பரத்தை கூற்று (மின்னூல்)
பரத்தை கூற்று என் முதல் கவிதைத் தொகுப்பு. 2010ல் அதை எழுத்தாளர் சாரு நிவேதிதா டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வெளியிட்டார். நூலை அன்று கடுமையாக அவர் நிராகரித்துப் பேசினார். அக்கவிதைகளின் தரம் என்ன என்று அன்றே எனக்குத் தெரியும். ( அப்போதே அதை வெளிப்படையாக எழுதியும் இருக்கிறேன். ) அதற்கு நவீன இலக்கியத்தில் யாதொரு இடமும் இல்லை. அவை எளிமையானவை, நேரடியானவை, கச்சாவானவை. ஒரு மாதிரி எண்பதுகளின் தொன்னூறுகளின் வெகுஜனப் புதுக்கவிதைப் பாணி. மீரா தொடங்கி மு.மேத்தா, வாலி, ந.முத்துக்குமார், தாமரை முதலானோர் குறைந்தபட்சம் தலா ஒரு தொகுப்பு இவ்வகைமையில் எழுதி இருக்கிறார்கள். வைரமுத்து நிறையவே எழுதி இருக்கிறார். (புத்தகத்தைக் கூட அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன், என்னை அறிமுகம் செய்ததற்காக.) அப்படி இருந்தும் சாருவை வைத்துத் தான் அந்நூலை வெளியிட வேண்டும் என நான் பிடிவாதமாய் இருந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதன் பாடுபொருள். பாலியல் தொழிலாளிகளின் உலகம் பற்றி காமத்தின் அரசியலை தமிழில் அதிகம் எழுதியவர் வெளியிடுவது சாலப் பொருத்தம் என எண்ணினேன். அடுத்தது இலக்கிய ஸ்தானம் தாண்டி அந்த எழுத்தின் பின்னிருந்...