பெண்மைப் பஞ்சு
“So what would happen if men could menstruate? Clearly, menstruation would become an enviable, worthy, masculine event: Sanitary supplies would be federally funded and free. Of course, some men would still pay for the prestige of commercial brands”
- Gloria Steinem, American Journalist
சானிடரி நாப்கின் என்பது பெண்களின் மாதவிலக்கின் போதான ரத்தப் போக்கை உறிஞ்சி சுகாதாரத்தையும், சௌகர்யத்தையும் தரும் பஞ்சுப் பொருள். இது தவிர யோனியில் அறுவை சிகிச்சை, பிரசவத்துக்குப் பிந்தைய நாட்கள், கருக்கலைப்பு என பெண் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு நிகழ வாய்ப்புள்ள எல்லா சூழல்களிலும் அதைக் கையாளப் பயன்படுகிறது. சானிடரி டவல், சானிடரி பேட் என்று வேறு பெயர்கள் இதற்கு உண்டு - அல்லது பேட் என்று சுருக்கமாய். நம்மூரில் பிரபல ப்ராண்டின் பெயரால் பொதுவாய் இதை விஸ்பர் என்று அழைப்பவரும் உண்டு.
சானிடரி நாப்கின் என்பது உடலுக்கு வெளியே, உள்ளாடையுடன் ஒட்டி வைத்துப் பயன்படுத்துவது. இன்னொரு வகையான டாம்பன் என்பது உடலுக்கு உள்ளே உறுப்புக்குள் வைத்துப் பயன்படுத்துவது. அடுத்து மென்ஸ்டுரல் கப் என்பது உடலின் உள்ளே வைத்து ரத்தப் போக்கை சேகரித்து வெளியூற்றும் கிண்ணம்.
ஏவாள் வாழ்க்கை மரத்தின் (Tree of Life) கனிகளை உண்ட பின் தன் முதல் மாதவிலக்கை அடைந்ததாகச் சொல்கிறார்கள். நிர்வாண ஏவாள் இதை எப்படி எதிர்கொண்டாள்? ஒருவேளை இலை தழைகளைப் பயன்படுத்தி இருக்கலாம்.
பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் அதிகாரம் 31ல் (வாசகம் 35) "அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக் குறித்துக் கோபங்கொள்ள வேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்" என வருகிறது. ராகேல் தன் தந்தை வரும் போது மாதவிலக்கின் காரணமாக எழவில்லை. எனில் அந்தக் காலத்துப் பெண்கள் அந்நாட்களின் போது சானிடரி நாப்கின் போன்ற எதுவும் அணியாது, எங்கும் வெளியே செல்லாது ஒரே இடத்தில் அமர்ந்து பொழுதைக் கழித்திருக்கின்றனர்.
மகாபாரதத்தில் திகிலுரிக்க முனையும் துச்சாதனனைப் பார்த்து "அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை தன்னி லிருக்கின்றேன். தார்வேந்தர் பொற்சபை முன் என்னை அழைத்த லியல்பில்லை" என்று திரௌபதி சொல்வதாக பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதுகிறார். துவாபர யுகத்திலேயே பரத கண்டத்தில் பெண்கள் மாதவிலக்கின் போது தனி ஆடை தரித்தனர் என்பதாக இதை எடுக்கலாம்.
பண்டைய எகிப்தில் பெண்கள் பேப்பிரஸ் என்ற அடர்த்தியான பேப்பர் சங்கதியை மென்மைப்படுத்தி டாம்பன் ஆகப் பயன்படுத்தி இருக்கின்றனர். கிரேக்கத்தில் சிறு மரத்துண்டுகளைப் பருத்திநார் சுற்றி டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். பைசன்டைன் என்ற ரோம சாம்ராஜ்யதில் வெண்கம்பளியை மென்மையாக்கி டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். பண்டைய ஜப்பானில் பேப்பரால் ஆன டாம்பன்களை பேன்டேஜ் சுற்றிப் பயன்படுத்தினர். ஹவாயில் பெண்கள் ஃபெர்ன் என்ற செடியின் நாரைப் டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். இன்றும் சில ஆப்ரிக்க மற்றும் ஆசிய தேசப் பெண்கள் புல் மற்றும் செடிகளை மாதவிலக்கின் போது பயன்படுத்துகின்றனர்.
சானிடரி நாப்கின் பற்றிய குறிப்பு சூடா என்ற 10ம் நூற்றாண்டின் ரோமானிய என்சைக்ளோபீடியாவில் வருகிறது. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹைபாஷியா என்ற பெண் தத்துவ ஞானி, தன் பின்னால் சுற்றும் ஒருவனை விரட்ட தான் பயன்படுத்திய சானிடரி நாப்கினை அவன் மீது வீசி எறிந்ததாக அது சொல்கிறது.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் |
17ம் நூற்றாண்டில் ஐரோப்பியப் பெண்கள் திணிப்புப் பஞ்சு மற்றும் கடற்பஞ்சை நாப்கினாகப் பயன்படுத்தினர். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் பெண்கள் வீடுகளில் தாமே நாப்கின்கள் செய்து பயன்படுத்தினர்.
1867ல் இண்ட்ரபிட் இன்வென்டர்ஸ் நிறுவனம் மென்ஸ்டுரல் கப்புக்கான முதல் பேடண்டைப் பதிவு செய்தனர். 1870களில் தொங்க விடும் சஸ்பெண்டர்களுடன் கூடிய நாப்கின்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்தன. 1890களில் சஸ்பெண்டர் மாடலுக்குப் பதில் பெல்ட் வைத்த நாப்கின்கள் வந்தன.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போர்வீரர்களின் துப்பாக்கிக் காயங்களுக்கென செய்த கண்டுபிடிப்பே டிஸ்போஸிபிள் நாப்கின்களுக்கு ஆரம்பப் புள்ளி. டிஸ்போஸிபிள் நாப்கின் என்பது ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடுவது. ஆம். அதுவரை பெண்கள் நாப்கின்களைத் துவைத்து மறுபடிப் பயன்படுத்தி வந்தார்கள்.
1880களில் ஜெர்மனியில் டிஸ்போஸிபிள் நாப்கின்கள் சந்தைக்கு வரத் துவங்கின. அமெரிக்காவில் காம்ஸ்டாக் சட்டத்தின் (1873) காரணமாக பாலியல் பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப் பட்டிருந்ததால் அங்கு அதிகம் பிரபலமாகவில்லை. 1896ல் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் லிஸ்டர்ஸ் டவல்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவின் முதல் டிஸ்போஸிபிள் நாப்கினை அறிமுகப்படுத்தியது. 1890களில் அமெரிக்கா மற்றும் ப்ரிட்டனில் இது பரவலாகக் கிடைத்தது.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பெண்கள் ‘பறவையின் கண்கள்’ என்று அழைக்கப்பட்ட, குழந்தைகளின் டயப்பர் செய்யப் பயன்பட்ட காட்டன் வஸ்துவைக் கொண்டு வீட்டிலேயே செய்த நாப்கின்களை உள்ளாடைகளுடன் குத்திப் பயன்படுத்தினர். முதலாம் உலகப் போரின் போது பெண்கள் அதிகமாய் ராணுவத்தில் சேர்ந்ததால் சானிடரி நாப்கின்கள் மிக அதிக அளவில் சந்தைப் படுத்தப்பட்டு பிரபலமானது. அக்காலத்தில் ஃப்ரான்ஸில் நர்ஸ்களாகப் பணி புரிந்தவர்கள் நோயாளிகளுக்குப் பயன்பட்ட செல்லுலோஸ் பேண்டேஜ்களின் ரத்தம் உறிஞ்சும் திறன் கண்டு அதை சானிடரி நாப்கின்களாகப் பயன்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, 1920ல் புகழ்பெற்ற கோடெக்ஸ் செல்லுகாட்டன், செல்லுநாப் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. 1921ல் முதல் சானிடரி நாப்கின் விளம்பரத்தை கோடெக்ஸ் வெளியிட்டது. ஆனால் 1926ல் மான்ட்கோமரி வார்ட் சூப்பர் மார்க்கெட்டின் கேட்லாக்களில் இடம்பெறும் வரை இது புகழ் பெறவில்லை.
அக்காலத்தில் பொதுவாய் பெண்கள் கடைகளில் நாப்கின்களை கேட்டு வாங்க சங்கோஜப்பட்டனர். கிம்பர்லி க்ளார்க் நிறுவனத்தார் கோடெக்ஸ் விற்பனையை அதிகரிக்க ஒரு யுக்தியைக் கையாண்டனர். கடைகளில் பணம் போட ஒரு தனிப் பெட்டி வைக்கப் பட்டிருக்கும். அதில் பணத்தைப் போட்டு விட்டு நாப்கின்களை எடுத்துச் செல்லலாம். கடைக்காரர்களிடம் எதுவும் பேச வேண்டியது இல்லை.
1927ல் மாடெஸ் ப்ராண்டை கோடெக்ஸுக்குப் போட்டியாக இறக்கியது ஜான்சன் & ஜான்சன். அக்காலத்தில் பேண்டேஜ் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களில் கணிசமானவை சானிடரி பேட் வியாபாரத்திலும் குதித்திருப்பதைக் கவனியுங்கள்!
1929ன் ஜான்சன் & ஜான்சனின் மாடெஸ் விளம்பரங்கள் |
1929ல் டாக்டர் ஏர்லி ஹாஸ் என்பவர் முதல் நவீன டாம்பனை உருவாக்கினார். தன் மனைவி மற்றும் பெண் நோயாளிகள் தடிமனான நாப்கின்களைப் பயன் படுத்தும் சங்கடத்தைப் போக்க இதை உருவாக்கி பேடண்ட் வாங்கினார். 1931ல் இவை அமெரிக்காவில் சந்தைக்கு வந்தன. 1933ல் கெர்ட்ரூட் டென்ரிச் இந்தப் பேடண்ட்டை 32,000 டாலருக்கு வாங்கி டாம்பெக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
டாம்பன்கள் வந்த புதிதில் அது பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. டாம்பன்களை உடலுக்குள் வைப்பதால் அது பாலியல் உணர்வுகளைத் தூண்டும், கன்னித்தன்மையை இழக்கச் செய்யும் எனப் பரவலாகப் பேசினார்கள். டாக்டர் ராபர்ட் டிக்கின்ஸன் நாப்கின்களை விட டாம்பன்கள் பயன்படுத்துவதே சிறந்தது என்று ஒரு கட்டுரை எழுதினார். 1945ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் சான்றளித்த பின்பு தான் பெண்கள் இதை நம்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
1940களில் அச்சு ஊடகங்களில் செய்யப்பட்ட மாடஸ் ப்ராண்டின் விளம்பரங்கள் சானிடரி நாப்கின்களை ஒரு கவர்ச்சிகரமான ஃபேஷன் ஐட்டமாக ஏற்றி வைத்தது. 1950களில் அப்ளிக்கேட்டர் இல்லாத, வழுவழு முனை கொண்ட, பர்செட்ஸ் என்ற டாம்பன்கள் விற்பனைக்கு வந்தன. பெண்கள் டாம்பன் போட்டு தம் பர்ஸ்களில் மறைத்துக் கொள்ள ஏதுவாய் டாம்பன் பெட்டிகளும் விலைக்குக் கிடைத்தன.
1937ல் லெனோவா சால்மெர்ஸ் என்பவர் முதல் மறுபயன்பாடு மென்ஸ்டுரல் கப்புக்கான பேடண்ட்டைப் பதிவு செய்தார். ஆனால் டிஸ்போஸிபள் நாப்கின்கள் வந்து விட்ட காலத்தில் அதைப் பெண்கள் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை. 1959ல் மென்ஸ்டுரல் கப்களை பிரம்மாண்ட விளம்பரத்துடன் டாஸெட் நிறுவனம் மறுஅறிமுகம் செய்தது. இம்முறையும் பெண்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
1969ல் ஸ்டேஃப்ரீ மினிபேட்கள் விற்பனைக்கு வந்தன. ஒட்டக்கூடிய ஸ்ட்ரிப்கள் வைத்த முதல் நாப்கின் இது. பெல்ட், க்ளிப், பின் பயன்படுத்திய நாப்கின்களுக்கு இது வலுவான சாவு மணி அடித்தது. 1970களில் ஹிப்பி கலாசாரம் காரணமாக சூழலியல் பார்வையுடன் துவைத்துப் பயன்படுத்தும் நாப்கின்கள் மறுபடி வந்தன.
1972ல் கிம்பர்லி க்ளார்க்காரர்களும் ந்யூ ஃப்ரீடம் பேட்களின் மூலம் பெல்ட் இல்லா நாப்கின் டிசைனுள் நுழைந்தனர். அதே ஆண்டில் தேசிய ஒளிபரப்புக் கூட்டமைப்பு டிவிக்களில் நாப்கின் விளம்பரங்களை ஒளிபரப்ப இருந்த தடையை விலக்கியது.
1975ல் ப்ராக்டர் & கேம்பிள் "நாங்கள் கவலைகளைக் கூட உறிஞ்சுவோம்" என்ற விளம்பரத்துடன் ரிலே டாம்பன்களை அறிமுகப்படுத்தியது. 70களின் பிற்பகுதியில் டாம்பன் பயன்படுத்துவதால் டாக்ஸிக் ஷாக் ஸின்ட்ரோம் என்ற நோய்த்தொற்று வருவதாக சொல்லப்பட்டதால் 1980ல் ரிலே டாம்பன் விலக்கிக் கொள்ளப்பட்டது.
1987ல் கீப்பர் என்ற மென்ஸ்டுரல் கப் விற்பனைக்கு வந்தது. இது ஓரளவு வெற்றி பெற்று இப்போது வரையிலும் சந்தையில் இருந்து வருகிறது. 1990களில் ஃப்ரெஷ் & ஃபிட் பேடட்ஸ் என்ற மிகச்சிறிய நாப்கின்கள் அறிமுகம் ஆனது. ஆரம்பத்தில் பெண்களை ஈர்த்ததாகச் சொல்லப் பட்டாலும் பின் காணாமல் போய் விட்டது.
வாஷிங்டன் புறநகர் பகுதியில் மாதவிலக்கு அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. காலந்தோறும் மாதவிலக்குக் காலத்தில் பெண்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு விதமான சானிடரி நாப்கின், டாம்பன், மென்ஸ்டுரல் கப்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் கேர்ஃப்ரி, விஸ்பர், ஸ்டேஃப்ரீ, கோடெக்ஸ் ஆகியன பிரபலமான நாப்கின் பிராண்டுகள். டாம்பன் அறிமுகம் இந்தியாவிலும் தோல்வியே கண்டது.
மாதவிலக்கின் போது சுகாதாரமான முறையில் சானிடரி பேட் பயன்படுத்துவதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்கலாம் என 64% மகப்பேறு மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சில மூன்றாம் உலகநாடுகளில் இன்றும் மண்ணையும், சேற்றையும் மாதவிலக்கு உறிஞ்சிகளாகப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் கையிலிருக்கும் காசுக்கு சுகாதாரம் என்பது எட்டாக்கனி. இதனால் அப்பெண்கள் பல தொற்று நோய்களில் உழல்கிறார்கள்.
சிக்கன நேப்கின்கள் தயாரிக்கும் கோவை முருகானந்தம் |
கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் என்பவர் மூன்றில் ஒரு பங்கு செலவில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து பேடண்ட் வாங்கியுள்ளார். இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமும் சலுகை விலையில் கிராமப்புற இளம் பெண்களுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடந்த 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் பிஜேபி பெண்களுக்கு இலவச நாப்கின் என்பதை தேர்தல் வாக்குறுதியாகக் குறிப்பிட்டது.
மாதவிலக்கு பெண்மையின் கம்பீரம். சானிடரி நாப்கின்கள் அதன் அடையாளம்.
*
Stats சவீதா
• இந்தியாவில் 35.5 கோடி பெண்கள் மாதவிலக்கு சுழற்சியில் உள்ளனர்.
• இவர்களில் 12% பேர் மட்டுமே சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர்.
• 68% இந்தியப் பெண்கள் சானிடரி நாப்கின் வாங்கும் வசதியுடன் இல்லை.
• 70% இனப்பெருக்க வழி நோய்கள் சுத்தமற்ற மாதவிலக்கினால் வருகிறது.
• 23% இந்தியப் பெண்கள் பூப்படைந்தவுடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
***
(2012ல் குங்குமம் இதழில் வெளியானது)
Comments