Posts

Showing posts from July, 2018

காமக்கிழத்திகள்

Image
Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள...

புனித ஆட்டம்

Image
Sacred Games சீரிஸ் பார்த்தேன். நன்று. ஆனால் பலரும் - ரசனையில் முந்தியிருக்கும் நண்பர்கள், போகன் சங்கர் முதலிய எழுத்தாளர்கள் - தூக்கி வைத்துக் கொண்டாடுவது போல் அத்தனை சிறப்பான ஆக்கமாக‌ எனக்குத் தோன்றவில்லை. அவ்வகையில் எளிமையான, நேரடியான‌ மசாலா கதை என்றாலும் Breathe சீரிஸ் இதை விடக் கவர்வதாக இருந்தது. 8 எபிஸோட்கள். சராசரியாய் 50 நிமிடங்கள். சுமார் ஆறரை மணி நேரம் ஓடுகிறது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இரு பெரும்படங்களின் நீளம் என உத்தேசமாய்ச் சொல்லலாம். உள்ளடக்கத்தை எடுத்துப் பார்த்தாலும் இரண்டு படங்களாகத் தான் இருக்கின்றன. சமகாலத்தில் 25 நாட்களில் மும்பையை அழிக்கும் ஒரு தீவிரவாதத் திட்டத்தை முறியடிக்க சர்தஜ் சிங் என்ற மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரும் (சைஃப் அலி கான்), அஞ்சலி மாதூர் என்ற ரா உளவாளியும் (ராதிகா ஆப்தே) ஓடுகிறார்கள். இதனிடையே 80களிலும் 90களிலும் கணேஷ் கய்டொண்டே என்பவன் (நவாஸுதீன் சித்திக்கி) மும்பையில் டானாக‌ உருவாகும் கதை சொல்லப்படுகிறது. இரண்டும் எவ்வகையில் தொடர்புறுகிறது என்பது தான் கதை. ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் அதே டெம்ப்ளேட் தான் என்றாலும் கொஞ்சம் நுட்பமாக...

அன்பின் அனல்மூச்சு

Image
ஓர் அழகான இளம் பெண் செல்ஃபோன் கேமெராவில் தான் வாழ விரும்பாததைத் தன் பெற்றோரிடம் பேசி ஒளிப்பதிவு செய்து விட்டுப் பாலிதீன் கவரை முகத்தைச் சுற்றிக் கொண்டு தற்கொலை செய்வதில் தொடங்குகிறது  Breathe சீரிஸ். இரண்டேகால் கழுதை வயதாகிறது. ஆனால் நான் வாழ்க்கையில் காணும் முதல் வெப்சீரிஸ் இது தான். பிடித்திருந்தது. எட்டு எபிஸோட்கள். சராசரியாய் ஒவ்வொன்றும் 40 நிமிடம். ஆக, ஐந்தரை மணி நேரம் வருகிறது. பெரும்பாலும் தொய்வில்லாமல் கதை நகர்கிறது. ஆனாலும் சீரிஸ் என்பது உண்மையில் சீரியல் தான் என்பதால் ஆங்காங்கே நாடகத்துக்கே உரிய மெல்லிய இழுவைக் காட்சிகள் உண்டு. அதை எல்லாம் கத்தரித்திருந்தால் மூன்றரை மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக எடுத்திருக்கலாம். மேஸ்கரனஸின் (மாதவன்) மகன் உயிர் பிழைக்க‌ அடுத்த சில மாதங்களில் அவனுக்கு நுரையீரல் மாற்று தேவை. அவன் உறுப்பு பெறுபவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறான். ஆனால் அவனது இரத்த வகை அரிது என்பதால் அவனுக்கு உறுப்பு கிடைக்கும் சாத்தியம் குறைவு. மேஸ்கரனஸ் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இருப்பவர்களைக் கொலை செய்யத் தீர்மானிக்கிறார். அதை...

அழியாக் கோலம் [சிறுகதை]

Image
“பார்த்தவுடனே டெலீட் பண்ணிடனும்.” “பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்.” மௌனம். அந்த டிஎம்மின் மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவைப்பார்த்து வரலாம். அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம். ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம் நிரல் எழுதத் தெரியாது; எழுதத்தெரியாது என்பதும் தெரியாது. ஆனால் இன்றைய தேதிக்கு ட்விட்டரில் அவளை இருபதாயிரத்துச் சொச்சம் பேர் தொடர்கிறார்கள். அவள் ட்வீட் நூறு ரீட்வீட் ஆவது சர்வசாதாரணம். அதாவது ப்ரியாவை இருநூறு பேருக்கும், அப்சராவை இருபதாயிரம் பேருக்கும் தெரியும். அதனால் அவளுக்குமே ப்ரியாவை விட அப்ஸராவைப் பிடிக்கும். நிஜத்தைவிட பிம்பங்கள் கொண்டாட்டத்துக்குரியவை!...

மிஷ்கினின் வல்லுறவு

Image
மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்காது. போட்டு அடிப்பார்கள். அவர்களுக்கு ரஜினி மாதிரி ஓர் அரைகுறை என்றால் தான் திருப்தி. எட்டு வழிச் சாலையை வைத்துக் கொள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடாதே என்று நடுவிரலைக் காட்டினாலும் பரவாயில்லை. ஆனால் அறிவாளி வேண்டாம். ஒருவேளை ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும் அவன் எக்காரணம் கொண்டும் காட்டிக் கொள்ளவே கூடாது. ஒரு பாலியல் நோய் வந்தது போல் மிக ரகசியமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை நம் ஆட்களுக்கு. சில நூறு பேருக்கு மட்டும் தெரிந்த நான் 'இண்டலெக்சுவல்' என்று சமூக வலைதள பயோ போட்டுக் கொண்டதற்கே பத்தாண்டுகளாக பொச்செரிந்து கொண்டிருப்போர் உண்டு எனும் போது லட்சக்கணக்கானோருக்குத் தெரிந்த மிஷ்கின் இண்டலெக்சுவலாக இருப்பது பொறுக்குமா! அசந்தால் ஆப்படிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அசராவிடிலும் அசந்ததாய்ச் சொல்லி ஆப்படிப்பார்கள். அப்படியான ஒன்று தான் அவரது மம்மூட்டி ரேப் பேச்சை முன்வைத்து அவ...

ஃப்ரெஞ்ச் கிஸ்

Image
“I thought it was my job to give all the boys their first kiss.” -    Jessica Alba, Hollywood Actress ஃப்ரெஞ்ச் கிஸ் என்பது பொதுவாய் ஆணும் பெண்ணும் காதலின் / காமத்தின் நிமித்தம் உதட்டோடு உதடு வைத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வகை முத்தம். லிப் லாக், மௌத் கிஸ் எனப் பலவாறாக இது அழைக்கப்ப‌டுகிறது. உதடுகள் கலப்பது என்பதைத் தாண்டி நாக்குகள் பரஸ்பரம் துழாவிக் கொள்வதும் அதன் நீட்சியாய் எச்சில் பரிமாற்றமும் நிகழும். நெற்றி, கன்னம், புறங்கை பகுதிகளில் முத்தமிடுவதை விட அந்தரங்கமானதாக ஆனந்தரகமானதாக கருதப்படுவது இது! செசர் லம்ப்ரோஸோ காதலர்களிடையேயான‌ உதட்டு முத்தம் ஆதிகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையேயான வாய்வழி உணவு ஊட்டும் பழக்கத்திலிருந்து உருவானதாகச் சொன்னார். எர்னெஸ்ட் க்ராலி பறவைகள் அலகுகளில் கொஞ்சிக் கொள்வதும், பூச்சிகள் உணர்கொம்புகளில் முட்டி விளையாடுவதும் கூட உதட்டு முத்தத்தின் பரிமாணமே என்றார். மனிதக்குரங்குகளில் உதட்டு முத்தம் சகஜம் - சிம்பன்ஸிக்கள் திறந்த வாயுடனும், போனோபோக்கள் நாக்கு தொடுமளவும். பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இ...

டிஜிட்டல் நிர்வாணம்

Image
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நூறாம் நாளில் பொதுமக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச்சூடு எனும் கொடூர அரச பயங்கரவாதத்தை நடத்திப் பச்சைப் படுகொலைகள் செய்த பின் ஐந்து நாட்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையச் சேவையை ரத்து செய்துள்ளனர். அதாவது வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களையும் கூகுள் வழியே இதர செய்தி இணையதளங்களையும் பொதுமக்கள் பார்க்க முடியாது. வதந்திகள் பரப்புவதைத் தடுக்க என அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மையில் செய்திகள் பரவுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்பது தெளிவு. முன்பு இம்மாதிரி சூழல்களில் கேபிள் தொலைக்காட்சிகளைத்தான் ப்ளாக்-அவுட் செய்வார்கள். இப்போது இணையத்தையும் சேர்த்து. ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் வீச்சும் அதன் மீதான மக்களின் சார்பும் கடந்த பத்தாண்டில் இந்தியாவில் அத்தனை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. அதன் இன்னொரு முகத்தை இரும்புத்திரை திரைப்படம் பேசுகிறது. படம் இப்படித் துவங்குகிறது: ரிச்சி ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்பேசி ஒட்டுக்கேட்டல் மூலம் ஓர் ஐடி இளைஞனின் வங்கிக் கணக்...