நீதிக்கதை [சிறுகதை]


நீங்கள் தற்கொலை செய்திருக்கிறீர்களா?

இதை வாசித்துக் கொண்டிருப்பதன் மூலம் இல்லை என்று புரிகிறது. குறைந்தபட்சம் தற்கொலை முயற்சி? புதிய பிளேடு கொண்டு நடுங்காமல் மணிக்கட்டில் வெட்டிக் கொண்டிருக்கிறீர்களா? கை, கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் குதித்திருக்கிறீர்களா? அல்லது ப்ளக் பாயிண்ட் உடைத்து மின்சார வயரைப் பற்களில் கடித்திருக்கிறீர்களா? இவை எல்லாம் அதிர்ஷ்டமிருந்தால் தப்பிக்கச் சாத்தியமுள்ள தற்கொலை முறைகள். மரணத்தைக் கொஞ்சம் கிட்டே ஸ்பரிசித்துத் திரும்பலாம்.

இதுவரை நான் இரு முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன். முதல் முறை ஈராண்டு முன். ரூப்ராணி என் காதலை மிக அலட்சியமாக மறுத்த போது. அதற்கு அவள் சொன்ன காரணத்தை முன்னிட்டு. சுமாராகத்தான் படிப்பேன் என்பதெல்லாமா நிராகரிக்கக் காரணமாக ஏற்க முடியும்! எங்கள் வகுப்பிலேயே பெரும் பேரழகி அவள். அதை விடக் காரணம் தேவைப்படவில்லை எனக்கு அவளைத் தீவிரமாகக் காதலிக்க.

கதவைத் தாழிட்டு விட்டு ஓட்டை இல்லாத ஒரு பாலிதீன் பையினுள் - முந்தைய நாள் தண்ணீர் நிரப்பிச் சோதித்துக் கொண்டேன் - தலையை நுழைத்து, முகத்தை முழுக்க மூடி, கழுத்து வரை இழுத்து, இறுகக் கட்டினேன். காற்று உள்ளே புகாது, வெளியேறவும் செய்யாது. முதல் நிமிடம் ஒன்றும் தெரியவில்லை. இரண்டாம் நிமிடத்தின் மத்தியில் மூச்சு முட்டி, இருதயம் படபடத்து, கண் பாப்பா விரிந்து, முகம் கோணலாகத் தொடங்கியது. மூன்றாம் நிமிடம் தாங்காமல் கழுத்திலிருந்த முடிச்சை விடுவித்தேன். மூச்சு சீராகி, இதயத் துடிப்பு இயல்பாக முழுதாகப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அது இதுவரை யாருக்கும் தெரியாது. யோசித்துப் பார்த்தால் அதை ஒரு முயற்சி என்று சொல்வதை விட பயிற்சி என்று அழைப்பதே சரியாது!

இரண்டாம் முறை ஏழு மாதங்கள் முன். மேத்தமேடிக்ஸ் மாக் டெஸ்ட்டில் நூற்றுக்கு ஐம்பத்தைந்து எடுத்ததற்காகப் பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். அடுத்த மாக் டெஸ்டில் எண்பதுக்கு மேல் எடுக்கவில்லை எனில் தாராளமாய் வேறு பள்ளி பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாய்ச் சொல்லி விட்டார்கள். வீட்டுக்கு வந்த பின் அப்பா திட்டினார். அம்மா பேசவில்லை. பரமா – தங்கை - கேலி செய்தாள்.

“Mathematics is the queen of the sciences. உனக்கும் ராணிக்கும் ஒத்து வர்றதே இல்லடா.”

அன்று வீட்டில் சமையலறையில் வைத்திருந்த எலி பாஷாணத்தை எடுத்துத் தின்று விட்டு - என்ன ஒரு மோசமான சுவை! அதனைத் தின்று விட்டு எலிகள் செத்துப் போவது விஷத்தன்மையாலா அல்லது சுவையின் அதிர்ச்சியிலா எனக் குழப்பமாய் இருந்தது. - அறையில் போய்ப் படுத்துக் கொண்டேன். இம்முறை அறைக் கதவைத் தாழிடவில்லை. காரணம் என் பெற்றோரைப் பயமுறுத்துவதே நோக்கமாக இருந்தது.

எப்படியும் காப்பாற்றப்படுவேன் எனத் தெரியும். அதனால் தான் எல்லோரும் வீட்டில் இருந்த போது இறங்கினேன். அரை மணி நேரம் கழித்து அம்மா சீரியல் விளம்பர இடைவெளியில் தோசை வார்த்து விட்டு என்னைச் சாப்பிட அழைத்த போது பதில் இல்லாததால் என் அறைக்குள் நுழைந்து பார்த்தவள் நான் வாயில் நுரை தள்ளிக் கிடந்ததைப் பார்த்ததும் கீச்சிடுவதை அரை மயக்கத்தில் என்னால் உணர முடிந்தது.

அப்பா பதற்றமாகி என்னை அள்ளித் தூக்கிச் சென்று, காரின் பின்னிருக்கையில் திணித்து, அருகிருந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தேடி, டாக்டர் பரிசோதித்துச் சிகிச்சையைத் தொடங்கிய போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது. கேள்விப்பட்ட அதே பழைய முறை தான். விஷத்தை முறிக்க ஓர் ஊசி போட்டு, வாயில் ஏதோ திரவத்தைச் செலுத்தி வாந்தி எடுக்கச் செய்தார்.

எலி பாஷாணத்தை விடவும் மிகக் கொடூரமான ருசி கொண்டதாய் இருந்தது அது.

அப்பா அதிலிருந்து என்னுடன் சரியாய்ப் பேசுவதில்லை. அதற்கு முன்பு மட்டும் என்ன பேசிக் கிழித்தார்! மதிப்பெண் குறைந்தால் திட்டுவார். நிறைய அறிவுரைகள் சொல்வார். காசு சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என வகுப்பெடுப்பார். என் வயதில் அவர் பேருந்தேறி பள்ளிக்குப் போனதைச் சொல்வார். எல்லாவற்றும் மேலாய் பள்ளி வகுப்பு, பக்கத்து வீடு அல்லது பரமாவுடன் என்னை ஒப்பிட்டு மட்டம் தட்டுவார்.

“பரமாவைப் பார்த்தாவது புத்தி வராதா ஜீவா உனக்கு? உனக்குப் போடற அதே சோத்தைத் தானே அவளுக்கும் போடறோம்? அவ எப்படி மாணிக்கமா இருக்கா!”

பள்ளியிலோ அக்கம் பக்கத்திலோ அது பற்றி வீட்டார் யாரும் மூச்சு விடவில்லை. ஓட்டை வாய் பரமா கூட வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியம் தான். அவளும் என் பள்ளியில் தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள். நான் ஒரு வகுப்பு கூடுதல்.

நான் நீதி. அப்படிச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. பள்ளி வருகைப்பதிவேட்டில் ஜீவா என்றிருக்கும். மாநகரின் பிரபலப் பள்ளி. எனக்குப் பிடித்தமான நடிகை இதே பள்ளியில் தான் படித்தாள். எனக்கு மன அழுத்தம் இருக்கிறது. இப்படிச் சொல்வது ஏதோ நான் குடித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதைப் போல் இருக்கிறது. அதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன! நீதி என்பது புனைப்பெயர் - ரகசியப் புனைப்பெயர் - சரியாய்ச் சொன்னால் அதன் சுருக்கம். நீலத் திமிங்கலம்!



ஆம். நான் ப்ளுவேல் கேம் ஆடிக் கொண்டிருக்கிறேன். இன்று பதினேழாவது நாள்.

இன்று என் க்யூரேட்டர் எனக்குக் கொடுத்திருக்கும் டாஸ்க் நண்பகல் பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் மிக உயரமான கட்டிடம் ஒன்றின் உச்சியில் பக்கவாட்டுச் சுவரில் ஏறி நின்று கீழே பார்க்க வேண்டும். அப்படியே செல்ஃபி போட வேண்டும்.

முதலில் விளையாட்டாய்த் தான் இதைத் தொடங்கினேன். உண்மையாகவே இது விளையாட்டு தானே! என்ன ஒன்று, எல்லோராலும் விளையாடி விட முடியாது!

வகுப்பில் அது பற்றிப் பேசிக் கொண்டார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ப்ளூவேல் கேமில் கலந்து கொள்ளும் விருப்பத்தை ஒரு ஹேஷ் டேகாகப் பதிய வேண்டும். ப்ளூவேல் கேமின் க்யூரேட்டர்கள் அதைப் பார்த்து விட்டு அழைப்பார்கள். அப்புறம் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள். ஐம்பது நாள் ஐம்பது டாஸ்க். சுலபமாய்த் தொடங்கி போகப் போகக் கஷ்டமாகும். ஐம்பதாவது நாள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இதுதான் ஆட்டத்தின் வடிவம் என்றார்கள். மற்ற டாஸ்க் என்னென்ன என்று ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டியல் இருந்தது. “த கேம் லுக்ஸ் வெரி டேன்ஞ்சரஸ் யார்” என்று அழகாய் வாயைப் பிளந்தாள் ரூப்ராணி. (அதென்ன முன்ஜென்மப் பந்தமோ, நானும் அவளும் மட்டும் வகுப்பு மாறுவதே இல்லை!)

ரூப்ராணி மார்வாடிப் பெண் என்றாலும் தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் பார்ப்பவள். அவளுக்கு ப்ளூவேல் டாஸ்க்கள் பயங்கரமாய்த் தோன்றியதில் ஆச்சரியமில்லை. அவளது பயத்திற்காகவே இதில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

ஃபேஸ்புக்கில் உறவின மூதேவிகள் - கௌரவமாய் கசின்ஸ், அங்கிள்ஸ், ஆன்ட்டீஸ்- எல்லோரும் குத்த வைத்திருக்கிறார்கள். எது எழுதினாலும் பத்து நிமிடத்தில் வீட்டில் பற்ற வைப்பார்கள். ஒருமுறை பாரில் எடுத்த ஃபோட்டோவை ஃபேஸ்புக்கில் போட்டு க்ளாஸ்மேட் டேக் செய்ய பெரும் கலவரமாகி விட்டது. அம்மாவுக்கு நான் குடித்தது பிரச்சனை; அப்பாவுக்கு ஃபோட்டோ வந்தது; பரமாவுக்கோ நான் மட்டும் குடித்தது.

அதனால் ட்விட்டர் அக்கவுண்ட்டைத் தூசு தட்டினேன். அங்கே பெரும்பாலும் ஏதும் எழுதுவதில்லை. எப்போதேனும் ரீட்வீட்கள். #F57 என்ற ஹேஷ் டேகைப் போட்டு விட்டு ஒரு வாரம் காத்திருந்தேன். பதில் இல்லை. யாரோ ஒரு ஃபாலோயர் “AK57 விவேகம்னு தெரியும். இது என்ன F57?” என்றிருந்தார். கண்டுகொள்ளவில்லை.

அடுத்து, தேடிப் பிடித்து #BlueWhaleChallenge டேகைப் போட்டேன். தேடிப் பார்த்ததில் என்னைப் போல் நூற்றுக்கணக்கானோர் அந்த டேகில் தினமும் ட்வீட் போட்டபடி இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் நானெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட் தானா என ஒருபுறம் ஆயாசம் தோன்றியது. இன்னொருபுறம் உலகில் இத்தனை ஆயிரம் பேரா தற்கொலைக்கு எத்தனிக்கிறார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. அதில் கணிசம் பேர் சீன் போடுகிறார்கள், மற்றபடி டைல்ஸ் குளிர்கிறதென வீட்டுக்குள் செருப்புப் போட்டு நடக்கும் சுயபந்தோபஸ்துக்காரர்கள் தாம் என்று நினைத்துக் கொண்டேன்.

பத்து நாள் காத்திருந்து அதற்கும் பதில் வரவில்லை என்ற போது தான் #WakeMeAt42 டேகை நிர்மல் கொடுத்தான். அவனும் என் வகுப்பு தான், ஆனால் வேறு பிரிவு. நான் டகீலாவுக்கு உப்பு நக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு டேக் செய்தது இவன்தான்.

ட்விட்டரில் அந்த டேகைப் போட்ட மூன்றாவது நாள் ஒரு டிஎம் வந்தது. “சீரியஸாக ப்ளூவேல் ஆக விரும்புகிறாயா? அல்லது வெற்று பந்தாவா?” என்பது அதன் சாரம்.

“சீரியஸ் என்று நிரூபிப்பது எப்படி?”

“குட். இந்த வலைதளத்துக்குப் போ. இந்தப் பெயரில், இந்தக் கடவுச் சொல்லுடன் கணக்குத் துவக்கிக் காத்திரு. நாங்களே உன்னை மறுபடி தொடர்பு கொள்வோம்.”

அது ஒரு ரஷ்ய சமூக வலைதளம். கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் தடவித் தடவி அவன் சொன்னபடி ஒரு கணக்குத் துவக்கி லேங்குவேஜ் செட்டிங்க்ஸில் போய் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்க அரை நாள் பிடித்தது. காத்திருந்தேன்.

இடையே ட்விட்டரில் போய்ப் பார்த்தேன். பேசிய டிஎம்கள் அழிக்கப்பட்டிருந்தன; அந்த ஐடியும் காணவில்லை. யாரோ இடையில் புகுந்து ஏமாற்றுகிறார்களோ என யோசனை ஓடியது. இரண்டாம் நாள் அந்த ரஷ்யத் தளத்தில் ஒரு சாட் வந்தது.

“ஹாய் ஜீவா, வெல்கம் டூ த ப்ளூவேல் சேலஞ்ச். ஐயாம் யுவர் க்யூரேட்டர்.”

பரபரப்பானேன். அதைச் சொன்னேன். புன்னகை வந்தது. முதலில் என்னைப் பற்றிய சின்னச் சின்ன விசாரிப்புகள். அதற்கெல்லாம் பதில் அளித்தேன். கொஞ்சம் நேரம் பதில் இல்லை. பிறகு என் ஆதார் அட்டையைக் கேட்டார். அதெல்லாம் அப்பாவின் கட்டுப்பாட்டில். தேவைப்படும் போது எடுத்துக் கொடுத்து விட்டு மறுபடி வாங்கி வைத்துக் கொள்வார். எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் கேட்டால் எதற்கு எனத் துருவுவார். பொய் சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் அத்தனை ஞாபக சக்தி கிடையாது என்பதால் முடிந்த அளவு பொய் தவிர்க்கும் கொள்கையுடன் இருக்கிறேன். பரமாவிடம் தான் கேட்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு பரமாவின் அறைக்கதவைத் தட்டினேன்.

அவள் எரிச்சலுடன் கதவு திறந்து அட்டை இருக்கும் இடத்தைச் சொல்லியதும் போய்த் தேடி எடுத்து செல்ஃபோனில் படம் பிடித்து அனுப்பி வைத்தேன். பதில் வரவில்லை. மறுபடி காத்திருந்தேன். அன்று முழுக்க பதில் ஏதும் வரவில்லை.

மறுநாள் க்யூரேட்டர் சாட்டில் வந்தார். மறுபடி கேள்விகள். எல்லாமே நான் எத்தனை தீவிரமாய் இதில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதைச் சுற்றியவை. இறுதியில் கேட்டான்.

“இது ஒருவழிப் பாதை தெரியுமா ஜீவா?”

“தெரியும்.”

“இதில் வெற்றி என்பது சாவது தான்.”

“தெரியும்.”

“பயமாய் இல்லையா?”

“பயம் இருக்கிறது. ஆனால் வாழ அதை விட பயமாய் இருக்கிறது.”

“இந்த கேமுக்கு ஏன் ப்ளூவெல்னு பேரு தெரியுமா?”

“ம்ஹூம்.”

“நீலத் திமிங்கலங்கள் சில சமயம் கரைக்கு வந்துவிடும். அவற்றால் மீண்டும் கடலுக்குள் போக முடியும். ஆனால் அவை போவதில்லை. விஞ்ஞானம் அதற்குக் காரணம் தேடுகிறது. ஆனால் அந்தத் திமிங்கலங்களுக்கு அப்படி நகர்ந்து கடலுக்குள் போவது என்பது சாவதை விட வலி மிக்கதாய், சிரமம் மிக்கதாய் இருக்கலாம். அதனால் அவை அங்கேயே கிடந்து மரிக்கின்றன. அந்த வலியை, சிரமத்தை நம் தர்க்கம் உணரவில்லை என்பதால் அதை வினோதமாய்ப் பார்க்கிறோம். அப்படித்தான் இங்கே இறக்கும் பலரது தற்கொலைக்கான காரணங்களும். அவற்றை மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாது. போயும்போயும் இதற்கா தற்கொலை எனக்குழம்புகின்றனர்.”

“ஃபென்டாஸ்டிக். நான் இதுவரை ஒரே ஒரு தற்கொலையைக் கடந்திருக்கிறேன். முன்பு இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டு வேணி அக்கா. தன் தாவணியில் தானே தூக்கு மாட்டிக் கொண்டார். வயிற்று வலி என்று சொன்னார்கள். அப்போது புரியாத வயது. ஆனால் இன்றுவரை அதற்கா தற்கொலை என அவ்வப்போது வியப்பதுண்டு.”

“அதே தான். ஸோ?”

“எனக்கு இந்த ஆட்டம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதனால் என் உறுதியை அளக்கும் முயற்சியில் நேரத்தை வீணாக்காமல் விளையாட்டைத் தொடங்குவோம்.”

“மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.”

அடுத்த நாள் முதல் டாஸ்குடன் க்யூரேட்டர் வந்தார்.

அதிலிருந்து ஒரு மாதம் கடந்து விட்டது. நான் நினைத்திருந்தது போல் தினம் ஒரு டாஸ்க் அல்ல. விட்டு விட்டுத் தான் தந்தார். சில நாட்களின் டாஸ்க்கள் அன்று தான் தெரிய வரும். சிலவற்றை முன் கூட்டியே சொல்லி விடுவார். அப்படியான டாஸ்க்களுக்குப் பொதுவாய் ஏதேனும் முன்தயாரிப்பு தேவைப்பட்டது. அது தகவல் தேடலாகவோ, பொருட்கள் சேகரிப்பாகவோ, திட்டமிடுதலாகவோ என இருக்கும்.

ஆரம்ப தினங்களின் டாஸ்க்களில் பெரிய கஷ்டம் என்று ஏதும் இருக்கவில்லை. ஒரு வெள்ளைத் தாளில் நீலத் திமிங்கலம் வரைந்து க்யூரேட்டருக்கு அனுப்ப வேண்டும், க்யூரேட்டர் என் பயத்தைச் சோதிப்பார், க்யூரேட்டர் நான் நம்பகமானவன் தானா எனச் சோதிப்பார், ‘நான் ஒரு நீலத் திமிங்கலம்’ என ஒரு வெட்டவெளி மைதானத்தில் போய்க் கதற வேண்டும். நாள் முழுக்கச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் - இப்படி.

