோடு இணை நோக்கலாம் (அதாவது முன்னதில் காலனி மனோபாவ மிச்சங்கள் இருப்பதால்).
திராவிடம் என்ற சிந்த்தாந்தமே பழமைக்கு எதிரான நவீனக் கருத்தாக்கம் தான். அது இன்று தமிழகத்துக்கு அவசியமானதென்றும் வெல்லக்கூடியது என்றும் கடந்த அரை நூற்றாண்டில் நிரூபித்ததற்காக தமிழர்கள் அனைவருமே கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். மூன்று தலைமுறைகள் அத்தத்துவம் நோக்கி வசீகரித்திருக்கிறார். இன்று கம்யூனிஸம் வீழ்ந்து விட்டது என்கிறார்கள். ஏன்? கம்யூனிஸக் கட்சிகள் ஆட்சியை இழந்து விட்டதை, அவர்கள் தவறான ஆட்சி முறையால் மக்கள் அவர்களை வெறுத்து விட்டதையே சித்தாந்தத் தோல்வியாகச் சித்தரிக்கிறார்கள். அந்த ஆபத்து எல்லாச் சித்தாந்தத்துக்கும் உண்டு. திராவிடத்துக்கும் இருந்தது. ஆனால் கலைஞர் அதை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டார். சமூக நீதி, மொழி உரிமை, மாநில சுயாட்சி என திராவிடம் என்பது இன்றும் அவசியமான, வெல்லும் சித்தாந்தம் என்று நிரூபித்துக்காட்டினார். மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தானே அதில் பங்குண்டு எனக் கேட்டால் பெயரில் திராவிடம் கொண்டுள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள் ஆகி விட முடியாது. அதை மீறி சில பங்களிப்புகளை அவர்கள் தம்மையறியாமல் செய்திருக்கலாம். மறுக்கவில்லை. நான் சொல்வது திட்டமிட்டுச் செய்தது. அப்படிப் பார்த்தால் அது அண்ணாவும் கலைஞரும் தான்.
கலைஞரின் பொதுவெளியில் செயல்பட்டுக் கொண்டிருந்த கடைசி ஐந்தாண்டுகளில் சமூக வலைதளங்களிலும் மிகத் துடிப்பாக இயங்கினார். அவர் ஒரு நவீனச் சிந்தனையாளர் என்பதற்கு அதையும் ஒரு குறியீட்டு உதாரணமாகக் காட்டலாம். காரணம் அவர் தலைமுறை சார்ந்த, அரசியலில் மிஞ்சியிருக்கும் அரசியல்வாதிகள் எவரும் அதைச் செய்யவில்லை. அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மக்களுடன் உரையாடும் ஊடகம் என்ற புரிதல் இல்லை. அடுத்து அவர்களுக்கு கணிப்பொறி, செல்பேசிகள் சம்மந்தமான தம் அறியாமை குறித்த ஓர் அச்சமும் அதன் நீட்சியான ஒவ்வாமையும் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. ஒரு முதல்வருக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தும் அடிப்படையாய்க் கணிப்பொறியைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று ஓர் அதிகாரி சொன்னதை இதோடு இணைத்துப் பார்க்கலாம். ஆனால் கலைஞர் ஓர் இளைஞனைப் போல் ஆர்வமாய் எல்லாவற்றையும் கற்றார். போலவே அவரே அவற்றில் பெரும்பாலும் எழுதினார். எதையாவது எழுதி விட்டு அட்மின் செய்த பிழை என்று ஓடி ஒடியும் பேடித்தனத்தைச் செய்தாரில்லை.
*
தமிழகத்தில் கலைஞரால் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றியுள்ளன. சிலவற்றை மத்திய அரசுமே பின்பற்றியிருக்கிறது. கலைஞர் ஒரு முன்னோடி. அந்த முன்னோடித்தன்மை ஒரு நவீனச் சிந்தனையாளனின் சாயல்.
காமராஜரும், அண்ணாவும் தமிழத்தின் வளர்ச்சியைக் கனவு கண்டார்கள் என்பது உண்மையே. ஆனால் அதைத் தன் நிர்வாகத் திறன் மூலம் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். சந்தேகமே இல்லாமல் நவீனத் தமிழகத்தின் சிற்பி கலைஞர் தான்!
***
உயிர்மை (செப்டெம்பர் 2018) - கலைஞர் சிறப்பிதழில் வெளியான கட்டுரை
Comments