விமர்சனத்தின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்

ஆர். அபிலாஷ் எழுதிய‌ 'கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்' நாவலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. நல்ல‌ வாசிப்பின்பம் கொண்ட எழுத்து. பொருட்படுத்ததக்க சீரியஸ் உள்ளடக்கம் கொண்டது என்றாலும் துப்பறியும் நாவல் என்பதற்கு நியாயம் செய்யும் வகையிலான‌ சுவாரஸ்யமான‌ ஆக்கம். 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு, 2014 சென்னை மென்பொருள் ஊழியை கொலை வழக்கு, (நாவல் வந்த பின் சமீபத்தில் நிகழ்ந்த ஜிஷா கொலை வழக்கும் கூட‌) என நிஜ சம்பவங்களின் வலுவான சாயைகள் இப்புதினத்தில் இடம் பெறுகின்றன. சில திரைப்படங்களின் வாசனை கூட மனதில் நிழலாடியது - அமீர் கான் நடித்த‌ 'Talaash' மற்றும் மிஷ்கினின் 'யுத்தம் செய்'.


துப்பறியும் நாவல்கள் அல்லது சாகசப் புனைகதைகளில் சிந்தனைக்கு உரியவை தமிழில் மிக அரிது. அவை சம்பவங்கள் மற்றும் உரையாடல்களின் தொகுப்பாகவே அமைகின்றன. அதிகம் போனால் நேர்த்தியான‌ வர்ணனைகள் இருக்கும். போக‌ அரிதாய்ச் சில‌ கவிதைத் தருணங்கள் தென்படும். அவை லேசாய் வாசகனை யோசிக்கத் தூண்டும். சுஜாதாவின் நாவல்களில் அவ்வப்போது இத்தகைய இடங்களைக் காணலாம். (சட்டென நினைவுக்கு வருவது 'ஒரு நடுப்பகல் மரணம்' நாவலில் புதிதாய்க் கல்யாணம் ஆன பெண்ணொருத்தி தன் கணவனைக் கொலையில் இழக்கும் அறிமுகப் பக்கங்கள்.)

அது போக நாவல் நெடுகவும் இது போன்ற விஷயங்களைத் தீவிரமாய்ப் பேசுபவை என என் வாசிப்பில் சொல்ல முடிவது நான்கு - தமிழவனின் 'ஜிகே எழுதிய மர்ம நாவல்', எம்ஜி சுரேஷின் 'சிலந்தி', யுவன் சந்திரசேகரின் 'பகடையாட்டம்' மற்றும் ஜெயமோகனின் 'உலோகம்'. இப்போது அந்த வரிசையில் அபிலாஷின் நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நவீன இலக்கியம் தான் என்றாலும் ஒரு துப்பறியும் நாவலுக்கான விமர்சனத்தில் அதன் கதைச் சுருக்கத்தை நல்குவது பாவக் கணக்கில் சேரும். அதனால் வேண்டாம். ஆனால் கதை இறுதியில் பனிமூட்டமாகவே முடிகிறது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதுவே யதார்த்தம் என்பதால் ஒருவகையில் அது நாவலுக்கு பலமாகவும் மாறி விடுகிறது.

இந்நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே நமக்கு ஒரு கட்டத்தில் அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். அதுவும் நாடகத்தனமாக அல்லாமல் இயல்பான, சாத்தியமான அதிர்ச்சிகள். கயல்விழி, முண்டா, மோகனா கதைகள் அப்படிப்பட்டவை தாம். கதையின் பிரதானப் பாத்திரமான ஜார்ஜ் கூட இதற்கு விலக்கல்ல. ஷீனா, ஸ்ரீதர், மோகன் போன்ற சிறுபாத்திரங்கள் கூட அதையே செய்கின்றன. எல்லோருக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. நாவலின் வசீகரம் என இதைச் சொல்வேன்.

குறை என்று யோசித்தால் மூன்று விஷயங்களைச் சுட்டலாம். ஒன்று ஜார்ஜின் மனக்குறளியாக வரும் பகுதிக‌ள் சற்று தேவைக்கதிகமாகப் பட்டன. மோகனா குழந்தை காணாமல் போனதை வர்ணிப்பதும் அப்படியே தோன்றியது. அது கதைப்போக்கின் ஆற்றொழுக்கைத் தடை செய்வதாக, அதன் இயல்பிலிருந்து பிடுங்குவதாகத் தோன்றியது. அடுத்து முந்தைய அத்தியாயத்துக்கும் பிந்தைய அத்தியாத்துக்குமான முரண்கள். உதாரணமாய் கோகிலா மோக‌னாவின் குழந்தை அல்ல எனத் திடீரெனக் கடைசியில் சொல்லப்படுகிறது, வேலைக்காரி குழந்தையை இரவு வரை பார்த்ததான தகவல் விசாரிக்கும் இடத்தில் சொல்லப்படவில்லை. கடைசியாய் முதல் சில அத்தியாயங்களிலும் இறுதி சில அத்தியாயங்களிலும் அதிக எண்ணிக்கையிலான (அதாவது வாசிப்பை உறுத்துமளவு) எழுத்துப் பிழைகள் தென்பட்டன.

விமர்சனத்துக்கு வெளியே ஒரு விஷயத்தைப் பகிர நினைக்கிறேன். இந்த நாவலை கிட்டத்தட்ட அப்படியே மிஷ்கின் திரைப்படமாகச் செய்யலாம். 'அஞ்சாதே', 'யுத்தம் செய்' இவற்றின் தர்க்கத் தொடர்ச்சியாக அமையக்கூடும். இன்னும் சொல்லப் போனால் மிஷ்கின் திரையில் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்ன என்பதை இந்த நாவல் வாசிக்கையில் மேலும் துல்லிமாய் உணர முடிகிறது. (பொதுவாய் நான் சினிமாவை எப்போதும் இலக்கியத்துக்கு ஒரு படி கீழ் தான் பாவிப்பேன் என்பதைக் கொண்டு இவ்வாக்கியம் முன்வைக்கும் கருத்தின் முக்கியத்துவத்தை அணுகலாம்.)

நூறு பக்கங்கள், நூறு ரூபாய். ஒரு சினிமாவிற்குப் போவதை விட சுலபம். ஒரே நாளில் அலுவலம் - வீடு இடையிலான இரு திசைப் பயண தூரத்தில் வாசித்து முடித்தேன். நீங்களும் வாங்கி வாசியுங்கள். தவற விடக்கூடாத அனுபவம்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி