இந்துக்களின் இஃப்தார்


பன்னெடுங்காலமாய் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதம் முழுக்க பெங்களூர் ஃப்ரேஸர் டவுன் மாஸ்க் ரோட்டில் (மசூதி சாலை)  மாலை முதல் நள்ளிரவு வரை களை கட்டும் ரோட்டோரத் தற்காலிக உணவுக் கடைகள் இம்முறை இல்லை.

தடை செய்திருப்பது மசூதி கமிட்டியே தான். அவ்விடத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் இதனால் போக்குவரத்துக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கும் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றளித்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பான்மை இஸ்லாமியர் என்பதே என் புரிதல். அதனால் இதில் மதரீதியான வன்மம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. (இதனால் மசூதிக்கு இஸ்லாமியர்கள் குறித்த நேரத்தில் வர முடிவதில்லை என்பதையும் பக்கவிளைவாகச் சொல்லி இருக்கிறார்கள்). மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது இது நடந்திருப்பது தான் ஒரே ஆறுதல். பிஜேபி ஆட்சியாக இருந்திருந்தால் இந்துத்துவச் சதியோ எனச் சந்தேகிக்க வேண்டி இருந்திருக்கும். (அப்படி நடந்தால் ஆச்சரியப்படவும் வேண்டியதில்லை என்பது வேறு விஷயம்.)


ரம்ஜான் இறுதி வாரத்தில் தீபாவளிக்கு முந்தைய வார இறுதியின் ரங்கநாதன் தெரு போல் அங்கு கூட்டம் கனக்கும். பெங்களூரின் பல்வேறு முனைகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல, வெளியூரிலிருந்து இதற்கென நேரம் பார்த்து பயணத்தைத் திட்டமிடுபவர்கள் உண்டு. அது ஓர் உணவுத் திருவிழா. அங்கு சாப்பிட வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை விட இந்துக்களின் கணக்கே அதிகம் இருக்கும். கடை போடுபவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு பெரும் செலவாணியை இந்துக்களின் பணப்புழக்கம் ஏற்படுத்தித் தருகிறது எனச் சொல்லலாம்.

ஒருவகையில் பெங்களூரு வாழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அது ஓர் வலுவான அடையாளம். அங்கு வரும் இந்துக்கள் விரும்பி இஃப்தார் விருந்தில் பங்கேற்கிறார்கள் எனலாம். நெரிசல் மிகுந்த குழப்பச் சூழலிலும் கூட‌ அக்கடைக்காரர்களில் எவர் ஒருவரும் ஒருமுறை கூட ஒரு ரூபாய் கூட ஏமாற்ற முற்பட்டு நான் கண்டதில்லை.

நேற்றிரவு அங்கு சென்றிருந்தேன். ஆம். ரோட்டாரக் கடைகள் ஒன்று கூட இல்லை. போக்குவரத்து மற்ற எந்த சாதாரண தினத்தையும் போலவே இருக்கிறது. ரம்ஜான் மாதம் போலவே இல்லை. ஆனால் அங்கு நிரந்தரமாக இருக்கும் கடைகள் (உதா: சார்மினார், எம்பயர்) ஹலீம் முதலிய‌ ரம்ஜான் சிறப்பு உணவுகளை விற்கின்றன‌. அங்கு ஒரு கடைக்காரரிடம் விசாரித்ததில் போன வருடமே இப்படிப் புகார்கள் வந்து தடை செய்ய அத்தனை ஏற்பாடுகளும் நடந்ததாய், பிறகு பற்பல முயற்சிகளால் அது கைவிடப்பட்டதாய்ச் சொன்னார். இம்முறையும் நிச்சயம் முயற்சி நடந்திருக்கும். தோற்று விட்டனர்.

தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே கடை பன்மொழிகளில் இலவச குர்ஆன் தருமிடம் மட்டுமே! (சென்ற ஆண்டு அங்கே ஓர் இளைஞர் நூலைக் கொடுத்து விட்டு எங்களிடம் மார்க்கம் பற்றி அரை மணிக்குக் குறையாமல் பேசினார்.)


நான் கடந்த நான்காண்டுகளாக ரம்ஜான் மாதத்தில் அங்கு போய் வருகிறேன். அங்கு கிடைக்கும் உணவுகள் எனக்குப் பிடித்தமானவை. விதவித‌ மாமிச உணவுகள் முதல் பல்வகை இனிப்புகள் வரை அது சர்வதேசிய இஸ்லாமிய உணவுக் கலாசாரத்தின் சுரங்கம். (ஒட்டகக் கறி கூடக் கிடைக்கும்.) அது தடை செய்யப்பட்டிருப்பது பெரும் கலாசார இழப்பு.

இன்னொரு புறம் இதனால் எத்தனை பேரின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படும் என யோசிக்கிறேன். எத்தனையோ இஸ்லாமியர்கள் இந்த ரம்ஜான் மாத உணவு வியாபாரத்தை முன்னிட்டு வருடம் முழுக்கத் திட்டமிடுவர். அவை அத்தனையும் பூஜ்யம். ஒரு பெரும் மக்கள் நிகழ்வு நிகழாது போகையில் அதைச் சுற்றி நிகழும் வியாபாரம் அத்தனையும் கொல்லப்படுகின்றன. இங்கே ஆடுகொடியில் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். அப்போது போடப்படும் தற்காலிகக் கடைகளும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கும். முன்பு இரண்டு நாட்கள் நடந்து கொண்டிருந்ததை இப்போது ஒரு நாளாகச் சுருக்கி விட்டனர். மாநகர வாழ்க்கையும் அதன் நெரிசலும் அவசரமும் நம் கலாசாரங்களின் கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நெரித்து வருகின்றன. அதன் பின்னணியில் பல அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வும் கழுவிலேற்றப்படுகிறது. அவற்றைக் காக்க எவரும் கவலைப்படுகிறார்களா என்றே தெரியவில்லை.  நம் கண் முன்னே ஓர் அழிவு நிகழும் போது வலியும் குற்றவுணர்வும் ஒருசேர ஏற்படுகிறது. குடிமகனின், நுகர்வோனின் கையறு நிலை.

என் இஷ்டக் கடை என்பது சார்மினார் தான். அது இவ்வருடமும் இருக்கிறது. எனக்குப் பிடித்தமான சிக்கன் சாப்ஸும், மட்டன் கீமா பரோட்டாவும், மட்டன் ஷீக் கெபாபும் அங்கே இன்னும் கிடைக்கிறது. அதன் பக்கவாட்டில் இருக்கும் சிறுகடையில் சரியான நேரத்துக்குப் போனால் சுடச்சுட பாதாம் அல்வாவும் சிக்கன் சமோசாவும் சாப்பிட முடிகிறது. அதற்குச் சற்றுத் தள்ளி இருக்கும் பாம்பே சௌபதி குல்ஃபிக் கடையில் ரோஸ் மில்க்கின் உறைந்த‌ வடிவம் போல் அபாரமான குலாபி குல்ஃபி கிட்டுகிறது. (குல்ஃபி பற்றி 16ம் நூற்றாண்டின் அயினி அக்பரி நூலில் குறிப்பு இருப்பதாக நேற்று தான் அறிந்தேன்!) ரம்ஜான் விருந்தின் நாயகனான ஹலீமை இது வரை முயன்றதே இல்லை. அதன் தோற்றமும் பதமும் வெண்பொங்கலை ஒத்திருப்பதால் அதில் மாமிசம் கலந்திருப்பதை ஜீரணிக்கவியலாத மனத்தடை உண்டு.


இத்தனையும் கிட்டினாலும் ரோட்டோரக் கடைகள் இல்லாமல் சோகம் அப்பிய முகத்துடன் தான் காட்சியளிக்கிறது மசூதி சாலை. பொது மக்களைத் தொந்தரவு செய்யாமல் நிகழ்த்துவது எப்படி என மசூதிக் கமிட்டியினர் காவல் தூறையுடனும் பிபிஎம்பி அதிகாரிகளுடனும் (இங்குள்ள மாநகராட்சியினர்) ஆலோசித்து தீர்வு காண வேண்டும். வேறு இடம் (பேலஸ் க்ரவுண்ட்ஸ் போல் மைதானம்) பார்ப்பது ஒரு தீர்வு. அந்த இடத்திலேயே இடையூறுகள் நேராதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடத்துவது அடுத்த‌ வழி. மக்கள் சிரமங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வது மூன்றாம் மார்க்கம்.

மாஸ்க் ரோடு ரசிகர்கள் வயிறுடன் மனமும் நிறைய அடுத்த ஆண்டு ரம்ஜானுக்குக் காத்திருக்கலாம். இன்ஷா அல்லா!

(Photo Credits: http://munmunbardhan.blogspot.in/)

Comments

Anonymous said…
CSK Bro,

I think the kulfi shop you mentioned is this one - https://www.google.co.in/maps/place/Bombay+Chowpaty+Kulfi/@12.9985759,77.6145839,17z/data=!4m15!1m9!2m8!1skulfi+shop!3m6!1skulfi+shop!2sMosque+Rd,+Pulikeshi+Nagar,+Bengaluru,+Karnataka+560005!3s0x3bae16f13debf473:0xe10e0f08b1b6db76!4m2!1d77.615394!2d12.9985242!3m4!1s0x0000000000000000:0x157edf04819c0250!8m2!3d13.0008401!4d77.6154477?hl=en

I will try Gulabi kulfi, thanking you ;)

At what time badam halwa will be available ? சரியான நேரம்னு சொன்னீங்க ..ஆனா சரியாய் சொல்லலை :(
1) Yes. It is Bombay Chowpaty Kulfi.
2) குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை. நம் அதிர்ஷ்டம் தான்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி