புனித ஆட்டம்
Sacred Games சீரிஸ் பார்த்தேன். நன்று. ஆனால் பலரும் - ரசனையில் முந்தியிருக்கும் நண்பர்கள், போகன் சங்கர் முதலிய எழுத்தாளர்கள் - தூக்கி வைத்துக் கொண்டாடுவது போல் அத்தனை சிறப்பான ஆக்கமாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வகையில் எளிமையான, நேரடியான மசாலா கதை என்றாலும் Breathe சீரிஸ் இதை விடக் கவர்வதாக இருந்தது.
8 எபிஸோட்கள். சராசரியாய் 50 நிமிடங்கள். சுமார் ஆறரை மணி நேரம் ஓடுகிறது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இரு பெரும்படங்களின் நீளம் என உத்தேசமாய்ச் சொல்லலாம். உள்ளடக்கத்தை எடுத்துப் பார்த்தாலும் இரண்டு படங்களாகத் தான் இருக்கின்றன. சமகாலத்தில் 25 நாட்களில் மும்பையை அழிக்கும் ஒரு தீவிரவாதத் திட்டத்தை முறியடிக்க சர்தஜ் சிங் என்ற மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரும் (சைஃப் அலி கான்), அஞ்சலி மாதூர் என்ற ரா உளவாளியும் (ராதிகா ஆப்தே) ஓடுகிறார்கள். இதனிடையே 80களிலும் 90களிலும் கணேஷ் கய்டொண்டே என்பவன் (நவாஸுதீன் சித்திக்கி) மும்பையில் டானாக உருவாகும் கதை சொல்லப்படுகிறது. இரண்டும் எவ்வகையில் தொடர்புறுகிறது என்பது தான் கதை. ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் அதே டெம்ப்ளேட் தான் என்றாலும் கொஞ்சம் நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் ஆள் அறிமுகமானதும் ஃப்ளாஷ்பேக்கிலும் அந்த ஆள் பற்றி வருகிறது. இந்த சீரிஸுக்கு இரண்டு இயக்குநர்கள். இவ்விரு பகுதிகளின் ஆக்கத்தைக் கொண்டு ஃப்ளாஷ்பேக் பகுதிகளை அனுராக் காஷ்யப் இயக்கியிருப்பார் என்றும் சமகாலப் பகுதிகளை விக்ரமாதித்யா எடுத்திருப்பார் என்றும் நினைத்துக் கொண்டேன். இப்போது தேடிப் பார்த்தால் கிட்டத்தட்ட அப்படித்தான் பிரித்துக் கொண்டு எடுத்திருக்கிறார்கள்.
சீரிஸின் ஒட்டுமொத்த ஆக்கம் சிறப்பானதாய் இருக்கிறது. எந்தவொரு சமகால உயர்நடுத்தர பட்ஜெட் பாலிவுட் படத்தின் தரத்தோடும் போட்டி போடக்கூடியது. நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மூன்றும் மிக அற்புதமாக இருந்தன - ஒரு சினிமாவை விடவும் சிறப்பாக. ஆனால் திரைக்கதையில் தான் போதுமான சுவாரஸ்யம் இல்லை. யதார்த்தமான நிகழ்ச்சிகள், சமூக வரலாற்று விவாதங்கள், உறவுகளின் தெறிப்புகள், மானுட அவதானிப்புகள், தத்துவ விசாரங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை தனித்தனிக் காட்சிகளாக மட்டுமே எஞ்சுகிறதே ஒழிய ஒரு முழுப் படமாக மனதில் நிலைக்கவில்லை. முக்கியமாக ஒவ்வொரு முடிச்சாக அவிழும் போது பெரும்பாலும் நமக்கு அதிர்ச்சியே இருப்பதில்லை. 'ஓ! அப்படியா?' என்று கேட்டுக் கொள்கிறோம். முக்கியமாக 25 நாட்களில் மும்பையே தரைமட்டமாகப் போகிறது என்று பில்டப் ஏற்றிக் கொண்டே போய், இது தானா என்று சப்பென்றாகி விடுகிறது. அடிப்படையில் விக்ரம் சந்திராவின் Sacred Games நாவலிலேயே இப்பிரச்சனை இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. (அதைக் குலைக்காமல் பெரும்பாலும் அப்படியே எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.)
போகிற போக்கில் இந்திய அரசியலை, பம்பாயின் கதையைச் சொல்கிறார்கள். மதத்தின் மீதான வெறியாக அல்லாமல், வாழ்வின் ('பணத்தின்' என வாசிக்கவும்) மீதான வெறி கூட மத அரசியலுக்குத் துணைப்போவதைக் காட்டுகிறார்கள். தலைப்பில் குறிப்பிடப்படும் 'புனித ஆட்டம்' உண்மையில் இந்துத்துவமா அல்லது வஹாபியத்தின் ஜிஹாத்தா என இருதரப்பாகவும் வாசிக்க இடமுண்டு. ராஜீவ் காந்தியின் அரசியல் பிழைகளை ஆங்காங்கே குத்துகிறார்கள். அது கணேஷ் பாத்திரத்தின் குரல் தான், இயக்குநர்களுடையதல்ல என்பதையும் அவன் மதத்தின் அரசியல் சார்ந்து தன்னை ஒரு டானாக வளர்த்துக் கொள்கிறான் என்பதையும் வைத்துப் பார்க்கையில் அதை அப்படித்தான் காட்ட முடியும் எனத் தோன்றுகிறது.
நவாஸுதீன் பிரித்து மேய்ந்திருக்கிறார். அவருக்கே செய்து வைத்தது போன்ற பார்த்திரம். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களையும் அனுராக்கே இயக்கி, நவாஸுதீனே நடித்த Gangs of Wasseypur - 2, Raman Raghav 2.0 படங்களையும் Sacred Games நினைவூட்டியது. இந்த சீரிஸைப் பார்க்க ஒரே ஒரு காரணம் சொல் என யாராவது என்னைக் கேட்டால் நவாஸுதீனைத் தான் சொல்வேன். இன்னொரு பக்கம் ராதிகா ஆப்தே! (இருவரும் ஒரே ஃப்ரேமில் வரும் காட்சி ஏதுமில்லை.) நான் பார்த்த வரையில் ராதிகாவின் சிறப்பான நடிப்பு இதுவே. அவரது உடலை அல்லது காமத்தை முன்வைக்காத முதல் படமும் இதுவே என நினைக்கிறேன். அவ்வளவு ஏன், ஒரு பெண் உளவு ஏஜெண்ட்டை அழகுப் பதுமையாகக் காட்டாத முதல் படமும் இது தான். (Parmanu கூட லேசாய் இதில் சறுக்கி இருக்கிறது என்று தான் சொல்வேன்.) கணிப்பொறியைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளில் கூட அவர் முகம் துல்லியமாய் நடிக்கிறது. சயீஃப் அலி கானும் நன்றாகவே பங்களித்திருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் 'த்ஸோ த்ஸோ' என்று இரக்கம் காட்டியிருப்போம். ஆனால் அப்பாத்திரத்தைக் கம்பீரமாகக் கையாள்கிறார். மூன்று பேருமே ஒரு பரிசோதனை முயற்சியாகத் தான் இந்த சீரிஸில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். படத்தை மூவரும் வலுவாய்த் தாங்கி நிற்கிறார்கள்.
கான்ஸ்டபிள் காடேகராக வரும் ஜிதேந்திரா ஜோஷியும் நன்றாக நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களில் மனதில் நிற்பவர்கள் ஐவர்: திருநங்கை குக்கூவாக வரும் குப்ரா சைத் (அவர் உண்மையில் ஒரு பெண்!), கணேஷின் மனைவி சுபத்ராவாக வரும் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே (சீரிஸில் அவரது டாப்லெஸ் காட்சி எனக்கே அனாவசியமாகத் தெரிகிறது!) மற்றும் கான்ஸ்டபிள் காடேகரின் மனைவி ஷாலினியாக நடித்திருக்கும் பெண் (லக்ஷ்மி குறும்படத்தின் கலவியை நினைவூட்டியது!), பாலிவுட் நடிகை ஸோயா மிர்ஸாவாக வரும் இரானிய நடிகை எல்னாஸ் நோரௌஸி (என்னவொரு தேஜஸ்!), காந்தா பாயாக வரும் ஷாலினி வஸ்தா மற்றும் நயனிகாவாக வரும் கீதாஞ்சலி தாப்பா. (என்ன ஆச்சரியம்! எல்லோரும் நடிகைகள்!)
சில இடங்களில் பின்னணி இசை கதைப்போக்கின் tension-ஐக் காட்டுவதாக அமைந்திருந்தது. கலை இயக்கமும் அபாரம். இந்த சீரிஸில் மாதர்சோத் என்ற சொல் எத்தனை முறை வருகிறது எனக் கண்டிபிடிப்போருக்குப் பரிசறிவிக்கலாம்.
இன்னும் கொஞ்சம் நாட்களில் சீரிஸ்கள் இந்தியர்கள் வாழ்வை ஆக்ரமிக்கும் எனத் தோன்றுகிறது. திரைப்படங்களை விட விலை குறைவாகவும், டிவி தொடர்களை விட தரம் அதிகமாகவும் இருக்கிறது என்பதால் படித்த, மத்திய வர்க்கம் இதை வாரி அணைத்துக் கொள்ளும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் பார்க்கும் வசதியுண்டு என்பது கூடுதல் வசீகரம். இயக்குநர்களுக்கும் குத்துப்பாட்டு, காமெடிக்காட்சி, பஞ்ச் டயலாக், ஆக்ஷன் ப்ளாக், பாடல்கள், நீளக்கட்டுப்பாடு, சென்சார் பிரச்சனை என எந்தச் சமரசமும் இல்லாமல் படமெடுக்க ஒரு வாய்ப்பு இது! இந்திய சீரிஸ்கள் இனிப் படையெடுக்கும்.
*
Comments