சஞ்சாயணம்
படம் சுமாருக்கும் மேல். ஆனால் வழக்கம் போல் பாலிவுட் (அல்லது இந்தியா என்றும் வாசிக்கலாம்) கொண்டாடும். அப்படித்தான் முன்னாபாய், 3 இடியட்ஸ், பிகே என எல்லாச் சுமாருக்கு மேல் ரகப் படைப்புகளையும் கொண்டாடினார்கள்.
ஒருவன் சிறந்தவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை, சராசரியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை அழுந்தச் சொல்லும் போது உலகில் பெரும்பான்மையினராய் இருக்கும் சராசரிகள் (தாம் சராசரி என்று உணர்ந்த சராசரிகள்) தம்மை அவ்விடத்தில் பொருத்திப் பார்த்துப் புளகாங்கிதப்படாமல் இருப்பார்களா! அது தான் சஞ்சுவின் வெற்றி.
ராஜ்குமார் ஹிரானி ஃபார்முலா எப்போதும் ஒன்று தான். சராசரி பார்வையாளனின் பலவீனங்களில் தடவிக்கொடுத்து அதை வெற்றியாக அறுவடை செய்வது. உதாரணமாய் அவனது காதல், அன்பு, நட்பு, இரக்கம், குற்றவுணர்வு போன்ற உணர்ச்சிகரமான புள்ளிகளில் கை வைப்பார். அது மருத்துவம், கல்வி, ஆன்மீகம், சினிமா என அவனை தினம் தொட்டுச் செல்லும் துறைகளில் அவன் அன்றாடும் சந்திக்கும் சம்பவங்களைப் புனிதப்படுத்துவதாக அல்லது கேலி செய்வதாக அமைந்திருக்கும். அதை connecting to the audience என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர் திரைக்கதைக்கு அத்தனை உழைக்கிறார். அதாவது நல்ல திரைக்கதைக்காக என்று சொல்ல வரவில்லை; வணிக வெற்றிக்கான திரைக்கதை. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் வணிக வெற்றி என்றால் ஏதோ தபாங் போல் இது ஒரு மசாலா சினிமா என்று வெற்றியை மட்டும் கொடுத்து விட்டு பார்வையாளன் கடந்து சென்று விட முடியாது. அதை அவன் மனதிற்கு நெருக்கமாகவும் உணர்கிறான். ஏனெனில் இது அவனுக்குத் தெரிந்த விஷயத்தை அவனுக்குப் பிடித்த மாதிரி காட்டுகிற வித்தை. அதனால் தான் பொழுதுபோக்குப் பிரிவில் தேசிய விருதுகளை ஹிரானியின் படங்கள் பெறத் தவறுவதில்ல.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை என்று மேம்போக்காகச் சொன்னாலும். அப்படியல்ல. அதாவது அவரது வாழ்வின் முழுமையான சித்திரமல்ல. சஞ்சய் தத்தின் மீது இருக்கும் எதிர்மறையான பொதுவெளிப் பிம்பங்களை உடைப்பது தான் படத்தின் நோக்கம். ஆக, எதை எல்லாம் உடைக்க முடியுமோ அந்தப் பிம்பங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாய் சஞ்சய் தத் ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து விகாகரத்து செய்தவர், மாதுரி தீக்ஷித்துடன் காதலில் இருந்தவர். அது பற்றி படம் மூச்சே விடுவதில்லை. தற்போதைய மனைவியான மன்யாதா பாத்திரம் மட்டுமே படத்தில் வருகிறது. நடிகரான அவர் சினிமாத் துறையில் அவர் என்ன செய்தார் என்றும் சொல்லப்படவில்லை. அவ்வகையில் இது இந்தியில் ஓர் நடிகையர் திலகம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மறைத் தரவுகளின் தொகுப்பு.
படம் சஞ்சய் தத் பற்றிய 5 கேள்விகளுக்கு (அல்லது ஊடகங்கள் திரித்த பொய்களுக்கு) பதில் சொல்கிறது. 1) சஞ்சய் தத் ஒரு போதை மருந்து அடிமை. 2) சஞ்சய் தத் ஏகே 56 துப்பாக்கியை வைத்திருந்தார். 3) சஞ்சய் தத் வீட்டில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கொண்ட வண்டி இருந்தது. 4) மேற்கண்ட 2 மற்றும் 3ம் காரணங்களை முன்னிட்டு 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தடா சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 5) சஞ்சய் தத் ஒரு பெண் பித்தர். இவற்றில் கடைசி தவிர மீதம் 4 விஷயங்களையும் படம் பல சம்பவங்களைச் சொல்லி மறுக்கிறது. அதைப் பெரும்பாலும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள். ஆங்காங்கே அழகழகான வசனங்கள்.
படத்தில் எனக்குப் பிடித்தமான காட்சி கமலேஷ் ரூபி மற்றும் அவளது கணவனாகப் போகிறவனிடம் போய்ப் பேசுவதும் (ரூபிக்குப் பிடித்த மிருகம் எது என்பது நியூயார்க்கின் அத்தனை நகைக்கடைக்காரர்களுக்கும் தெரியும்) அதற்கு அடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து விட்டு ரூபி சஞ்சுவைச் சந்திக்க வருவதும் (டாய்லெட் சீட் தாலி). சஞ்சு நண்பனுக்கு ஊற்றிக் கொடுத்து விட்டு அவன் காதலியைப் புணரும் காட்சி ஒரு நல்ல மகுடேசுவரன் கவிதையை (காமக்கடும்புனல் தொகுப்பு) நினைவூட்டியது. ஆனால் சஞ்சு அதைத் திட்டமிடவில்லை என்பது மட்டும் வித்தியாசம்.
ரன்பீர் கபூர் அபாரமான நடிப்பு. நான் இதற்கு முன் அவர் நடித்த பர்ஃபி மற்றும் பாம்பே வெல்ட் மட்டும் பார்த்திருக்கிறேன். பர்ஃபியில் ஓரெல்லை வரை மூன்றாம் பிறை கமலுக்கு இணையான நடிப்பு என்பேன். இதிலும் அப்படியே சஞ்சய் தத்தின் உடல் மொழிகளைப் பிரதி செய்திருக்கிறார். க்ளோஸப்பில் நடிப்பைக் கொட்ட வேண்டிய இடங்களில் பின்னி எடுக்கிறார்.
எழுத்தாளராக வரும் அனுஷ்கா ஷர்மாவும், நர்கீஸ் தத்தாக வரும் மனீஷா கொய்ராலாவும் நல்ல நடிப்பு. (நிஜ வாழ்வில் கேன்சரை வென்ற மனீஷா இதில் கேன்சரில் இறக்கிறார் தியா மிர்ஸா, சோனம் கபூர் என சுந்தர் சி படம் மாதிரி ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். எடிட்டிங் ஹிரானியே. ஒளிப்பதிவு ரவிவர்மன். இரண்டு பாடல்கள் ரஹ்மான். (ஆனால் Kar Har Maidaan Fateh பாடல் தான் நினைவிலிருக்கிறது. இசை விக்ரம் மாண்ட்ரோஸ். குரல் சுக்வீந்தர் சிங், ஷ்ரேயா கோஷல்.)
ஒட்டுமொத்தமாய் ஊடகங்கள் ப்ரேக்கிங் நியூஸுக்காக முழுப் பொய்யை எழுதுவார்கள் என்றும் காட்டுகிறார்கள். ஒரு நல்ல ஊடகக்காரர் கூடவா நாட்டில் இல்லை, சஞ்சய் தத்தின் உண்மை வெர்ஷனை ஆராய்ந்து எழுத எனக் கேள்வி எழுகிறது. தோல்வியில் துவண்ட ஒரு மனிதன், சிக்கலில் மாட்டிய ஒருவன் மீண்டு வருவதற்கான உத்வேகத்தை இப்படம் அளிப்பதாகப் பார்க்கப்படும். அல்லது ஒரு தந்தை தன் மகனை எப்படிச் சீர்செய்கிறார் என்ற கதையாகக் காணலாம். நட்பு எவ்வளவு ஆழமானதாக, அர்த்தமானதாக இருக்கும் என்று சொல்லும் படமாகவும் பார்க்கலாம். சஞ்சாயணமாகவும்.
என் வரையில் தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதற்காக சஞ்சய் தத்துக்கு ராஜ்குமார் ஹிரானி செய்திருக்கும் Image Re-branding நன்றிக்கடன் இது என்று தான் தோன்றுகிறது. (ஹிரானியே சஞ்சய்க்கு முன்னாபாய் மூலம் வாழ்க்கை தந்தவர் என்பது வேறு விஷயம். ஆனால் அது படம் வந்த பின். ஹிரானிக்கு அந்தப் பட வாய்ப்பை வழங்கியதே சஞ்சய் தானே! ஜென்டில்மேன் வாய்ப்புக் கொடுத்ததற்காக ஷங்கர் அர்ஜுனுக்கு முதல்வனை முதல்வனில் நடிக்க வைத்தது போல்!)
ரன்பீர் கபூரின் நடிப்புக்காகவும் சில சுவாரஸ்யமான ஹிரானி ப்ராண்ட் காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கலாம்.
*
Comments