நவஅரசியல் நடனம்


சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார்.


தெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்ரில்லர் நாவல்கள் தந்திருக்கிறார்கள். ஆனால் திகில், திருப்பம் ஆகிய அடிப்படைகளில் மட்டுமில்லாமல், கதையின் உயிர்ப்பு, நம்பகத்தன்மை போன்றவற்றையும் கணக்கெடுத்தால் பொருட்படுத்தத் தகுந்த அரசியல் நாவல் என சுஜாதா எழுதிய சிலவற்றைத் தான் குறிப்பிட முடிகிறது (உதா: 24 ரூபாய் தீவு, பதவிக்காக). பா.ராகவன் எழுதிய கொசுவும் இவ்வகையில் வரும். உள்ளடக்கம் வலுவென்றாலும் அவற்றின் சுவாரஸ்யம் தொடர்பாய் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. 'வெட்டாட்டம்' அவ்வகையில் தமிழின் சிறப்பான அரசியல் த்ரில்லர் நாவல் என்பேன். மேற்சொன்னவர்கள் ஜாம்பவான்கள். ஆனால் ஓர் இளம் எழுத்தாளனின் முதல் நாவல் இப்படியொரு அந்தஸ்தைப் பெறுவது என்பது ஆச்சரியமான விஷயம் தான். அதற்காகவே ஷானை நாம் கொண்டாடலாம்.

பல இடங்களில் ஒரு தேர்ந்த திரைப்பட எடிட்டர் அல்லது திரைக்கதை ஆசிரியரின் லாவகத்துடன் ஒரே சமயத்தில் நடக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் பங்கேற்கும் வெவ்வேறு நிகழ்வுகள் தொடர்பான‌ காட்சிகளை மாறி மாறி சொல்லிச் செல்கிறார். பிரதியின் வாசிப்பின்பத்தை இந்த உத்தி வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. நாவலை சினிமாவாக ஆக்குவதும் அஃதே!

வெகுஜன எழுத்து என்றாலும் ஆங்காங்கே சில மானுட அவதானிப்புகளைத் தெறிப்புகளாக விட்டுச் செல்கிறது நாவல். தொழில்நுட்ப விஷயங்கள் வாசகனுக்குத் தேவையான அளவு, அதுவும் எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. சில reading between the lines இடங்களும் உள்ளன (உதா: வருண் மற்றும் கயல்விழி இடையேயான ஓர் உரையாடலின் முடிவில் கடைசிக் கேள்வியைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறிது நேரம் பேசியிருப்பாள் என்று வருணுக்குத் தோன்றும் இடம்.)

எம்ஜிஆர் - கலைஞர், ஜெயலலிதா - அப்போலோ, கூவத்தூர் ரெஸார்ட், லாலு - ராப்ரி, சந்திராசாமி, கண்டெய்னரில் பணம், வாரிசு அரசியல், அன்பழகன் எனப் பல அரசியல் விஷயங்களையும் ஆங்காங்கே வடிவம் எடுத்தாண்டு நினைவூட்டுகிறது.

நாவலிலிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள்:

படைத்தலில் கடவுளை மனிதன் நெருங்கவே முடியாது. எனவே அழிக்கும் போது தான் மனிதன் கடவுளுக்கு வெகுஅருகில் செல்கிறான்...

எல்லா ஆட்டங்களும் வெற்றி பெறுவதோடு நிறைவு பெற்று விடுவதில்லை. அந்த வெற்றியைத் தக்க வைக்கும் ஆட்டம் உடனே தொடங்கி விடுகிறது.

(வருண்) எவ்வளவு திறமையான ப்ரொகிராமர். அவன் தந்தை அவனை ஒரு சாதாரண முதல் மந்திரியாக்கி விட்டார் என்ற தகவல் வந்த போது மிகவும் வருந்தினான் வாங். ஒரு மாஸ்டர் ப்ரொக்ராமருக்கு அதை விட வாழ்க்கையில் பெரிய தண்டனை என்ன இருந்து விடப் போகிறது? "ட்யூட் ரெஸ்ட் இன் பீஸ்" என்று செய்தி அனுப்பினான்.

ஐடி / பொறியியல் துறையிலிருந்து எழுத வந்தோர் இன்று பலரும் உண்டு. அவர்களில் நான் பெரிதும் மதிப்பவர்கள் என்.சொக்கன் மற்றும் ஷான். காரணம் அவர்கள் பின்புலம் என்பது அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படும். அதாவது தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் அல்ல; எழுத்தின் நேர்த்தியில், தர்க்கத்தன்மையில், அணுகுமுறையில். அது இந்நாவலில் அழுத்தமாய் வெளிப்பட்டிருக்கிறது. சர்வநிச்சயமாய் ஒரு பொறியாளர் எழுதிய நாவல் 'வெட்டாட்டம்'.

குறைகளையும் பட்டியலிட்டு விடுவோம். பல இடங்களில் ராஜேஷ்குமாரின் நடையை நினைவூட்டியது. அதை எதிர்மறை என்பேன். இன்னும் சில இடங்களில் சுஜாதாவை. அது குறையாகப்படவில்லை. ஆனால் ஷான் புனைவில் இன்னும் தனக்கான நடையைக் கண்டடைய வேண்டும் என நினைக்கிறேன். சொன்னதையே திரும்பச் சொல்லுவதும் சில இடங்களில் காண முடிகிறது. அவ்விடங்கள் அலுப்பூட்டுகின்றன. (உதா: பாத்திர விரவணைகள், அவர்களிடையேயான உறவு வர்ணனைகள். குறிப்பாய் நர்மதா, கயல்விழி, சுவாதி பற்றிய இடங்களில் கண்ட நினைவு.) அப்புறம் புத்தகம் நெடுகிலும் ஏகப்பட்ட சந்திப்பிழைகள். (இன்றைய தேதியில் பலர் சந்திப்பிழைகளை பிழைகளாகவே கருதுவதில்லை!)

ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வரும் பரமபதம் பற்றிய குறிப்புகள் மட்டும் கொஞ்சம் மொக்கையாகப்பட்டன. திணிக்கப்பட்ட தத்துவச்சொருகல் போல். குறிப்பிட்ட அத்தியாயத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்புடையதோ என எண்ணி முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்தவன் பிறகு அப்படியில்லை என்றுணர்ந்து அவற்றைப் படிக்கவில்லை. (ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன் அத்தியாயத் துவக்கங்களில் த‌ரும் பொது அறிவு / மாந்திரீகத் தகவல்கள் போல்!)

NOTA படம் இந்நாவலைத் தழுவியதா என்ற கேள்விக்கு ஷான் பதிலளிக்காமல் நழுவியதிலிருந்தே 'ஆம்' என்பது தான் பதில் எனப் புரிந்தாலும் ட்ரெய்லரையும் நாவலையும் ஒப்பிட்டாலே அப்படித்தான் என்பது உறுதியாகிறது. நாவலில் வரும் வசனங்கள் (கேமின் கடைசி லெவலை நேரடியாக ஆடுதல், 20,000 கோடி ரூபாய் பணம்) ட்ரெய்லரில் இருக்கின்றன. நாவல் ஒருவேளை "அப்படியே" படமாக்கப்பட்டால் சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஹிட்டாக அமையும். கேவி ஆனந்த் - சுபா காம்போ படம் போல் பரபரவென நகர்கிறது நாவல். கிட்டத்தட்ட எந்த இடத்திலுமே தொய்வும் இல்லை, பிசிறும் இல்லை. சில இடங்களில் முதல்வன் படம் நினைவுக்கு வந்தது - குறிப்பாக க்ளைமேக்ஸ் (இதைப் பாராட்டாகவே சொல்கிறேன்).

NOTA படத்தை ஆவலாக எதிர்நோக்குகிறேன். (NOTA என்பதை எப்படி இக்கதையோடு பொருத்தினார்கள் என்றறியவும்!) நாவலில் வரும் வருணாக வந்தால் விஜய் தேவரகொண்டாவைக் கூடப் பிடித்து விடுமோ எனப் பயமாக இருக்கிறது.

