அசோகமித்திரன் பிராமண வெறியரா?
அசோகமித்திரன் தமிழின் மிகச் சிறந்த நான்கைந்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. தமிழ் மின்னிதழின் 3ம் இதழை அவருக்குத் தான் சமர்ப்பித்திருந்தேன். (ஆனால் என் தனிப்பட்ட ரசனையில் சுந்தர ராமசாமியை அவருக்கு மேலாக வைத்திருக்கிறேன்.) அதனால் அவர் பிராமணர் என்பதாலேயே கொண்டாடப்படுகிறார் என்பது அயோக்கியத்தனமான வாதம். ஆனால் அதே சமயம் பிராமணர் என்பதாலேயே அவரைத் தூக்கிப் பிடிக்கும் சாதிய வாசகர்களும் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எப்படி சாதியை வைத்து அவரைத் தூற்றுபவர்கள் அவரை இழிவு செய்கிறார்களோ அதை விட ஒரு படி அதிகமாகவே இவர்கள் அவரைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். போயும் போயும் சாதியா அவரது இலக்கிய ஸ்தானத்தை தாழ்ச்சி / உயர்ச்சி எனத் தீர்மானிப்பது! அடுத்த குற்றச்சாட்டு அவர் பிராமணர்களைப் பற்றியே எழுதினார் என்ற சித்தரிப்பது. நான் அவரை முழுக்க வாசித்தவன் அல்லன். ஆனால் வாசித்த வரை அவர் அப்படி எழுதியிருப்பது போல் தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும் ஒருவர் தீவிர இலக்கியம் மேற்கொள்கையில் தன் அனுபவத்திலிருந்து எழுதும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர் தன்னைச...