500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும்.


1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.)

2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு ஒத்திப் போடுங்கள். செல்லுபடியாகக்கூடிய பணமானது உறுதியாய்க் கைகளுக்கு கிட்டிய பின் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். (கூலியாட்கள், பணியாளர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல‌. இங்கே அவர்கள் குடும்பங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நான் சொல்வது நம்முடைய‌ தனிப்பட்ட செலவுகள் பற்றி.)

4. கடைகளில் கூடுமானவரை டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துங்கள். அதற்கு எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை. நகரங்களில் கணிசமான இடங்களில் இந்த முறையிலேயே தப்பித்துக் கொள்ளலாம்.

5. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் அமேஸான் தளத்தில் பலசரக்கு முதல் ப்ளாட்டினம் வரை அனைத்தும் வாங்கலாம். பல வலைத் தளங்களில் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யலாம். மின்சார, தொலைபேசி, இணையச் சேவை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். ரயில், பேருந்துச் சீட்டுகள் இணையத்தில் முன்பதியலாம். சினிமா டிக்கெட்கள் வாங்கலாம். உணவுகள் கூட ஆர்டர் செய்யலாம்.

6. இயன்ற அளவு மாற்று பணங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் சுடக்ஸோ கூப்பன். அலுவலக உணவகங்களில் மட்டுமல்ல சூப்பர் மார்க்கெட்களில் அரிசி, பருப்பு வாங்கக் கூடப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. இன்னொரு மாற்றுப் பண வடிவம் எலக்ட்ரானிக் வேலட்கள். உதாரணமாய் ஆட்டோ பிடித்தால் கரன்ஸியில் தான் கட்டண‌ம் செலுத்த வேண்டும்.  டேக்ஸி எனில் ஓலா மணி, பேடியெம் என ஈ-வேலட்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

8. அடுத்த ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு 10, 20, 50, 100 ரூபாய்த் தாளைப் பயன்படுத்தும் போதும் அது அவசியம் தானா அல்லது வேறு மார்க்கமுண்டா என யோசியுங்கள். இன்று இவை சில்லறை நோட்டுகள். தீருகிற வேகம் தெரியாது.

9. வீட்டைத் துப்புரவாய்த் தேடி 10, 20, 50, 100 ரூபாய்த் தாள்களைச் சேகரியுங்கள். உண்டியல், புத்தகங்கள், பழைய பர்ஸ், மேசை இழுப்பறை, அஞ்சறைப் பெட்டி என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றைச் சேர்த்து எவ்வளவு கையிருப்பென கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப‌ ஒரு வாரச் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

10. பார்ட்டி, பிக்னிக், ரெசார்ட் உள்ளிட்ட படோடபச் செயல்களை அடுத்த சில பல‌ நாட்களுக்கேனும் தவிருங்கள். மூலச் செலவு போக‌ அங்கெல்லாம் சில்லறைச் செலவுகளில் கரன்ஸியைக் கொடுக்க நேரிடலாம். திட்டமிடவும் முடியாது.

11. ஆதார் அட்டை, பேன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்ட் போன்ற குடும்பத்தாருடைய அடையாள அட்டைகளைத் தேடித் தொகுத்துக் கொள்ளுங்கள். பணம் மாற்றுவதாக இருந்தாலும் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் அடையாள அட்டை கட்டாயம். அவற்றை ஒளிநகல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் வைத்திருக்கும் அல்லது ஒளித்திருக்கும் அல்லது மறந்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைத் தேடி எடுத்துச் சேகரியுங்கள். அது ஒருவேளை வீட்டாருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் பணம் என்றாலும் ஆண்டிறுதிக்குள் வெளியே வந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

13. கூட்டத்தின் பொருட்டு முதல் சில நாட்கள் விடுத்து அருகிருக்கும் தபால் நிலையம் அல்லது வங்கியில் வீட்டில் அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோரும் ஆளுக்கு ரூபாய் 4,000 கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கைகளில் செலவுக்கு சுமார் ரூபாய் 4,000 முதல் 20,000 வரை செல்லுபடியாகும் நோட்டுகள் கிட்டும். அவ்வளவு தேவை இல்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். அன்றேல் அவசரத்துக்கு அலைய வேண்டி இருக்கும்.

14. மீதமிருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிக்குச் சென்று உங்கள் கணக்கில் செலுத்தி விடுங்கள். பிற்பாடு தேவைப்படுகையில் சுய காசோலை மூலமோ ஏடிஎம்கள் மூலமோ தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

15. அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலும் ஏடிஎம்கள் பணம் நிரப்பிய ஓரிரு மணி நேரத்திலேயே தீர்ந்து போகும். (நவம்பர் 18 வரை அட்டைக்கு ரூ. 2000 என்றும் பின் ரூ.4000 என்றும் உச்ச வரம்பு வைத்திருக்கிறார்கள் என்றாலும் இது நிகழும் சாத்தியம் அதிகம்.) வங்கிகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. அதை மனதில் இருத்திச் செயல்படுங்கள்.

16. வங்கிகளிலும் பணமெடுக்க தினம் ரூ.10,000 என்றும் வாரத்திற்கு ரூ.20,000 என்றும் அதிகபட்ச‌ வரையறை நிர்ணம் செய்திருக்கிறார்கள். அப்படியே பணத்தை எடுக்க முடியாது. அதனால் அதற்கேற்பச் செலவுகளைத் திட்டமிடுங்கள்.

17. இன்னும் சில இடங்களில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள் எனத் தெரிகிறது. அதையும் செய்யலாம். அவர்கள் தம் கணக்கில் மாற்றுக் கொள்வர். இதில் சட்ட விரோதம் ஏதும் தென்படவில்லை.

18. பெட்ரோல் பங்க்கள் தாம் இப்போது அட்சயப் பாத்திரம். வாகனங்களின் டேங்க் ஃபுல் செய்வதன் மூலம் சில பல செல்லாத நோட்டுக்களைத் தீர்க்கலாம். ஒரே பிரச்சனை அடுத்த சில நாட்களுக்கு பங்க்கள் கூட்டமாகவே இருக்கும்.

19. இந்தியாவின் மூலை முடுக்கில் இருப்போரெல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க‌, டெபிட் கார்ட்கள் பயன்படுத்தத் துவங்க‌, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட‌ ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். அதுவே பணத்தின் எதிர்காலம்.

20. "1000 ரூபாய்க்கு செல்லாத 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக‌ள் தருகிறோம், பதிலாக 700 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டு தாருங்கள்" என்று சிலர் பேரம் ஆரம்பித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். அது நாசூக்காய்க் கருப்பை வெளுப்பாக்கும் தேச விரோதச் செயல். லாபம் தான் என்றாலும் அதற்கு ஒருபோதும் துணை போகாதீர். மாற்றும் போதோ செலுத்தும் போதோ அந்தப் பணம் உங்கள் வருமானக் கணக்கில் வந்து விடும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

21. எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு மிக முக்கிய விஷயம். சமூக வளைதள மீம்களில் காட்டப்படுவது போல் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளில் கடலை மடிக்கும் அளவுக்கு நிலமை மோசமாய்ப் போய் விடவில்லை. கருப்பு இல்லை எனில் உங்கள் பணம் உங்களுடையதே. அதற்குரிய இணைப் பணத்தை அரசாங்கம் இன்றோ நாளையோ உங்களுக்குத் தந்து விடும். அதனால் இதில் பதற்றமுறவோ, பயமுறவோ, கவலையுறவோ, கடுப்புறவோ ஏதுமில்லை. நமது அன்றாடங்கள் பாதிக்கப்படுகின்றன தாம். ஆனால் ஓரளவு முன்கூட்டிய திட்டமிடல் மூலம் அவற்றைச் சமாளித்து விட்டால் பிரச்சனை ஏதுமில்லை. ஒரு பைசா கூட சாதாரணர்களான நமக்கு நட்டமில்லை. அஞ்ச வேண்டியவர்கள் அஞ்சட்டும், நண்பர்காள்.

(இவற்றில் சில கிராமவாசிகளுக்கு, இணையப் பரிச்சயமற்றவர்களுக்கு, வங்கிக் கணக்கில்லாதவர்க்கு சாத்தியமற்ற யோசனைகளாக இருக்கலாம். நான் பொதுவான ஒரு பட்டியலையே அளித்திருக்கிறேன். அவரவர்க்குப் பொருந்துவதை மட்டும் பொருட்படுத்தி செயல்படுத்த எத்தனிக்கலாம். மற்றபடி எலைட் மனப்பான்மையில் எழுத்தப்பட்டதல்ல இஃது.)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்