சினிமாவில் நுழைய விரும்பும் திரைக்கதையாசிரியர்களுக்கு வெட்டாட்டம் ஒரு பாடம் எனலாம். எப்படி புதிய அலை இயக்குநர்கள் குறும்படம் எடுத்து அதன் வழியே சினிமா வாய்ப்புகள் பெற்றார்களோ, அதே போல் ஒரு நாவலின் வழி சினிமாவில் எழுத்தாளனாய் நுழைய முடியும் என்று ஷான் நிரூபித்திருக்கிறார். திரைக்கதை எழுதி விட்டு சினிமாக் கம்பெனிகள் ஏறி இறங்குவதை விட, சினிமாவுக்கேற்ற நாவல் என்றால் தானாய் சினிமா கதவைத் தட்டும். ஹாலிவுட், மலையாளம் மற்றும் வங்காளத்தில் இது சகஜம் என்றாலும் தமிழ், தெலுங்கு, இந்தியில் அப்படியில்லை. சேத்தன் பகத் தன் ஆங்கில நாவல்களின் மூலமாக‌ பாலிவுட்டில் இதைத்தான் செய்தார். தமிழில் ஷான் துவக்கி வைத்திருக்கிறார்.

தமிழில் உண்மையில் இன்று வெகுஜன எழுத்துக்கான இடம் காலி தான். (கே.என்.சிவராமன் எழுதுகிறார். 'கர்ணனின் கவசம்' மட்டும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் பல விஷயங்களைச் சொல்ல முயன்று நாவல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று தோன்றுகிறது.) ஷான் அவ்வெற்றிடத்தைச் சிறப்பாக நிரப்புவார் எனப் படுகிறது. என்னுடன் இணைந்து தான் அவர் இணையப்பிரிவில் சுஜாதா விருது பெற்றார். சட்டென இப்படியொரு முகத்துடன் அசத்துகிறார். கூட இருந்தவர் சட்டென வளர்ந்து நிற்கையில் ஏற்படும் பிரம்மிப்பு! (வெகுஜன எழுத்து என்பது வளர்ச்சியா? அதைப் பார்த்து பிரம்மிக்க வேண்டுமா? எனக் கேட்டால் 'ஆம்' என்று வலுவாகச் சொல்வேன். அதன் சிரமம் எனக்குத் தெரியும். அது சாதனையே. தவிர வெகுஜன எழுத்துக்கும் வாசிப்பில், வாசக வளர்ச்சியில் முக்கியப் பங்கிருக்கிறது என நம்புகிறேன்.)

ஷான் ஜெகுஜன எழுத்தைத் தன் வழியாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்பதை அறியேன். தீவிர இலக்கியத்தில் நுழைந்தாலும் அவர் ஜ்வலிப்பார் என நம்புகிறேன். இப்போதைக்கு ஜெகுஜன எழுத்தில் தன்னை நிரூபித்து விட்டார். வெகுஜன எழுத்தென்பது படித்து விட்டு மறந்து போகும் விஷயம் அல்ல என்பதையும் நிறுவியிருக்கிறார். அதனால் வெகுஜன எழுத்து அவரது தேர்வாக இருப்பினும் தவறே இல்லை. ஒருவேளை வருங்காலத்தில் தீவிர இலக்கியத்தின் பால் அவர் திரும்பினாலும் அவ்வப்போது இவ்வகையான நல்ல வெகுஜன எழுத்துக்களையும் அவர் தர வேண்டும் என்பதே ஒரு வாசகனாக‌ என் வேண்டுகோள். (ஜெயமோகன் உலோகம் மற்றும் நான்காவது கொலை எழுதியது போல்.) NOTA தாண்டி மோகன் ராஜா, கேவி ஆனந்த், ஷங்கர் எனப் பல‌ இயக்குநர்கள் அவர் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வாழ்த்துக்கள்!

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி