ஜெயமோகனும் பாலகுமாரனும்

பாலகுமாரன் உள்ளிட்ட வெகுஜன எழுத்தாளர்களின் இடம் குறித்து ஜெயமோகன் உள்ளிட்ட சீரியஸ் எழுத்தாளர்களின் புறக்கணிப்பை முன் வைத்து எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத் துவக்கிய உரையாடலில் நான் பங்கேற்றதன் துண்டு.

முதலில் சுரேந்திரநாத்தின் பதிவு:
https://www.facebook.com/grsurendar.nath/posts/516578058551855

அதில் நான் இட்ட கருத்துரை:
நானும் ராஜேஷ் குமார் தொடங்கி, சுஜாதா, பாலகுமாரன் வழி சுரா, ஜெமோ அடைந்தவன் தான். ஆனால் எல்கேஜியில் ஏபிசிடி கற்றுத் தந்ததாலேயே அந்த ஆசிரியரை நாம் ஐன்ஸ்டைனுக்குச் சமானம் எனக் கொண்டாட முடியாது. சிறந்த விஞ்ஞானிகள் எனப் பட்டியல் எடுக்கையில் நம் எல்கேஜி வாத்தியார் வர மாட்டார். ஆனால் நம் நன்றிக்குரிய நபர்களின் பட்டியலில் நிச்சயம் இருப்பார். அது போல் வெகுஜனத்திடையே வாசிப்பை பரவலாக்கிய வகையில் மொழிக்குச் சேவை செய்தவர் பட்டியலில் பாலகுமாரனுக்கும் சுஜாதாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு. (இதை ஜெயமோகனும் ஒப்புக் கொள்வார்.) ஆனால் அதற்காக தமிழின் சிறந்த எழுத்தாளர் பட்டியலில் அவர்களுக்கு மிகப் பிந்தைய இடம் தான் தர முடியும் என்கிறார். அது ஒப்புக் கொள்ளக்கூடிய தர்க்கம் தானே?

அதற்குப் பதிலிறுத்து சுரேந்திரநாத் எழுதியது
:
https://www.facebook.com/grsurendar.nath/posts/517025011840493


இப்போது என் விளக்கம்:

பொருட்படுத்தி பதிலளித்த‌ சுரேந்திரநாத் அவர்களுக்கு நன்றி.

நான் ஜெயமோகனை இதில் இழுக்கவே இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சுரேந்திரநாத் தன் முதல் பதிவிவையே மிகப் பிரதானமாக‌ ஜெயமோகனை முன்வைத்துத் தான் எழுதி இருந்தார். பொதுவாய் ஜெயமோகன் உள்ளிட்ட நவீன இலக்கியவாதிகள் பாலகுமாரனை நிராகரிப்ப‌து குறித்த வருத்தமும் அப்படியான வெகுஜன எழுத்து இல்லாவிடில் நவீன இலக்கியம் இன்றுள்ள நிலையை எட்டியிராது என்ற துணிபுமே அவரது அப்பதிவின் சாரமாகப் புரிந்து கொள்கிறேன். அதற்கு உதாரணமாய் நேரடியாய்க் கண்ட‌ தன் மனைவியின் வாசிப்பு பரிணாமத்தையும் சுட்டி இருந்தார்.

அவர் சொல்வதில் எனக்கும் பெருமளவு உடன்பாடு உண்டு - அனுபவரீதியாகவே. அதில் நான் வேறுபடுபடும் இடம் ஒன்று தான். பாலகுமாரன் மற்றும் சுஜாதாவின் மொழி மற்றும் சமூகப் பங்களிப்பு என்பது ஆரம்ப நிலை வாசகர்களை வாசிப்பின்பத்தின் வழி மேலும் தேடி வாசிக்க ஊக்குவிப்பதும் அதன் வழி அவர்களை நவீன இலக்கியத்திற்குப் போக வழியமைப்பதுமே ஆகும். என்றும் அதற்காக அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டுள்ளது. அதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் தமிழின் நல்ல எழுத்தாளர்கள் எனப் பட்டியலிடும் போது அவர்களை முன்னிறுத்த முடியாது என நான் நம்புகிறேன். அதையே எல்கேஜி டீச்சர் உதாரணம் மூலம் விளக்க முயன்றேன். மற்றபடி என்னையும் ஆரம்பத்தில் வாசிப்பில் தூக்கி வளர்த்தவர்கள் என்ற வகையில் சுஜாதா மற்றும் பாலகுமாரனை எங்கும் விட்டுக் கொடுக்கும் அல்லது அவமதிக்கும் நோக்கு இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன். ஆனால் அது வேறு அவர்களின் இலக்கிய மதிப்பு வேறு.

இதில் கவனிக்க‌ சுவாரஸ்யமான இன்னொரு விஷயமும் உண்டு. இந்த‌ சுஜாதா மற்றும் ஆரம்ப நிலை வாசகர்கள் குறித்து ஜெயமோகனுக்கு நானே ஐந்தாண்டுகள் முன் கடிதம் எழுதி இருக்கிறேன்: http://www.writercsk.com/2011/09/blog-post.html

சுரேந்திரநாத்தின் அடுத்த பதிவை "தமிழில் அனைவரும் ஏற்க முடிந்த‌ ஒரு பொதுவான 'சிறந்த எழுத்தாளர் பட்டியல்' இருக்குமா?" என்ற கேள்வியாக, வாதமாகப் புரிந்து கொள்கிறேன். இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. காரணம் எளிமையானது. ஒன்று இங்கே அப்படிப் பட்டியல் போட முடிந்த வாசிப்புத் தகுதி கொண்டவர்கள் குறைவு. அடுத்து அப்படி இருந்தாலும் அதைப் போடுவதற்குரிய நேர்மை இருப்பவர்கள் அரிது. அதனால் இங்கே (எங்கும்?) அப்படி ஒரு யுனிவர்சல் பட்டியல் போடுவது சாத்தியமே இல்லை. அதனால் இரு வழிகள் தான் உண்டு. 1) நாம் அறிவு, நேர்மை இரண்டிலும் பொருட்படுத்தும் ஒருவர் போடும் பட்டியல்களைக் கவனிப்பது. 2) நமது வாசிப்பின் அடிப்படையில் நாமே பட்டியல்களை உருவாக்குவது, அதைக் காலப்போக்கில் மேலும் மேலும் செறிவூட்டுவது.

அந்த வகையில் நான் நம்புகிற ஒருவர் ஜெயமோகன். அவர் போடும் பட்டியல்களும் விமர்சனக் கருத்துக்களும் இதுகாறும் (பெரும்பாலும்) எனக்குச் சரியாகவே தோன்றி வந்திருக்கின்றன. அதனாலேயே பாலகுமாரன் குறித்த ஆதங்கத்துக்கு சுரேந்திரநாத் ஜெயமோகனை முன்வைத்துப் பேசியதால் ஜெயமோகனின் அந்தக் கருத்தில் எனக்கு ஏற்பு உண்டு என எழுதினேன் - அதற்குரிய தர்க்கத்தையும் சொல்லி இருந்தேன். அதை இப்போதும் சரியென்றே கருதுகிறேன்.

நல்ல வாசகன் பட்டியல் போடுவதன் வாயிலாகவே தன் தேடுதலை விரித்துத் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன். அதை வெளியிட வேண்டும் என்பது கூட இல்லை. நம் மனதில் அப்படி ஒரு சித்திரம் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் அதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். சிறு பிராயத்தில் சிறந்த இதழ் என்ற என் மானசீகப் பட்டியலில் சிறுவர் மலர் என்பது ராணி காமிக்ஸ் ஆகிப் பின் க்ரைம் நாவலாக மாறி அடுத்து காலச்சுவடு ஆனது அப்படித்தான். விருப்ப எழுத்தாளர்களும் ராஜேஷ் குமாரும் சுபாவும், சுஜாதா, பாலகுமாரன் ஆகி சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆனது அப்படியே. என் பட்டியலில் (வேறெவர் பட்டியலிலும்) குறைகள் இருக்கலாம். விரிவான வாசிப்பு மற்றும் புரிதலின் வழி அவற்றை முடிந்த அளவு களைந்து சீராக்க வேண்டியது தான் வழியே ஒழிய அப்படியான பட்டியலே சாத்தியமில்லை என்று ஒதுங்குதல் அல்ல. அது கிடக்கட்டும், நமக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற விஷயம் நம் மனதில் எப்படி உருவாகிறது? மறைமுகமாய் ஒரு பட்டியலிட்டு அவரை முதலிடத்தில் வைப்பதாய்த் தானே அர்த்தம்?

(பதிவு நீண்டு விட்டதாலும் சுட்டிகள் நிறைந்துள்ளதாலும் ஃபேஸ்புக்கை விட வலைப்பதிவில் போடுவது வசதி எனத் தீர்மானித்தேன். மேல் உரையாடல்கள் ஏதும் நிகழுமாயின் இங்கா அங்கா என அதே அடைப்படையில் முடிவெடுப்பேன்.)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி