பெட்டை [சிறுகதை]


“லொள் லொள் லொள்”

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்துக் கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான்.

வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வைகறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்டித் துவாரங்கள் வழி ஊடுருவி உடம்பை நடுக்கிய செங்குளிரில் போட்டது.

அத்தனையும் பாழ். ஆறுதல் பரிசாய் நாய்களின் காலடித் தடங்கள் புதுப்புள்ளிகளைக் கோலத்திற்குச் சேர்த்திருந்தன. மனதில் கடும் எரிச்சல் உண்டாயிற்று மாதவிக்கு.



தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். இடது பக்கம் மங்கயர்கரசி அக்காவின் வீட்டு வாசலிலும் எதிரே சுப்ரியா வீட்டு வாசலிலும் இருந்த கோலங்கள் அப்படியே இருந்தன. வலப்புறம் பரத் அம்மாவின் வீட்டில் கோலம் இல்லை. இன்று ஞாயிற்றுக் கிழமை - பரத்துக்குப் பள்ளி விடுமுறை – அதனால் இன்னும் எழுந்திருக்க மாட்டாள்.

ஓடிக் கொண்டிருந்த நாய்களைப் பற்களை அரைத்தபடி பார்த்த போதுதான் அவளுக்கு விளங்கியது. இரண்டு நாய்கள் பரஸ்பரம் புட்டத்தில் ஓட்டியபடி எதிரெதிர் திசையில் ஓட எத்தனித்தன. சுற்றிலும் ஏழெட்டு நாய்கள். இத்தனை நாய்களை அத்தெருவில் பார்த்ததே இல்லை. இரண்டு, மூன்று திரியும். சில வீடுகளில் சோறு வைப்பார்கள். அவளும் மீந்தது போட்டிருக்கிறாள் - சிலசமயம் மஜ்ஜை உறிஞ்சிய எலும்புத்துண்டு.

சிக்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஜோடியில் ஒன்றை மாதவிக்கு அடையாளம் தெரிந்தது. வெண்மையும், பழுப்பும் கலந்த நாய், கரேலென்றிருக்கும் வாய். பெட்டை.

சுற்றி நின்ற மற்ற யாவும் ஆண் நாய்கள். அடுத்த தெருவிலிருந்து வந்திருக்கலாம்.

“இப்பத்தான் அந்தப்பொட்டை நாயி பெருசாயிருக்கு போல. நாக்கத் தொங்கப்போட்டு வந்திரிச்சுக எல்லா நாயிகளும். காலங்காத்தால தெருப்பூரா ஏறிக்கிட்டுத் திரியிதுக.”

“பாவந்தேன் அதுவும்.”

“என்னத்த பாவம்? ராத்திரி தூங்கவும் முடியாது. குலைச்சே கொல்லும்.”

சிக்கல் விடுபட்டுப் பெட்டை ஓடியது. மற்றவை விடாமல் துரத்தின.

அவசரமாய் டிஃபன் பாக்ஸில் இட்லிகளை அமுக்கி, டப்பியில் சாம்பார் அடைத்து ஹேண்ட்பேகில் போட்டுக் கிளம்பும் முன் மீண்டும் கண்ணாடி பார்த்துக் கொண்டாள்.

“காலைக்கு இட்லி ஹாட்பேகில் இருக்கு. மதியம் மட்டும் வெளிய சாப்டுக்கங்க.”

“எப்பவும் அதானே! மஹாராணி ராத்திரியும் வெளிய சாப்பிடச் சொல்லிடாதீங்க.”

சுருக்கென்றது மாதவிக்கு. போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் சென்ற போது இரவுணவை ஹோட்டலில் உண்ண வேண்டி இருந்தது. மேனேஜரின் பிறந்த நாள் ட்ரீட். அலுவலகத்தில் எல்லோரும் கலந்து கொண்டார்கள். மறுத்தால் நன்றாய் இருக்காது. அவரே வற்புறுத்தியதால் தயக்கமாய் ஒப்புக் கொண்டாள். சாப்பிட்ட பின் கிளம்பப் பத்து மணி ஆகி விட்டது. ஆட்டோ கிடைக்காமல், கிடைத்த ஆட்டோவில் ஃப்ளைட் டிக்கெட் விலை சொன்னதால் அதே ஏரியாவில் வசித்த, உடன் பணிபுரியும் சங்கருடன் டூவீலரில் வந்திறங்கினாள். முன்பே ஃபோன் செய்து வெளியே சாப்பிடச் சொல்லி இருந்தும் கேளாமல் கைகட்டி வீட்டு வாசலில் காத்திருந்தான் சக்திவேல்.

பதறி அவனுக்குச் சம்பா ரவையில் உப்புமா கிளறிப் போட்டு ஏன் தன்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை என திரும்பத் திரும்ப விளக்கிக் கொண்டிருந்தாள். அவன் எதுவுமே சொல்லாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். இன்று குத்துகிறான்.

