நெஞ்சிலேற்றிப் போற்றுகின்றேன்
நேற்றைய நாமக்கல் தமிழிசைக் கச்சேரியில் பெருமாள்முருகன் இயற்றிய பஞ்சபூதக் கீர்த்தனைகள் புத்தகமும், தமிழ் மின்னிதழின் இளவேனில் 2017 டீஸரும் வெளியிடப்பட்டன. பஞ்சபூதக் கீர்த்தனைகள் 20 பக்கம் கொண்ட சிறுநூல். விலை ரூ.10. காலச்சுவடு வெளியீடு. பெருமாள்முருகன் எழுதிய 10 கீர்த்தனைகளையும் 4 விருத்தங்களையும் உள்ளடக்கியது. அதிலிருந்து ஏழெட்டு கீர்த்தனைகளையும் இரண்டு விருத்தங்களையும் டிஎம் கிருஷ்ணா நேற்று மேடையில் பாடினார்.
நிகழ்ச்சியில் நான் கவனித்த பகுதிகள் பற்றி மட்டும் என் அபிப்பிராயத்தை எழுத வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இன்று ஷ்ருதி டிவி நிகழ்ச்சியின் மொத்த வீடியோவையும் யூட்யூபில் ஏற்றி விட்டார்கள். அதனால் ரசிகர்கள் நேரடியாய் தமக்கான இசையனுபவத்தைப் பெறலாம். கர்நாடக சங்கீதம் பற்றிய என் பாமரக் கருத்து அவசியமில்லை.
பொதுவான சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன். பக்தி தாண்டிய, வட்டார மொழி தாங்கிய கீர்த்தனைகளும் தியாகராஜ கீர்த்தனைகளோடு ஒரே மேடையில் பாடப் பெற வேண்டும் என்பதே தன் கருத்து என டிஎம் கிருஷ்ணா தன் உரையில் குறிப்பிட்டார். அவர் பாரம்பரியத்தை விலக்கவில்லை; புதுமை மட்டும் போதும் எனச் சொல்லவில்லை. அது முக்கியமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது. அப்படியான புதிய கீர்த்தனைகளுக்கான ஓர் ஆரம்பமாகவே நேற்றைய கச்சேரி அமைந்தது. (டிஎம் கிருஷ்ணா ஏற்கனவே பெருமாள்முருகன் எழுதிய 3-4 விருத்தங்களை சில மேடைகளில் பாடி இருக்கிறார் - அவை யாவும் மாதொருபாகனே என்று முடிபவை. உதாரணம்: முடியாத துயரில், தப்பென்ன செய்தேன்.)
என் மனைவி சிறுவயதில் கொஞ்சமாகக் கர்நாடக இசை பயின்றவள். அதன் பக்கவிளைவாய் எங்கள் மகன் ஞானி கர்நாடக இசை கற்க வேண்டும் என்ற ஆசையில் அவனை வகுப்புக்கு அழைத்துச் சென்று வருகிறாள். ராகங்களின் பெயர்களில் சில அழகான பெண்களைத் தெரியும் என்பது தாண்டி எனக்கு இந்திய சாஸ்திரிய இசையில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை.
ஈராண்டுகள் முன் தமிழ் மின்னிதழ் நேர்காணலுக்காக யுவன் சந்திரசேகருடன் பேசிய பிறகு கிட்டிய உந்துதலில் தான் இந்திய சாஸ்திரிய சங்கீதம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணமே வந்தது. 2015ம் ஆண்டில் ஒரு முயற்சியாய் முதலில் கர்நாடக சங்கீதத்தில் தொடங்கலாம் என நினைத்து ரஞ்சனி - காயத்ரி கச்சேரி ஒன்றுக்கும், சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி ஒன்றுக்கும் போய் வந்தேன். சஞ்சய் கச்சேரி பிடித்தது. அவரிடம் ஒரு மயக்கம் இயல்பாகவே வருகிறது. அதற்கு அவரது புற ஆகிருதியும் ஒரு காரணமாய் இருக்குமோ எனத் தோன்றுகிறது. ரஞ்சனி - காயத்ரியின் ஒருங்கிணைப்பு (co-ordination) வசீகரமாய் இருந்தது என்று மட்டும் சொல்ல முடிகிறது. ஆனால் பொதுவாகவே என்னால் கர்நாடக இசையினுள் ஆழ்ந்து உட்புக முடியவில்லை. இளையராஜாவைத் தோய்ந்து கேட்பது போல் இதனுள் செல்ல முடியவில்லை. இசை நுட்பங்கள் தெரியாது என்பதை இதற்குக் காரணமாக ஏற்க முடியவில்லை. சினிமா இசை நுட்பமும் எனக்கு ஏதும் தெரியாதே?
பொதுவாக கச்கேரிக்கு வந்தவர்கள் பாடுகையில் obviously / explicitly சிரமமான பகுதிகளில் - உதாரணமாய் மூச்சு விடாமல் பாடும் நீண்ட ஆலாபனை, எதிர்பாராத ஏற்ற இறக்கங்கள், குரலில் பரிசோதனை முயற்சி போன்றவை, கருவியும் குரலும் நிகழ்த்தும் சில விளையாட்டுக்கள் - கைதட்டுகிறார்கள். ஆனால் அது தான் இசையில் பிரதானமா என்ன? அவை சிக்கலான, பயிற்சி தேவைப்படும் இடங்கள் என எனக்கே புரிகிறதே! சினிமா இசையில் நான் மிக மிக ரசிக்கும் இடங்கள் அவை சிரமமான வித்தை என்பதால் அல்ல. அவை என்னை அந்த உணர்வோடு பிணைக்கும் இடங்கள். அது போல் என்னால் கர்நாடக இசையில் இடங்களைக் கண்டறியவில்லை. முதலில் கச்சேரியில் அதைத் தேடுவதே வினோதமாய்ப் படுகிறது!
அப்போது யுவனுக்கு எழுதிய மின்னஞ்சலில் "இசை என்பது தனிமையில் கேட்டு அனுபவிக்கும் விஷயம்! முற்காலத்தில் அதற்கு வசதி இல்லை என்பதால் கச்சேரி என்னும் வடிவம் உருவெடுத்தது. இன்று அதன் அவசியம் பற்றிய குழப்பங்கள் இருக்கின்றன." என்று குறிப்பிட்டிருந்தேன். அது இப்போதும் நீடிக்கிறது. சில சமயம் கச்சேரியில் புலனுணர்வு தாண்டிய கூட்டு ரசிப்புத்தன்மை ஒன்று உருப்பெற்று, ஒரு பொது அனுபவத்தை அளிப்பதாகவும் தோன்றுகிறது - ரஜினி படத்தை நண்பர்களோடு முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல். இது தான் 'கர்நாடக இசையும் நானும்' முன்கதைச் சுருக்கம்.
எனக்கு கச்சேரியில் குறிப்பாய் ஒரு கீர்த்தனையும் ஒரு விருத்தமும் பிடித்தன. மேட்டாங்காடு என்ற கீர்த்தனையில் ஒரு நாட்டுப்புறப் பாடலும் கர்நாடக இசையும் இணையும் அற்புதம் நிகழ்ந்தது. இரு வகை இசைகள் இணைவதை Fusion எனக் குறிப்பார்கள். ஒரு வகை வரியும் மற்றொரு வகை இசையும் கலப்பதை அப்படிச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இதே போல் முன்பு பொறம்போக்கு என்று ஒரு பாடல் பாடி இருக்கிறார் டிஎம் கிருஷ்ணா. எனக்கு மிகப் பிடித்த அப்பாடலை இந்தப் பாடல் நினைவுபடுத்தியது. இன்றைய தமிழக விவசாயிகள் துயரை ஒரு கர்நாடக இசைக் கச்சேரி பிரதிபலிக்க முடியும் என்று நாம் கனவிலும் யோசித்திருப்போமா! டிஎம் கிருஷ்ணாவும் பெருமாள்முருகனும் சாதித்திருக்கிறார்கள்.
மேட்டுக்குடியின் இசை மேட்டாங்காட்டைப் பாடும் இணைவு. அந்தக் கீர்த்தனையின் சரணத்தை உதாரணம் தருகிறேன்.
வேலியெல்லாம் கருகிருச்சு - அதுமேல
ஓடிக் கிடந்த கொடிகளுமே சருகாச்சு
வேலிக்கொடி மேலெ தலதூக்கி ஆளப் பாக்கும்
ஒடக்காங்கூடச் செத்திருச்சு
மழ வருமா மண்மணம் தருமா
அடுத்தது தாயுமில்லை தந்தையில்லை என்று தொடங்கும் விருத்தம். தனக்கு யாருமில்லை என்றாகிவிட்டது நீயும் இல்லையா என மாதொருபாகனிடம் முறையிடும் பாடல். (பெருமாள்முருகன் ஒதுங்கி இருந்த போது எழுதியது.)
தாயுமில்லை தந்தையில்லை தோள்தந்து நிற்கும்
தமையனும் இல்லை தாங்கிட வளர்ந்த
சேயுமில்லை கண்ணீர் துடைக்கக் கரம்தரும்
சொந்தமில்லை பலம்கொண்டு பற்றும் நட்புத்
தீயுமில்லை ஆதரவு காட்டி அணைத்திடத்
தகுமோர் ஆளுமில்லை இந்நிலையில் எனக்கு
நீயுமில்லை என்றாற்பின் நானேது செய்வேன்
நானெங்கு செல்வேன் மாதொரு பாகனே.
இதைப் பாடும் போது டிஎம் கிருஷ்ணாவின் குரலில், பாவத்தில் "எனக்கு யாருமில்லை" என்ற கையறு நிலையைச் சொல்லி சுயபச்சாதாபத்தில் அரற்றும் தொனி வந்து உட்கார்ந்து கொண்டது. அதை உண்மையிலேயே வியக்க வேண்டி இருக்கிறது. இசை ஒரு mood-ஐத் துல்லியமாய் உணர்த்துவதை இளையராஜாவின் சில பின்னணி இசைகளில் தான் கண்டிருக்கிறேன். அதையே ஒரு கர்நாடக இசையில் உணர்ந்து போது சில முன்முடிவுகள் உடைபட்டதில் சற்று jerk-ஆகித் தான் போனேன்.
இதழ் டீஸர் வெளியீட்டின் பொருட்டு இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சையிலிருந்து வந்திருந்த நண்பன் இரா.இராஜராஜன் கச்சேரி மொக்கை போட்டால் இடையில் கிளம்பி விடுவேன் எனச் சொல்லித்தான் வந்திருந்தான். ஆனால் அவன் இடையில் எப்போதும் கிளம்ப எத்தனிக்கவில்லை என்பது தாண்டி நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெருங்கலைஞனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி டிஎம் கிருஷ்ணாவுடன் படமெடுத்துக் கொண்டான். பெருமாள்முருகன் கீர்த்தனை ஒன்றுக்கு (நெஞ்சமே-2) மெட்டமைத்த சங்கீதா சிவகுமாரிடம் கர்நாடக சங்கீதத்தில் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடுவதன் வரலாறு குறித்து ஆர்வமாய்க் கேட்டறிந்து கொண்டான். இதைக் கச்சேரியின் வெற்றியாகவே பார்க்கிறேன்.
என் போல், என் நண்பன் போல் ஏளாரமான கர்நாடக இசை agnostic ஆட்களை உள்ளே இழுக்க இந்த கலப்பு முயற்சி உதவும் என நம்புகிறேன். கலையில் சமூகப் பொறுப்பு என்ற வகையில் இம்மாதிரி முயற்சிகளின் முக்கியத்துவம் அளப்பரியது.
டிஎம் கிருஷ்ணாவை கர்நாடக இசைப் பாடகர் என்பது தாண்டி சமூகச் செயற்பாட்டாளராகவும் பார்க்கிறேன். அவர் நடப்பு ஆட்சியின் சகிப்பின்மை பற்றிக் கண்டித்ததெல்லாம் முக்கியமான விஷயம். கர்நாடக சங்கீதத்தை பிராமண சாதிக்கானது அல்லது மேட்டுக்குடிக்கானது என்ற பிம்பத்தை உடைத்து அதை எல்லோரும் கேட்க வேண்டும், கற்க வேண்டும் என்று முயற்சிகள் செய்து வருவது தலித் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு ஒப்பான பங்களிப்பு என்றே கருதுகிறேன்.
