கமல் ஹாசனின் அரசியல்
கமல்ஹாசனின் இருபத்தியிரண்டு ஆண்டு தீவிர ரசிகனாகவும் தமிழக அரசியலில் ஆர்வம், அக்கறை கொண்டவனாகவும் கடந்த ஒரு மாதமாக அவரது அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நான் அறிந்த வரை இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சிறிதும் பெரிதுமாய் 7 நேர்காணல்கள் அளித்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீடிக்கும் அந்த நேர்காணல்களின் வழியே துலங்கும் கமல் ஹாசனின் (தற்போதைய) அரசியல் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளும், முயற்சியாகவே இந்தக் கட்டுரையை எழுதிப் பார்க்கிறேன். 1. கமல் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அது (இப்போதைக்கேனும்) தேசிய அரசியலை முன்னெடுக்காமல் தமிழக அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது. தேவையில்லாமல் பாஜகவைப் பகைத்துக் கொண்டு இங்கே தன் அரசியல் முன்னேற்றங்களுக்குத் தடங்கல்களைச் சந்திக்க அவர் தயாரில்லை. (கமல் ஹாசன் தான் ஒழுங்காக வரிக் கட்டும் நேர்மையான கொம்பன் ஆயிற்றே, பிறகு எதற்கு அவர் மத்திய அரசுக்கு அஞ்ச வேண்டும்? தவறே செய்யாத ஒருவரைப் பிரச்சனையில் சிக்க வைப்பது இந்தியாவில் ஒரு விஷயமா! இங்கே அதிகாரம் என்பது...