PARCHED: உலர் பெண்டிர்


Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான் PARCHED படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன.

பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.)


ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள், குடித்து விட்டு வந்து அவளை மலடி எனச் சொல்லி அடிக்கும் கணவனைப் பெற்றவள். ஒருத்தி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவள், அதன் நீட்சியாய் பாலியல் தொழில் செய்பவள். ஒருத்தி தன் காதலைத் துறந்து விட்டு 14 வயதிலேயே 4 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெற்றோறால் இன்னொருவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறவள். இவர்கள் நால்வரும் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை.

ராஜஸ்தானின் ஏதோ ஒரு பட்டிக்காட்டில் கதை ந‌டப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாத பத்தாம்பசலிக் கிராமம் என்பதைக் காட்ட டிவி கூட இன்னும் அங்கே வரவில்லை எனக் காட்டியிருப்பது கொஞ்சம் நம்பச் சிரமமாக இருக்கிறது. போலவே ஷாரூக் கான் யாரென்றே தெரியாத பெண்கள் கொண்ட‌ வட இந்தியக் கிராமம் என்பதும்.

Bhopal: Prayer for Rain, Angry Indian Goddesses ஆகிய படங்களில் நடிப்பின் மூலம் முன்பே கவர்ந்தவர் நடிகை தன்னிஸ்தா சேட்டர்ஜி. இப்படம் அவரது மாஸ்டர்பீஸ். ராதிகா ஆப்தே பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தான் கர்ப்பமுற்றதை உணரும் காட்சியில் அவர் முகபாவங்கள் ஓர் அற்புதம். இன்னொரு காட்சி குழந்தை பெற இன்னொரு ஆடவனுடன் கலவியில் ஈடுபடும் காட்சி. அக்காட்சியில் பெருமாள்முருகனின் மாதொருபாகன் நினைவு வந்தது. (அது வேறு மனநிலை என்றாலும்) பொன்னாவின் எதிர்வினையும் கிட்டத்தட்ட அப்படியானதாகவே இருக்கும். மாதொருபாகன் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பொன்னாவாக ராதிகா ஆப்தேவே நடிக்க வேண்டும்! விரைவில் ராதிகா தேசிய விருது பெறுவார். (இப்படத்திலேயே சிறந்த துணை நடிகையாக வாங்கக்கூடும்.) பாலியல் தொழிலாளியாக வரும் சுர்வீன் சாவ்லாவும் சிறப்பான பங்களிப்பு. இவர்களின் உயிர்ப்பான‌ நடிப்புக்காகவே படத்தை நிச்சயம் பார்க்கலாம் என்பேன்.

படத்தில் ஒரு காட்சி வரும். Motherfucker, Sisterfucker என்றெல்லாம் சொற்கள் உருவாக்கியது ஓர் ஆணாய்த் தான் இருக்க முடியும். ஏன் எப்போதும் பெண்களே தான் அப்படிக் கலவி செய்யப்பட வேண்டுமா? நாம் இப்போது புதுச் சொற்கள் உருவாக்குவோம் எனச் சொல்லி Sonfucker, Brotherfucker என மலை மீது உரக்கக் கூவுவார்கள். தற்காலிகச் சுதந்திரம் கிடைத்த உற்சாகமான பாமரப் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு வெளிப்படுத்தும் வெள்ளந்தித்தனமான ஒரு குறியீட்டு எதிர்ப்பாய் அதை இயக்குநர் முன்வைக்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். சோகம் என்னவென்றால் இணையத்தில் பெண்ணுரிமை பேசினால் கிடைக்கும் அகண்ட புகழையும் செல்வாக்கையும் கண்டு ஈர்க்கப்பட்டு வீராவேசமாய் உருவாகும் பெரும்பாலான self-proclaimed பெண்ணியவாதிகள் பலரும் பெண் சுதந்திரம் என்பதே அப்படிக் கதறுவதோடு முடிந்து விடுகிறது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படிக் கத்துவதோடு நின்று விடுவதில்லை. பெரும்பாலான பெண்கள் எடுக்கத் தயங்கும் சிரமமான தேர்வுகளைத் தம் வாழ்வில் எடுக்கின்றனர். தம் மனம் விரும்பியபடி வாழத் தீர்மானிக்கின்றனர். சுருக்கமாய்ச் சொன்னால் பெண்ணியம் என்ற சொல்லை ஒருமுறையும் பயன்படுத்தாமல் அவர்கள் தம் செயலால் பெண்ணியம் பேசி விடுகின்றனர். அவர்கள் நம் மனதில் நிறைகிறார்கள்.

"Women who read do not make good wives" என்ற வசனம் படத்தில் வருகிறது. கல்வி மறுக்கப்படும் பெண் அடிமையாகத் தான் இருப்பாள் என்ற பெரியாரின் கருத்தை அது முன்வைக்கிறது என்றாலும் "Women who (just) read do not make good feminists either" என்று தோன்றியது. வாசிப்போடு கூடிய நேர்மையும், நல்லறிவுமே அசல் பெண்ணியத்திற்கு அடிகோலும்.

இன்னொரு விஷயம் இந்தப் படத்தில் பெரும்பாலான ஆண்கள் ஆணாதிக்கவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆண்களும் அப்படியே என இயக்குநர் முத்திரை குத்தவில்லை. அதே ஊரில் தான் பெண்கள் வேலைக்குச் சென்று முன்னேறுவதை ஊக்குவிக்க அவர்களை நம்பி, மதித்து வாய்ப்புகள் வழங்கும் ஆணும், ப‌டுக்கையில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவளைச் சமமாய் நடத்தி இன்பத்தைத் தரும் / பெறும் ஆணும், பெண் மீது கொண்ட பிரியத்தால் அவளுக்காக பல கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வந்து அவளைச் சந்திக்கும், இன்னொருவனுடன் திருமணமாகி அவள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதால் கற்பு என்பதை மறுதலித்து அவளை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் ஆணும் இருக்கிறார்கள். அது முக்கியப் புரிதல்.

பெண்ணியம் என்பது கண்மூடித்தனமாய் ஆண்களை எதிர்ப்பதும், திட்டுவதும், மறுப்பதும், துறப்பதுமல்ல; அவர்களுடன் இணையாய்க் கை கோர்த்து நடப்பதும், பரஸ்பரம் உதவியாய் வாழ்க்கையை நடத்துவதும், அது சாத்தியப்படாத போழ்து அவர்களிடமிருந்து விலகி தன் மனம் சரியெனத் தீர்மானிக்கும் வழியைச் சுதந்திரமாய்த் தேர்ந்தெடுப்பதுமே பெண்ணியம் என அழுத்தம் திருத்தமாய் இப்படத்தில் எழுதி வைத்திருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். அவருக்கு என் வந்தனங்கள்.

லீனா பளிச்சிடும் ஒரு காட்சி அடி வாங்கிய‌ காயத்துடன் வீட்டுக்கு வரும் ராதிகாவுக்கு தன்னிஸ்தா மேலாடையை அகற்றி மருந்து தடவும் இடம். அங்கே அவர்களுக்குள் பரஸ்பரம் எழும் மெல்லிய காமம் வலுவான தாய்மையாக முதிர்ச்சியுறுகிறது. அதை மேலும் உயரே நகர்த்தும் காட்சி அடுத்து தன்னிஸ்தா இல்லாத போது அதே சூழலில் ராதிகா வரும் போது பதின்ம‌ வயதவளான தன்னிஸ்தாவின் மருமகள் (லெஹர் கான்) மருந்திடும் காட்சி. தாய்மை என்ற உணர்வுக்கு தன் வயதோ எதிராளியின் வயதோ பொருட்டில்லை என்பதும் பெண்கள் வயதுக்கு மீறியும் சக பெண்களின் பிரச்சனைகளை உணர்வர் என்பதும் அதில் சொல்லப்படுகிறது. இது போல் ஆங்காங்கே வலுவான காட்சியமைப்புகள்.

தொடர் அடர்குடியின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் ஆண் பாத்திரம் ஒன்று அது தெரிந்தும் தன் மனைவி தான் குழந்தையின்மைக்குக் காரணம் எனத் தினமும் குடித்து வந்து அவள் மீது உடல்நீதியான, மனரீதியான‌ வன்முறைகளைப் பிரயோகிக்கிறது. அவள் வேறு ஒருவனின் மூலம் தாய்மையடையும் போது அதற்கும் அவளைப் போட்டு அடிக்கிறது. அதன் மனோவியலை யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அன்னக்கொடி மனோஜ் பாத்திரம் நினைவுக்கு வருகிறது.)

ஆண்கள் அதீதமாய்க் குடிப்பதும், பாலியல் தொழிலாளிகளிடம் போவதும் பெண்களின் பெரும் பிரச்சனையாகப் படம் நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. கணவன் அப்படி நடப்பதால் திருமணமாகி வரும் பெண்கள் சொந்த‌ மாமனார் உள்ளிட்ட அந்த வீட்டு ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதும் சொல்லப்படுகிறது. "நான் எனது கரு ஒன்றைக் கலைத்துக் கொண்டேன். அதன் தந்தை யாரெனத் தெரியாததால்" என்று தன் தாய் வீட்டிற்கு ஓடி வந்து விடும் ஒரு குடும்பப் பெண் பேசும் வசனம் வருகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளது அடிபட்ட‌ பார்வையைப் பார்த்த பின்பும் நாம் இந்தியக் கலாசாரம் பற்றி எப்படி மார் தட்டிப் பேச முடியும்!

Parched தற்போது இது மிகக் குறைந்த திரையரங்குகளில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிகிறது (பெங்களூரில் இரு பிவிஆர் அரங்குகளில் தலா ஒரு காட்சி - அதுவும் வினோத வேளைகளில்). முடிந்தால் பார்த்து விடுங்கள்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்