அசோகமித்திரன் பிராமண வெறியரா?
அசோகமித்திரன் தமிழின் மிகச் சிறந்த நான்கைந்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. தமிழ் மின்னிதழின் 3ம் இதழை அவருக்குத் தான் சமர்ப்பித்திருந்தேன். (ஆனால் என் தனிப்பட்ட ரசனையில் சுந்தர ராமசாமியை அவருக்கு மேலாக வைத்திருக்கிறேன்.) அதனால் அவர் பிராமணர் என்பதாலேயே கொண்டாடப்படுகிறார் என்பது அயோக்கியத்தனமான வாதம். ஆனால் அதே சமயம் பிராமணர் என்பதாலேயே அவரைத் தூக்கிப் பிடிக்கும் சாதிய வாசகர்களும் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எப்படி சாதியை வைத்து அவரைத் தூற்றுபவர்கள் அவரை இழிவு செய்கிறார்களோ அதை விட ஒரு படி அதிகமாகவே இவர்கள் அவரைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். போயும் போயும் சாதியா அவரது இலக்கிய ஸ்தானத்தை தாழ்ச்சி / உயர்ச்சி எனத் தீர்மானிப்பது!
அடுத்த குற்றச்சாட்டு அவர் பிராமணர்களைப் பற்றியே எழுதினார் என்ற சித்தரிப்பது. நான் அவரை முழுக்க வாசித்தவன் அல்லன். ஆனால் வாசித்த வரை அவர் அப்படி எழுதியிருப்பது போல் தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும் ஒருவர் தீவிர இலக்கியம் மேற்கொள்கையில் தன் அனுபவத்திலிருந்து எழுதும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கணிசமான அளவில் எழுத நேர்ந்திருக்கலாம். அதற்கு அர்த்தம் அவர் பிராமணர்களை மட்டுமே எழுதினார் என்பதல்ல. அவர் மனிதர்களையே எழுதினார்; மானுடத்தையே எழுதினார்; வாழ்க்கையைத் தான் எழுதினார்.
ஆனால் அவர் மாபெரும் எழுத்தாளர் என்ற காரணத்தால் அவரது சில தடுமாற்றங்களை நாம் கண்டும் காணாமல் போக வேண்டும் என்பதில்லை. எழுத்தாளனின் எல்லா எழுத்துக்களையும் - அவனது பலவீனமான படைப்புகளையும் - அவனை எடை போட எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வகையில் கடைசி 10 - 12 ஆண்டுகளில் அவர் எழுதியவற்றில் நாம் சிலாகிக்க எவ்வளவு உள்ளது என்பது பரிசீலனைக்குரியதே. குறிப்பாக அவர் இந்தக் காலகட்டத்தில் எழுதிய சில சிறுகதைகளில் அவரது லேபிளைக் கிழித்து விட்டால் பிரசுரம் கண்டிருக்குமா என்பதே சந்தேகம் என்பேன். கல்கியில் அப்படியான ஒரு சிறுகதை வெளியாகி அதற்கு முதற்பரிசும் அளித்தார்கள். சுஜாதாவின் படைப்பூக்கத்தில் கூட கடைசி ஐந்தாண்டுகளில் இப்படியான ஒருவகை வீழ்ச்சி இருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். அப்படி நிகழ்வது இயல்பானதே.
அசோகமித்திரனின் அப்படியான ஒரு தடுமாற்றமாகவே அவரது 'We Are Like The Jews' என்ற அவுட்லுக் கட்டுரையைப் பார்க்கிறேன். அந்தத் தலைப்பிலிருந்தே அவரது தடுமாற்றம் தொடங்குகிறது என்பேன். அவரே தன்னை சாதிக்குழுவில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். சாதி இந்துவாய்ப் பிறந்த ஓர் எழுத்தாளன் தன்னை சாதியின் அங்கமாக அடையாளப்படுத்திக் கொள்வதை அவனது சமநிலையில் பின்னடைவாகவே பார்க்கிறேன். சுஜாதா தன் இறுதிக் காலத்தில் பிராமணர் சங்க நிகழ்வுகளில் பங்கெடுத்ததும், ஜெயகாந்தன் கடைசியில் ஹர ஹர சங்கர.. என்று காஞ்சி சங்கராச்சாரியை ஆதரித்து எழுதிய ஒரு சிறுநாவலையும் அப்படியான ஒரு வயோதிகத் தடுமாற்றம் என்றே எடுத்துக் கொள்கிறேன்.
அடுத்து அக்கட்டுரையின் உள்ளடக்கம். பத்ரி சேஷாத்ரி சில ஆண்டுகள் முன் இதே பொருளில், ஆதங்கத் தொனியில் ஒரு கட்டுரை எழுதியதை இத்தோடு இணைத்துப் பார்க்கலாம். அதை ஒரு மிகைப்படுத்தலாகவே பார்க்கிறேன். பிராமணர்கள் கேலிக்குள்ளாவதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்மையே. நேற்றுக் கூட நண்பர் ஒருவர் சில கல்விக்கூடங்களில் பிராமணர்களுக்கு வேண்டுமென்றே கடினமான கேள்விகளை ஆய்வுத் தேர்வுகளில் முன்வைப்பதாகத் தான் கேள்விப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். நிச்சயம் இவை யாவையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியே. மற்ற எந்த இனவாதச் செயல்களையும் போல் இதையும் நாம் எதிர்த்துக் களைய வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும் தமிழகத்தில் பிராமணர்களின் இடம் இரக்கத்துக்குரியது அல்ல.
(இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மொண்ணை வாதத்தை மட்டும் ஒருபோதும் ஏற்பதற்கில்லை. அவர்களின் அங்கலாய்ப்பு என்பதைத் தாண்டி அதில் பொருட்படுத்த ஏதுமில்லை. அவர்கள் தலித்களையோ பிற்படுத்தப்படுத்த சாதியினரையோ மணம் செய்து, அதே இட ஒதுக்கீட்டை தமது அடுத்து வரும் தலைமுறைக்குப் பெற்றுத் தர சட்டத்தில் தடையில்லை. ஆனால் அதை விட சாதித்தூய்மை முக்கியமல்லவா!)
ஆனால் அந்த பாதிப்புகளையும் யூதர்கள் சந்தித்த அவலங்களையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா? அவர்கள் படும் இன்னல்களும் தலித்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளும் ஒன்றா? எந்த பிராமணர் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றி இருக்கிறார்கள்? எங்கே பிராணமணன் தொட்டால் தீட்டு? எந்தக் காலத்தில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது?
இதை நீட்டித்தால் நாளை வந்தேறி மாடு மீம்ஸ் போடுகிறார்கள் என தேவர்களும் கவுண்டர்களும் தாங்கள் யூதர்கள் போல் நடத்தப்படுகிறோம் என்று சொன்னால் எப்படி நகைச்சுவையாகப் பார்க்கப்படும். அதே போல் தான் அசோகமித்திரன் கட்டுரையையும் மிகைப்படுத்தலாகப் பார்க்கிறேன். ஆனால் அவரது மானுடை அக்கறை அவரது மற்றைய படைப்புகளில் அழுந்த நிரூபிக்கப்பட்டு விட்டதால் இதை ஒரு வயோதிகத் தடுமாற்றம் மட்டுமே என்று கருதிக் கடப்பதில் தயக்கமில்லை. அதனாலேயே இன்றும் அவர் என் பெருமதிப்புக்குரியவர். (ஆனால் ஆச்சரியகரமாய் கடைசிப் பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நேர்காணல்களில் மட்டும் அவரது மனதின் முதிர்ச்சி அத்தனை தீர்க்கமாய் வெளிப்பட்டிருக்கிறது.)
தனிப்பட்ட முறையிலும் அவர் பிராமணர் என்ற காரணத்தால் வஞ்சிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. சாஹித்ய அகாதமி கிடைத்திருக்கிறது. (போகன் ஏதோ விருதில் அவர் பிராமணர் என்பதற்காக நிராகரிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். எதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை.) இலக்கியப் பங்களிப்பு அடிப்படையில் பொதுவாக எல்லா எழுத்தாளர்களுமே அவர் பற்றி நல்லவிதமாகவே எழுதி வந்திருக்கிறார்கள். மற்றபடி அவருக்கான உரிய மரியாதையை இந்த தேசமும் அரசும் அளிக்காமல் போனது பொதுவாக இந்திய / தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை உதாசீனம் செய்யும் தடித்தனம் தானேயன்றி அவர் பிராமணர் என்பதால் அல்ல என்பதே என் புரிதல். (இது தொடர்பாய் ஏதேனும் உட்தகவல்கள் இருந்தால் பகிரலாம்.)
அவருக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதுகையில் அவரது அத்தனை பிரம்மாண்டத்தையும் குறிப்பிட்டு விட்டு இந்தக் கீறலையும் குறிப்பிடுவதில் தவறில்லை. மரணமே ஒருவரைப் புனிதர் ஆக்கி விடாது. வாசகர்கள் அவரது பலம், பலவீனத்தை சீர்தூக்கிப் பார்க்க மரணம் ஒரு சந்தர்ப்பம். சிலர் மரணத்தின் போது ஏன் எதிர்மறைக் கருத்தைப் பேச வேண்டும் என்று நினைத்து நல்ல விஷயங்களை மட்டும் பேசுவதில் நியாயமுண்டு தான். ஆனால் அத்தருணத்தில் அவரது பலவீனங்களை மட்டும் எடுத்துப் பேசி அவற்றையே அவரது அடையாளமாக்க முனைவது பிழைச்செயல். அவ்வகையில் ஆதவன் தீட்சண்யா அந்தக் கட்டுரை மற்றும் அது சார்ந்த அசோகமித்திரனின் நிலைப்பாடுகளையுமே அவரது முகமாக்கி அஞ்சலி செலுத்தி இருப்பதை ரசிக்க முடியவில்லை. அதற்கான மறுப்பையும் எதிர்ப்பையும் நாம் பதிவு செய்ய வேண்டும்.
பெரியார் கிழ வயதில் ரெண்டாந்தாரம் கட்டிக் கொண்டார் என்று சொல்லி அவரை அவமதிப்பது போன்றது தான் இதுவும். இந்துத்துவர்கள் அம்பேத்கரின் சில வரிகளைப் பிடித்துக் கொண்டு அவர் இந்துத்துவர் என்று திரிப்பது போல் தான் இதுவும்.
*
Comments