E=mc2 [சிறுகதை]
“ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!” பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தின் மையத் திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞானக் கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக, மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமியிருந்த – பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட – ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அவ்வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசலப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார். “ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக் கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் "Does the inertia of a body depend upon its energy-content?" என்ற கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.” செயற்கை நீரடைத்த ப்ளாஸ்ட்டிக் புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த