விடுமுறைகளிலும் கூட்டமாய் வரும் அப்பேருந்திலேறி அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்த இடத்தில் - அதுவும் ஜன்னலோரம் - அமர்ந்து கொண்டாள். லேசாய்த்தலை வலித்தது.

*

மாதவி எல்லோரையும் போல் கல்லூரி போய், எல்லோரையும் போல் காதலித்தவள். அவனுடன் கொஞ்சம் ஊர் சுற்றி இருந்தாள். பைக்கில் மலைக்கோயில், டவுனுக்குப் போய்ச் சினிமா, பராமரிப்பற்ற பெரும்பூங்கா, அப்புறம் சில சிற்றுண்டிச் சாலைகள். கடற்கரையற்ற அவ்வூரில் காதலர்களுக்கு நேர்ந்து விட்ட இடங்கள் அவ்வளவுதாம்.

பலரும் ஊரில் அவர்களைப் பார்த்திருந்தார்கள். வீட்டில் அவளாக எதையும் சொல்ல வேண்டி இருக்கவில்லை. அப்பா கேட்ட போது தலை குனிந்தபடி ஒப்புக் கொண்டாள்.

“அவுங்க என்ன ஆளுக, மாதவி?”

அவள் பதில் சொல்லவில்லை. அவர் புரிந்து கொண்டார். எழுந்து போய் விட்டார். அம்மா தலையில் அடித்துக் கொண்டாள். கல்லூரிக்குப் போனது போதும் என்றாள்.

கோபத்தில் வரும் வசையின் ஒரு பகுதி என்றே மாதவி அதை நினைத்தாள். ஆனால் மறுநாளே அப்பா கல்லூரி போய் இனி வர மாட்டாள் எனக் கடிதம் கொடுத்து வந்து விட்டார். அவனைத் தொடர்பு கொள்ள முயன்றும் நடக்கவில்லை. ஆளுங்கட்சியின் தயவில் சாதி ஓட்டு வாங்கி தன் கட்சிக்கென ஒற்றைச் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவரிடம் இந்தப் பிரச்சனையை அவள் அப்பா எடுத்துப் போக, அவர் அவனை அழைத்துக் கடுமையாய் மிரட்டியதாகக் கல்யாணத்துக்குப்பின் தெரிந்து கொண்டாள்.

சக்திவேல் அவளைப் பெண் பார்க்க வந்தபோது குழப்பத்தில் இருந்தாள் மாதவி. அதற்கு முன்பே ஒருவன் வந்து பார்த்து விட்டுச் சம்மதம் சொல்லிய பின் யாரோ அவள் காதலைக் கொச்சையாய்ச் சொல்லப் போக, எல்லாம் நின்றது. அதனால் இம்முறை எல்லாவற்றையும் சொல்லிவிடத் தீர்மானித்திருந்தார் அவள் அப்பா.

சக்திவேல் டவுனில் நல்ல வேலையில் இருந்தாலும் ஒற்றைச் சமஉ கட்சியில் அடையாள அட்டை பெற்ற அடிப்படை உறுப்பினன். கூட்டங்களில் பங்கேற்பான் - “மயக்கிக் கூட்டிட்டுப் போன ஈன சாதிப்பயலுக கிட்ட இருந்து நம்ம புள்ளைகளக் காப்பாத்தற வரைக்கும் நம்மகிட்ட வேகம் இருக்கு. ஆனா அதே புள்ளைக்குத் தாலி கட்ட மட்டும் நம்மாளுகளுக்கு ஏன் மனசு வர மாட்டேங்குது? அதச்செய்யலன்னா காதலைப் பிரிக்கறம்ங்கற கேட்ட பேருதான் நமக்கு நம்ம புள்ளைககிட்ட இருக்கும்.”

மாதவியின் அப்பா பவ்யமாய் சன்னக்குரலில் விஷயத்தைச் சொன்ன போது சக்தி வேலுக்குத் தலைவரின் கம்பீரக் குரல்தான் மனதில் ஒலித்தது. பெற்றோர் தயங்க, அவன் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டான். அவன் சொன்னது ஒரே நிபந்தனை.

“கல்யாணத்துக்குப் பெறகு ஒழுக்கமா இருக்கனும்.”

“ஐயோ மாப்ள, இப்பவும் அப்படித்தான் அவ. ஏதோ புத்தி கெட்டுப் பண்ணிட்டா.”

சொல்லியிருந்ததை விடக்கூட ஒரு பவுன் போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்தார்.

முதரலிரவில் அவள் மீது விரல்கூடப் படும்முன் அதையே சொன்னான். விழியோர ஈரத்துடன் மௌனமாய்த்தலையாட்டினாள். விளக்கையும் அவளையும் அணைத்தான்.

*

மாதவி இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் கதறியதும் இறங்கி, வேகநடையில் அலுவலகம் அடைந்து, ஒரு சம்பிரதாயப் புன்னகையை அணிந்தபடி வரவேற்பறையில் அமர்ந்து நிமிர்ந்த போது வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.

அது நகைக்கடன் நிறுவனம். அடகு வைக்க, வைத்ததை மீட்க, தவணை செலுத்த, அல்லது விவரங்கள் அறிந்து கொள்ளவோ மக்கள் வந்து போனபடி இருப்பார்கள். மாதவி அங்கே ரிசப்ஷனிஸ்ட். வருபவர்களை விசாரித்து சம்மந்தப்பட்ட மேசைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகைக்கடன் குறித்த தகவல்கள், செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை இவற்றை எல்லாம் அவளே கண்டு சொல்லவும் கற்றிருந்தாள்.

அந்த நடுத்தர வயதுக்காரர் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யப் பேனா கேட்டார். வாங்கும் போது அவரது விரல் அவள் கைகளில் கூடுதலாய்ப் பட்டதை உணர்ந்தாள். அவளெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து விண்ணப்பத்தை நிரப்ப முனைந்தார்.

“அங்க போய் உட்கார்ந்து எழுதுங்கண்ணா. அடுத்து கஸ்டமர் வெயிட் பண்றாங்க.”

‘அண்ணா’ என்பதை அழுத்தினாள். திரும்ப வந்து பேனா கொடுத்த போது இன்னும் தாராளமாய்க் கைகளில் தொட்டார். மாதவிக்குப் பழகி விட்டது. வாடிக்கையாளர்கள் என்றில்லை, மேனேஜர் தவிர, உடன் பணிபுரியும் ஆண்கள் எல்லோரும் ஏதேனும் கொடுக்கும் போதோ வாங்கும் போதோ விரல் படாமல் இருப்பதில்லை. மேனேஜர் நல்ல பிள்ளையாய் இருப்பதற்குக் கூட அவரது வயதுதான் காரணமாய் இருக்கும்.

மதிய உணவு முதலில் மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள். இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் அவ்வப்போது துருத்தவும் தனியே தாமதமாகப் போகத் தொடங்கினாள். அக்காரணத்தாலேயே அலுவலக வாட்ஸாப் குழுமத்திலிருந்தும் வெளியேறினாள்.

ஒருமுறை அவள் சீட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ஃபோன் செய்து “கொஞ்சம் நேரம் ஜாலியாப் பேசிட்டு இருக்கலாமா?” என்று எவனோ கேட்டான். யாரென்று சொல்வது? வரும் வாடிக்கையாளர் வரை எல்லோருக்கும் அந்த எண் தெரியும்.

அது ஆண்களின் உலகம். தான் அங்கு ஒரு நுகர்வுப்பொருளென உணர்ந்திருந்தாள்.

வேலை மிக அதிகமாய் இருந்தது. சனி, ஞாயிறுகள் அப்படித்தான். வேலை முடித்துக் கிளம்பிப் பேருந்தேறிப் பார்க்கையில் மணி ஆறே முக்கால். உட்கார இடமில்லை.

*

சக்திவேல் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். மாதவி ஒருபோதும் பழைய காதலைத் தேடத் துணியவில்லை. அவனும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

டவுனில் வீடு பார்த்துக்குடியேறிய பின் மெல்லத்தனிமையை உணரத்தொடங்கினாள்.

சீரியல் பார்க்கும் பழக்கமில்லை. பக்கத்து வீடுகளில் எப்போதுமா அரட்டை அடிக்க முடியும்! வேலைக்குப் போக நினைத்தாள். எதிர்வீட்டு சுப்ரியா போகிறாள். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை. ஆனால் சக்திவேலிடம் கேட்கத் தயக்கமாய் இருந்தது.

நெகிழ்வான ஒரு பின்னிரவுத் தருணத்தில் அவனிடம் கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

“ஏங்க, நான் வேலைக்குப் போகவா?”

“என்ன திடீர்னு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

திரும்பிப் படுத்துக் கொண்டான். பிறகு அவள் அந்தப் பேச்செடுக்கவில்லை.

எழுந்த போது ஒருவேளை தான் வேலைக்குப் போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று நினைக்கிறானோ எனத்தோன்றியது. அவன் மீது பிரியமும் கிறக்கமும் கலந்தூறியது.

அவனுக்குப் பிடித்தம் போக, மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வருகிறது. அது அவர்கள் இருவருக்கும் அந்த டவுனில் வாழப் போதுமானதாய் இருக்கிறதுதான். ஆனால் சக்திவேலுக்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவிருந்தது. டவுன் எனினும் சிறுநகரமாக விரிந்துகொண்டிருந்தது என்பதால் எழெட்டு லட்சமாவது தேவைப்படும். ஒன்றே முக்கால் லட்சம் சேர்த்து வைத்திருந்தான். மீதிக்கு வங்கிக்கடன் முயலலாம்.

குழந்தை இப்போதைக்கு வேண்டாமென ஒத்திப் போட்டிருந்தார்கள். சொந்த வீட்டில் தான் தன் குழந்தை தவழ வேண்டும் என வைராக்கியம் கொண்டிருந்தான். ‘ஏதாவது விசேஷமா?’ என்று அவ்வப்போது கேட்டவர்களைச் சமாளிக்கப் பழகிவிட்டார்கள்.

பிறகு அவனே ஒருமுறை கேட்டான், “மாதவி, வீட்ல இருக்க போர் அடிக்குதா?”

என்ன சொல்வதென அவளுக்குக் குழப்பமிருந்தது. ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.

“நாம ஒரு வீடு வாங்கனும் மாதவி. நீ வேலைக்குப் போனா அது வேகமா நடக்கும்.”

“அதை ஏன் இப்படி உம்முன்னு மூஞ்சிய வெச்சுட்டு சொல்றீங்க? நான் போக ரெடி.”

“நீ வேலைக்குப் போறது பெரிய விஷயம் இல்லை. ஆனா பத்திரமா இருக்கனும்.”

அவள் புரியாது பார்க்க, தொடர்ந்தான், “எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதிரி இல்ல.”

அவள் அழுத்தமாய்ச் சொன்னாள், “எல்லாப் பொம்பளைகளும் ஒரே மாதிரி இல்ல.”

*

பிகாம் டிஸ்கன்டின்யூட் என்ற தகுதியுடன் கரிகுலம் விட்டே அடித்து வேலைக்கு விண்ணப்பித்த போது முதல் ஐந்து நிறுவனங்களில் எந்த பதிலும் கிட்டவில்லை.

சுப்ரியாவிடம் போய்ப்புலம்பினாள். அவள் இரு உதவிகள் செய்தாள். ஒன்று தனக்குப் பழக்கமானவர்கள் வழி இரண்டு, மூன்று நிறுவனங்களில் காலியிடங்கள் இருப்பதை அறிந்து விண்ணப்பிக்கச்சொன்னாள். அடுத்து ஒரு முக்கிய அலோசனை சொன்னாள்.

“ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இருந்தா அதை ரெஸ்யூம்ல சேருங்களேன்.”

சேர்த்தாள். இரண்டாவது நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். மூன்றாவதில் வேலை கிடைத்தது. ஆனால் அவள் விண்ணப்பித்தது அக்கவுண்டன்ட் வேலைக்கு. கிடைத்தது ரிசப்சனிஸ்ட் பணி. மறுபடி சுப்ரியாவிடம் தஞ்சமடைந்தாள்.

“முதலில் இதில் சேருங்க. அதில் இருந்துட்டே வேற வேலைக்கு முயற்சிப்போம். அல்லது அங்கயே கூட கொஞ்சம் வேலை கத்துக்கிட்ட பின் கேட்டுப் பார்க்கலாம்.”

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள்தான் புரிந்தது, தினம் வந்து கூட்டிப் பெருக்கி, கழிவறை கழுவிப் போகும் ஆயா தவிர அங்கே பணி செய்யும் ஒரே பெண் அவள்தான். ஆயா கழுவிப் போகும் கழிவறை கூட ஒன்றுதான்.

காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வர வேண்டும். ஒன்பதரை மணி நேர வேலை. அதில் அரை மணி மதிய உணவுக்கு. சனி, ஞாயிறு வேலை நாள். புதன் விடுமுறை. சக்திவேலுக்கு ஞாயிறு லீவ் நாள். இருவரும் வெளியே போவதே குறைந்துவிட்டது.

வேலைக்குப் போய் வந்த முதல் நாளிரவு சக்திவேல் கேட்டான்.

“ஆஃபீஸ்ல எத்தனை ஆம்பிளைங்க வேலை செய்யறாங்க?”

*

பெண்களுக்கெனத் தனிக் கழிவறை கிடையாது என்பதால் பயன்படுத்திய சானிடரி நேப்கினை அதன் பச்சை உறைக்குள் போட்டு அதை பாலிதீன் பையிலிட்டுச் சுற்றிக் கைப்பையிலேயே வைத்தெடுத்து வந்து வீடு திரும்பும் வழியில் குப்பையிலெறிவாள்.

கழிவறைக்கு ரிசப்ஷனிலிருந்து எல்லோரும் வேலை பார்த்திருக்கும் மேசைகளைத் தாண்டித்தான் போக வேண்டும். கைப்பையுடன் கழிவறை நோக்கி அவள் நடக்கும் போது மேசைகளிலிருக்கும் கண்கள் என்ன வேலையிலிருந்தாலும் தன்னை நோக்கி ஒருமுறை பார்த்துப்பின் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொள்வதை அறிவாள்.

மாதவி பொதுவாய் அலுவலகத்தில் கழிவறை செல்வதைத் தவிர்த்தே வந்தாள். சிறுநீரைக் கூட அடக்கி வைத்திருந்து வீட்டுக்கு வந்துதான் போவாள். அதனால் இடையில் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக் கொண்டாள். ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து டாக்டரிடம் போன போது “ஒண்ணுக்கு வந்தா அடக்குவீங்களா?” என நேரடியாய்க் கேட்டாள். அலுவலத்தில் ஓரளவு சுத்தமாகத்தான் பராமரித்தார்கள். பிரச்சனை அதுவல்ல. அவள் பார்த்திருந்த எத்தனையோ பெண்கள் கழிவறைகளை விட அது மிக மேலானதாகவே இருந்தது. அவள் தவிர்த்தலின் காரணம் அதுவன்று.

ஒரு முறை கழிவறையில் ஆபாசப்படம் வரைந்து, பாகம் குறித்து, கீழே ‘மாது’ என எழுதப்பட்டிருந்தது. பார்த்து அங்கேயே அழுது, யோசித்து, கண் துடத்து வெளியே வந்து மேனேஜரிடம் சொன்னாள். அவர் யோசித்து விட்டு, இதைப் பெரிதுபடுத்தினால் அலுவலகம் முழுக்கக் கேலிப் பொருளாவாள் என்று சொல்லி, வரைந்திருந்ததை அழிக்க ஆயாவை வைத்து ஏற்பாடு செய்வதாகவும், அடுத்த முறை இப்படி நடந்தால் எல்லோரையும் கூப்பிட்டு எச்சரிக்கலாம் என்றும் சொன்னார். அவளுக்குச் சங்கடம் எனில் இனிமேல் தன் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னார்.

அவருக்கு அலுவலகத்தில் தனியறை. அதனுள் சிறிய கழிவறை. அதைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் அவர் அறைக்குச் செல்ல வேண்டும். சரி வராது. அவளையும் மேனேஜரையும் இணைத்துப் பேசுவார்கள். அனாவசியமாக அவருக்கும் தன்னால் கெட்ட பெயர் வரும். தவிர, அவளுக்கு அப்படிப் போய்வரச் சங்கோஜமாய் இருந்தது.

“பரவாயில்ல சார். நான் பார்த்துக்கறேன். அடுத்த முறை நடந்தா யோசிக்கலாம்.”

*

ப்ரோக்கரிடம் சொல்லி வைத்திருந்து அவர் காட்டிய வீடுகள் ஏதும் ஒத்து வரல்லை. ஒன்று விலை அதிகம். அல்லது வீடு பிடிக்கவில்லை. அல்லது சுற்றம் சரி இல்லை.

ஒரு மாதம் முன் ப்ரோக்கர் காட்டிய வீடு மிகவும் பிடித்துப் போனது சக்திவேலுக்கு. மாதவியை அழைத்துப் போய்க் காட்டி வந்தான். அமைப்பான கார்னர் சைட். கிழக்குப் பார்த்த வீடு. கட்டி பதினைந்து வருடமாகியிருப்பினும் நன்றாகப் பராமரித்திருந்ததால் அத்தனை பழையதாகத் தோன்றவில்லை. வீட்டு உரிமையாளர் விலை பத்து லகரம் சொன்னார். பேரம் பேசி கடைசிக்கு ஒன்பதே காலுக்கு இறங்கி வந்தார். அவருக்கு அவசரத்தேவை இருந்தது. சக்திவேல் வங்கிக்கடன் வேலையை முடுக்கி விட்டான்.

“அவ்வளவு லோன் எலிஜிபிலிட்டி இல்லங்க. மேக்ஸிமம் அஞ்சரை லட்சம் வரும்.”

போதாது. பத்திரச் செலவு, சார்பதிவாளர் லஞ்சம், மராமத்து வேலைகள் சேர்த்தால் எப்படியும் எட்டு லட்சம் கடன் தேவை. அதைத்தான் கேட்டிருந்தான். இப்போது இப்படிச் சொல்கிறார்கள். இரண்டரை லட்சம் வித்தியாசம். மாமனாரிடம் கேட்டால் இன்னும் ஒரு எழுபத்தைந்தாயிரம் கிடைக்கக்கூடும். எப்படிப் பார்த்தாலும் போதாது.

“என் வைஃப் சேலரியும் சேர்த்து ஜாயிண்ட் லோன் போட முடியுமா?”

“அவுங்க சம்பளம் எவ்வளவு?”

“ஆறாயிரம்.”

“பத்தாதுங்க. பதினஞ்சாயிரம் இருந்தா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.”

*

வேர்வை கசகசக்க மாதவி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்தாள். தெருவில் நுழைந்ததும் இன்னமும் நாய்கள் உற்சாகமாய்ச் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் உள்ளே நுழைய சக்திவேல் கண்கள் தானாய் சுவர்க்கடிகாரத்துக்குப் போயின. மாதவி அதைப்பொருட்படுத்தாது கேட்டாள். “தோசை சுடறேன், சாம்பார் இருக்குல்ல.”

பக்கத்து வீட்டு கதிரேசன் - மங்கையர்கரசி அக்கா வீட்டுக்காரர் - குரல் கொடுத்தார்.

“ஸார், ஃப்ரியா இருந்தா வாங்க. இந்த நாய்க தொல்லை பத்திப் பேசிடலாம். ஸ்ட்ரீட் ஆளுங்கள வரச் சொல்லி இருக்கோம். முருகேசன் சார்கிட்டயும் சொல்லிடுங்க.”

சட்டை அணிந்து மாதவியிடம் சொல்லிக் கிளம்பினான். பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ரொம்பத் தொல்லையா இருக்குங்க.”

“ராத்திரி தூங்க முடியறதில்ல.”

“ஹாஃபேர்லி எக்ஸாம் நடக்கற நேரம். பசங்க படிக்கறதுக்கும் பிரச்சனை ஆகுது.”

“தெரு பூரா அசிங்கம் பண்ணியும் வெச்சிடுதுங்க.”

பல விஷயங்கள் யோசித்துப் பின் விஏஓ அலுவலகத்தில் பணிபுரியும் முருகேசன் மறுநாள் காலை முன்சிபாலிட்டி அலுவலகத்தில் புகார் எழுதிக் கொடுப்பது என்றும் உடன் கதிரேசன் போவது என்றும் முடிவாயிற்று. நாய் பிடிக்கும் வண்டி வந்தால் அவர்களுக்கு வீட்டுக்கு ஐம்பது வீதம் போட்டு நானூறு கொடுப்பதென முடிவானது. (தெருவில் பத்து வீடுகள், ஒரு வீடு காலி, செல்வராஜ் வீட்டில் தர மாட்டார்கள்.)

சக்திவேல் வந்து சொன்ன போது மாதவிக்குச் சிரிப்பு வந்தது. நாய் பிடிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஏதோ சினிமாவில் காட்டியதும் நினைவிருக்கிறது. ஆனால் நேரில் எல்லாம் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. எப்படிப் பிடிப்பார்கள்? ஒருவேளை நாய்களைத் துன்புறுத்துவார்களோ என அச்சம் எழுந்தது.

*

எந்தப் பெண்ணும் நகையை அடகு வைக்க வந்து பார்த்ததில்லை. போலவே எந்த ஆணும் வந்து நகையை மீட்டுப் பார்த்ததில்லை. சில சமயங்களில் நகையின் அசல் விலையை விட ஒன்றரை மடங்கு கொடுத்து மீட்டுச் சென்றோர் உண்டு. அவர்கள் மண்டையில் கொட்டி என்ன பைத்தியகாரத்தனம் எனக் கேட்கத் தோன்றும். அதை யோசித்துக் கொண்டிருக்கையில் மேனேஜர் தொலைபேசியில் அறைக்கு அழைத்தார்.

“சௌந்தர் இடம் காலியாகுது மாதவி. தெரிஞ்சிருக்கும் இந்நேரம் உனக்கு.”

“ஆமா ஸார். பேசிக்கிட்டாங்க, அக்கவுண்டன்ட் போஸ்ட் வேகன்ட் ஆகுதுனு.”

“எவ்ளோ நாள் தான் ரிசப்ஷன்லயே உட்கார்வே? உள்ள வர வேண்டாமா?”

“நிச்சயம் வரனும் ஸார். எனக்கும் அதுதான் இன்ட்ரஸ்ட். அப்ளை பண்றேன்.”

“நீ வெளியாள் மாதிரி அப்ளிகேஷன் போடனுமா? மாணவன் தயாரானா குரு தானா அமைவான். அது மாதிரிதான். நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். நீ கஸ்டமர்கள் கிட்ட பேசற விதம், நம்ம எம்ப்ளாயீஸ் இல்லாதப்ப பெரும்பாலான விஷயங்களை உன்னால கவனிச்சுக்க முடியுது. நீ அக்கவுண்டன்ட் வேலைக்குத் தயாராகிட்ட பின் நான் கொடுக்காம இருக்க முடியுமா? தடுக்கலாமா? உன் திறமை உன் வளர்ச்சி.”

“என்ன சொல்றதுனு தெரியல. உங்க நம்பிக்கையக் காப்பாத்துவேன், ஸார்.”

“சாலரி மன்த்லி 13,350. ஓவர்டைம் பார்க்கறது தனி. சனி, ஞாயிறு லீவ்.”

“சந்தோஷம் ஸார்.”

“நாந்தான் ரிஸ்க் எடுக்கறேன். இந்த போஸ்டுக்கு பிகாம் மினிமம் க்வாலிஃபிகேஷன். நீ இன்னும் கம்ப்ளீட் பண்ணலைல? ஏதும் தப்பாப் பண்ணி பிரச்சனை வந்தா பிகாம் இல்லாதவள ஏன் ரெக்ரூட் பண்ணினன்னு என் தலையத்தான் மேல உருட்டுவாங்க.”

“நான் சின்சியரா வொர்க் பண்ணுவேன் ஸார். ரொம்ப தேங்க்ஸ்.”

“அவ்ளோ தானா! புரிஞ்சிக்கவே மாட்டேங்கறியே, மாது!”

‘மாது’ என்றதும் திடுக்கிட்டாள். அவளுக்குப் புரிந்தது. கண்களில் நீர் திரண்டது. அவர் கேட்ட விஷயத்தை விட அவரும் அப்படித்தான் என்ற அதிர்ச்சி அவளை நடுக்கியது.

ஏதும் பேசாமல் வெளியே வந்தாள். பின்னால் மேனேஜரின் குரல் பாய்ந்து தேய்ந்தது.

“அவசரமில்ல. யோசிச்சு சொல்லு. ஆனா எதுனாலும் நமக்குள்ள இருக்கனும்.”

*

இரண்டாம் இரவாய் நாய்களை உத்தேசித்துத் தெருக்கார ஆண்கள் கூடியிருந்தார்கள். சக்திவேல் போன போது முருகேசன் முன்சிபாலிட்டி படலத்தை விவரித்திருந்தான்.

“இன்னும் ஒரு வாரம் பத்து நாள் ஆகுமாம். நம்ம முன்சிபாலிட்டிக்குனு தனியா நாய் புடிக்கற வண்டி கிடையாது. கார்ப்பரேஷன்ல இருந்து அவுங்க ஃப்ரியா இருக்கற நாள் தான் அனுப்பி வைப்பாங்க. அது எப்பன்னு சொல்ல முடியாது. முன்னபின்ன ஆகும். இவுனுகளே பத்து நாள்னா, ரெண்டு வாரமாச்சும் ஆக்கிடுவாங்க. அது ஆகறதில்ல.”

“இப்படித் திரிஞ்சிட்டு இருந்தா பொண்டு புள்ளைக தெருவில் நடமாட வேண்டாமா?”

“ஆமா ஸார், நேத்து எம்பையன் நாயிக என்னப்பா பண்ணுதுனு கேக்கறான்.”

“டிக்கிலோனா விளையாடுதுகன்னு சொல்ல வேண்டியதுதானே ஸார்!” சிரித்தார்கள்.

“முன்சிபாலிட்டிகாரன் வர மாட்டேன்னுட்டான். இப்ப நாமளா நாய் புடிக்க முடியும்?”

“எனக்கு ஒரு யோசனை இருக்கு.”

*

சக்திவேல் வீட்டுக்குள் நுழைந்தான். குளியலறையில் சோப்பிட்டுக் கை கழுவினான்.

”செம டயர்ட். பசிக்குது. இன்னிக்கு என்ன?”

“அடைங்க, ரெடிதான். வந்து சாப்பிடுங்க.”

அடையை விண்டு உண்டு கொண்டிருக்கும் போது பேசத் தொடங்கினாள்.

“நான் வேலையை விடப் போறேங்க.”

சாப்பிடுவதை நிறுத்தித் தலையை நிமிர்த்தி, “என்ன திடீர்னு?” எனக் கேட்டான்.

“எல்லாமே தப்பா இருக்குங்க. இன்னிக்கு மேனேஜர் பேசினார். ரிசப்ஷனிலிருந்து அக்கவுண்டன்ட் வேலை ப்ரமோஷன். ஆனா அவருக்கு அட்ஜஸ்ட் பண்ணனும்.”

சக்திவேல் மேஜேனரின் தாயின் ஒழுக்கத்தை அவமதிக்கும் வசைச்சொல் ஒன்றை உதிர்த்தபடி தட்டை அப்படியே வைத்து விட்டுச் சமையலறையில் கைகழுவினான்.

“ஐய்யய்யோ, என்னங்க பாதிலயே எழுந்திட்டீங்க. பசின்னு வேற சொன்னீங்க.”

அவன் ஏதும் பேசாமல் படுக்கைக்குப் போனான்.

“நான் ஒரு கிறுக்கி. சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பேசி இருக்கனும். டயர்ட்னு சொன்னீங்க, சீக்கிரம் தூங்கிடுவீங்களோன்னுதான் இப்பவே சொல்லிடலாம்னு.”

பாத்திரங்களை அவசரமாய் அப்புறப்படுத்தி விட்டு அவளும் போனாள்.

அவனைக் கட்டி அழ வேண்டும் போல் தோன்றியது. இப்போது பேசினால் அவன் எரிந்து விழக்கூடும் என்றும் தோன்றியது. அதனால் விளைக்கை அணைத்து விட்டு அமைதியாய் அவனருகே பட்டும் படாமல் வந்து படுத்துக் கொண்டாள். வெகுநேரம் அவன் ஏதும் பேசவே இல்லை. கண்களை மூடிப் படுத்திருந்தான். யோசிக்கிறானா தூங்கி விட்டானா என்பதும் அவளுக்குப் புரியவில்லை. காத்திருந்து காத்திருந்து கிட்டத்தட்டத் தூங்க ஆரம்பித்தாள். சட்டென அவனது குரல் அவளைக் கலைத்தது.

“அக்கவுண்டன்ட் பரமோஷன் கிடைச்சா எவ்ளோ சம்பளம் வரும்?”

“பதிமூனாயிரம் சில்லறை வரும். ஓடீ பார்த்தா கூட ரெண்டு, மூனாயிரம்.”

“ம்ம்ம். உங்க மேனேஜர் என்ன ஆளுக மாதவி?”

“என்ன கேட்டீங்க?”

“வனத்தோட போனாலும் இனத்தோட சேரனும்னு சொல்வாங்க.”

அவள் திடுக்கெனத் திரும்பி அவன் முகம் பார்த்தாள். அவன் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்திருந்தான். இருளில் அவன் முகம் தெளிவாய்த் தெரியவில்லை.

“ரெண்டு வருஷமா பாக்கறோம் கிடைச்ச வீடும் கைநழுவிடுச்சு.” பெருமூச்செறிந்தான்.

“அதுக்காக என்ன வேணா செய்யறதாங்க?”

“இவ்ளோ நாள் ஒண்ணுமே பண்ணலயா என்ன?”

பேரதிர்ச்சியுற்றாள். கண்களில் இருந்து கசிந்த நீர் இருபுறப்பக்கவாட்டிலும் ஓடியது.

*

மாதவி காலையில் எழுந்தபோது உறக்கமில்லாததால் தலை ஒருபுறமாய் வலிக்க, முகங்கழுவி, சக்திவேல் சொன்னதன் அர்த்தம் விளங்கமுயன்றபடி காஃபி போட்டதில் இன்னொருபுறமும் தலை வலிக்கத் தொடங்கியது. போய்க் கதவைத் திறந்தாள்.

கலைந்த முந்தாநாள் கோலத்தின் மீது படுத்திருந்தது நாய். அதே வெண்மை பழுப்புப் பெட்டை நாய். எவ்வளவு கொழுப்பு இருந்தால் வாசலில் ஒய்யாரமாய்த் தூங்கும்!

“சனியனே! ச்சூ. ச்சூ. ஓடு.” கோபமாய் அதை முடுக்கினாள்.

நகரவே இல்லை. சிறுகல்லெடுத்து அதன் மீதெறிந்தாள். அப்போதும் அசையவில்லை. சந்தேகம் எழ, மெல்ல அருகே சென்று பார்த்தாள். விறைத்துக்கிடந்தது. மூச்சு விடும் அறிகுறியே இல்லை. சுற்றி வந்து பார்த்தாள். வாயில் நுரை தள்ளி இருந்தது. ஈக்கள் மொய்த்தன. திக்கென்றது. வாசலருகே இலையில் பிரியாணி குதறப்பட்டுக் கிடந்தது.

“ஏங்க, வாசலில் நாய் பேச்சுமூச்சில்லாமப் படுத்திருக்குது.” என்று குரல் கொடுத்தாள்.

திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தவன் நாயைப் பார்த்தபடி, “உள்ள போ நீ.” என்று சொல்லிக்கொண்டே தலையணையின் கீழிருந்த செல்ஃபோனைத் துழாவி எடுத்தான்.

“கதிரேசன் ஸார், அந்தப் பொட்டை நாயி போயிருச்சு.”

“எங்க வீட்டு முன்னாடிதான் கெடக்குது. பாதி பிரியாணியத் தின்னுடுச்சு.”

”ஆமா, எடுத்து வெச்சிடறேன். வேற நாய்க ஏதும் வந்து தின்னு வெச்சா பிரச்சனை. பக்கத்துல சொல்லிடுங்க, ஆளுக வந்தா விடியறதுக்குள்ள போய்ப் பொதச்சிறலாம்.”

துண்டித்து விட்டு மீதமிருந்த பிரியாணியை இலையுடன் கவனமாய் எடுத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வீட்டுக்குள் கொணர்ந்தான். “வெசம் போட்டது. குப்பைல எறிஞ்சறாதே. நாய் பூனைன்னு தின்னுறப்போகுது. அப்புறம் தீ வெச்சு எரிச்சிடலாம்.”

“கொன்னுட்டீங்களா அந்த நாயை?”

“ஏய், வேறென்ன செய்ய? மாசம் பூரா இந்தத் தெரு மனுசங்க தூங்க வேண்டாமா?”

“இந்த நாய் என்ன பண்ணுச்சு? பின்னாடி மோந்து திரிஞ்சதுகளத்தானே கொல்லனும்?”

“அதுக எத்தனையக் கொல்ல? இது ஒண்ணைத் தூக்கினா மத்தது பூரா அடங்கிரும்.”

வெளியே காலடிகள் கேட்டன. சக்திவேல் சட்டையணிந்து கிளம்பினான். நாயை இழுக்கும், பேசிக்கொண்டே தூக்கும், சாக்குப்பைக்குள் போடும் ஓசைகள் மிதந்தன.

மாதவி நெடுநேரம் அப்படியே நின்று கொண்டே இருந்தாள். கதவைத் தாளிட்டாள். நைட்டியை அவிழ்த்துவிட்டுச் சுடிதார் அணிந்தாள். கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

கவரைப் பிரித்து நாய் மிச்சம் வைத்திருந்த பிரியாணியைத் தின்னத் தொடங்கினாள்.

***

(தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. 18.03.2018 தினமணி கதிர் இணைப்பிதழில் வெளியானது.)

Comments

Anonymous said…
வலிக்கிறது..
ஒழுக்கம் பேசும் சாதிய மாண்பாளர்களின் தோலை உரித்து... படித்த பெருமக்களின் பின்னந்தலையில் அடித்து... அதே நேரம், மனித நெஞ்சம் கொண்டவர்களின் இதயத்தை நடுங்க வைத்து... அற்புதமான சிறுகதை! மிக்க நன்றி!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி