காமக்கிழத்திகள்


Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women!


முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள்ள முடியும் எனக் கேட்கும் ஒரு நவீனச் சிந்தனையுடைய திருமணமான பெண் கலிந்தி. தான் விரிவுரையாளராக இருக்கும் வகுப்பின் மாணவனுடனே உறவு கொள்கிறாள். கணவன் அருகில் இல்லை என்பதால் ஊர் மேய்கிறாள் என்று இதை எளிமையாகச் சுருக்கிப் பேச முடியும் என்றாலும் தன் செய்கை குறித்து அவளுக்கென ஒரு தர்க்கம் இருக்கிறது, அதை இடையிடையே கேமெரா பார்த்துப் பேசுகிறாள். அந்தப் பகுதிகள் யாவும் ரசனையானவை. அக்காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அள்ளுகிறது.

ஆனால் கலிந்தி பேசும் தர்க்கத்திற்கும் அவள் நடந்து கொள்வதற்கும் சம்மந்தமே இருப்பதில்லை. உறவு கொண்டதைக் காரணமாக்கி மாணவன் தன் மீது ஆதிக்கம் செலுத்த முயலக்கூடாது என எதிர்பார்க்கிறாள் (உதாரணம்: அதாவது பிற ஆண்களுடன் அவள் பேசக்கூடாது என்று சொல்வது, மற்ற ஆண்களுடன் அவள் பேசுவதைப் பகிர வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை). ஆனால் உண்மையில் அவள் தான் அதை அவனுக்குச் செய்கிறாள். மாணவனின் வீட்டில் கண்டெடுக்கும் தன் பேண்டீஸையே யாருடையது என அவனைச் சந்தேகப்பட்டு அடிப்பது அதன் உச்சம். ஆனால் அதன் பொருள் மாணவன் மீது அவளுக்குக் காதல் என்பதில்லை. அவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்பதுமில்லை (எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.) அவள் தன் மணவாழ்க்கையில் நீடிக்கவே விரும்புகிறாள். இப்படியான முரண்பாடுகளின் மூட்டையாக கலிந்தி பாத்திரம் இருக்கிறது ('உன்னாலே உன்னாலே' சதா போல்).

யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் பெண்கள் இப்படியானவர்களே எனத் தோன்றுகிறது. தம் சொல்லும் செயலுக்கும் சம்மந்தமில்லாத குழம்பிய மனநிலையில் உள்ள‌வர்கள். குறிப்பாய் ஆண்களுடனான உறவுகளில் இப்படியான விநோத முரண்கள் நிரம்பியிருக்கும். அதை உடைத்துப் பேசுகிறது என்பதால் இதை ஓர் ஆணாதிக்கப் பிரதியாகவும் வாசிக்கலாம். இப்பகுதியின் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. ராதிகா ஆப்தேவும் அனுராக்குடன் இணைந்து எழுதி இருக்கிறார்!

படத்தில் ராதிகா பேசும் கடைசி வசனம் (பாகல் ஹே க்யா? ஷாதி ஷூதா ஹே மே!) மீனம்மாவின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. மதுவும் கலிந்தியும் ஒரே மாதிரி குழப்பம் கொண்ட பெண்கள் தாம்!

ஸோயா அக்தர் இயக்கியிருக்கும் இரண்டாம் பகுதி ஒரு பேச்சிலருக்கும் அவன் அடுக்கக வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண்ணுக்கும் நடக்கும் உடலுறவில் தொடங்குகிற‌து. அவள் அவளை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறான், அதைத் தாண்டி அவள் மீது எந்தச் சிறுபிரியமும் கொண்டவன் இல்லை என்பது அடுத்து வரும் காட்சிகளில் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு அது ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. அதைக் கடந்து தன் இயல்பு வாழ்க்கையில் கரைவது தான் கதை. சுதாவாக வரும் பூமி பெட்னேகர் கொஞ்சமும் மிகையின்றி ஒரு பணிப்பெண்ணாக‌ அசத்தலாக நடித்திருக்கிறார். நான்கு படங்களில் எனக்கு மிகப்பிடித்தது இதுவே. காரணம் இதில் தான் வெறும் அறிவுப்பூர்வக்கதை சொல்லலாக மட்டும் எஞ்சாமல் அந்தப் பெண்ணின் உண்மையான மற்றும் நியாயமான உணர்வுகள் நம்பகத்தன்மையுடன் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அளவான வசனங்கள், கச்சிதமான கலவிக்காட்சி என கலாப்பூர்வமாகவும் நிறைவான படம். படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதும் இங்கே நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்தது திபாகர் பேனர்ஜி இயக்கியிருக்கும் படம். மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். மத்திய வயதுப் பெண் ரீனா தன் கணவனின் நெருங்கிய சினேகிதனுடன் சில ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருக்கிறாள். கணவன் அவளை ஒரு மனைவியாகப் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் தாயாக மட்டுமே பார்க்கிறான் என்பதும் அத்திருமணத்தின் பொருட்டு தன் வாழ்வின் லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது என அவள் கருதுவதே காரணம். ஒரு நாள் அவள் கணவனுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. அதைக் கையாள்வதோடு எப்படி அதைத் தன் எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் கதை. Shrewd என்பார்கள். அது மாதிரி ஒரு புத்திசாலித்தனம் ரீனாவின் பாத்திரத்தில் வெளிப்படுகிறது படத்தின் பிற்பகுதியில். முற்பகுதி நமக்கு ஏற்படுத்தும் அவள் குழப்பமானவள், பலவீனமானவள், திக்கற்றவள் என்ற பிம்பம் கடைசியில் இவ்வாறு நொறுங்குகிறது. 'வெற்றி' என்ற ஜெயமோகனின் சிறுகதையை இது நினைவூட்டியது. அதன் நாயகி இப்படித்தான் நுட்பச்சதி செய்வாள். அவள் கணவனிடமே திரும்புவதும் அதன் பின்னிருக்கும் உணர்வுகளும் மீனம்மா கயலின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையை ஞாபகப்படுத்தியது.

கடைசியாய் கரண் ஜோகர் இயக்கியிருக்கும் படம். திருமணமான ஒரு பெண் கலவியில் ஈடுபடுவதன் நோக்கம் குழந்தை பெறுவது மட்டுமல்ல, அவள் உடலின்பத்துக்கும் தான் என்ற கருத்தைச் சொல்கிறது. சந்தோஷம் குழந்தை நான்கு இயக்குநர்களில் இவர் மட்டுமே வெகுஜனக் கதை சொல்லி என்பதால் இது மிக நேரடியான கதையாய் இருக்கிறது. அதுவும் வழக்கமான பாலிவுட் கதைகூறல் மொழி. இதில் பார்வையாளன் யோசிக்கவென்று ஏதும் இல்லை. உதாரணமாய் மேலே படம் என்ன சொல்கிறது என்று குறித்திருக்கிறேனோ அதையே நாயகி வசனமாய்ப் படத்தின் இறுதியில் பேசி விடுகிறாள். அத்தனை வெளிப்படையான படம்! வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்து கொள்ளும் பள்ளி ஆசிரியை மேகாவுக்குக் கணவனுடனான கலவி எப்போதும் ஐந்து விநாடிகள் தான் நீடிக்கிறது. அவள் உச்சம் என்பதை அடைவதே இல்லை. பின் தோழியின் (நேகா தூபியா) அறிவுரைப்படி மின்னணு வைப்ரேட்டரை நாடுகிறாள் (அனேகமாய் வைப்ரேட்டரைத் திரையில் காட்டிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவென நினைக்கிறேன்). அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை. மேகாவாக நடித்திருக்கும் கியாரா அத்வானி பேரழகி. நடிப்பும் வருகிறது. குறிப்பாய் கிழவி டிவி ரிமோட் இயக்கும் காட்சியில்!

அனுராக் காஷ்யப் - ஓக்கே | ஸோயா அக்தர் - நன்று | திபாகர் பேனர்ஜி - சுமார் | கரண் ஜோகர் - சுமார் | Overall - ஓக்கே

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்