அவர் மாதிரி இடத்தில் இருந்து கொண்டு ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் மிக அரிது. கிடைக்க வேண்டிய பத்ம விருதுகளோ, அரச பதவிகளோ, பிற சலுகைகளோ தடைபடும். அவ்வகையில் தைரியமான, தெளிவான பார்வையை முன்வைக்கும் அவரது கட்டுரைகள் கொண்டாடப்பட வேண்டியவை. மகசேசே போன்ற விருதுக்கு அவர் தகுதியானவரே.
அதைப் பற்றி ஜெயமோகன் சில மாதங்கள் முன் டிஎம் கிருஷ்ணா களப்பணி ஆற்றவில்லை என்றும் அவரது முயற்சிகள் மேம்போக்கானவை என்றும் குறைத்து எழுதியிருந்தார். நான் அப்படிக் கருதவில்லை. அவர் தன் துறையில் சாதியத்தை எதிர்க்கிறார். அவர் பொதுவாய் பெரியார் போல் சமூகக் களப்பணியில் இறங்கி இதைச் செய்யவில்லை; ஒரு கலைஞனாய் தன் துறையில் இருக்கும் சாதியக் கசடுகளை மட்டும் களைய நினைக்கிறார். அது நியாயமானதும், அவசியமானதும் தான்!
சாதியத்தை எதிர்க்க வேண்டுமெனில் கலப்பு மணம் செய்து வை, தெருவில் இறங்கிப் போராடு, அது தான் உண்மையான சாதி எதிர்ப்பு என்று நாம் சொல்வது எப்படிச் சரியாகும்? எல்லோரும் ஒரே முறையிலே போராடுவது சாத்தியமில்லை, அது அவரவர் தேர்வு. இங்கு முக்கியமானவை அவரது நோக்கு மற்றும் ஓர் எல்லைக்குட்பட்ட அப்போரட்டத்தின் விளைவு.
கர்நாடக சங்கீதம் பிராமணர்களுக்கு மட்டுமே கைவரும் என்ற பொதுப்புத்தி நம்பிக்கையை உடைத்து எவரும் கற்கலாம் என்று சொல்கிறார் டிஎம் கிருஷ்ணா. அதற்கு இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும்: 1) பிராமணர் தவிர்த்த பிறர் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க வேண்டும், பின் ஆர்வமாய்க் கற்க வேண்டும். 2) நல்ல வித்வான்கள் பிராமணர் தவிர்த்த மற்றவர்கட்கு கர்நாடக இசையைப் பயிற்றுவிக்க வேண்டும். இவற்றைத் தான் அவர் செய்கிறார். இது பொதுவாய் பிராமணர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மற்றவர்களும் விமர்சிப்பது தான் ஆச்சரியம்!
தலித்கள் கர்நாடக இசையைக் கற்கச் சொல்வது மேலும் அதன் புனித பிம்பத்தை உறுதி செய்வதாகவே ஆகும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. அப்படி இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் ஏட்டுக்கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என நம்பப்பட்டது. பின் மற்ற சாதியினருக்கும் (கடைசியாய் தலித்களுக்கும்) வந்து சேர்ந்தது. அதைப் போலத் தான் இதுவும். மற்ற சாதிக்காரர்களுக்குப் பூணூல் போட்டு விடுவதையும் இசை சொல்லித் தருவதையும் ஒன்றாக்க முடியாது.
கபாலி கோட் போடுவதும், தலித்கள் கர்நாடக இசை கற்பதும் ஒன்று தான். அதை முன்னெடுக்கும் டிஎம் கிருஷ்ணாவின் பணி மரியாதைக்குரியதே. அப்படிப்பட்டவரின் சமூகப் பங்களிப்பின் இன்னொரு பரிமாணமே தமிழ்க் கீர்த்தனைகள்.
*
கச்சேரி பற்றிச் சொல்லி டிஎம் கிருஷ்ணாவைக் கொண்டு இதழை வெளியிடலாம் என பெருமாள்முருகன் யோசனை சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் குறுகிய இடைவெளியில் முழு இதழும் தயாராகவில்லை. அதனால் பரவாயில்லை, பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம், கச்சேரிக்கு வாருங்கள் என்று பெருமாள்முருகன் அழைத்தார். நான் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் இதழுக்கான டீஸர் ஒன்றைத் தயாரித்து அந்நிகழ்வில் வெளியிடலாமா என்று கேட்டேன். அப்படித்தான் இது முடிவானது. அட்டைப்படம், பெருமாள்முருகன் நேர்காணலிலிருந்து சில பகுதிகள், மற்றவர்களின் படைப்புகளிலிருந்து சில வரிகள் ஆகிவற்றைக் கொண்ட 9 பக்க பிடிஎஃப் டீஸர் இது. எதை யார் எழுதி இருப்பார்கள் என யூகிக்க முயல்வது சுவாரஸ்ய விளையாட்டாக இருக்கும். அட்டைப்படம் என்ன என்பதையும்.
'முருகு' என்ற சொல்லின் மீது அப்படியென்ன பிரேமையோ பெருமாள்முருகனுக்கு, (மேட்டாங்காடு தவிர) எல்லாக் கீர்த்தனைகளின் 2ம் சரணத்திலும் அப்பதம் வந்து விடுகிறது! (தமிழ் நேர்காணலில் இச்சொல் பற்றிப் பேசி இருக்கிறார்.)
கச்சேரியில் எனக்கு இரு விஷயங்கள் உறுத்தின. ஒன்று குறிலை இசைக்கு ஏற்ப நெடிலாக உச்சரிப்பது (அயர்ச்சி தரினும் என்பது ஆயர்ச்சி தரினும் ஆனது). இன்னொன்று சந்தத்தை உத்தேசித்துச் சந்திகளை விட்டு விடுவது (பாளைகளைச் சீவி என்பது பாளைகளை சீவி ஆகி விட்டது). இது ஒருவகையில் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோரின் இசை பாடல் வரிகளை அமுக்கி விடுவதைப் போன்றது. கச்சேரி நெடுகவும் இதற்கான உதாரணங்கள் வந்தபடியே இருந்தது சங்கடமாக இருந்தது.
கச்சேரி முடிந்து பேசிக் கொண்டிருக்கையில் கமலா ராமசாமி அவர்கள் (சுந்தர ராமசாமியின் மனைவி) கிருஷ்ணாவிடமே இதைக் கேட்டார் (முதல் விஷயத்தை மட்டும்). அதற்கு அவரது விளக்கத்தின் சாராம்சம் இது (சொற்கள் என்னுடையவை): இது தெரிந்தே நடப்பது தான். இசைக்காகச் செய்வது. இதற்கு அனுமதி உண்டு. சில இடங்களில் குறிலைக் குறிலாகவே உச்சரித்தால் இசையோடு ஒன்றி வராமல் துருத்திக் கொண்டிருக்கும். ஆனால் நெடிலைக் குறிலை உச்சரிக்கக்கூடாது.
சென்னை அல்லாத ஓரிடத்தில் நடந்தேறிய ஒரு நிகழ்வுக்கு கமலா ராமசாமி, சுகுமாரன், ஸ்டாலின் ராஜாங்கம், பியூஷ் மனுஷ், காலச்சுவடு கண்ணன், இசை, க.மோகனரங்கன், மு.ஹரிகிருஷ்ணன், சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், ஜெ.பாலசுப்பிரமணியம் எனப் பல இலக்கியர்களும் வந்திருந்தது பெருமாள்முருகனைக் கௌரவிப்பதாக இருந்தது.
பாரதிக்குப் பின் ஒரு தமிழ் இலக்கியவாதி கர்நாடக இசைக்குக் கீர்த்தனைகள் எழுதிப் பங்களிப்பு செய்வது என்பது நூறாண்டுக்குப் பின் இப்போது தான் நிகழ்கிறது என நினைக்கிறேன். "இது ஆரம்பம் தான், தொடர வேண்டும்" என பெருமாள்முருகனுக்கு நிகழ்வில் அன்புக் கட்டளை இட்டார் டிஎம் கிருஷ்ணா. யாம் அதை வழிமொழிகிறோம்.
பஞ்சபூதத்தில் நிலம் பற்றிய பெருமாள்முருகன் கீர்த்தனையின் பல்லவியோடு முடித்தால் சரியாய் இருக்கும் -
நெஞ்சிலேற்றிப் போற்றுகின்றேன்
நெற்றிபட வணங்குகின்றேன்
*
Comments