காலா - மேலும் சில


A) காலா என்ற சொல்லுக்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! 1) கரிகாலன் என்பதன் சுருக்க விளி 2) ஒரு குலதெய்வப் பெயர் 3) தமிழில் எமன் 4) இந்தியில் கருப்பு 5) தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காலம். (கடைசி தவிர‌) இவற்றில் எல்லாமே "எது வேணுமோ எடுத்துகோ" என்பது மாதிரி படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன‌ என்பது தான் ஆச்சரியம்!

B) 90 ஃபீட்டில் விஷ்ணு பாயிடம் காலா பேசும் போது (தாய் சொல்றது தான்.. என்ற வசனத்துக்கு முன்) மாரி தனுஷ் தெரிந்தார். போலீஸ் ஸ்டேஷனில் காலா ஹரி தாதாவைப் பார்த்ததும் பேசும் போது (ஆவோ ஆவோ.. என்ற வசனத்துக்குப் பின்) பாபா ரஜினி தெரிந்தார். சமுத்திரக்கனி செல்ஃபோனைக் காட்டி எட்டு வருஷமா ஒரே மெசேஜை ஃபார்வார்ட் பண்ணிட்டு இருக்கானுக மச்சான் என்று சொல்லும் - கதைக்குத் தொடர்பற்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் - காட்சியில் கூட - அதைப் பார்த்தும் கொண்டு ஆனால் அதில் பெரிதாய் ஆர்வங்காட்டாதது போன்ற - ரஜினியின் நடிப்பு அபாரம் என்பது தான் ஆச்சரியம்.

C) மணிரத்னம் பம்பாய் படத்தில் ஒரு முஸ்லிமான நாசரை தீவிர இந்துவாகவும் ஒரு இந்துவான கிட்டியை தீவிர முஸ்லிமாகவும் நடிக்க வைத்திருப்பார். ரஞ்சித்தும் காலாவில் அதே போல் பிஜேபி ஆதரவு முகம் கொண்ட ரஜினியை அதற்கு எதிரானவராகவும் பிஜேபியை விரும்பாத நானா படேகரை இந்துத்துவத்தைப் பயன்படுத்தி முன்னேறுபவராகவும் நடிக்க வைத்திருக்கிறார்.

D) காலாவின் ஜீனியஸ் காட்சிகளில் ஒன்று ஜரீனாவை எப்படி கரிகாலன் முதல்முறை பார்த்தானோ அதே புறச்சூழலில் - மின்சாரமற்ற விளக்கு வெளிச்சம் - முப்பது ஆண்டுகள் கழித்து காலாவாய் மீண்டும் பார்க்கிறான். அதே போல் பிரம்மிக்கிறான். அது காலமே திரும்புவது போலத்தான்! அக்காட்சியை இன்னும் உயரச் செய்வது ரஜினியின் அபார முகபாவனை!

E) சேரி என்று சொன்னதும் ரஜினி தன் மகனை ஓங்கிக் கன்னத்தில் அறைவார். காயத்ரி ரகுராமுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்திருக்கும் தானே!


1) காலாவும் கபாலியும் ஒரே லெவல் என்று சொல்லி இருந்தேன். இப்போது காலா ஒரு படி மேலே எனத் தோன்றுகிறது. "செஞ்ச தப்பை சரி பண்ணிக்க இன்னொரு வாய்ப்பு வரும்" என நானா படேகர் படத்தில் ஓரிடத்தில் சொல்வார். ரஞ்சித் ஓரளவு அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.

2) ஜரீனா - காலா காதலில் நெருப்பு ஒரு பாத்திரமாகவே வருகிறது. 70களில் இருளில் விளக்கொளியில் முதல் முறை ஜரீனாவின் முகத்தைப் பார்த்தது போலவே இப்போது "இரண்டாம்" முதல் முறையும் பார்க்கிறான் காலா என்பதை முன்பே சொல்லி இருந்தேன். அதே போல் முதல் முறை அவர்களைப் பிரிப்பதும் நெருப்பு தான். இரண்டாம் முறையும் அதே தான்.

3) பெரியார் தாராவியில் சிலையாக, க்ளைமேக்ஸில் கருப்புப் பொடியாக வந்ததை நாம் அறிந்ததே. அது போக அறிமுகக் காட்சியில் "எங்களுக்குச் சட்டத்தை மதிக்கவும் தெரியும், தேவையில்லைன்னா எரிக்கவும் தெரியும்" என்று ரஜினி சொல்வார். (எரிக்கவும் என்ற சொல் சென்ஸாரில் ம்யூட் ஆகியுள்ளது.) அரசியல் சாசனத்தை எரித்தது பெரியார் தான்.

4) ரஜினியின் சிறந்த 5 நடிப்புப் பங்களிப்புகளில் காலாவும் ஒன்று. (கவனிக்கவும், அவரது சிறந்த படங்களல்ல; சிறந்த நடிப்பு மட்டும்.) ஜரீனா, செல்வி, குடும்பக் காட்சிகளிலும் தண்ணியடித்த காட்சிகளிலும் செம்மை நடிப்பு. விபத்துக்குப் பின் ரஜினி கைதாங்கலாக நிற்கும் காட்சி எல்லாம் அற்புதம்!

5) சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பின்னுகிறது. நானா படேகர் தீம் ம்யூஸிக், காலா சண்டை தீம் ம்யூஸிக் இரண்டிலும் அசத்தல். நிலமே எங்கள் உரிமை, போராடுவோம் - பாடலுக்குள் பாடல்!

6) "எதிர்த்துப் பேசினால் கொலை என்பது ஃபாஸிசம்" என்கிறாள் ஜரீனா ஒரு காட்சியில். கெளரி லங்கேஷ்! ஜரீனா ஹரிதாதா காலில் விழுந்தாளா என்பதைக் காட்டாமல் விட்டதிலும் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

7) எந்த நிலவியலை எடுக்கிறாரோ அங்கு புழக்கத்தில் இருக்கும் சொல் ஒன்றைப் படத்தில் ஆங்காங்கே சொருகி விடுகிறார் ரஞ்சித். கபாலியில் பொன்னை என்ற மலேஷியச் சொல் அப்படி வருமென‌ ஞாபகம் (மிக அதிகம் என்ற பொருளில்). அது மாதிரி காலாவில் மச்மச் என்ற மும்பைச் சொல் ஆங்காங்கே வருகிறது (பிரச்சனை என்ற பொருளில்).

8 ) இந்தித் திணிப்பு மறுப்பு கூட உண்டு. நானா படேகர் கிளம்ப இந்தியில் அனுமதி கேட்பார். ரஜினியிடம் பதில் இராது. அப்புறம் தமிழில் கேட்பார். சமுத்திரக்கனியும் ஓரிடத்தில் இந்தியைக் கேலி செய்வார்.

9) நாயகன் படத்தின் வலுவான பாதிப்பு இருக்கிறது படத்தில். பீம்ஜி கொலை, என்னைச் சுடு என மக்கள் ஒவ்வொருவராக போலீஸ் முன் வருவது, காலாவை ஒருவன் சுடுவது எல்லாம்.

10) கபாலியில் ரஞ்சித் மீது அடைந்த ஏமாற்றம் இதில் சரியாகி இருக்கிறது. இரண்டாம் பாதி வழக்கமான பழிவாங்கல் (விபத்து ஏற்படுத்துவது, வீட்டை எரிப்பது, கடைசியில் அடியாட்களை இறக்கி தாராவியை அடிப்பது) என்பது தான் திரைக்கதையை டொங்கலாக்கி விடுகிறது. அதில் கவனம் செலுத்தியிருந்தால் படம் பட்டாசாகி இருக்கும். எல்லாம் மீறி ரஞ்சித் ஒரு கலைஞனாகப் பல இடங்களில் மிளிர்கிறார்.

11) இடைவேளைக்குச் சற்று முன் தான் நானா படேகர் முகத்தைப் பார்க்கிறோம். ஆனால் அதை நாம் உணர்வதே இல்லை. காரணம் தொடர்ந்து அவர் முகம் பேனர்கள் வழி பார்வையாளனுக்குப் பதிய வைக்கப்பட்டு விடுகிறது. மோடியும் அப்படித்தானே! ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக மாயை. (ஊடகங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என பாடம் எடுத்திருக்கிறார்கள் நியூஸ் 18 நிருபர் பாத்திரம் மூலம்.)

12) ரஜினி க்ளீன் போல்ட் ஆகும் அறிமுகக் காட்சியிலேயே காலாவில் ஹீரோயிசம் எந்த அளவு இருக்கும் எனக் கோடி காட்டி விடுகிறார் ரஞ்சித். (அது முக்கியமான திரைக்கதை மூவ். சினிமாத் தெரியாதவர்கள் இதெல்லாம் ஒரு இண்ட்ரோவா எனக் கேட்பதில் ஆச்சரியமில்லை.) விஷ்ணுபாய் கொலை தவிர ரஜினியின் நேரடி ஹீரோயிஸம் எங்குமே வெளிப்படவில்லை. எல்லா இடங்களிலும் தோற்கிறார் அல்லது அடிவாங்குகிறார். ஜெயிக்கும் பிற இடங்களும் மக்கள் செல்வாக்கினால் தான். கடைசியில் முடிவு கூட ஒவ்வொருவரும் காலா தான் என்பதே.

13) டிஜிட்டல் மும்பை, க்ளீன் மும்பை, தேசபக்தன் Vs தேசத்துரோகி கட்டமைப்பு எனப் பல விதங்களில் மிக அதீதமாக மோடியையும் இந்துத்துவத்தையும் செருப்பால் அடித்திருக்கிறார் ரஞ்சித். அதற்காகவே அவரைக் கட்டி முத்தமிடலாம். மீண்டும் அவர் ரஜினியை இயக்க வேண்டும்.

14) ரஜினிக்கு இதுவே அசலான அடுத்த கட்ட நகர்வு. கபாலி அல்ல. இதைப் பிடித்து அப்படியே போனால் ஒன்றிரண்டு தேசிய விருதுகள் வாங்கலாம். உங்களுக்கு ஏபிசிடி கூட தெரியாத அரசியலைத் தூக்கிப் போட்டு வாருங்கள், ரஜினி. சிங்கம் போல் சினிமாவில் ஜெயிக்கலாம்!

15) படம் சுமார் அல்ல; சுமாருக்கும் மேல். (இன்னொரு முறை பார்த்தால் சூப்பர் என்று சொல்லி விடுவீர்களா என அசட்டுத்தனமாய்க் கேட்க வேண்டாம்.)

*

Comments

My Desk said…
அசட்டுத்தனம் இருப்பவரிடம் அசட்டுத்தனமாய் தானே கேட்க முடியும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி