ஆப்பிளுக்கு முன்(னுரை)

அசத்திய சோதனை

முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக, அழுத்தமாகச் சொல்லி விடுகிறேன். இது வரலாற்று நூல் அல்ல; புனைவு. வரலாறு சார்ந்த புனைவு. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எவ்வளவு இரண்டுக்கும் இடைப்பட்ட குழப்பங்கள் என்பது தொழில் ரகசியம். வரலாற்று ஆர்வமும் வாசிப்புத் திராணியும் கொண்டோர் சம்மந்தப்பட்ட தரவுகளைத் தேடித் தெரிந்து கொள்ளலாம். (அப்படியானவர்களுக்காக குறிப்புதவி நூற்பட்டியல் ஒன்றையும் புத்தகத்தின் கடைசியில் தந்திருக்கிறேன்.)


என் தந்தை வழித் தாத்தா வே. இராசப்பன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். குளத்தேரியில் தண்டவாளத்தின் மரையைக் கழற்றி ப்ரிட்டிஷ் சரக்கு ரயிலைக் குளத்தில் கவிழ்த்தவர்களுள் அவரும் ஒருவர். காந்தி இப்போராட்டத்தை ஏற்பாரா தெரியாது, ஆனால் என் தாத்தா காந்தியின் மீது பெரும் பற்றுக்கொண்டவர்.

தாத்தா மாதந்தவறாமல் தியாகிகள் ஓய்வூதியம் பெற்றவர். வருடா வருடம் சுதந்திர தினத்திற்கு வீட்டுக் கூரையில் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து, பதிலாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொன்னாடை பெற்றுக் கொண்டிருந்தவர். எல்லாத் தேர்தல்களிலும் மாறாமல் காங்கிரஸுக்கே வாக்களித்தவர். காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் மரணங்களுக்குக் கண்ணீர் மல்கியவர். என்னிடம் இருக்கும் ‘சத்திய சோதனை’ நூற்பிரதி அவருக்கு ஏதோ ஒரு சுதந்திர தினத்தின் போது அளிக்கப்பட்டது தான்.

காந்தி பற்றிய முதல் சித்திரம் அவர் வழியாகவே என்னை வந்தடைந்தது. ஆனால் அடுத்த தலைமுறையில் திராவிடக் குரல்கள் வலுத்து ஒலித்த எங்கள் குடும்பத்தில் சிறுவனான எனக்கு காந்தி பொருட்படுத்தப்பட வேண்டியவராகத் தோன்றவில்லை.

இந்தியாவின் எந்தவொரு பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் ஒரு மஹாத்மா என்பதில் தொடங்கி, காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராட்டத் தலைவர் என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன். நாஜி வதைமுகாம்கள் பற்றி அறிந்திடாத ஒரு கட்டத்தில் ஹிட்லர் கூட வசீகரித்திருக்கிறார் (அப்போது தமிழ் நாடு மெட்ரிகுலேஷன் பத்தாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் ஹிட்லர் பற்றி ஒன்றரைப் பக்கச் சுருக்கமான வரலாறு இருந்தது).

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். (‘உண்மைகளுடனான என் பரிசோதனைகளின் கதை’ என்ற தலைப்பே The Story of My Experiments with Truth என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பு. இந்தி முதலான பிற இந்திய மொழிகளில் அத்தகைய தலைப்பில் தான் அந்நூல் வெளியாகிறது. ஆனால் நம் ஆட்களின் குறுகத் தறிக்கும் சுருக்க வெறி ‘சத்திய சோதனை’ ஆக்கி விட்டது.)

அப்புறம் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது.

ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

காந்தி என்பவர் மஹாத்மா என்ற பிம்பத்தைச் சிதைக்கும் நோக்கில் இந்த நாவல் எழுதப்படவில்லை. இது அதைச் செய்யவும் இல்லை. காந்தியே இவ்விஷயங்களை மறைத்தாரில்லை. அவர் இன்று இருந்திருந்தால் இவற்றைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டுமென விரும்பி இருப்பார். ஜெயமோகன் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அவரது கிறுக்குத்தனத்தில் ஒரு பகுதி என்கிறார். நானும் இவற்றை மஹாத்மாவின் முகங்களில் ஒன்றாகவே பாவிக்கிறேன். அவரே போதித்த சத்தியத்தின் ஒளியில் கண்கள் கூசாமல் இவற்றைப் பார்க்க முயல்கிறேன்.

வரலாறு சொல்லாத எதையும் இதில் நான் எழுதிடவில்லை. அதனால் காந்தியை அவதூறு செய்து விட்டேன் எனக் கோபமாய்க் காந்தியவாதிகளும், காந்தியைத் தோலுரித்து விட்டதாய் மகிழ்வுடன் கோட்ஸேவாதிகளும் கிளம்பாதிருப்பீர்களாக!

காந்தியின் செயல்களுடன், கருத்துக்களுடன் எனக்குக் கணிசமான முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி இந்த நாட்டின் பிரஜையாக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அவரது பங்கு மகத்தானது. இன்று நாம் நிகழ்த்தும் வாழ்க்கையில் ஆங்காங்கே அவரது கொடை இருக்கிறது. சந்தேகமே இன்றி அவர் நம் தேசப் பிதா தான். குறிப்பாய் இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு அவசியப்படும் சிந்தாந்தவாதி.

TIME இதழ் 20ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்ற தேர்வில் ஐன்ஸ்டைனுக்கும், ரூஸ்வெல்டிற்கும் பின் மூன்றாவதாக காந்தியைப் பட்டியலிட்டிருந்தது (December 31, 1999). ஆனால் மொத்த உலக வரலாறும் இதுவரை கண்ட மனிதருள் அதிசிறந்தவர் காந்தி என நான் அழுத்தமாக நம்புகிறேன். அதனால் தான் அவர் மஹாத்மா. “My life is my message” என்று இப்பிரபஞ்சத்தில் வேறெந்தக் கொம்பன் சொல்லி விட முடியும்!

*

இது என் முதல் நாவல். நான் நாவல் எழுத வேண்டும் என என் ஆப்தசினேகிதன் இரா. இராஜராஜன் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அது போக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முக்கியஸ்தர்கள் என்னிடம் நாவல் எழுதுங்கள் என்று சொல்லி விட்டனர். ஓராண்டு முன் ‘இறுதி இரவு’ வெளியீட்டு விழாவில் பேசிக் கொண்டிருக்கையில் “சிறுகதைகள் நல்லது தான். ஆனால் இது நாவல்களின் காலம்” என்று சொல்லி ஹரன் பிரசன்னா எழுதச் சொன்னார். ஆறு மாதங்களுக்கு முன் மனுஷ்ய புத்திரனுடன் தொலைபேசியில் உயிர்மை கட்டுரை ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஆண்டு இறுதிக்குள் ஒரு நாவல் எழுதச் சொன்னார். “மனதில் ஒரு knot இருக்கிறது. எழுதும் மனநிலையும் நேரமும் வாய்க்கவில்லை” என்று சொன்னேன். “அதெல்லாம் சாக்குப்போக்கு, எழுத ஆரம்பித்து விடுங்கள்” என்றார். சுமார் ஒரு மாதம் முன் பா. ராகவன் என் பதிவு எதையோ வாசித்து விட்டு ஃபேஸ்புக் சாட்டில் நாவல் எழுதுமாறு சொன்னார். பின் தொலைபேசியிலும் நீண்ட நேரம் அது பற்றிப் பேசினார். பிறகு அவ்வப்போது விசாரிக்கவும் செய்தார். அவர் அன்று பேசியிராவிடில் இந்நாவல் இப்போது தயாராகி இராது என நினைக்கிறேன்.

என் முதல் நூலை சுஜாதாவுக்கும், முதல் கவிதை நூலை வைரமுத்துவுக்கும், முதல் சிறுகதைத் தொகுதியை சுந்தர ராமசாமிக்கும், அப்புறம் முதல் நாவலை ஜெயமோகனுக்கும் சமர்ப்பணம் செய்வது என பத்தாண்டுகள் முன் எண்ணிக் கொண்டேன். அவற்றில் இப்போது கடைசிக் கடமையையும் ஆற்றி விட்டேன்.

சொன்ன தேதிக்கு ஒரு வாரம் கழித்துத் தந்தாலும் சரியான நேரத்துக்கு நாவலை கொண்டு வரும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை நேர்த்தியாக ஆக்கி வெளியிடும் செல்வி உள்ளிட்ட உயிர்மைக்காரர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

சுமார் ஒரு மாதம் பிடித்தது இந்த நாவலை எழுதித் தீர்க்க. இந்தக் காலகட்டத்தில் எனக்குப் பக்கபலமாய் இருந்த என் அம்மா சி. தெய்வாத்தாள், மனைவி ந. பார்வதி யமுனா, மகன்கள் ச. ஞானி மற்றும் ச. போதியை எண்ணிக் கொள்கிறேன். அவர்கள் என்னைச் சகித்து வாழாவிடில் நான் இன்று எழுத்தாளனே ஆகியிருக்க முடியாது.

*

புடவைத் தலைப்புகள் போல் புத்தகத் தலைப்புகளுக்கும் எனக்கும் ஒத்து வராது.

நெடுங்காலமாய் இந்நாவலுக்கு ‘அசத்திய சோதனை’ என்ற தலைப்பு தான் மனதில் இருந்தது – The Story of My Experiments with Lies என்பதைக் குறிக்கும் பொருளில். தன் அந்திமக் காலத்தில் சுயசரிதையின் இரண்டாம் பகுதியை காந்தி எழுதி இருந்தால் காமம் பொய் என்பதால் அப்பெயர் வைத்திருக்கக்கூடும் என்ற தொனியில். அப்புறம் வின்ஸ்டன் சர்ச்சிலின் வன்மக் கேலியையும் (Half-naked & Fakir) அதற்கு காந்தியின் பதிலடிக் கடிதத்தையும் முன்னிட்டு ‘நிர்வாணப் பக்கிரி’ எனத் தலைப்பிட்டேன். பின், ‘நான்கு கால்கள்’ என்ற பொருத்தமான தலைப்பொன்றையும் பரிசீலித்து மீண்டேன்.

பிறகு இறுதியாய் உறுதி செய்தது தான் ‘ஆப்பிளுக்கு முன்’. மானுட வரலாற்றை நாட்காட்டித் தேவைக்காக கிறிஸ்துவுக்கு முன், பின் எனப் பிரித்திருக்கிறோம். உண்மையில் அதை ஆப்பிளுக்கு முன், ஆப்பிளுக்குப் பின் என்று தான் பிரித்திருக்க வேண்டும். என்ன ஒன்று, முதல் பிரிவில் ஒற்றை நாள் மட்டும் தான் இருக்கும். மீத நாட்கள் எல்லாம் அடுத்த பிரிவில் சேரும். அந்த ஒரு நாளில் ஆதாமும் (அப்போது பெயரிடப் படாத) ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். காந்தி தன் பிரம்மச்சரியப் பரிசோதனைகளில் அடைய முயன்றது அந்த நிலையைத் தான்.

மாணவப் பருவத்திருத்திருந்தே ஆங்கிலக் கவிதைகளின் Biblical Allusions வசீகரித்தன (உதாரணமாய் குருத்து ஞாயிறை ஒட்டிய ஜிகே செஸ்டர்டனின் The Donkey கவிதை). இப்போது என் நாவலுக்கே அத்தகைய தலைப்பு அமைந்தது மகிழ்ச்சி. பைபிளில் வருகிற விலக்கப்பட்ட கனி என்பது ஆப்பிள் தானா என்பது உறுதி இல்லை தான். ஆனால் மக்கள் மனதில் அப்பழம் ஆப்பிள் என்பதாகத் தான் ஆழப் பதிந்திருக்கிறது. ஜான் மில்டன் தன் Paradise Lost காவியத்தில் அதை ஆப்பிள் என்றே சொல்கிறார். தவிர, ஆப்பிளைப் புனைவென்று கொண்டாலும் இந்த நாவலும் புனைவு தானே!

*

உண்மையில் என் முதல் நாவலாய் இந்தக் கதையை உத்தேசிக்கவில்லை. அப்படித் தோன்றியவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டுத் தான் இதில் இறங்கினேன். அலுவலகப் பணி நிமித்தம் புது தில்லிக்கும் பூனா நகரத்துக்கும் சமீப காலங்களில் மேற்கொண்ட பயணங்கள் இதை முதலில் எடுத்துக் கொள்ள உந்துதல் ஆயின. இதன் களங்களான ஆகா கான் அரண்மனை, பிர்லா இல்லம் ஆகிய இடங்களில் நடந்த போது காந்தியின் மநுவின் மூச்சுக் காற்று எங்கேனும் ஒளிந்திருக்குமோ எனத் தேடி நின்றிருக்கிறேன்!

ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதை எப்படி அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கு முன்னோடியோ அதே போல் ஆனந்த விகடனில் சமீபத்தில் வெளியான எனது ‘நான்காம் தோட்டா’ சிறுகதையே இந்த நாவலுக்கு முன்னோடி.

நாவல் என்பது என்ன? “A long, fictional narrative which describes intimate human experiences” என்பதாய் வர்ணிக்கிறது விக்கிபீடியா. ஜெயமோகன் ‘நாவல் கோட்பாடு’ எழுதி தமிழில் வந்த பல நாவல்களே அல்ல என்கிறார். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி ஒரு சம்பவத்தை எழுதியிருப்பார். அவர் உறவினர் ஒருவர் நாவலைப் பார்த்து விட்டு, “இது தரும் முக்கிய செய்தியை ஒரு வரியில் சொல்லு” எனக் கேட்கிறார். பதிலுக்கு சுரா “முக்கிய செய்தியா? இது நாவல் அல்லவா!” என்கிறார். இதையே நாவலுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்கிறேன்.

நாவல் எழுதும் போது தான் அது பற்றி நான் கொண்டிருந்த மாயைகள் உடைந்தன. நான் நாவல் எழுத இத்தனை ஆண்டுகள் சோம்பி, தயங்கிக் கிடந்தது அறிவீனமே. இந்தக் குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

ஆனால் இப்படைப்பு என்னளவில் மிக முக்கியமான ஒரு நகர்வு என நம்புகிறேன்.

சி.சரவணகார்த்திகேயன்
பெங்களூரு / டிசம்பர் 18, 2017

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்