இன்றைய டாஸ்க் காலையில் தான் வந்தது. விடுமுறை நாட்களில் பொதுவாய் பகலில் நிறைவேற்றும் டாஸ்க்கள். எங்கள் அபார்ட்மெண்ட் பத்து மாடிக் கட்டிடம். எங்கள் ஃப்ளாட் மூன்றாம் மாடியில். ஒரே பிரச்சனை மொட்டை மாடியில் இப்போது யாரும் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பா எங்கோ வெளியே போயிருக்கிறார். பரமா அவளது அறையில் என நினைக்கிறேன்.

யாரிடமும் ஏதும் சொல்லாமல் மெல்லக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். லிஃப்டை அழுத்திக் காத்திருந்தேன். லிஃப்ட் மேலேறி வந்து, கதவு பிரிந்து, வா என்றழைத்தது. உள்ளே முக்கால் பங்கு கன அளவை அடைத்துக் கொண்டு மேல் வீட்டு ஆன்ட்டி புன்னகைத்தார். பெயர் நினைவில்லை; வாசனை நினைவிருந்தது (பெர்ஃப்யூம்). தயங்கி உள்ளே நுழைந்து மிச்சமிருந்த இடத்தில் என்னை இடுக்கிக் கொண்டு சுட்டுவிரல் நீட்டி ‘10’ என்ற பொத்தானை அழுத்தினேன். ஆன்ட்டி ஐந்தாம் தளத்தில் லிஃப்டுக்கும் எனக்கும் விமோசனம் அளித்தார். லிஃப்ட் பத்தாம் மாடிக்குப் போய் நின்றது. நான் வெளியேறியதும் மற்றோர் அழைப்புக்குக் கீழே இறங்கியது.

மீதமிருந்த படிகளை ஏறி சாத்தியிருந்த கதவை விடுவித்துக் கொண்டு மொட்டை மாடிக்குள் நுழைந்தேன். மேகங்கள் சூழந்திருந்தன. அத்தனை வெயில் இல்லை.

முதலில் நடந்து மாடியை அளந்தேன். யாரும் இல்லை. பல மாதங்களுக்குப் பின் மொட்டை மாடிக்கு வருகிறேன். முன்பு வந்த போது இத்தனை டிடிஹெச் டிஷ்கள் இல்லை என்பதாய் நினைவிருந்தது. ஆங்காங்கே கம்பிக் கொடி கட்டி, துணிகளைக் காயப் போட்டிருந்தார்கள். பெண்களின் உள்ளாடைகளை ஓரக்கண்ணால் கடந்தேன்.

கதவைத் தாழிடலாமா என யோசித்துப் பின் யாரேனும் வந்து திறக்க முற்பட்டுத் தட்டினால் சிக்கலாகும் என்பதால் கைவிட்டேன். கட்டிடத்தின் வடக்கு முனையைத் தேர்ந்தெடுத்தேன். மொட்டை மாடிக் கதவு திறந்து கொண்டு யாராவது வந்தாலும் அங்கிருந்து இங்கே பார்க்க முடியாது. கதவின் ஓசையில் நான் சுதாரிக்க வேண்டும்.

தாராளமாய் ஓர் ஆள் கால் வைத்து நிற்கும் தடிமனில் தான் முனையின் சுவர் இருந்தது. எட்டிப் பார்த்தேன். கீழே அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்கு வெளியே வாகனங்கள் நெரிசலின்றி விரைந்தன. கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சட்டென சுவற்றில் இரு கைகளையும் வைத்து கால்களை உந்தித் தாவி ஏறினேன். முதலில் சுவற்றில் குத்த வைத்தமர்ந்து கொண்டு, புலன்கள் சமநிலை பெற்ற பின் மெல்ல மெல்ல எழுந்து நின்றேன். மழைக்கு முந்தைய புழுக்கக் காற்று முகத்தில் விசுவிசுத்தது. இக்கணம் இந்தப் பேட்டையின் உயரமான மனிதன் நான்!

கண்களை மெல்லத் திறந்தேன். வானம் முன்பை விட அருகே வந்து விட்டதாய்த் தோன்றியது. கீழே பார்த்தேன். சீருடையில் வடகிழக்கு முகவெட்டுச் செக்யூரிட்டி கட்டிடத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். வெளியே சீரும் வாகனங்கள். The Walk படம் நினைவு வந்தது. அதெல்லாம் வேறு லெவல். ஒப்பிட இது ஒன்றுமே இல்லை.

இப்போது குனிந்து என் கால்களைப் பார்த்தேன். பிறகு மறுபடி பூமியை. நெஞ்சில் திக்கென்றது. எத்தனை உயரம்! இங்கிருந்து கால் தவறி விழுந்தால் மண்டை சிதறும். உடனடி மரணம் உத்திரவாதம். கண நேரத்தில் நிரந்தர விடுதலை. அப்படியே குதித்து விடலாமா! இன்னும் இந்த முப்பத்து மூன்று நாட்கள் என்றெல்லாம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன! அப்படி நினைத்ததும் கால்கள் நடுங்கத் தொடங்கின. காலின் கீழிருந்த சுவர் நாசூக்காய் வழுக்கி நழுவுவதாய்த் தோன்றியது.

சட்டென அந்த எண்ணத்தைப் பிடிவாதமாய் உதறினேன். இன்று டாஸ்க் அதுவல்ல.

பெர்முடாஸ் பாக்கெட்டில் கையை நுழைத்து செல்ஃபோனை எடுத்தேன். ஸ்க்ரீன் அன்லாக் செய்து, கேமெரா ஆப்பினுள் நுழைந்து, ஃப்ரண்ட் கேமெராவுக்கு மாறி, தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தேன். என் முகம் தெரிந்தது. தலை கலைந்திருந்தது, முகம் வேர்த்திருந்தது. டிஷர்ட் காலரில் அழுக்கு. அவற்றைச் சரி செய்யும் சொகுசு தற்போது இல்லை. ஃபோனைக் கோணம் நகர்த்தி தரையையும் சேர்த்து கேமெராவின் ஃப்ரேமிற்குள் கொண்டு வர முயன்றேன். பயத்தைப் புதைத்து விட்டு முகத்தில் ஒரு புன்னகையை ஒட்டிக் கொண்டு க்ளிக் செய்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. போதும்.

கீழே இறங்கத் தீர்மானித்தேன். எழுந்தது போலவே உட்கார்ந்து அப்படியே இறங்கி விடலாம். அந்தச் சில நிமிட இடைவெளியில் கால்கள் மரக்கத் தொடங்கியிருந்தன. காலை அசைக்க முயன்றேன். அப்போது சமநிலை குலைந்து கால்கள் தடுமாறின.

ஒரு கணம் தான். ஒருபோதும் மறக்க முடியாத கணம். செத்து மீண்டேன். இதயம் வெடித்து விடுவது போல் துடித்தது. முகம் பேயறைந்தது போலானது. ஜட்டிக்குள் கூட வேர்வை குப்பெனப் பிரவாகிப்பதை உணர்ந்தேன். கண்களை மூடிப் பதற்றம் தணியக் காத்திருந்து விட்டு மெல்ல மெல்லச் சுவற்றில் உட்கார்ந்து, ஆசுவாசம் செய்து கொண்டு தடுமாறிக் கீழே இறங்கினேன். சத்தமின்றி வெளியேறிக் கீழறங்கி வீடேகிப் படுக்கையில் விழுந்தேன். இருதயத் துடிப்பு சீராக அரை மணி நேரமானது.

க்யூரேட்டர் இந்த டாஸ்கில் உத்தேசித்தது அந்த ஒரு கணம் தான் எனத் தோன்றியது. அதை வெற்றிகரமாய்க் கடந்து விட்டேன். எனக்கு நானே முதுகு தட்டிக் கொண்டேன்.

செல்ஃபியை கணிணிக்கு மாற்றி க்யூரேட்டருக்கு ரஷ்ய தளச் சாட்டில் அனுப்பினேன்.

“குட். ஒரு கேள்வி.”

“எஸ் ஸார்.”

“குதிக்கனும்னு தோனலையா ஜீவா?”

“தோனுச்சு.”

“ஏன் குதிக்கல?”

“யார்கிட்டயும் சொல்லிக்கலயே!”

*

நீங்கள் கடவுளாகி இருக்கிறீர்களா?

இதை வாசித்துக் கொண்டிருக்கும் சாதாரணரான நீங்கள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது. அதற்கு நிறையக்கடந்து வரவேண்டும். கொஞ்சம் ரத்தம் பார்க்கவேண்டும்.

நான் பரமா. டென்த்தில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்; சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மேதமேடிகல் ஒலிம்பியாடில் தேசிய அளவில் இருபத்தி ஏழாவது இடம். தற்போது ஐஐடி - ஜேஈஈ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதை எல்லாம் என் பெருமிதமாகக் கருதவில்லை. என் அடையாளம் என்பது முற்றிலும் வேறு. காதைக் கிட்டே கொண்டு வாருங்கள். எச்சில் தெறிக்காமல் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் ப்ளூவேல் க்யூரேட்டர். அப்படிச் சொன்னால் ஏதோ கார்பரேட் நிறுவனப் பதவி போல் ஒலிக்கிறது. அதனால் எனக்குப் பிடித்த மாதிரி சொல்கிறேன். அஹம் ப்ரம்மாஸ்மி!

‘தெய்வம் நீயென்றுணர்’ என்ற பாரதி ஆத்திச்சூடி மிகப் பிடிக்கும். நான் உணர்ந்தேன்.

ஆம். நான் கிட்டத்தட்ட கடவுள். அழிக்கும் கடவுள். அப்படியான பல கடவுள்களுள் ஒருத்தி. இந்த ப்ளூவேல் விளையாட்டின் மூலம் இந்த உலகில் பிரயோஜனப்படாத பிரஜைகளை ரத்து செய்வது தான் எங்கள் வேலை. பூமியில் பிறந்த எல்லோருமே வாழத் தகுதியானவர்கள் அல்லர். சிலர் மட்டுமே இந்த மானுட குலம் பயனுற வாழ்கின்றனர். மற்றவர்கள் அவர்களைத் தொழுது பின் செல்பவர்கள். பூமிக்குப் பாரம். இந்தப் பூமி மேலும் செழிக்க புத்திசாலிகளும் திறமையாளர்களும் தேவை. அவர்களுக்கான வளங்களையும் இந்த பாரங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அதைச் சரி செய்து இந்த உலகைச் சுத்தம் செய்வதே எங்கள் நோக்கம். இதில் இனம், மதம், மொழி, சாதி, பால் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை. அவர்களால் பயன் உண்டா இல்லையா என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலே தீர்மானிக்கும். அவ்வளவு தான்.

உண்மையில் அவர்களுக்கும் நல்லதே செய்கிறோம். அவர்களை வாழ வைத்துச் சித்திரவதை செய்வதை விட சாவை அளித்து விடுதலை தருகிறோம். மோட்சம்.

இன்று ப்ளூவேல் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஓராண்டு முன்பு இதைப் பற்றி வாசித்த போதே இதில் ஆர்வம் கொண்டேன். இன்று இதில் ஆர்வம் கொள்வோர் எல்லாம் இதை விளையாடும் ஆசையுடன் இதை நோக்கி வருகின்றனர். ஆனால் நான் இதை நடத்தும் ஒரு க்யூரேட்டர் ஆகும் நோக்குடன் இதன் திசையில் ஈர்க்கப்பட்டேன். யாரைப் பிடித்தேன், எப்படிச் சேர்ந்தேன் என்றெல்லாம் பகிர்வது சமூகத்துக்கு நல்லதல்ல. ஒரு கட்டத்தில் என் பொழுதுபோக்காகத் தொடங்கிய இது மெல்ல என் சிந்தையை முழுக்க ஆக்ரமித்துக் கொண்டு விட்டது. ஒரு காதல் போல்.

உங்களுக்கென ஓர் அடிமை. நீங்கள் என்ன சொன்னாலும் செய்வான். உயிரைக் கூட விடுவான் என்ற உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா! ஆளும் திமிர்!

இது வரை மூன்று பேரை தற்கொலை செய்ய வைத்திருக்கிறேன். கராச்சியில் ஒன்று; கொல்கத்தாவில் ஒன்று; கோழிக்கோட்டில் ஒன்று. இதில் கொல்கத்தாவில் இறந்தது பெண். ஆனால் ஒரு சாதாரணத் தற்கொலைச் செய்தியாகக் கூட அது வெளியே வரவில்லை. இன்னொருவனுக்கு நாற்பதாம் நாள் பைத்தியம் பிடித்து விட்டது.

இப்படியான மிதப்பில் இருந்த போது தான் எல்லாவற்றையும் நொறுக்கும் விதமாக ஜீவா இதில் ப்ளூவேலாக இறங்கினான். அதற்கு முன்பே வீட்டில் ஒருமுறை எலி மருந்தைக் கடித்திருந்தாலும் அதை ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அல்லாமல் தற்காப்பு மிரட்டலாகவே எண்ணி இருந்தேன். அதனால் பொருட்படுத்தவே இல்லை.

ஆனால் நீலத் திமிங்கலமாக என் முன் வந்து நின்றான். அவனை ட்விட்டரில் பின் தொடர்வதில்லை. ஃபேஸ்புக்கில் அவன் அத்தனை ஆக்டிவும் இல்லை. தூண்டிலில் மீன் பிடிப்பது போல் நீலத் திமிங்கலங்களையே பிடிக்கவென இருக்கும் எங்கள் லீட் ஜெனரேஷன் குழுவினர் கண்ணில் அவனது சில ப்ளூவேல் ஹேஷ்டேக் ட்வீட்கள் தொடர்ச்சியாய்ப் பட்டுத் தொலைத்தது முதல் தவறு. ஆரம்பகட்ட ஆய்வுக்குப் பின் அவர்கள் வடிகப்பட்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ப்ளூவேலுக்கும் ஒரு க்யூரேட்டர் பொருத்துவார்கள். அதில் ஜீவா எனக்கு அமைந்தது இரண்டாவது தவறு.

முதன் முறை அவனிடம் பேசி அவனது தகவல்களை விசாரித்த போதே அதிர்ந்து மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தேன். யாரேனும் ஜீவனின் முகமூடியோடு விளயாடுகிறார்களோ என்ற நப்பாசைச் சந்தேகத்தில் அவனது ஆதார் அட்டையைக் கேட்டேன். அதெல்லாம் எங்கள் வழக்கமல்ல. என்னிடமே கதவு தட்டிக் கேட்டான் ஜீவா. அப்போது நான் அடைந்தது வாழ்நாள் அதிர்ச்சி. ஜீரணிக்கவே முடியவில்லை.

அவன் மீது அவ்வளவு பிரியம் இருந்ததையே அன்றைய தினம் தான் உணர்ந்தேன்.

பதில் சொல்லாமல் அன்றைய தினத்தைக் கடத்தினேன். இரவு முழுக்க யோசித்தேன். நான் க்யூரேட்டர் ஆகவில்லை எனில் அடுத்து வேறு யாரிடமாவது போவான். நானே ஒப்புக்கொண்டால் என் கட்டுப்பாட்டில் இருப்பான். எளிதாக அவன் செயல்களைக் கண்காணிக்கவும் ஊகிக்கவும் முடியும். அவனுக்குத் தரும் டாஸ்க்களைத் தடுக்க முடியாது எனினும் திரிக்க முடியும். என்னால் அவன் துன்புறுவான் - மனதாலும் உடலாலும். அது பிரச்சனையில்லை. ஒருவேளை அவனை என்னால் ஏதேனும் சந்தர்ப்பத்தில் காப்பாற்ற முடியாமல் போனால்? நினைக்கவே பயமாய் இருந்தது.

ஆனால் எவ்வளவு யோசித்தும் வேறு மேலான வழி இருப்பதாய்த் தெரியவில்லை. நேரடியாய்ப் பேசினாலும் அவன் திருந்துவான் எனத் தோன்றவில்லை. அப்படிச் சொன்னாலும் முழுக்க நம்புவதற்கில்லை. தற்கொலை மனநிலை கொண்டவர்கள் பலரைப் பார்த்தாயிற்று. ஒருமுறை அந்த எண்ணம் மனதில் வந்து விட்டால் பிறகு அதிலிருந்து மீண்டாலும் எப்போது மீண்டும் தலைதூக்கும் எனச் சொல்ல முடியாது.

அதனால் அவனது க்யூரேட்டர் ஆகி, மிதமான டாஸ்க்கள் கொடுத்து, ஐம்பதாம் நாள் அவனது தற்கொலையை எதேச்சையாக அறிந்தது போல் காப்பாற்றுவது என் திட்டம். இந்த ப்ளூவேல் கேமையே அவன் தற்கொலை எண்ணத்தை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம். தற்கொலைத் தூண்டுதலை விட இது சவாலாகத் தோன்றியது. வசீகரித்தது. அதனால் எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். அது மூன்றாம் தவறு.

ஆனால் நேர்மையாய்ச் சொன்னால் ஜீவா சாக வேண்டியவர்கள் பட்டியலில் தான் இருக்கிறான் என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அவன் என் அண்ணன். என் ரத்தம். என் ஜீன். அன்பின் முன் எந்தத் தர்க்கமும் செல்லுபடியாகாது.

இந்த ஐம்பது நாட்களை ஜீவா உயிருடனும் சுவாதீனத்துடனும் கடந்து விட்டால் பிறகு அவனது மனதில் தற்கொலை எண்ணமே தோன்றாது என்று நம்புகிறேன்.

ப்ளூவேல் கேமின் இலக்கணங்கள் மீறாமல் ஆனால் டாஸ்க்களை மழுப்புகிறேன்.

இன்று அப்படித்தான். உயரமான இடத்தில் ஏறி நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் டாஸ்க் பொதுவாய் நள்ளிரவில் கொடுப்பதே வழக்கம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். அதனால் அதை நண்பகல் என மாற்றினேன். அவன் பன்னிரண்டு மணிக்குச் சற்று முன் வீட்டை விட்டு வெளியேறியதும் அவனைப் பின்தொடர்ந்தேன். அவன் சுவற்றில் ஏறி செல்ஃபி எடுத்து இறங்கும் வரையிலும் ஒளிந்தபடி பதற்றத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் - ஒரு கணம் அவன் தடுமாறி மீண்டதையும்.

அவனை விட எனக்கு நூறு மடங்கு மன அழுத்தம் வந்து விடும் போலிருக்கிறது.

*

நாள் 20.

இன்றைய டாஸ்க்கை மூன்று நாட்கள் முன்பே தந்து விட்டார் என் க்யூரேட்டர். ஒரு புத்தகத்தை ஒரே நாளில் வாசிக்க வேண்டும். அமேஸானில் வாங்கிக் கொண்டேன். வாசிப்புப் பழக்கமற்ற நான் ஒரு புத்தகத்தை ஒரு மூச்சில் முடிக்க வேண்டும் என்று இறங்குவதே தற்கொலை முயற்சி தான். கொடுக்கப்பட்ட புத்தகம் The Complete Manual of Suicide. சிறிய புத்தகம். 200 பக்கங்கள் கூட இராது. பல தற்கொலை முறைகளைப் பற்றிப் பேசிய ஜப்பானியப் புத்தகம். வாசித்தேன். ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.

*

ஜீவாவுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன். ப்ளூவேல் டாஸ்க் லிஸ்ட்படி உண்மையில் அவனுக்கு நான் தர வேண்டியது Final Exit புத்தகத்தைத் தான். தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று பேசும் நூல். அது பற்றிய குற்றவுணர்வுகளை, தயக்கங்களைக் களைந்து தெளிவைத் தருவது. ஆனால் நான் டாஸ்க்கை அப்படியே வைத்துக் கொண்டு புத்தகத்தை மட்டும் மாற்றி விட்டேன்.

The Complete Manual of Suicide தலைப்பில் தற்கொலை செய்வதற்கு உதவியான நூல் என்பதாய்த் தோன்றினாலும் உண்மையில் அஃது தற்கொலை எண்ணத்தை நீக்கப் பயன்படுவது. காரணம் ஒவ்வொரு தற்கொலை முறையின் வலி, குரூரத்தன்மை, தோல்வி வாய்ப்பு, தோல்வியடைந்தால் அதற்குப் பிந்தைய வாழ்வின் சிக்கல்கள் என தற்கொலை செய்வதற்கான தைரியத்தை முறித்துப்போடும் வண்ணம் எழுதப்பட்டது.

*

நாள் 22

க்யூரேட்டருடன் உரையாடிக் கொண்டிருக்கும் ரஷ்யத் தளத்தில் #i_am_whale என ஸ்டேட்டஸ் போட வேண்டும். வரும் கமெண்ட்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

*

நாள் 25.

கதவைத் தாழிட்டேன்.

இன்று விளையாட்டின் வெள்ளி விழா. பாதி கிணறு கடக்கும் நாள். என்னை நானே வாழ்த்திக் கொண்டேன். க்யூரேட்டர் வாழ்த்துடன் இன்றைய டாஸ்கையும் அளித்தார்.

அவர் அனுப்பும் படத்தைக் கையில் பிளேடால் கீறி வரைந்து கொள்ள வேண்டும். ப்ளூவேல் கேமின் முதல் ரத்தச் சவால். அடுத்து எல்லாம் இப்படித்தான் போல!

வந்த மெஸேஜைத் திறந்தேன். கணிணித் திரையில் நீலத் திமிங்கலம் ஒன்றின் கார்டூன் வடிவம் மின்னியது. என் இடது கையைச் சுத்தமாக ஒரு துண்டு கொண்டு துடைத்தேன். ஒரு திறமையான ஓவியனின் தூரிகைக்குக் காத்திருக்கும் அசட்டு வெண்ணிறக் கித்தான் துணி போல் கையின் உட்புறம் மாநிறம் கம்பீரம் வீசியது.

நீலமசியுறைந்த ஒரு பந்து முனைப் பேனாவை எடுத்தேன். கணிணித்திரை கண்டு அப்படியே வரிவரியாய் நிதானமாய் வரையத் தொடங்கினேன். முழுதாய் ஐந்து நிமிடங்களில் கிட்டத்தட்ட அப்படியே கொண்டு வந்து விட்டேன். திமிங்கலம் நிஜமாகவே நீலமாய் ஜ்வலித்தது. இனி இதைச் செந்திமிங்கலமாக்க வேண்டும்.

அப்பாவின் ஷேவிங் கிட்டிலிருந்து எடுத்து வந்த செவன் ஓ க்ளாக் ப்ளேடை உறை பிரித்தேன். அறையின் மெல்லிய வெளிச்சத்தில் அதன் ஓரங்கள் கூராய்ப்பளபளத்தன.

லேசாய்த் தயங்கினேன். அது ஒரு கணம் தான். அடுத்த கணம் என் முன்னிருப்பது யாரோ ஒருவரின் கை போல, நான் அதில் கலைநயம் படைக்கப் பணிக்கப்பட்டவன் என்றும் தோன்றியது. பிளேடின் ஓரத்தை நீலத் திமிங்கலக் கோட்டோவியத்தின் மீது வைத்தேன். மெல்ல அழுத்தினேன். அதிகமும் முரண்டு பிடிக்காமல் பிளேடின் நுனி உள்ளே இறங்கி, குருதித் துளி ஒன்று பூத்தது. கருஞ்சிவப்பில் மசமசவென இருந்தது.

அப்படியே மெல்ல நீலக்கோட்டின் அடியொற்றி பிளேடை நகர்த்தினேன். வலித்தது. எங்கோ ஆழத்தில் கனவில் வலிப்பது போல் இருந்தது என்பதால் கதறவில்லை.

பூ மிதிப்பவர்கள் விரைந்து நடந்து குண்டத்தைக் கடக்க முனைவது போல் விரல்கள் லாவகமாய்க் கீறி முடித்தன. பேனாவில் வரைய எடுத்ததை விட குறைந்த நேரம் தான் எடுத்துக் கொண்டேன். முடித்த போது கையெங்கும் ரத்தம் கோலமிட்டிருந்தது. பிளேடை விலக்கிய போது வலியை உணரத் தொடங்கினேன். பற்களை நெரித்தேன்.

தயாராய் வைத்திருந்த பஞ்சால் ரத்தத்தை ஒற்றி எடுத்து விட்டு, ஆன்டிசெப்டிக் க்ரீம் தடவி, அதன் மீது பஞ்சு வைத்து ட்ரெஸ்ஸிங் துணியால் சுற்றி இறுக்கிக்கட்டினேன். சற்று நேரம் படுத்துக் கொண்டேன். மீண்டும் எழுந்து முழுக்கை சட்டை போட்டேன்.

கதவைத் திறந்தேன்.

*

ரத்த தினங்கள் தொடங்கி விட்டன. மனதே இல்லாமல் தான் இன்றைய டாஸ்கை ஜீவாவுக்குக் கொடுத்தேன். அதோடு வழக்கத்துக்கு மாறாய் பிளேடால் வரைந்த பின் செய்ய வேண்டிய சிகிச்சையையும் சொன்னேன். அவன் இதிலெல்லாம் சமர்த்தல்ல என்பதால். விவரமாய் இரவு உணவுக்கு வெளியே வந்த போது முழுக்கைச் சட்டை அணிந்திருந்தான். இன்னும் சில நாட்கள் இப்படித்தான் அலைய வேண்டி இருக்கும். நாளை பள்ளிக்குப் போகையில் ஸ்வெட்டர் போட்டுக் கொள்வான் என ஊகிக்கிறேன்.

*

நாள் 28

க்ரேனில் ஏற வேண்டும். அல்லது ஏற முயல வேண்டும். க்யூரேட்டருக்கு செல்ஃபி.

*

நாள் 29.

இன்றைய டாஸ்க் எளிமையானது. க்யூரேட்டர் அனுப்பும் பாடல்களை காலையில் தொடங்கி தூங்கப் போகும் முன் கேட்க வேண்டும். பாடல்களுக்கான லிங்க்களை நேற்றே அனுப்பி விட்டார். என் வசதிக்காக மொபைலில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். சுமார் நூற்றைம்பது பாடல்கள். Emilie Nicolas-ன் Pstereo Sarah Blasko-ன் All I Want என்று இருந்த பட்டியலில் கடைசியில் ஆச்சரியமாய் ஒரு தமிழ் பாடல். நந்தலாலா படத்திலிருந்து ‘ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்துல’.

நாள் முழுக்கக் கேட்ட இசையும் ஆங்கில வரிகளும் மரணத்தை ஒரு தாயாக்கி அதன் மடியில் என்னைக் கிடத்தியிருக்க, அதில் நான் கிறங்கியிருக்க, அந்த ஒரு பாடல் மட்டும் பொங்கி வரும் பொங்கலில் இட்ட பச்சரிசி போல போதையை அணைத்தது.

*

இன்று பாடல் டாஸ்க் தினம். வழக்கமான பட்டியலினூடே இளையராஜாவின் பாடல் ஒன்றினைச் சேர்த்திருந்தேன். ஒருவிதமான மூட நம்பிக்கை தான். Just a blind attempt.

*

நாள் 31.

இன்று முழுக்க யாரிடமும் பேசக்கூடாது என்பது அளிக்கப்பட்ட டாஸ்க். வீட்டில் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் பொதுவாகவே யாரிடமும் அவசியமென்றால் ஒழியப் பேசுவதில்லை. ஆனால் பள்ளி நாளில் இது சிரமம் தான். குறிப்பாய் ஆசிரியர்கள் ஏதும் கேட்டால் பதிலளிக்காது இருந்தால் கலவரமாகும்.

அன்றெல்லாம் பேசாமல் இருந்தேன். நண்பர்களைத் தவிர்த்தேன். செல்ஃபோனுக்கு வந்த அழைப்புகளை எடுக்கவில்லை. பேசாமல் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருந்தது. ஆனால் அது ஓர் அறுப்பு. எல்லா மனிதர்களிடமிருந்தும் துண்டித்துக் கொள்ளும் செயல். எப்படி பார்வை என்பது உலகிலிருந்து துண்டிக்கிறதோ அப்படி.

இரவுணவின் போது பரமா கேட்டாள், “என்னடா உர்ருனு குரங்காட்டம் இருக்கே?”

அதற்குப் பதில் சொல்லவில்லை. மற்ற நாள் என்றால் பதிலடி கொடுத்திருப்பான்.

*

இன்று ஜீவாவுக்கு மௌன தினம். மனிதர்களுடனேதும் பேச முடியாது என்பதை விட மனதுடன் தான் பேசியாக வேண்டும். அது தானே தற்கொலை நோக்கிய முதல் அடி!

இரவுணவின் போது அவன் மௌனத்தை உடைக்கச் சீண்டினேன். கல்லூளிமங்கன்.

*

நாள் 33

காலை 4:20க்கு அறைக்கதவைச் சாத்திக் கொண்டு விளக்குகளை அணைத்து விட்டு தனிமையில் பேய்ப்படங்கள் பார்க்க வேண்டும் என்பது இன்றைய டாஸ்க். செய்தேன்.

*

நாள் 34

இன்றைய டாஸ்க் சில்வியா ப்ளாத்தின் Lady Lazarus கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒரு தற்கொலை முயற்சிக்குப் பின் அவர் எழுதிய கவிதை அது என்றார் க்யூரேட்டர். சில்வியா கடைசியில் தற்கொலை செய்து தானே இறந்தார்!

Dying
Is an art, like everything else.
I do it exceptionally well.

*

நாள் 35

எனக்கு நானே நோய் வரவழைத்துக் கொள்ள வேண்டும். ஐஸ்க்ரீம் தின்று விட்டு ஷவரில் நின்று, மீண்டும் ஐஸ்க்ரீம், மீண்டும் ஷவர். தலையைத் துவட்டவில்லை. ஜலதோஷம், காய்ச்சல், தொண்டை வலி கொண்டேன். அம்மாவுடன் பரமாவும் சேர்ந்து கவனித்துக் கொண்டது ஆச்சரியமாய் இருந்தது. மீள இரண்டு நாளானது.

*

நாள் 37

நீலத்திமிங்கலமாக முழுமனதுடன் தயாராகி விட்டதை உணர்த்த ‘YES’ என்று காலில் கூரான கண்ணாடித்துண்டினால் எழுதி க்யூரேட்டருக்கு நிழற்படம் அனுப்ப வேண்டும். ஒருவேளை தயாராகவில்லை எனில் சுயதண்டனையாக உடம்பில் பல இடங்களில் அதே கண்ணாடித் துண்டினால் குத்திக் கொள்ள வேண்டும். அதிகம் அலட்டவில்லை.

*

நாள் 39.

இன்று நள்ளிரவு பக்கத்திலிருக்கும் ஏதாவது சுடுகாட்டுக்குப் போக வேண்டும். அங்கே இரண்டு மணி நேரம் இருந்து விட்டுத் திரும்ப வேண்டும். க்யூரேட்டருக்கு நிழற்படம் எடுத்து அனுப்ப வேண்டும். ‘நைட் பன்னண்டு மணிக்கு நான் ஏன்டா சுடுகாட்டுக்குப் போகனும்’ என்ற வடிவேலுவின் வசனம் நினைவுக்கு வந்து புன்னகை வரவழைத்தது.

இரவு சாப்பிட்டு முடித்த பின் நிர்மல் வீட்டுக்குப் போய்ப் படித்து விட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். இந்த ஜீவாவுக்காகப் பொய் சொல்லக்கூடிய ஒரே ஜீவா அவன் மட்டும்தான். என் வீட்டிலிருந்து ஃபோன் செய்து விசாரித்தாலும் சமாளிப்பான்.

“அவனை இங்கே வந்து படிக்கச் சொல்லேண்டா.” என அம்மா அலுத்துக் கொண்டாள்.

அப்பா நிச்சயம் நம்பியிருக்க மாட்டார். ஏதோ பார்ட்டி என்று தான் எண்ணி இருப்பார்.

“குல்லாப் போட்டுட்டு போடா. ஸார் குளிர்ல திரிஞ்சிட்டு வந்து சளி, காய்ச்சல்னு படுத்தா என்னால பணிவிடை செய்ய முடியாது.” என்று எரிச்சலூட்டினாள் பரமா.

வீட்டிலிருந்து இரண்டரை கிமீ தூரத்தில் இருக்கிறது கிறிஸ்துவர்களின் சுடுகாடு.

நடந்தே போனேன். சுடுகாடு பூட்டி இருந்தது. அவ்வப்போது வாகனங்கள் கடந்து கொண்டிருந்ததைத் தவிர அரவம் ஏதுமில்லை. சுடுகாட்டைச் சுற்றி வந்து உயரம் குறைவாய் இருந்த மதில் சுவற்றில் கைவைத்து அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஏறிக் குதித்தேன். அந்தப்பக்கம் இருந்த புதரில் விழுந்தேன். அதிலிருந்து ஏதேதோ ஊர்வனப் பிராணிகள் சிதறி ஓடின. மெல்லிய சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும். இருட்டில் தெரியவில்லை.

அவசரமாய் எழுந்து நகர்ந்தேன். நூற்றுக்கணக்கான சமாதிகள். எல்லாவற்றின் மீதும் சிலுவைக்குறியீடுகள். சுடுகாட்டின் மையத்தை நோக்கி நடந்தேன். சுடுகாட்டு மையம் என்பது சாவின் மையமோ என அபத்தமாய்த் தோன்றியது. சாவு நோக்கி நகர்கையில் நிறையத் தத்துவங்கள் தோன்றும் போல என்று மேலும் அபத்தமாய்ச் சிந்தித்தேன்.

புதிதாய் இருந்த ஒரு சமாதியைத் தேடி அமர்ந்தேன். அங்கு ஓரளவு வெளிச்சமும் இருந்தது. யாரோ ஃப்ரான்சிஸ் என்ற ஆசாமியுடையது. எப்படிச் செத்துப்போனானோ!

செல்ஃபோனை எடுத்து சமாதியின் எழுத்துக்கள் இருக்குமாறு செல்ஃபி எடுத்தேன்.

தெளிவாய் வந்திருந்தது. பரவாயில்லை, குறைந்த ஒளியிலும் நன்றாய்ப் புகைப்படம் எடுக்கிறது மொபைல் என்றெண்ணிக்கொண்டேன். Inverted Image என்பதால் சமாதியின் எழுத்துக்கள் கண்ணாடிப் பிம்பம் போல் திரும்பி நின்று வாசிக்க உகந்ததாய் இல்லை.

திரும்பி சமாதியில் நேராய்ப் பார்த்துப் படித்தேன். பிறப்பு 2001; மறைவு 2017. என் போலவே பதின்மன். ஆனால் என்னை விட அற்பாயுளில் செத்துப் போயிருக்கிறான்.

அவன் ஆவி நிம்மதியுறாது இங்கே அலைந்து கொண்டிருக்குமோ! அப்போது தனியே ஒரு சுடுகாட்டின் மத்தியில் இருக்கிறேன் என்ற எண்ணம் பிரம்மாண்டம் கொண்டது.

ஓர் ஆந்தையின் அலறலும், பதிலுக்கு ஒரு நாயின் குரைப்பொலியும், தொடர்ந்து ஆயிரம் பூச்சிகள் ரீங்காரமும் தொடங்கியது திட்டமிட்ட தாளலயத்துடன் இருந்தது.

யாரோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. ஒரு கண். இல்லை இரு கண்கள். இல்லை இல்லை, நூறு கண்கள், ஆயிரம் கண்கள், லட்சம் கண்கள், கோடிக் கண்கள்… எங்கே ஓடி ஒளிந்தாலும் அந்தக் கண்களிலிருந்து தப்ப முடியாது.

ஜீவா என்று யாரோ அழைப்பதாய்ப்பட்டது. மனிதனால் மிமிக்ரியில் கூட கொண்டு வர முடியாத குரல். அதுவும் எங்கோ ஆழத்தில் பூமிக்குள்ளிருந்து அழைப்பது போல்.

சமாதியைத் திரும்பிப் பார்த்தேன். இப்போது ஜீவா என்று அதில் எழுதி இருந்தது.

அவ்வளவு தான். ஓடத் தொடங்கினேன். நூறு நாய்கள் சேர்ந்து துரத்துவது போல் ஓடினேன். திரும்ப எப்படிக் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்தேன், சாலையில் எப்படி ஓடி வந்தேன், வீட்டில் காலிங்பெல்லை அமுக்கினேனா எதுவும் தெரியவில்லை.

பரமா கதவைத் திறந்தாள்.

தூக்கமற்ற கண்களுடன், “சாவி எடுத்துட்டுப் போக வேண்டியது தானே!” என்றாள்.

நான் பதில் சொல்லாமல் அறைக்குள் நுழைந்து படுத்துப் போர்த்திக் கொண்டேன்.

*

ஜீவா சுடுகாட்டுப் புகைப்படத்தை அனுப்பி வைத்தான். இரண்டு மணி நேரம் மேல் சுடுகாட்டில் இருந்ததாய்ச் சொன்னான். வாழ்த்துச் சொன்னாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அறிவேன். அதிகபட்சம் அரை மணி நேரம் இருந்திருக்கலாம்.

நான் தான் அவன் வரும் வரையிலும் உறங்காமல் பதற்றத்துடன் காத்திருந்தேனே.

*

நாள் 40.

இன்று என் தற்கொலைக்கு நாள் குறித்தார் க்யூரேட்டர். டாஸ்க் அவ்வளவு தான்.

இன்னும் சரியாய் ஒரு டஜன் தினங்கள். சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. என் சாவுக்கு யார் அழுவார்கள்? அம்மா நிச்சயம் அழுவாள். அதிகம் அழுதால் அவளுக்கு மூச்சுத் திணறல் வருமே எனக் கவலை எழுந்தது. அப்பா இழவு வீடுகளில் கூட அழுது கண்டதில்லை. நான் இறந்தால் மனதிற்குள்ளேனும் அழுவார் - கொள்ளி வைக்கும் போதோ, மின்தகனத்துக்கு உடல் உள்ளே போகும் போதோ. என் சாவுத் திருநாள் ஒரு வார இறுதி நாளில் விழவில்லை என்பதால் “லீவு நாளில் செத்திருக்கக்கூடாதாடா” என பரமா அலுத்துக் கொள்வாள். சிரித்துக் கொண்டேன்.

அது ஆசிரியர் தினம் என்பது நினைவுக்கு வந்தது. மரணத்தை விடச் சிறந்த ஆசிரியர் உண்டா! ஒரே குறை அவ்வாசிரியர் கற்றுத்தரும் பாடம் மற்றவர்களுக்கே பயன்படும்!

*

தேதி சொல்லி விட்டேன். அதை ஜீவா ஒரு ஸ்மைலியுடன் ஏற்ற போது கசிந்தேன்.

*

நாள் 41

காலை 4:20க்கு ஏதேனும் ரயில்வே தண்டவாளத்திற்குப் போக வேண்டும். அதை ஒட்டி நடக்க வேண்டும். ஒரு நீளமான ரயில் என்னைக் கடக்கும் வரை. நடந்தேன்.

நடையினூடே தர்மபுரி இளவரசனும், மைனாவும் நினைவில் வந்து போனார்கள்.

*

நாள் 43

ஓர் உயரமான பாலத்தின் விளிம்பில் ஏறி நிற்க வேண்டும். அப்படியே ஒரு செல்ஃபி.

*

நாள் 44.

இன்றைய டாஸ்க் ஓர் ஊசியை காலில் அரை இஞ்ச் உள்ளே இறக்க வேண்டும்.

ரொம்ப விவரிக்க விரும்பவில்லை. வலது தொடையைத் தேர்ந்தெடுத்தேன். புத்தம் புதிய தையல் ஊசி ஒன்றைக் கடையில் வாங்கிக் கொண்டேன். வந்து இறக்கினேன்.

போர்வெல் போடுகையில் வரும் முதல் நீரூற்று போல் ரத்தம் தெறித்தது. வலித்தது. மிக மிக வலித்தது. ஊசியுடன் புகைப்படமெடுத்தேன். க்யூரேட்டருக்கு அனுப்பினேன்.

*

ஐம்பதாம் நாள் சீக்கிரம் வந்து விட்டல் தேவலாம். ஜீவா படும் சிரமங்கள் பார்க்கச் சகிக்கவில்லை. ஓர் எல்லைக்கு மேல் என்னால் ஆட்ட விதிகளை வளைக்கவும் முடியவில்லை. இன்று ஓர் இஞ்ச் என்ற அளவை அரை இஞ்ச் ஆக்கி விட்டேன்.

*

நாள் 46

நாடியை அறுத்துக் கொள்ள வேண்டும். மூன்று வெட்டுக்கள். ஆனால் ரத்தக் குழாய்க்குச் சேதாரமில்லாமல் ஆழமற்ற வகையில். அறுத்துக் கொண்டேன். அப்பாவின் நண்பர் ஜெர்மனியிலிருந்து வாங்கி வந்து பரிசளித்த புத்தம் புதிய கத்தியைப் பயன்படுத்தினேன். ஆழமாக வெட்டாமல் தவிர்ப்பது தான் பெரும் சவாலாக இருந்தது. ரூப்ராணி என்னை முத்தமிடுவாள், ஆனால் நான் பதிலுக்கு ஏதுமே செய்யக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்! அந்த‌ மாதிரி.

*

நாள் 48.

இன்றைய டாஸ்க் சுவாரஸ்யமானது (அணைகிற ஜோதி பிரகாசமாய் எரிவது போல் இந்த விளையாட்டை வடிவமைத்திருக்கிறார்கள் போல!) என்னைப் போலவே ஒரு நீலத் திமிங்கலத்துடன் குறைந்தது ஒரு மணி நேரம் சாட்டில் உரையாட வேண்டும்.

ஒரே கட்டுப்பாடு எங்கள் அடையாளத்தை மட்டும் பரஸ்பரம் வெளிப்படுத்தக்கூடாது. பெண்ணாக இருந்தால் உரையாடலை நீட்டிக்கலாம் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.

சுவாரஸ்யம் கருதி உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் பகிர்கிறேன்.

“ஹாய், எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். நீங்க?”

“நல்லா இல்ல. இருந்தா நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்க மாட்டோமே!”

“ம்ம்ம்ம்ம்.”

“நீங்க பொண்ணா?”

“ஆமா, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“என்னவோ ஒரு இன்ட்யூஷன்.”

“கதை விடாதீங்க.”

“எந்த ஆம்பிளை அஞ்சு ம் சேர்ந்தாப்ல டைப் பண்ணி இருக்கான்!”

“சரி, செத்துப் போனா சொர்க்கம் போவீங்களா?”

“சொர்க்கம் போவதை எல்லாம் விடுங்க. செத்துப் போவதே சொர்க்கம் தான்.”

“ஏன் தற்கொலை? இந்த கேமுக்காகவா?”

“ஊருக்குப் போவதன் நோக்கம் குறிப்பிட்ட சாலையில் பயணிப்பதா என்ன!”

“எதிர்பாலினம்னா இம்ப்ரஸ் பண்ற மாதிரியே தான் பேசனுமா என்ன!”

“சரி, அப்ப உங்க கிட்ட மொக்கையாத்தான் பேசி ஆகனும் போல. ஓர் உதாரணம் சொல்றேன். நிதமிரவு படுக்கைக்குப் போகும் முன்னமாய் ஆளுக்கு ஒரு டம்ளர் பாலறுந்துவது குடும்ப வழக்கு. அது உடம்புக்கு நல்லது என அப்பா நம்புகிறார். எனக்கு பால் ஆகாது. பால் சார்ந்த ஏதும் ஆகாது. ஆனாலும் குடிக்க வேண்டும்.”

“அதுக்காகத் தற்கொலையா!”

“கேளுங்க. எனக்கு, என் கருத்துக்கு என் வீட்டில் மதிப்பில்லை. மற்ற எல்லாரோடும் என்னை ஒப்பிட்டு மட்டும் தட்டுகிறார்கள். என் தங்கையுடன் கூட ஒப்பிடுகிறார்கள். அம்மா கூட அடிக்கடி ‘ஏன்டா இப்படி இருக்கே’ன்னு சொல்வாங்க. எப்படி இருக்கேன்? தெரியாது. ஆனா அப்படித்தான் இருப்பேன். திறமை குறைவா இருக்கறது ஒரு தப்பா!”

“இல்லை. ஆனா, அவுங்க உங்க நல்லதுக்குன்னு நம்பித்தானே சொல்றாங்க!”

“என் வீட்டு ஆட்களுக்கு லாயரா நீங்க?”

“அப்படி இல்ல, ஆனா…”

“சரி, என் கதை போதும், உங்க கதை சொல்லுங்க.”

“ஒரு ஆம்பிளை கிட்ட சொல்ற மாதிரி கதை இல்ல.”

“நான் ஆம்பிளைன்னு சொல்லவே இல்லையே!”

“அது சொல்லித் தான் தெரியனுமா என்ன!”

“க்ளெவர்.”

“அப்ப, சாகறதாத் தீர்மானிச்சிட்டீங்களா?”

“சந்தேகமே இல்லை. நீங்க?”

“தெரியலைங்க. குழப்பமா இருக்கு.”

“யோசிக்கவே வேண்டாம். செத்துருங்க.”

“நன்றி. நிச்சயம் பரிசீலிக்கிறேன்.”

“சாகற எண்ணம் வந்தாலே சாகறதுல நியாயம் இருக்குனு தான் அர்த்தம்.”

*

இன்று ஜீவாவுடன் சக நீலத்திமிங்கலம் ஒருவரை உரையாடச் செய்ய வேண்டும். யாரும் கிடைக்காதபட்சத்தில் க்யூரேட்டரே அப்படி ரோல்ப்ளே செய்து உரையாடலாம். உலகில் நடக்காத ஒன்றையும் நாம் செய்யவில்லை, ஏற்கனவே பலரும் சகஜமாய்ச் செய்வது தான் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.

நீலத் திமிங்கலம் கிடைப்பது அத்தனை சிரமமான விஷயம் இல்லை. ஆனாலும் அதை நாடாமல் நானே அவனிடம் உரையாடினேன், மேற்சொன்ன எண்ணத்திற்கு நேர் எதிர் எண்ணத்தை உருவாக்கும் முகமாக. ஆனால் ஜீவா அழுத்தக்காரன்.

*

நாள் 50.

“விளையாட்டு முடிவுக்கு வருகிறது ஜீவா. இன்றைய டாஸ்க் என்னவென உனக்கே தெரிந்திருக்கும். ஆனாலும் க்யூரேட்டராய் விளக்க வேண்டியது என் கடமையாகிறது.”

“சொல்லுங்கள்.”

“இன்று நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தப்பிக்காதவாறு முழுமையான தற்கொலை. அல்லது மாற்று ஏற்பாடாய் யாரையேனும் கொலை செய்யலாம்.”

“தற்கொலை செய்வதே என் தேர்வு.”

“எப்படி இறக்க வேண்டும் என்பதில் உனக்கு விருப்பம் இருக்கிறதா?”

“ஆம். தூக்கு மாட்டி இறக்க விரும்புகிறேன்.”

“நல்லது. வாழ்த்துக்கள்.”

“இதற்கும் செல்ஃபி அனுப்ப வேண்டுமா?”

“வேண்டாம். நாளை செய்தித்தாள்களில் பார்த்துக் கொள்வேன்.”

“டியர் க்யூரேட்டர், எல்லாவற்றுக்கும் நன்றி.”

“இதுவே நம் கடைசி உரையாடல். குட்பை.”

*

இரவு தான் தூக்குப் போடத் திட்டமிட்டிருக்கிறான் ஜீவா. விழித்திருந்து அவனைப் பிடித்துக் காப்பாற்ற வேண்டும் என்றெண்ணியபடி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விளக்கை அணைத்துப் படுக்கையில் கிடந்தேன். கண்கள் சொருகின.

எவ்வளவு முயன்றும் கண்கள் என் பேச்சு கேட்க மறுத்தன. தூக்கம் அமிழ்த்தியது.

*

இன்றே கடைசி. இரண்டு நாட்களாக எனக்குப் பிடித்தவர்களிடம் நானாகத் தேடிப் போய் உரையாடினேன் - அம்மா, அப்பா, பரமா, நிர்மல், இன்னும் சிலர். பிடித்த உணவுகளை உண்டேன். சற்று முன் கூட கேஎஃப்சி போய் வந்தேன். குடித்தேன்.

இவற்றை அனுபவித்த தருணங்களில் எதிர்மறைகள் தாண்டி இந்த உலகில் இருந்து விடலாம் என்று தோன்றியது. ஆனால் அது ஒரு நாளின் இருபத்து நான்கில் ஒரு பகுதி மட்டுமே. மீதி நேரமெல்லாம் என் மனதோடு நடக்கும் போராட்டமே நிதர்சனம்.

இவ்வுலகில் தோல்வியுற்றவனுக்கு இடமில்லை. கல்வி, காதல் என யாவற்றிலுமே எனக்குத் தோல்வி தான். விளக்குமாற்றால் குப்பையை அப்புறப்படுத்துவது போல் என் போன்றவர்களைத் துடைத்தெறிந்து விடவே உலகம் விரும்புகிறது. ரோமத்தைப் போல் உதிர்த்து விட நினைக்கிறது. நான் பூமிக்குப் பாரம். இதைச் சொல்லும் போது என் விழியில் நீர் கோர்க்கிறது. அடுத்த முறை வெற்றியாளனாகப் பிறக்க வேண்டும்.

சமையலறையில் காய்ச்சி வைத்திருந்த இரவுப் பாலில் தலா ஒரு தூக்க மாத்திரை போட்டுக் கொடுத்தது நல்லது தான். திடீரென்று தான் அந்த யோசனை தோன்றியது. இடையில் சப்தம் கேட்டு யாராவது எழுந்து கொண்டு விட்டால் சிக்கல். ஒருவேளை முயற்சியினிடையே காப்பாற்றப்பட்டாலும் பிரச்சனை. அவர்கள் காலையில் எழுந்து பார்க்கட்டும். கதறட்டும். கண்கள் மின்ன, குறும்புப் புன்னகை அரும்பியது மனதில்.

அம்மா - அப்பாவின் அறைக்குப் போனேன். நல்ல நித்திரை. இருவரின் காலையும் தொட்டு வணங்கினேன். கன்னங்களில் முத்தமிட்டேன். அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மாதிரியான மகனாகப் பிறக்கிறேன் என நினைத்துக் கொண்டேன். கசிந்தேன்.

பரமாவின் அறைக்குள் நுழைந்தேன். அலங்கோலமாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் அப்படித்தான். அருகில் சென்று நைட்டியைச் சரி செய்து கம்பளி கொண்டு போர்த்தி விட்டேன். குழந்தை மாதிரியான முகம் அவளுக்கு; ஆனால் ராட்சச அறிவு. எனக்கு அப்படியே நேர் மாறாய் ராட்சச முகம், குழந்தை அறிவு!

One word
Frees us of all the weight and pain of life:
That word is love.

எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. எத்தனை அர்த்தமிழந்த வரிகள்!

பதினைந்து நிமிடம் செலவழித்து சுத்தமாய் முகச்சவரம் செய்தேன். நான் ரூப்ராணி விஷயமறிந்து இழவுக்கு வந்து பார்த்தால் முகம் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும்.

என் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டேன். இது ஒரு வழிப்பாதை. மீண்டும் நான் கதவைத் திறக்கப் போவதில்லை. நாளை காலை யாரேனும் உடைத்துத் திறப்பார்கள்.

கடவுள் இருந்தால் கடவுளை, நரகம் இருந்தால் நரகத்தையும் பார்க்கப் போகிறேன். எதுவும் இல்லை எனில் மண்ணுக்கும் புழுவுக்கும் பேக்டீரியாவுக்கும் உணவாவேன்.

மாலை அம்மாவின் புடவை ஒன்றை எடுத்து வைத்திருந்தேன். தொப்புள்கொடியில் தொங்கி உயிரை விடும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது! நல்ல புடவை அது. அப்பா முதன்முறை தில்லி போன போது வாங்கி வந்தது. ஒருவேளை புடவை பாழாகி விட்டதே என மெல்லிசாய் அம்மா வருந்துவாளோ! சிரித்துக் கொண்டேன்.

என் அறையின் மின்விசிறியின் பலத்தைச் சோதித்து வைத்திருந்தேன். என் ஸ்டடி டேபிளுடன் இருக்கும் நாற்காலி சரியாய் இருக்குமென மனக்கணக்கிட்டிருந்தேன்.

மின்விசிறியில் அம்மாவின் புடவையைச் சுருக்கிட்டுக் கட்டி இறுக்கினேன். அதற்குக் கீழே நாற்காலியை வைத்தேன். தட்டி விட்டால் கீழ்தள ஃப்ளாட்டில் கொஞ்சம் சப்தம் எழுப்பும். பிரச்சனை இல்லை. சலித்துக்கொண்டே புரண்டு படுப்பார்கள். நாற்காலியில் ஏறினேன். புடவைச் சுருக்கினுள் தலை நுழைத்தேன். கண்களை மூடிக் கொண்டேன்.

இதுவரை தந்த, பிடுங்கிய எல்லாவற்றுக்கும் இந்த உலகிற்கு நன்றி. தற்கொலைக் குறிப்பெல்லாம் ஏதும் எழுதவில்லை. எப்படியும் ப்ளூவேல் எனக் கண்டுபிடிப்பார்கள். அதெல்லாம் அவர்கள் பிரச்சனை. ஸாரி அப்பா, அம்மா, பரமா. நன்றி க்யூரேட்டர்!

நாற்காலியை எட்டி உதைக்க எத்தனிக்கையில் சட்டென மனம் தடுமாறியது, நிலை பெற்றுத் தடுமாறி சாயவிருந்த நாற்காலியைக் கால்களால் லாவகமாகப் பிடித்து நிறுத்தினேன். உடம்பு ஒரு கணம் ஆடி விட்டு நின்றது. குப்பென வியர்த்திருந்தது.

நான் ஏன் சாக வேண்டும்?

சிறந்தவர்களால் தான் சாதாரணர்களுக்கு இந்த உலகில் நிம்மதி இல்லை. ஆனால் அவர்கள் அதிகபட்சம் ஒரு சதவிகிதம். விரல் வெட்டுப்பட்டாலும் உயிரைக் காப்பதே நியாயம். விரலைக் காக்க உயிரைக் கொடுக்க முடியுமா என்ன? திறமைசாலிகள், புத்திசாலிகள் இல்லை என்றால் உலகம் இவ்வளவு முன்னேற்றம் கண்டிராது தான். ஆனால் சர்வநிச்சயமாய் இதை விடவும் நிம்மதியாய் இருந்திருக்கும். அவர்கள் தான் போட்டி என்ற ஒன்றை உண்டாக்கி எல்லாவற்றையும் வெற்றி - தோல்வி என்பதாக, லாப - நஷ்டக் கணக்காக மாற்றி விட்டனர். எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பரமாக்கள் இல்லாத வீடுகளில் ஜீவாக்கள் தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டி இராது. ஆக, நியாயப்படி அவர்கள் அல்லவா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர்கள் சாக மாட்டார்கள். உலகம் தான் அவர்களைப் பொற்தாம்பாளத்தில் வைத்துத்தாங்குகிறதே. பெற்ற வயிற்றையே பாகுபாடு பார்க்க வைத்து விடுகிறார்கள். நாம் தான் பொறுப்பெடுத்து அந்தத் தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நான் வாழ வேண்டியவன். பரமாதான் சாக வேண்டியவள். நான் அதைப்பரிசளிப்பேன்.

ப்ளூவேல் சேலஞ்ச்படி இன்று நான் தற்கொலை செய்ய வேண்டும் அல்லது கொலை. க்யூரேட்டரிடம் முதலாவதைத் தேர்ந்தெடுப்பதாகச் சொல்லிவிட்டேன். பரவாயில்லை, நாளை சொல்லிக் கொள்ளலாம், கடைசி நொடியில் முடிவை மாற்றிக் கொண்டதாய். அதற்கு ஒரு வகையில் என் க்யூரேட்டர் தான் காரணம் என்று ஏனோ தோன்றியது.

பரமாவின் அறைக்குள் நுழைந்தேன். இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

எனக்குத் தெரியும் வலியற்ற, அதே சமயம் உத்தரவாதமான இறப்பு முறைகள் பற்றி. தலையணையை வைத்து பரமாவின் முகத்தை முழுக்க மூடி அழுத்தத்துவங்கினேன்.

***

Comments

Anonymous said…
That mysskin touch.. Awesome
tamizhnathi said…
தொப்புள்கொடியில் தொங்கி உயிரை விடும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது!

பாதித்த வரி...
மிரள வைக்கும் கதை! அற்புதமான நடை! மிகச் சிறப்பான சொல்முறை! சுஜாதா கதை படித்த நிறைவு!
Bala said…
Very Good Story. That climax twist awesome bro
Unknown said…
பரமாவின் எண்ணத்திற்கும் ஜீவாவின் எண்ணத்திற்க்கும் என்ன ஒரு வித்தியாசம்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி