ராஜேஷ் குமாரின் இடம்
எல்லோருக்கும் வாசிப்பு என்பது ராஜேஷ் குமார் வழியாகவே தொடங்கி பிறகு தான் சீரிய(ஸ்) இலக்கியத்தின் பக்கம் திரும்பி இருக்கும், ஆனால் அதை மறந்து விட்டு ஜெயமோகன் போன்ற மதவாதிகளுடன் ஒப்பிட்டு "சில அறிவுஜீவிகள்" அவரை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதாக என் பெயர் குறிப்பிடாமல் அன்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் சினந்தெழுதியுள்ளார். நான் ஒருபோதும் என் வாசிப்புப் பரிணாம வளர்ச்சியை மறைத்தவனில்லை. குமுதத்தில் வந்த காமிக்ஸ் பக்கங்களான ப்ளாண்டி, ஃப்ளாஷ் கார்டனில் தொடங்கி, நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (சிறுவர் மலர், தங்க மலர், லேசாய் சிறுவர் மணி), சிறுவர் இதழ்கள் (பூந்தளிர், அம்புலி மாமா), காமிக்ஸ் இதழ்கள் (ராணி காமிக்ஸ் அப்புறம் சில லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்), நாளிதழ்களின் பிற இணைப்புகள் (வார மலர், குடும்ப மலர், கொஞ்சம் தினமணிக் கதிர்), மாத நாவல்கள் (மாலைமதி, கண்மணி, ராணி முத்து), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி), லக்ஷ்மி + ரமணிச் சந்திரன், கல்கி + சாண்டில்யன், பாலகுமாரன் + சுஜாதா என்று தான் ஏழெட்டு வயது முதல் பதின்மங்கள் வரை என் வாசிப்பு உயர்ந்தது. பிறகு குமுதம் வெளிய...