ஓர் அறிவுஜீவியின் குழந்தைத்தனங்கள்
சில அறிவுஜீவிகள் கூட ஏன் காவி நிறம் கொள்கிறார்கள்? என தம்பி ஒருவர் கேட்டார்.
அடிப்படையான விஷயம் வாசிப்பு மட்டுமே ஒருவரைத் தலைகீழாக மாற்றி விடாது. என்ன தான் நாம் வாசிப்பு, சூழல் என நகர்ந்து வந்தாலும் நம் வளர்ப்பு, சூழல் மற்றும் சுற்றத்தின் தாக்கம், சிறுவயது நம்பிக்கைகள், திரும்பத் திரும்ப காட்சி ரூபத்திலோ பேச்சாகவோ முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் எனச் சில விஷயங்கள் நம் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நாம் பிறவி நடுநிலையாளர்கள் அல்ல. அதற்கு நாம் அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி பிறந்ததிலிருந்தே சிறையில் இருந்திருந்தால் தான் சாத்தியம். நாம் எல்லோருமே ஏதோ ஒரு சார்போடு தான் இருப்போம்.
இதை ஒரு மாதிரி மரபார்ந்த முன்முடிவு எனலாம். அது சார்ந்த விஷயங்களில் மட்டும் நம்மையறியாமலேயே நம்மை தடுமாறச் செய்யும். அதனால் சிந்தனையைச் சிதறடிக்கும். அதனால் ஒருபக்கச் சார்பெடுக்க வைக்கும். அது தான் இந்த அறிவுஜீவிகளின் காவி நிறச் சார்பில் நிகழ்கிறதென நினைக்கிறேன். நான் மதிக்கும் சில சிந்தனையாளர்கள் எதிர்தரப்பில் இருப்பதை இப்படித் தான் புரிந்து கொள்கிறேன்.
நம் வாசிப்பும் அனுபவங்களும் தர்க்க புத்தியும் தொடந்து அந்த நிலைப்பாட்டோடு சமர் செய்தபடியே இருக்கும். எது வலுவானவோ அது வெல்லும். பொதுவாக அப்படியான ஆழ்மன நிலைப்பாடுகளிலிருந்து நடுநிலைக்கு வருவது மிகச் சிரமம். ஒரு துருவத்திலிருந்து மையம் நோக்கி கொஞ்சம் நகரலாம். ஆனால் மையத்தை அடைவதும், நிஜமாகவே சார்பற்று இயங்கவும் கடும் நேர்மையும், சமரசமற்ற சுயபரிசீலனையும், எதையும் உணர்ச்சிவயமற்று சமநிலையில் அணுகும் நிதானமும் வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. நம் மனமுமே நம் நிலைப்பாட்டுக்குச் சாதகமான விஷயங்களையே தேடி வாசிக்கவும், கற்கவும் வைக்கும். அது ஒரு சுயஏமாற்று. நம் நிலைப்பாடு சரியானதே என நம் முதுகை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை மட்டும் பார்த்துக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனமே அது. அதுவும் மையம் நோக்கிய நம் நகர்ச்சியைப் பின்னடைய வைக்கும்.
வயதாக வயதாக அந்த நகர்ச்சி மட்டுப்பட்டு நின்று விடும். அதற்கு மேல் படிப்பவை, அனுபவிப்பவை, சிந்திப்பவை எல்லாம் வெறும் தகவல்களாக மட்டும் மூளையில் படியும். தன்னைச் சுயபரிசீலனை செய்ய, அதன் வழி புதுப்பித்துக் கொள்ளல் நடக்காது. ஐம்பது வயதுக்கு மேல் ஒருவர் தன் ஆதார நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டால் ஒன்று அதுவரை அவர் போலியாக இருந்திருக்கிறார் என்று அர்த்தம் அல்லது அந்த மாற்றம் போலியானது என்று பொருள். வயதான பின் வரும் ஆத்திகராகும் நாத்திகர்களை எல்லாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது அந்தப் பக்கம் மட்டுமல்ல. இந்தப் பக்கமும் உண்டு. அதாவது நடுநிலை நோக்கி நகர முயன்று தோற்பது. எல்லோரும் - நான் உட்பட - லேசான சாய்வுகளாவது கொண்ட மனிதர்களே. அதிலிருந்து மேலெழும்பி வருபவனையே காலம் அசல் சிந்தனையாளனாக அடையாளங்காணும்.
ஆனால் அதற்காக இந்த அறிவுஜீவிகளை முழுக்க நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. உதாரணமாய் அரசியலில் தான் அவர்களின் இந்த உளறல் நிகழ்கிறதெனில் அதில் மட்டும் அவர்களைப் பொருட்படுத்தாமல் நகரலாம். மற்ற விஷயங்களில் அவர்களை கிரகித்துக் கொள்ளலாம். அந்த உளறல்கள் ஓர் அறிவுஜீவியின் குழந்தைத்தனங்கள்.
*
Comments
நல்ல நடு நிலைமையோடு அழகா எழுதி இருக்கிறீங்க.
பகிர்வுக்கு நன்றி.