கூற்றை வெல்லும் அறம்
முதலில் திரையுலகின் சுரண்டல்களையும் முதுகு குத்தல்களையும் தாண்டி காலம் தாழ்ந்தேனும் மேலேறி வரும் இயக்குநர் கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள்; மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது என்ற முக்கியப் பிரச்சனையில் அரசை விமர்சிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த நயன்தாராவுக்குப் பாராட்டுக்கள்.
இதை மசாலா படமாக அல்லாமல் யதார்த்தப் படமாகவே அணுகினேன். அந்த அடிப்படையிலேயே என் பார்வையை எழுதுகிறேன். நல்ல ப்ளாட் என்றாலும் படம் ஒட்டுமொத்தமாய் எபவ் ஆவரேஜ் தான். காரணம் திரைக்கதை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் நம்பிக்கையே இன்றித்தான் நகர்ந்தன. பின் குழந்தை குழியில் விழுந்தது முதல் இடைவேளை வரை படம் பெரும்பாலும் அசத்தல். இரண்டாம் பாதியில் பேரிடர் மீட்புக் குழு வந்து முயன்று தோற்பது வரையிலும் கூடத் தொய்வில்லை. இறுதி அரை மணியில் மாவட்ட ஆட்சியர் செய்யும் முயற்சிகள் முழுக்க உணர்ச்சிகரமாகவே மாறி விடுவதால் ஒரு நல்ல த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம் தடுமாறுகிறது.
பையன் நீச்சலில் சூரன் என்பது போக மற்ற யாவும் திணிக்கப்பட்டது அல்லவா! அந்தக் கிராமத்துக்குத் தண்ணீர் பஞ்சம் என்பதும், அதற்கு தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் காரணம் என்பதும், அதனால் சிறுவனுக்கு காது கேளாமை ஏற்படுகிறது என்பதும் படத்திற்கு எந்த வகையில் தேவையானவை? (தண்ணீர் பஞ்சம் என்பதால் தான் ஆழ்குழாயில் தண்ணீர் வரவில்லை, மூடாமல் வைத்திருந்தார்கள் என்று சொன்னால் சிரிப்பேன். படம் எங்கெல்லாம் அரசியல் பேச முயன்றதோ, அங்கே எல்லாம் துருத்திக் கொண்டு நிற்கிறது. காரணம் அவை எல்லா இடங்களும் செயற்கையாகப் பட்டன.
படம் நெடுக வரும், படத்தின் மையக் கருத்தை முன்வைக்கும் கிட்டியும் நயன்தாராவும் பேசிக் கொள்ளும் வசனங்கள் இயற்கையாகவே இல்லை. அதை இன்னும் கூர்மையாக, அதே சமயம் எதார்த்தமாக அமைத்திருக்க முடியும் என நம்புகிறேன். இப்போது அது "மக்களுக்காக, மக்களுக்காக" என்று ஓர் அரசு அதிகாரி பேசும் செயற்கையான பஞ்ச் டயலாக்களாகவே எஞ்சுகின்றன. இந்த இடத்தில் குருதிப்புனலில் கமலும் நாசரும் பேசிக் கொள்ளும் பல காட்சிகள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. அதற்கு இணையாய் வந்திருக்க வேண்டியவை இவை. போலவே நயன்தாரா மக்களைச் சமாதானப்படுத்தும் காட்சிகள் (தண்ணீர் கேட்டுப் போராட்டம், போலீஸ் கல்வீச்சுக்குப் பின்), ஊடகங்களைச் சமாதனப்படுத்தும் காட்சிகள் எதிலுமே உயிர்ப்பும் தர்க்கமும் இல்லை. "என் பிள்ளையை எடுத்துக்கொள்" என்று பெண்கள் எல்லோரும் முன்வரும் காட்சியில் மயிர் கூச்செரிய வைக்கும் முயற்சியில் சிரிப்பு வந்து விடுவது அசம்பாவிதம் தான்.
நயன்தாரா பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆவது போல் காட்டுவதும் ஒரு மிகை தான்.
நியூஸ் 18 விவாதத்தைக் காட்டுவது எல்லாம் சரி தான். ஆனால் அதை இத்தனை நீளமாக இடம் பெறச் செய்யும் போது ஆவணத்தன்மை வந்து சேர்ந்து வந்து விடுகிறது. இத்தனைக்கும் அவை எல்லாமே கருத்தாழம் மிக்க வாதங்கள் என்றும் சொல்லி விட முடியாது. (அதிலும் அ. முத்துகிருஷ்ணன் பேச்சு வார்த்தைஜாலமாகவே இருந்ததாய்ப்பட்டது.)
கவுன்சிலர் கைது எப்படி என்றெல்லாம் காட்டப்படவில்லை. அதற்கு முன் அது கூடாது என மிரட்டும் எம்எல்ஏ அதற்கடுத்த காட்சியில் அது பற்றி ஒரு வார்த்தையும் பேசாது, சிறுவனைக் குழிக்குள் இறக்கக்கூடாது என்று மட்டும் சொல்கிறார்.
நயன்தாராவின் நடிப்பு எனக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பது போல் தோன்றும். இதிலும் நயக்க ஏதுமில்லை.
படம் பேசும் அரசியல் தான் என்ன? அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை; நகர மக்களின் உயிரளவு கிராம மக்களின் உயிர் மதிக்கப்படுவதில்லை. அடிப்படையான மக்கள் பிரச்சனைகளைக்கு அரசு காசு செலவு செய்வதில்லை. அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் அலட்சியம் மிக்கவர்கள். தண்ணீரை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுஞ்சுகின்றன. இவை எல்லாமே பேசப்பட வேண்டிய விஷயங்களே. அதுவும் "Democracy is not merely a form of Government... It is essentially an attitude of respect and reverence towards fellowmen." என்றெல்லாம் அம்பேத்கரின் Annihilation of Caste நூலின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசும் ஓர் அழகான கம்பீரமான இளம் பெண் மாவட்ட ஆட்சியரைப் பார்த்தால் மெய்யோடு சேர்ந்து மனமும் சிலிர்க்கத்தான் செய்கிறது. மெர்சல் போன்ற படங்கள் போகிற போக்கில் பேசிய ஓரிரு வரிகளைப் பேசாமல் இந்தப் படம் ஆன்மசுத்தியோடு அரசியல் பேச முயன்றிருப்பது நம் வணக்கத்துக்குரியதே.
என் வரையில் இறுதியில் படம் வைக்கும் தீர்வு ஆபத்தானதே. மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு உதவாது என்று சொல்ல வருவது போல் இருக்கிறது. அதாவது மக்களே தான் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் முனையும் போது அரசு அதிகாரிகள் அதைத் தடுக்கக்கூடாது அல்லது ஊக்குவிக்க வேண்டும் என்ற தொனி. மிக எதிர்மறையான பரப்புரை இது. அதை ஒரு நக்சல் மனோபாவம் என்றே பார்க்கிறேன். மக்களே சட்டத்தைக் கையிலெடுப்பது தான் ஜனநாயகமா என்ன? அதை ஒரு அரைகுறை அரசியல் பாடமாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மாறாக பெரும்பாலான அரசு அதிகாரிகள் திறமையற்றவர்களாக அல்லது பொறுப்பற்றவர்களாக இருக்கும் போது ஓர் அரசு அதிகாரி தன் திறமையால், அர்ப்பணிப்பால் மீட்கிறாள் (உதாரணமாய் அந்த ரோபோ ஆளை வரவழைத்து அவரது கருவியைப் பயன்படுத்த வைத்தல் அல்லது வேறு க்ரியேட்டிவ் மார்க்கங்கள் ஏதேனும்) என்பது மாதிரி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் எனத்தோன்றுகிறது. அப்படியான அதிகாரிகள் இன்றைய தேதியிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.
விண்வெளி ராக்கெட்டிற்கு பல கோடிகள் செலவு செய்யும் அரசு மக்களின் தேவைகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ராக்கெட்டை இழுக்காமலேயே இதைச் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். செயற்கைகோள்கள் கிராம மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படுவதில்லை என்றொரு விமர்சனமும் படத்தில் இருக்கிறது. (அது உண்மை எனும்பட்சத்தில் களையப்பட வேண்டியதே.) அதை நிறுத்தித் தான் மக்கள் பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இந்தியா இல்லை. மக்கள் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை என்பது அரசியல் பிரச்சனை. அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளின் பிரச்சனை. அது தாண்டி அதிகாரிகளின் அலட்சியம் சம்மந்தப்பட்டது. லஞ்சம் மற்றும் ஊழலோடு நெருங்கிய தொடர்புடையது. இன்னும் இன்னும் இறங்கினால் மக்கள் வாக்குரிமையைச் சரியாய்ப் பயன்படுத்துவதில்லை என்ற இடத்தில் வந்து நிற்கும். அனைத்து மட்டங்களிலும் சரி செய்யப்பட வேண்டிய விஷயம். அதை எல்லாம் தாண்டி மிக எலிமெண்டரியாக அரசியலையும் அறிவியலையும் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
இவற்றைச் சரி செய்திருந்தால் இந்தியன் பனோரமாவில் ஆஸ்கர் விருதுக்குக் கூட இப்படம் அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.
எடுத்துக் கொண்ட கரு, பிடிவாதமும் புத்திசாலித்தனமும் மனிதநேயமும் கொண்ட மாவட்ட ஆட்சியர் பாத்திரம், பல்வேறு அரசு அதிகாரிகள் குறித்த யதார்த்தமான சித்தரிப்பு, ராக்கெட் விடுவது எதற்கு என்றே தெரியாத கிராம மக்கள், ஆனாலும் நாட்டுக்குப் பெருமை என்பதால் மிட்டாய் கொடுப்போம் என்று சொல்லும் பெண், க்ளைமேக்ஸில் எல்லாம் முடிந்த பின் ராக்கெட் சீறிப் பாயும் காட்சி, கபடி கபடி ரொமான்ஸ் காட்சி, குழந்தையை மீட்க முயலும் முற்பாதிக் காட்சிகளின் நம்பகத்தன்மை, வேல. ராமமூர்த்தியின் நடிப்பு, குழந்தைகளின் தாய் - தந்தையாய் நடித்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ், சுனுலக்ஷ்மியின் உணர்ச்சிகரம் எனப் பாராட்ட பல விஷயங்கள் படத்தில் உண்டு என்பதையும் குறிக்க விரும்புகிறேன்.
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கலைப்படைப்பாக இப்படம் அதற்குரிய இடத்தில் மட்டும் வைத்துப் பார்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். மீண்டெழும் இயக்குநரை வரவேற்கும் உணர்ச்சிவயத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கத் தேவையில்லை. அது தான் அவருக்கும் உதவிகரமாய் இருக்கும்.
*
Comments