பெருவிரல்
First things first. வெறுப்பும் பொறாமையும் முயங்கி விமர்சனமாய், வசையாய்ப் பொழிவதற்கு மத்தியில் விடாப்பிடியாய் ஒன்பதாண்டுகளாய் சுஜாதா விருதுகளை வழங்கி வரும் மனுஷ்ய புத்திரனுக்கு என் மரியாதை. இந்தாண்டு இணையப் பிரிவுக்கான தேர்வுக்குழுவில் இருந்த இரா. முருகன், பாஸ்கர் சக்தி மற்றும் கேஎன் சிவராமன் ஆகியோருக்கு என் நன்றி. நேர மேலாண்மை தவிர்த்து இந்த விருது விழாவை சிறப்பாய் நடத்திக் காட்டிய உயிர்மை குழுவினருக்கு பாராட்டுக்கள். இம்முறை சுஜாதா விருது பெற்றுள்ள பெரும் படைப்பாளிகளுக்கு வணக்கமும் இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்தும். அரங்கில் பெருந்திரளாய்க் குழுமி நிகழ்ச்சியைச் சிறப்பித்த வாசகர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு என் பிரியங்கள்.
நேற்றைய மாலையில் இணையப் பிரிவுக்கான சுஜாதா விருதினை சுஜாதா ரங்கராஜன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கைகளிலிருந்து பெற்றுக் கொண்டேன். உயிர்மை போன்ற ஓர் ஆதென்டிக் இலக்கிய இயக்கம் அளிக்கும் அங்கீகாரம் என்பதன் முக்கியத்துவம் தாண்டி தனிப்பட்டு இது எனக்கு மனதுக்கு மிக நெருக்கமானதொரு நிகழ்வு.
காரணம் சுஜாதா! அவரது பெயரிலான விருது இது என்பது எனக்கு உவகையூட்டும் ஒன்று. அவரே அங்கீகரித்தது போல்.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை தான் நான் படித்த சுஜாதாவின் முதல் படைப்பு. குமுதம் இதழில் தொடராக வந்தது. அப்போது பலரையும் போல் அவரை ஒரு பெண் என்று தான் எண்ணியிருந்தேன். பின் குமுதத்தில் வெளியான ஒரு துணுக்கு மூலம் அவர் தன் மனைவியின் பேரில் எழுதுகிறார் என்றறிந்தேன். பிறகு விகடன் பிரசுரம் வெளியிட்ட ஏன்? எதற்கு? எப்படி? - அதைக் குறைந்தது பத்து முறையேனும் வாசித்திருப்பேன். அப்போது(ம்) விஞ்ஞான விஷயங்களில் பெரும் ஈடுபாடு என்பதால் அது மிக ஈர்த்தது. பதின்மங்களின் துவக்கம் அது. மூளையெங்கும் சுஜாதா பற்றிக் கொண்டார்.
பிறகு அவரைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். அப்போது என் வாசிப்பு ராஜேஷ்குமார், சுபா, தேவிபாலா என்றிருந்தது. சுஜாதாவின் புனைவுலகில் நுழைந்த போது அது முற்றிலும் வேறு உயரம், வேறு ஜாதி எனப் புரிந்தது. கஞ்சா போல் போதை தலைக்கேறி - கஞ்சா அடித்ததில்லை; குத்துமதிப்பாகச் சொல்கிறேன் - அது என்னை ஆட்கொண்டது. நூலகம் போகும் பழக்கமெல்லாம் அப்போது இல்லை என்பதாலும் என்னைச் சுற்றி வாசிப்புப் பழக்கமுடையோர் எவருமில்லை என்பதாலும் சுஜாதாவின் நூல்களைக் காசு கொடுத்து வாங்கத் தொடங்கினேன் - அதுவும் வீடறியாது திருட்டுத்தனமாய்.
அவ்வயதில் வீட்டில் பள்ளிக்குப் போய் வர பேருந்து போக்குவரத்துக்குத் தரும் காசில் மிச்சம் பிடித்து சுஜாதா நூல்களை வாங்கத் தொடங்கினேன். என்னிடம் இருக்கும் அவர் நூல்களில் பெரும்பான்மை இன்று கிடைக்கும் உயிர்மை அல்லது கிழக்கின் பதிப்புகள் அல்ல; பழைய குமரி, விசா, திருமகள் நிலையப் பதிப்புகளே! பிற்பாடு கல்லூரி வந்த பிறகு ஒவ்வொரு சென்னைப் புத்தகக் காட்சியிலும் வாங்கும் நூல்களின் பட்டியலில் சுஜாதாவின் நூல்கள் ஏதேனும் தவறாது இடம் பெற்று விடும். அவர் மறைந்த பிறகும் கூட பல ஆண்டுகளுக்கு சம்பிரதாயத்துக்காக புத்தகக் காட்சியில் அவரது நூல் ஒன்றினை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தேன். வாழ்நாளில் நான் அதிகம் வாங்கியதும் வாசித்ததும் அவருடையவையே. நண்பர்களிடம் ஓசியில் வாசிக்கக் கொடுத்து இழந்த நூல்களைக் கழித்துப் பார்த்தால் என்னிடம் இன்று கிட்டத்தட்ட 99% சுஜாதாவின் நூல்கள் உண்டு. யோசித்துப் பார்த்தால் காதலை விடவும், நட்புக்களை விடவும், உறவுகளை விடவும், வேறெவற்றை விடவும் எனக்கு மிகச் சந்தோஷமான பொழுதுகளை அவரது புத்தகங்களின் வாசிப்பே அளித்திருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பில் ஒருமுறை எங்கள் ஆங்கில ஆசிரியர் "Who is your role-model?" என்ற தலைப்பில் எல்லோரையும் கட்டுரை எழுதி வரச் சொன்ன போது நான் சுஜாதாவைப் பற்றித் தான் எழுதினேன். அவர் பொறியியல் துறை, எழுத்துத் துறை இரண்டிலும் சாதித்ததைப் போல் செய்ய விரும்புகிறேன் என விவரித்திருந்தேன். அந்தளவு ஆதர்சமாக இருந்தார்.
பள்ளி, கல்லூரிக் காலங்களில் ஈரோட்டில் நாங்கள் வசித்த அரசு அலுவலர் குடியிருப்பில் என் அறையில் மாட்டியிருந்த ஒரே படம் சுஜாதாவுடையது. (தற்போது பெங்களூரு வீட்டில் என் வாசிப்பறையில் இருக்கும் 3 எழுத்தாளர் படங்களுள் ஒன்று சுஜாதாவுடையது.) 2002ல் தீராநதி இதழில் வெளியான நேர்காணலில் இடம்பெற்ற அவரது முழுப்பக்க வண்ணப் புகைப்படத்தை என் கைப்பட ஃப்ரேம் செய்திருந்தேன். இன்றும் அந்தப் புகைப்படம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
கல்லூரிக் காலத்தில் சுஜாதாவுக்கென ஓர் ஆர்குட் கம்யூனிட்டி வைத்திருந்தேன். 2,000 பேருக்கு மேல் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஓரளவு விவாதங்களுடன் உற்சாகமாகவே செயல்பட்டது அந்தக் குழுமம். அக்காலத்தில் அந்த வாரக் குமுதம், விகடன், குங்குமம் வாங்குவதா வேண்டாமா என்பதை சுஜாதா அவ்விதழில் எழுதியிருக்கிறாரா இல்லையா என்பது பொறுத்தே தீர்மானமாகும். செல்ஃபோன் வால்பேப்பராய் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு அவர் பெயர் சொல்லாமல் எந்தத் தினமும் கழிந்ததில்லை என்று சொல்லுமளவு என் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தார்.
ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலும் என் நடையில் சுஜாதாவின் தாக்கம் இருந்தே வருகிறது. (அதன் வலு குறைந்து வருகிறதே தவிர முழுக்க விலகுவதாய் இல்லை.) அக்காலத்தே "கட்டைவிரல் கேட்காத துரோணர்" என்றெல்லாம் அவர் பற்றிக் கவிதை எழுதி இருக்கிறேன். பிரசுரமான என் முதல் சிறுகதையில் (E=mc2) சுஜாதா தான் பிரதானப் பாத்திரம். பிரசுரமான என் முதல் கவிதையின் தலைப்பு அவரது நாவலின் பெயர் தான் (ஒருத்தி நினைக்கையிலே...). என் முதல் நூலான சந்திரயானை அவருக்கே சமர்ப்பித்திருந்தேன். (ஆனால் எடிட்டிங்கில் சமர்ப்பணப் பக்கம் இழந்தது அந்நூல்.) சுஜாதா அப்துல் கலாமுடன் இணைந்து எழுத விரும்பிய இந்திய ராக்கெட் இயல் பற்றிய நூலைத் தொடராக எழுதினேன் (ஆகாயம் கனவு அப்துல் கலாம்). இவை எல்லாம் போக, என் சிறுகதைகளில் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்.
சுஜாதாவை நிராகரிக்கும் ஆச்சார இலக்கியவாதிகளுக்கு பதிலுரைக்கும் முகமாக புனைவு, அபுனைவு, நாடகம், சினிமா என அவரது பரந்துபட்ட பங்களிப்பை முன்வைத்து சுஜாதா படைப்புலகம் எனும் நூலை எழுதும் எண்ணமுண்டு. சுஜாதாலஜி!
நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். (அது போக தள்ளி நின்று மூன்று முறை பார்த்திருக்கிறேன்.) 2002ம் ஆண்டு என்று நினைவு. எம்ஐடியில் படித்தவர் என்ற அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சந்திப்புக்கு (Alumni Meet) எங்கள் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வந்திருந்தார். விவேகானந்தா அரங்கில் அந்நிகழ்வு நடந்தது. அவர் வரப் போகிறார் என்றதும் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நிகழ்ச்சிக்கு வருகையில் அவரைச் சந்தித்துக் கொடுக்க வேண்டும் என்பது திட்டம். "காட்ஃபாதர் சுஜாதா அவர்களுக்கு" என்பது அதன் தலைப்பு. உள்ளடக்கம் முழுக்க நினைவில்லை. அவரது வாசக வெறியன் என்பதையும் அவரோடு தொடர்பிலிருக்க விரும்புகிறேன் என்பதையும் சொல்லி இருந்தேன் என ஞாபகம். பல முறை எழுதி ஒத்திகை பார்த்த பின் இறுதிப் படி எடுத்தேன். அவர் வருவதற்கு முந்தைய இரவு தூக்கமே இல்லை. காதலைச் சொல்லக் காத்திருக்கும் ஓர் இளைஞன் போலத் தான் உணர்ந்தேன்.
அன்று விழாவிற்கு அவருக்குப் பிடித்த நீல நிலச் சட்டை ஒன்றை அணிந்து போனேன். விழாவில் பெரும் கூட்டம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எளிதாக அரங்கின் முதல் வரிசை இருக்கையில் நான் உட்கார்ந்து கொண்டேன்.
அது தான் நான் அவரை முதன் முதலில் பார்ப்பது. அவர் அப்போதே வயோதிகத்தின் முனையில் தான் இருந்தார். மிக மெல்லிய தேகம். மிக மெல்லமான நடை. அவர் எழுத்து அளித்த பிம்பத்தை அது அன்று என் மனதில் கீறிப் பார்க்கவே செய்தது. மேடையேறி, மைக் பிடித்து அவர் முதலில் கேட்டது "Anyone disagrees if I talk in Tamil? Everybody understands Tamil here, right?" (சுஜாதா ஆங்கிலத்திலும் விற்பன்னர் என்பதை நினைவிற் கொள்க). கூட்டம் உற்சாகமாய் ஆமோதித்தது. தமிழில் பேசத் தொடங்கினார். நொபேல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் வந்து பேசியுள்ள அவ்வரங்கின் மொத்த வரலாற்றில் ஒருவர் மேடையேறித் தமிழில் பேசியது அதுவே முதலாவதாக (கடைசியானதாகவும்) இருக்கும் என நினைக்கிறேன்.
தன் இளமை மற்றும் கல்லூரி அனுபவங்கள் குறித்துப் பேசினார் என நினைவு. யாரோ ஒருவர் சிபாரிசு செய்தால் கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று இருந்ததாகவும் ஆனால் அவரது தந்தை அதை மறுத்து விட்டு, இரண்டாவது வாய்ப்பாக இருந்த எம்ஐடியில் சேர்த்ததாகவும் குறிப்பிட்டார். தான் படிக்க விரும்பிய கல்லூரி இது என்று அவர் சொன்ன போது பலத்த கைதட்டல். விழா முடிந்து கணிசமானோர் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். (யாரோ ஒருவர் கையெழுத்துக்கு 8085 மைக்ரோப்ராசஸர் புத்தகத்தை நீட்ட, இதெல்லாம் இன்னுமா சிலபஸில் இருக்கிறது எனக் கேட்டார்!)
அவர் கிளம்பும் முன் நான் போய் தயக்கத்துடனும் வெட்கத்துடனும் கடிதத்தை நீட்டி வீட்டுக்குப் போய் படித்துப் பார்த்து விட்டு பதில் சொல்லுமாறு சொன்னேன் (அது செல்பேசிகள் இல்லாத / பரவிடாத காலம் என்பதால் கடித்ததில் என் மின்னஞ்சல் முகவரியையும் விடுதி அறை முகவரியையும் எழுதி இருந்தேன்). அவர் அங்கேயே அதைப் படித்து விட்டுச் சொல்வதாகக் கூறிக் கடிதத்தைப் பிரித்தார். முதலில் அதில் மேலோட்டமாய்ப் பார்வையை ஓட்டி விட்டுச் சொன்னார் -
"முதலில் ஒரு விஷயம். கையெழுத்து ரொம்ப அழகா இருக்கு."
புன்னகைத்தேன்.
"சினிமாவுல ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா? பேர் பார்த்தா சரவண சுப்பையா மாதிரி இருக்கு."
"இல்ல. இது என் நிஜப் பேர்."
பிறகு கடிதத்தை முழுக்கப் படித்தார்.
"என் கிட்ட என்ன மாதிரி ஃப்ரெண்ட்ஷிப் வேணும்?"
அக்கேள்வி நான் எதிர்பாராதது. யோசித்துச் சொன்னேன்.
"எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ற ஒரு இண்டலெக்சுவல் கம்பேனியன்ஷிப்."
"அப்படின்னா என் வீடு எப்பவும் உனக்குத் திறந்தே இருக்கும்."
பின் என் கடிதத்தை மடித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். (அவர் ஒருவேளை அதைப் பத்திரப்படுத்தி இருந்தால் இப்போதும் அவர் வீட்டில் எங்கேனும் அது இருக்கக்கூடும்.) பிறகு தன் வீட்டின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து,
"அழைக்கும் போது கிண்டி காலேஜ் சரவணன்னு சொல்லு. அப்போ தான் எனக்கு நினைவுபடுத்திக்க முடியும்." என்றார்.
பிறகு நான் அவருக்குத் தொலைபேசவே இல்லை. அதற்குக் காரணம் இருந்தது. எங்கள் உரையாடலிலிருந்து அவர் என்னைத் தன்னிடம் சினிமாவுக்கு வாய்ப்புக் கேட்க வந்தவனாகக் கருதி விட்டாரோ எனத் தோன்றியது. அது எனக்கு வருத்தமளித்தது. அதனால் எழுத்துலகில் எனக்கென ஓர் அடையாளம் கிடைத்த பிறகு தான் அவரைத் தொடர்பு கொள்வது எனத் தீர்மானித்துக் கொண்டேன். அவர் மீதான என் பிரியத்தைத் துல்லியமாக அறிந்த (அப்போது காதலியாக இருந்த) என் மனைவி அவரிடம் பேசச் சொல்லி எத்தனையோ முறை வலியுறுத்தி இருக்கிறாள். அதைப் பொருட்படுத்தவே இல்லை.
அதனால் தான் பிற்பாடு மூன்று முறை அவரைப் பார்த்த போதும் அவரை நெருங்க முனையவில்லை. ஒருமுறை மீண்டும் கல்லூரிக்கு வந்திருந்தார். எங்கள் கணிப்பொறியியல் துறைக்கு ஒரு சொசைட்டி இருந்தது, அதற்கான வலைதளத்தைத் துவக்கி வைக்க மீண்டும் அதே விவேகானந்தா அரங்கம் வந்திருந்தார். (விஸ்டோஸைத் தூக்கிப் போட்டு விட்டு லினக்ஸ் உள்ளிட்ட ஓப்பன் சோர்ஸுக்கு மாறுங்கள் என்று அன்று சற்று அழுத்தமாகவே பேசினார். இந்தியப் பொருளாதாரத்துக்கு ஓப்பன் சோர்ஸே பொருத்தமானது என அவர் நம்பி இருந்தார்.) அடுத்தது உயிர்மை பதிப்பகம் நடத்திய அவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஒன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க அரங்கில் நடந்தது. கடைசியாய் ஏதோ ஒரு மாலைப் பொழுதில் பேருந்திலிருந்தபடி மெரினாவில் அவர் நடைப் பயிற்சியில் இருந்த போது கண்டேன். அவ்வளவு தான்.
பிறகு என் திருமணத்துக்காக பனையோலையில் பழஞ்சுவடி மாதிரி அழைப்பிதழ் அடித்த போது அதை அவருக்கு அனுப்பி வைக்க விரும்பினேன். இணையத்தில் அவரது முகவரி தேடி எடுத்து அனுப்பும் வேலையில் இருந்த போது தான் அவரது மரணம் சம்பவித்தது. அப்போது திருமண இக்கட்டில் இருந்ததால் இறுதி அஞ்சலி செலுத்தக்கூடப் போக முடியவில்லை. அவர் மரித்த பத்து நாளில் என் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு நாங்கள் முதலில் சேர்ந்து பார்க்கும் படமாக சுஜாதா பணியாற்றிய தசாவதாரத்தைத் தேர்ந்தோம். எந்தப் படமும் பாராது சில மாதங்கள் காத்திருந்து அதைக் கண்டோம்.
அவரைப் போல் பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டே எழுத்துத் துறையிலும் ஜ்வலிக்க விரும்பினேன். அப்படித் தான் செய்து கொண்டிருக்கிறேன். அவரைப் போல் ஆண்டு தோறும் தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகள் அளிக்க விரும்பினேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். அவரைப் போல் பெங்களூரில் வேலை செய்ய விரும்பினேன். செய்கிறேன். அவரைப் போல் இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பினேன். பெற்றேன்.
அவரே பேசச் சொல்லியும் கடைசி வரைக்கும் அவரைத் தொடர்பு கொள்ளாதது ஒரு குற்றவுணர்வாகவே தேங்கி விட்டது. துரோணர் கட்டை விரலைத் தட்சணையாய்க் கேட்டது கணக்காய் அது அவ்வப்போது மனதை அழுத்தியபடி தானிருந்தது.
நேற்றைய விருது விழாவில் கூட என் மனைவி திருமதி சுஜாதாவிடம் 'கிண்டி காலேஜ் சரவணன்' பற்றி ஏதேனும் சுஜாதா அவரிடம் சொல்லி இருக்கிறாரா எனக் கேட்கப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் தான் அதட்டி வைத்தேன். சுருக்கமான சந்திப்பு. சுவாரஸ்யமற்ற உரையாடல். வழக்கமான, தயக்கமான ஓர் இளைஞனாகவே அவர் நினைவில் விழுந்து, வேகமாய் அழிந்தும் போயிருப்பேன். அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் மனோபலம் இல்லை எனக்கு.
அவர் இன்று வரை உயிருடன் இருந்திருந்தால் அவரைத் தொடர்பு கொண்டிருப்பேனா என யோசிக்கிறேன். ஆம் எனில் எப்போது? வைரமுத்து என் படைப்பை முத்திரைக் கவிதை எனத் தேர்ந்தெடுத்த போதா? சந்திரயான் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது பெற்ற போதா? சாரு நிவேதிதா என் முதல் கவிதைத் தொகுப்பான பரத்தை கூற்றை வெளியிட்ட போதா? இந்திய ராக்கெட் இயல் பற்றி குங்குமம் இதழில் தொடர் எழுதிய போதா? இவற்றின் போதெல்லாம் இல்லை என்றாலும் இறுதி இரவு சிறுகதைத் தொகுதி வெளியான போது அவரைத் தொடர்பு கொண்டிருப்பேன் என்றெண்ணுகிறேன். அவ்வகையில் காலரீதியாக அதையொட்டிக் கிட்டிய இந்த விருதை சுஜாதாவின் சூட்சமரூப ஆசியாகவே கொள்கிறேன்.
நேற்று விருது வாங்குகையில் சுஜாதா என் பெருவிரலை என்னையே வைத்துக் கொள்ளச் சொல்லியதாகத் தோன்றியது.
*
Comments
தின்க் அலைக்ஸ் வேவ்லெங்த் என்று ஒரு விஷயம் உண்டு.. சுஜாதா நம் பெரும்பாலோருக்கு அப்படித்தான்.. இப்பிணைப்பை உங்களிடமும் உணர முடிகிறது.. நீங்கள் இந்த அளவு கொண்டாடியிருப்பது இன்னும் என்னுள் இருக்கும் சுஜாதா பிம்பத்தைப் பெரிதாக்குகிறது.. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் கூட ஆகவில்லையே என கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது..